பாலினத் தொல்லை—ஓர் உலகளாவிய பிரச்சினை
ரீனா வீக்ஸ் என்ற இளம் செயலருக்கு வேலை என்பது ஒரு கொடுங்கனவாகிவிட்டிருந்தது. அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த அந்தச் சட்ட நிறுவனம் புகழ்பெற்ற ஒன்றாய் இருந்ததுடன், இருபத்து நான்குக்கும் அதிகமான நாடுகளில் அதற்கு அலுவலகங்கள் இருந்ததும் மெய்யே. ஆனால் அவர் உறுதியாக சொல்வதன்படி, பற்றியிழுப்பதையும் தொடுவதையும் நிறுத்தப்போகாதவராய் இருந்த ஒரு மனிதனுக்கு அவர் வேலை செய்தார். இடையிடையே அசிங்கமான, தகாத பேச்சுகளால் அவமானப்படுத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பல்லாண்டுகளுக்கு முன்பு, இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்த பெண்கள் வேலையை ஒருவேளை விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியின்றி இருந்தனர். ‘அவனுக்கு எதிரான அவளின் வாக்குமூலத்துக்குரிய’ தீர்ப்பு நிர்வாகத்தின் முடிவாகவே இருந்தது. அப்படியே அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை நம்பும் நிலையில் இருப்பவர்களும், ‘இதெல்லாம் ஒரு பெரிய காரியமா?’ என்று ஒருவேளை அதை ஒதுக்கித் தள்ளுபவர்களாய் இருந்திருக்கலாம். ஆனால் காலங்கள் மாறிவிட்டன. ரீனா வீக்ஸ் கோபத்துடன் வேலையை விட்டுவிடுவதற்கும் மேலானதைச் செய்தார். அவர் நீதி கேட்டு சட்டப்படி வழக்கு தொடுத்தார்.
தண்டத்தொகையாக 2,25,000 டாலரையும், ரீனா வீக்ஸ் அனுபவித்திருந்த உணர்ச்சி சம்பந்தப்பட்ட தொந்தரவுக்காக 50,000 டாலரையும் அவரது முன்னாள் மேலதிகாரி அவருக்கு வழங்கும்படி ஐ.மா.-வைச் சேர்ந்த ஒரு நீதிமன்ற வழக்கு விசாரணைக்குழு தீர்ப்பளித்தது. பிறகு, உலகம் முழுவதிலுமுள்ள தொழில் நிறுவனங்களையும் சட்ட நிறுவனங்களையும் கவனத்தில் கொண்டுவந்த ஒரு நடவடிக்கையில், அப்பிரச்சினையைச் சீர்செய்யத் தவறியதற்காக பிரமாண்டமான தொகையான $69 லட்சத்தை அந்தச் சட்ட நிறுவனம் தண்டமாக செலுத்தும்படி அந்த நீதிமன்ற விசாரணைக் குழு ஆணையிட்டது!
வீக்ஸ் வழக்காகிய இது மட்டும் எவ்விதத்திலும் தனித்த ஒன்றல்ல. மற்றொரு சமீபத்திய வழக்கு, தேசிய அளவில் (ஐ.மா.) கிளைகளைக் கொண்ட தள்ளுபடி விற்பனைக் கடையை உட்படுத்திய ஒரு வழக்காகும். பாலினம்பற்றிய எண்ணற்ற அசிங்கமான குறிப்புகளைத் தன்னுடைய மேற்பார்வையாளர் சொல்லியிருந்ததாக பெகீ கிம்ஸீ என்ற பெயருடைய ஒரு பணியாளர் தெரிவித்தார். 1993-ல், பெகீ கிம்ஸீ தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, நீதி கேட்டு வழக்கு தொடுத்தார். அவர் அடைந்த அவமானம் மற்றும் மனத்துயருக்காக $35,000 தொகையோடு, அவரது வருமான இழப்பை அங்கீகரிக்கும் அடையாளமாக $1-ஐயும் தீர்ப்பாகப் பெற்றார். அவரது முன்னாள் மேலதிகாரி அத்தகைய தொல்லையைப் பொறுத்துக்கொண்டிருந்ததன் மூலம் ஒரு விரோதத்தன்மையுள்ள வேலைச் சூழலை உருவாக்கியிருந்தார் என்றும் அந்த நீதிமன்ற விசாரணைக்குழு தீர்மானித்தது. அதற்குத் தண்டனை? நஷ்ட ஈடாக ஐந்து கோடி டாலர்கள்!
