பாலினத் தொல்லை—உங்களைப் பாதுகாப்பது எப்படி
“எந்தவொரு பெண்ணும் அன்றாடம் பால்சம்பந்தமான குத்தல் பேச்சுகளை எதிர்ப்பட்டுக்கொண்டே இருக்கக்கூடாது” என்பதாக பத்திரிகையின் பதிப்பாசிரியர் கிரேட்கன் மோகன்ஸன் கூறுகிறார், “ஆனால் கீழ்த்தரமான நடத்தையிலிருந்து விடுபட்டிருக்கும் ஆதிகாலத்திலிருந்த வேலைச் சூழலைப் பெண்கள் எதிர்பார்ப்பதும் நியாயமானதல்ல.” போற்றத்தகுந்த வகையில், வேலைத்தலத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அதிகாரிகளாலும் நீதிமன்றங்களாலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக, வழக்கு தொடுப்பதன் அபாயமானது, உலகம் முழுவதிலுமுள்ள அதிகாரிகளையும் பணியாளர்களையும் வேலைச் சூழலை முன்னேற்றுவிப்பதற்கு முயலும்படி தூண்டியுள்ளது. வேலைத்தலத்தில் எதிர்ப்படும் பாலின நச்சரிப்பைக் கையாளுவதற்காக அந்தந்த நிறுவனத்துக்குரிய நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. வேலைத்தலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முறையான நடத்தையைக் குறித்து பணியாளர்களுக்குப் போதிப்பதற்காக கூட்டங்களும் கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.
சந்தேகமின்றி, நிறுவனங்களின் கொள்கைகளையும் உள்நாட்டுச் சட்டங்களையும் தெரிந்து அவற்றைப் பின்பற்றுவது அர்த்தமுள்ளதுதான். (ரோமர் 13:1; தீத்து 2:10) பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதையும் கிறிஸ்தவர்கள் பயனுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். உங்கள் உடன் பணியாளர்களோடு தொடர்பு கொள்ளுகையில், ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ள இவ் வழிகாட்டும் அறிவுரைகளைப் பின்பற்றுவதானது, பாலினத் தொல்லையினால் பாதிக்கப்படும் ஒருவராவதை—அல்லது அதைச் செய்யும் ஒருவராவதை—தவிர்க்க உதவுவதில் அதிகத்தை உங்களுக்குச் செய்யக்கூடும்.
ஆண்களுக்கான சரியான நடத்தை
பெண்களை ஆண்கள் எவ்விதம் நடத்த வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி எண்ணிப்பாருங்கள். எதிர்பாலாரைத் தொடுவதற்கு எதிராக நிபுணர்கள் பலர் எச்சரிக்கின்றனர். சிநேகப்பான்மையாக முதுகைத் தட்டிக்கொடுப்பது எளிதில் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். “தொடுவதை மிக வினைமையானதாக நீதிமன்ற விசாரணைக் குழுக்கள் கருதுகின்றன” என்று தொழில்துறை வழக்கறிஞர் ஃபிராங்க் ஹார்ட்டி குறிப்பிடுகிறார். அவரது ஆலோசனை? “கைகளைக் குலுக்குவதற்கு மேலாகச் செய்வதை அது உட்படுத்தினால், அதைச் செய்யாதீர்கள்.” மெய்தான், இவ்விஷயத்தில், பைபிளும்கூட எல்லா சந்தர்ப்பத்தையும் உள்ளடக்கிய சட்டத்தை உண்டாக்குவதாயில்லை.a ஆனால் தற்போதைய சட்டப்பூர்வ மற்றும் ஒழுக்கச் சூழலை நோக்குகையில்—விசேஷமாக உரையாடலின்போது, தங்களையறியாமலே தொடும் மனப்பான்மை உள்ளவர்களை—எச்சரிக்கை செய்வது பொருத்தமானது.
