கழுத்தில் அணியும்டையை—கண்டுபிடித்தது யார்?
ஜெர்மனியிலிருந்து விழித்தெழு! நிருபர்
உலகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 60 கோடி ஆண்கள் அவற்றை வழக்கமாக அணிந்து கொள்கின்றனர். ஜெர்மனியில் ஒரு சராசரி ஆள் கிட்டத்தட்ட 20 டைகளை வைத்திருக்கிறார். டையை அணிந்துகொள்ளும்போது சிறிது எரிச்சலுடன் அநேக ஆட்கள் இவ்வாறு கேட்டிருக்கின்றனர், ‘இதை யார் கண்டுபிடித்தது?’ டை எங்கே முதலில் தோன்றியது?
பெல்ஜியத்தில் உள்ள ஸ்டான்கர்க என்ற ஒரு பட்டணம், டையை “கண்டுபிடித்ததாக” சொல்லி அதற்கான நன்மதிப்பை வலியுறுத்திக் கேட்கிறது. 1692-ல், இங்கிலாந்தின் படை அங்கே நிறுத்தப்பட்டிருந்த பிரான்சு படையைத் திடீரென தாக்கியது. ஃபராங்க்ஃபுர்ட்டர் ஆல்ஜெமைன் சான்டோக்ஸ்ட்ஸைட்டுங் என்ற ஜெர்மானியப் பத்திரிகையின்படி, “அந்த [பிரெஞ்சு] அதிகாரிகளுக்கு சரியாக உடுத்துவதற்கு நேரம் இருக்கவில்லை. ஆனால் சீக்கிரமாக, அவர்களுடைய யூனிஃபார்ம் ஸ்கார்ஃபுகளைத் தளர்ச்சியான முடிச்சுடன் கழுத்தைச் சுற்றி கட்டிக்கொண்டு, அதன் நுனிகளைத் தங்கள் ஜேக்கட்டின் பித்தான் துளைகளுக்குள் செருகினர். இதோ, அசலாக டையின் பிறப்பு.”
எனினும், அந்த வீரர்களின் நாகரிக புதுமை முழுமையாகவே அபூர்வமானதாக இருக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, சீன பேரரசர் ஜெங் (ஷி ஹுவாங் டி)-ன் போர்வீரர்கள் தங்களுடைய ஸ்தானத்தைக் குறிக்கும் விதத்தில் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ஃப் போன்ற துணியைக் கட்டிக்கொண்டார்கள் என்பதாக டையினுடைய சரித்திர வல்லுநர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர்.
எனினும், ஒருவேளை மிகப் பிரபலமானது, பிரான்ஸ் அரசன் லூயி XIV-க்காக போரிட்ட க்ரோயேஷீயர்களால் அணிந்துகொள்ளப்பட்ட ஸ்கார்ஃபுகள் ஆகும். பாரிஸில் ஒரு வெற்றி அணிவகுப்பின்போது, க்ரோயேஷீயர்களின் ஸ்கார்ஃபினால் அந்தளவுக்கு கவரப்பட்டதன் காரணமாக, அவற்றை க்ராவாட்கள் என்பதாக அழைத்து, பிரெஞ்சு ஆட்களும் ஸ்கார்ஃபுகளை அணிய ஆரம்பித்தனர். க்ராவாட்கள் என்பது க்ராவாட், ஒரு க்ரோயேஷீயன், என்ற வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. “ஸ்கார்ஃபுகளை முதலில் முடிச்சிடப்பட்ட டையாக்கியவர்கள் ஸ்டீன்கர்கில் இருந்த வீரர்கள்தான் என்றபோதிலும், அது முதற்கொண்டு, டை நாகரிகத்திற்கு முடிவே இருந்ததில்லை.”
பிரான்சு புரட்சியின்போது (1789-99), கழுத்தில் இருக்கும் தன்னுடைய “க்ரோயேஷீயனின்” அல்லது ஸ்கார்ஃபின் நிறத்தைக்கொண்டு ஒரு மனிதன் தன்னுடைய அரசியல் மனச்சாய்வைத் தெரிவிப்பான். 19-வது நூற்றாண்டில், நவநாகரிகமான ஐரோப்பிய சமுதாயம் இந்த விதமான உடைக்கு “கவனம் செலுத்த ஆரம்பித்தது.” அப்போதுதான் இராணுவ மற்றும் அரசியல் காட்சியின் ஸ்தானத்திலிருந்து க்ராவாட் உயர்த்தப்பட்டு பொதுவில் ஆண்களின் ஜனத்தொகுதியினுடைய அலமாரிகளுக்குள் நுழைந்தது. இன்று டை அநேக சமுதாயங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், சில சூழ்நிலைகளில் அது கட்டாயமான ஒன்றாகவும் இருக்கிறது.