மென்ஸ் ஹெல்த் பத்திரிகை கூறுகிறது: “பாலினத் தொல்லை வழக்குகள் பாக்டீரியாவைப் போன்று பெருகிவருகின்றன. 1990-ல், EEOC [ஈக்வல் எம்ப்ளாய்மென்ட் ஆப்பர்ச்சூனிட்டி கமிஷன்] அத்தகைய 6,127 புகார்களைக் கையாண்டது; கடந்த வருடத்திற்குள்ளாக [1993] வருடாந்தர மொத்த புகார்கள் கிட்டத்தட்ட இரு மடங்கான 11,908 என ஆகியிருந்தன.”
அதிகார துர்ப்பிரயோகம்
நீதிமன்ற விசாரணைக் குழுவின் தீர்ப்பான பிரமாண்டமான தொகைகள் அளிக்கப்படுவது கவர்ச்சியளிக்கும் தலைப்புச்செய்தியாய் இருந்தாலும், உண்மை என்னவென்றால், நீதிமன்றம் வரை கொண்டுவரப்படும் வழக்குகள் வெகுசிலவேயாகும். பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தங்கள் அவமானத்தை அமைதியுடன் அனுபவிக்கின்றனர்—அலுவலகங்கள், தெருக்கள், பேருந்துகள், மதிய உணவு கவுண்ட்டர்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் நடத்தப்படும் அதிகார மற்றும் அச்சுறுத்தும் நெறிதவறிய காதல் விளையாட்டுகளில் பகடைக்காய்களாய் ஆகியுள்ளனர். சில சமயங்களில், நெருங்கிய உறவுகளை வைத்திருக்கும்படி நேரடியாகவே வற்புறுத்தப்படுகின்றனர். ஆனாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாலின நச்சரிப்பு தந்திரமான, அதேசமயத்தில், வெட்கங்கெட்ட வெறுப்பூட்டும் செயல்களை உள்ளடக்குகிறது: விரும்பப்படாத அல்லது பொருத்தமற்ற தொடுதல்கள், கீழ்த்தரமான குறிப்புகள், காம உணர்வைத் தூண்டும் பார்வைகள்.
எதிர்பாலாரின் கவனத்தைக் கவருவதற்காக சில மனிதர்கள் தங்கள் பங்கில் எடுக்கும் வெறும் ஒரு சாதகமற்ற முயற்சிதான் அதுவென்று விவாதிப்பவர்களாய், அப்படிப்பட்ட நடத்தையை தொல்லை என்று அழைப்பதையே சிலர் மறுப்பது மெய்தான். ஆனால் எழுத்தாளர் மார்த்தா லாங்கலன் போன்ற பலர், அந்த வெறுப்பூட்டுகின்ற நடத்தையை மன்னிப்பதற்கான அத்தகைய முயற்சிகளை மறுக்கின்றனர். அவர் எழுதுகிறார்: “அது அருவருப்பான உறவாடுதலோ, கொடூரமான உறவாடுதலோ, கேலியான உறவாடுதலோ, ‘தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட’ உறவாடுதலோ அல்ல. அது பெண்களுக்குக் கவர்ச்சிகரமாய்த் தோன்றுவதை அர்த்தப்படுத்துவதில்லை; அது முற்றிலும் வேறொரு காரியத்தை நிறைவேற்றும் நடத்தையாகும். கற்பழித்தலைப் போன்றே, பாலினத் தொல்லை பெண்களைக் கவருவதற்கு அல்ல, அவர்களை வற்புறுத்துவதற்குத் திட்டமிடப்படுகிறது. . . . [அது] அதிகாரத்தின் ஒரு வெளிக்காட்டாகும்.” ஆம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறாக நடத்தும் அத்தகைய செயல்கள் ‘மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆளுகை செய்யும்’ மற்றொரு கொடூரமான வழியாகும்.—பிரசங்கி 8:9; ஒப்பிடுக: பிரசங்கி 4:1.
பாலினத் தொல்லைக்கு ஆளாகையில், பெண்கள் பொதுவாக மகிழ்ச்சியடைவதில்லை, ஆனால் அருவருப்படைதல், கோபப்படுதல் ஆகியவற்றிலிருந்து, மனச்சோர்வடைதல், அவமானப்படுதல் ஆகியவை வரையில் வெவ்வேறு விதமாகப் பிரதிபலிக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஒருவர் நினைவுகூருகிறார்: “அந்தச் சூழ்நிலை என்னைக் கொன்றுவிட்டது. என் நம்பிக்கையை, என் தன்னம்பிக்கையை, என் சுயமரியாதையை, என் பணியில் சாதனை உணர்வுகளை இழந்துவிட்டேன். என் ஆளுமை திடீரென மாற்றமடைந்தது. நான் எதற்கும் கவலைப்படாத, மகிழ்ச்சியான மனப்பான்மை கொண்டவளாய் இருந்துவந்தேன். கசப்புற்றவளாய், ஒதுங்கிக்கொண்டவளாய், மற்றும் வெட்கமுற்றவளாய் மாறினேன்.” மேலும் நச்சரிப்பவர்கள் ஒரு மேலதிகாரியாகவோ அல்லது அதிகாரத்தில் உள்ள வேறொருவராகவோ இருந்தால், தொல்லை குறிப்பிடத்தக்க வகையில், சங்கடமடையச் செய்வதாயும், ஆட்சேபணைக்குரியதாயும் ஆகிறது.
ஆகவே, நீதிமன்றங்கள் அவ்விதம் தாக்குபவர்களைத் தண்டிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும் ஆரம்பித்திருப்பது ஆச்சரியமூட்டுவதாய் இல்லை. அவ்வாறு தவறாக நடத்தப்படுவதை பிரஜையின் தனி உரிமையை மீறுவதாக ஐ.மா. உச்ச நீதிமன்றம் வரையறுத்தது, “விரோதத்தன்மை, அல்லது வெறுப்பூட்டும் தன்மை” அல்லாத ஒரு வேலைச் சூழலைக் காத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக அதிகளவான அதிகாரிகள் சட்டப்பூர்வமாக பொறுப்புள்ளவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
பாலினத் தொல்லையைப் பொறுத்துக்கொள்ளும் நிறுவனங்கள், மனவுறுதிகொண்ட பணியாளர் குறைவுபடுதலையும், பணியாளர் வேலைக்கு வராதிருப்பதில் அதிகரிப்பையும், குறைந்த உற்பத்தியையும், மாற்றுப் பணியாளரை வேலைக்கு அமர்த்துவதில் அதிகரிப்பையும் அனுபவிக்கலாம்—பலியாட்கள் வழக்குத் தொடருவதாய் இருந்தால் பொருளாதாரச் சீர்குலைவைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை.
எந்தளவுக்குப் பரவியுள்ளது?
பாலினத் தொல்லை எந்தளவுக்குத்தான் பரவியுள்ளது? ஐக்கிய மாகாணங்களிலுள்ள வேலைக்குச் செல்லும் பெண்களில் பாதிக்கும் மேலானோர் அதை அனுபவித்திருப்பதாய் சுற்றாய்வுகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஒரு புத்தகம் இவ்விதமாய் விவாதிக்கிறது: “பாலினத் தொல்லை எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினை. வெயிட்டர் வேலை செய்யும் பெண்ணிலிருந்து கூட்டாண்மைச் செயல் அலுவலராக வேலை செய்யும் பெண்வரை ஒவ்வொரு துறையைச் சேர்ந்த பெண்களுக்கும் அது நிகழ்கிறது. பலதரப்பட்ட அதிகாரிகளுள்ள ஸ்தாபனத்தின் எல்லா நிலையிலும், வியாபார மற்றும் தொழில் நிறுவனங்களின் எல்லா வகையிலும் அது சம்பவிக்கிறது.” என்றபோதிலும், அப் பிரச்சினை ஐக்கிய மாகாணங்களோடு மட்டுப்பட்டதாய் இல்லை. சூஸன் எல். வெப் என்பவரால் எழுதப்பட்ட ஷாக்வேவ்ஸ்: தி குளோபல் இம்பேக்ட் ஆஃப் செக்ஷுவல் ஹராஸ்மென்ட் என்ற புத்தகம் பின்வரும் புள்ளிவிவரங்களைச் சான்றாகக் குறிப்பிடுகிறது:a
கனடா: “10 பெண்களில் 4 பேர் வேலைத்தலத்தில் பாலினத் தொல்லைக்குள்ளாயிருப்பதாக புகார் செய்திருப்பதாய் ஒரு சுற்றாய்வு காட்டியது.”
ஜப்பான்: “சுற்றாய்வுக்குப் பிரதிபலித்த பெண்களில் 70 சதவீதத்தினர்,” வேலை செய்யுமிடத்தில் தொல்லையை “அனுபவித்ததாக ஆகஸ்ட் 1991-ன் சுற்றாய்வு ஒன்று காட்டியது. வேலைக்குப் போகையிலும் திரும்பிவருகையிலும் வழியில் பாலின சம்பந்தமாக தொல்லைபடுத்தப்பட்டதாக தொண்ணூறு சதவீதத்தினர் கூறினர்.”
ஆஸ்திரியா: “பெண்களில் கிட்டத்தட்ட 31 சதவீதத்தினர் மோசமான தொல்லையைப் பற்றிய சம்பவங்களைப் புகார் செய்ததாக 1986 சுற்றாய்வு ஒன்று காட்டியது.”
பிரான்ஸ்: “சுற்றாய்வு செய்யப்பட்ட 1,300 பெண்களில் 21 சதவீதத்தினர் தாங்கள் தனிப்பட்ட வகையில் பாலினத் தொல்லையை அனுபவித்திருந்ததாக 1991-ல் . . . ஓர் ஆய்வு கண்டறிந்தது.”
நெதர்லாந்து: “[சுற்றாய்வுக்கு] உட்பட்ட பெண்களில் 58 சதவீதத்தினர் தாங்கள் பாலினத் தொல்லையைத் தனிப்பட்ட வகையில் அனுபவித்திருந்ததாகக் கூறியதாக” ஓர் ஆய்வு காட்டியது.
இக் காலங்களின் ஓர் அடையாளம்
உண்மையில், வேலை செய்யுமிடத்தில் பாலின நச்சரிப்பும் பாலினத் தொல்லையும் இருப்பது புதிதான காரியங்கள் அல்ல. பெண்கள்—சில சமயங்களில் ஆண்களும்—பைபிள் காலங்களில்கூட அவ்வாறு தவறாகக் கையாளப்பட்டனர். (ஆதியாகமம் 39:7, 8; ரூத் 2:8, 9, 15) ஆனால் அத்தகைய தவறான நடத்தை இக்காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எங்கும் பரவியுள்ளதாகத் தோன்றுகிறது. ஏன் அப்படி?
ஒரு விஷயம், சமீப ஆண்டுகளில் பெண்களில் ஏராளமான எண்ணிக்கையினர் தொழிற்சந்தையில் நுழைந்துள்ளனர். ஆகவே பல பெண்கள் அத்தகைய துர்ப்பிரயோகங்கள் நடைபெற சாத்தியமாயுள்ள சூழ்நிலைகளுக்கு உள்ளாகின்றனர். என்றபோதிலும், மிகவும் குறிப்பிடத்தகுந்ததானது வெகு காலத்திற்கு முன்பாக பைபிள் தீர்க்கதரிசனமுரைத்தது: “இதை நினைவிற்கொள்க! கடைசிநாட்களில் கஷ்டகாலங்கள் வரும். மனிதர் சுயநலமானவராயும், பேராசையுள்ளவராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவராயும் இருப்பர்; அவர்கள் அவமதிப்பவர்களாய், . . . ; அவர்கள் தயவற்றவர்களாய், இரக்கமற்றவர்களாய், தூஷிப்பவர்களாய், வன்முறையாளர்களாய், மற்றும் கொடுமையுள்ளவர்களாய் இருப்பர்.” (2 தீமோத்தேயு 3:1-3, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) பாலினத் தொல்லை எங்கும் பரவியுள்ளதானது இவ் வார்த்தைகள் இக்காலத்தில் நிறைவேறி வருகின்றன என்பதற்குரிய ஒரே ஒரு தத்ரூபமான நிரூபணமாகும். அக்கறையூட்டும் விதத்தில், “பாலினத் தொல்லை பற்றிய புகார்கள் அதிகரித்திருப்பதோடு சேர்ந்து, பொது மரியாதை காட்டுவதில் திகைக்கவைக்கும் வீழ்ச்சியும் இருந்திருக்கிறது. கெட்ட நடத்தைமுறைகள் எங்குமிருக்கின்றன” என்று மென்ஸ் ஹெல்த் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.
பாலினத் தொல்லை எங்கும் பரவியிருப்பதானது 1960-களின்போது உலகம் முழுவதும் பரவியிருந்த ‘புதிய ஒழுக்கநெறியையும்’ பிரதிபலிக்கிறது. பாரம்பரியமாய் வந்த ஒழுக்கத்தின் எல்லைகளை அழித்துப் போட்டிருப்பது பிறரது உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அவமரியாதை காட்டுவதில் விளைவடைந்திருக்கிறது. அதன் காரணம் என்னவாயிருந்தாலும், பாலினத் தொல்லை வேலை செய்யுமிடத்தின் ஓர் அச்சந்தருகிற மெய்ம்மையாய் உள்ளது. ஆண்களும் பெண்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யக்கூடும்? வேலைத்தலம் பாலினத் தொல்லையிலிருந்து விடுபட்டதாய் இருக்கும் ஒரு காலம் எப்பொழுதாவது வருமா?
[அடிக்குறிப்பு]
a பாலினத் தொல்லை பற்றிய வித்தியாசமான சுற்றாய்வு முறைகளையும், வெவ்வேறு வரையறைகளையும் ஆய்வாளர்கள் பயன்படுத்துவதால், புள்ளிவிவரங்கள் வேறுபட வாய்ப்புள்ளன.
[பக்கம் 4-ன் பெட்டி]
பாலினத் தொல்லை—கட்டுக்கதைக்கு எதிராக உண்மை
கட்டுக்கதை: பாலினத் தொல்லை முற்றிலும் மிகைப்படுத்தி அறிக்கை செய்யப்படுகிறது. அது வெறுமனே மற்றொரு பிரமை, விளம்பர மூலங்களாலும் உள வெறுப்புநோயாலும் ஏற்பட்டது.
உண்மை: மொத்தத்தில், பாதிக்கப்பட்டதைப் பற்றி அறிக்கை செய்வதால் ஒரு பெண் அதிகத்தை இழக்கவும், மிகக் குறைந்ததையே பெறவும் வேண்டியிருக்கிறது. உண்மையில், பெண்களில் வெறும் ஒரு சிறுபான்மையானோரே (ஒரு சுற்றாய்வின்படி 22 சதவீதம்) தாங்கள் தொல்லைபடுத்தப்பட்டிருப்பதை எவரிடமாகிலும் எப்போதாவது சொல்கின்றனர். பயம், தர்மசங்கடம், சுயகுற்றச்சாட்டு, குழப்பம், தங்களது சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றி அறியாமை ஆகியவை பல பெண்கள் அமைதியாய் இருக்கும்படிச் செய்கின்றன. இப்பிரச்சினை இவ்விதமாய் வெகு குறைவாக அறிக்கை செய்யப்படுவதாக பல நிபுணர்கள் நம்புகின்றனர்!
கட்டுக்கதை: பெண்களில் பெரும்பாலானோர் கவனிக்கப்படுவதை அனுபவிக்கின்றனர். தாங்கள் தொல்லைபடுத்தப்படுவதாக வாதிடுபவர்கள் வெறுமனே கூருணர்வுள்ளவர்களேயாவர்.
உண்மை: அவ்வாறு கொடூரமாக நடத்தப்படும்போது பெண்கள் வெறுப்படைவதாய் சுற்றாய்வுகள் முரண்பாடின்றி காட்டுகின்றன. ஒரு சுற்றாய்வில், “தாங்கள் அருவருப்படைந்ததாக ஐந்தில் இரண்டு பேர் கூறினர், தாங்கள் கோபமடைந்ததாக சுமார் மூன்றில் ஒருவர் கூறினர்.” பிறர் கவலைப்படுவதாய், புண்படுவதாய், மனச்சோர்வடைவதாய் அறிக்கை செய்தனர்.
கட்டுக்கதை: பெண்கள் பாதிக்கப்படும் அதே அளவு ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
உண்மை: “மதிப்பிடப்பட்ட 90 சதவீத தொல்லை சம்பந்தப்பட்ட வழக்குகள் பெண்களை தொல்லைபடுத்தியிருந்த ஆண்களை உட்படுத்துகின்றன, 9 சதவீதம் அதே இனத்தை . . . , மற்றும் ஒரே ஒரு சதவீதம் ஆண்களை தொல்லைபடுத்தியிருந்த பெண்களை உட்படுத்துகிறது” என்பதாக ரிசர்ச்சர்ஸ் ஃபார் தி நேஷனல் அசோஸியேஷன் ஆஃப் வொர்க்கிங் விமன் (ஐ.மா.) அறிக்கை செய்கிறது.
[பக்கம் 5-ன் படம்]
பாலினத் தொல்லை பாலினத்தைப் பற்றியது மட்டுமல்ல