அத்தகைய ஆலோசனை எப்போதுமே பின்பற்றுவதற்கு எளிதானதல்ல என்பது ஒத்துக்கொள்ளத்தக்கதே. உதாரணமாக, கிளென் ஒரு ஸ்பானியப் பண்பாட்டைச் சேர்ந்தவர். அவர் கூறுகிறார், “நான் வந்த இடத்திலிருக்கிற மக்கள், ஐக்கிய மாகாணங்களில் செய்வதைவிட அதிகமாய் உங்களைக் கட்டித்தழுவும் மனப்பான்மை உள்ளவர்கள். என் குடும்பத்தில், பொதுவாக நண்பர்களை நாங்கள் ஒரு முத்தத்தோடு வாழ்த்துகிறோம், ஆனால் இங்கே அவ்வாறு சீக்கிரம் செய்துவிடாதபடி நாங்கள் எச்சரிக்கப்படுகிறோம்.” இவ்விஷயத்தில் பைபிள் நியமங்கள் பயனுள்ளவையாய் நிரூபிக்கின்றன. அப்போஸ்தலன் பவுல் இளம் தீமோத்தேயுவுக்குக் கூறினார்: “பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை முழுமையான தூய்மையுடன் சகோதரிகளைப்போலவும் பாவி.” (1 தீமோத்தேயு 5:1, 2, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) தாறுமாறான, வசீகரமான, அல்லது விரும்பப்படாத தொடுதலை அது தடை செய்வதாய் இருக்காதா?
பேச்சுக்கும் அதே நியமம் பொருத்தப்படலாம். பொருத்தமாகவே, பைபிள் கூறுகிறது: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்.” (எபேசியர் 5:3, 4) பேசுவதற்கு முன்பு நீங்கள் “உங்கள் தாய், சகோதரி, அல்லது மகள் அதைக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு நீங்கள் விரும்புவீர்களா?” என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பாலினத் தொல்லை வழக்கைக் கையாளும் வழக்கறிஞர் கதி சினோய் ஆலோசனை கூறுகிறார். அசிங்கமான, பாலுறவு பற்றிய சிந்தனையைத் தூண்டும் பேச்சுகள் பேசுபவரையும் கேட்பவரையும் தரக்குறைவானவர்களாக்குகின்றன.
தொல்லையைத் தடுப்பது
தொல்லைக்கு ஆளாவதைத் தவிர்க்க ஒருவர் எவ்வாறு முயலலாம்? பிரசங்கிப்பதற்காக இயேசு தம் சீஷர்களை முதல் முறையாக அனுப்பினபோது கொடுத்த ஆலோசனை, ஒருவேளை, இச்சந்தர்ப்பத்தில் பொருத்தப்படலாம்: “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.” (மத்தேயு 10:16) என்னவாயிருந்தாலும், ஒரு கிறிஸ்தவன் உதவியற்றவனாய் இல்லை. பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது: ‘ஞானம் உன் இருதயத்தில் பிரவேசிக்கும்போது . . . , நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.’ (நீதிமொழிகள் 2:10, 11) ஆகவே, உங்களைக் காத்துக்கொள்ள உதவும் சில பைபிள் நியமங்களைப் பற்றி நாம் சிந்திப்போம்.
1. உங்கள் உடன் பணியாளர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளுகிறீர்கள் என்பதில் கவனமாயிருங்கள். நட்பார்வமின்றி அல்லது விரோதத்தன்மையுடன் இருப்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனெனில் ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்’ என்று பைபிள் நம்மைத் துரிதப்படுத்துகிறது. (எபிரெயர் 12:14; ரோமர் 12:18) ஆனால் ‘புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்’ என்று பைபிள் கிறிஸ்தவர்களை எச்சரிப்பதால், விசேஷமாக எதிர்பாலாருடன் தொடர்பு கொள்ளுகையில் தொழில்சார்ந்த நடத்தையைக் காத்துக்கொள்ளுவது அர்த்தமுள்ளது. (கொலோசெயர் 4:5) எலிசபெத் போவலால் எழுதப்பட்ட டாக்கிங் பேக் டு செக்ஷுவல் பிரெஷர் என்ற புத்தகம், “தாங்கள் வகிக்கும் பாகத்திற்குப் பொருத்தமுள்ள இன்பகரமான மனப்பான்மைக்கும் பாலுறவுக்கு இணக்கம் தெரிவிப்பதை அர்த்தப்படுத்தும் வகையான நட்புறவுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் கற்றுக்கொள்ள” பணியாளர்களைத் துரிதப்படுத்துகிறது.
2. அடக்கமாய் உடை உடுத்துங்கள். நீங்கள் உடுத்துவது எதுவோ அது மற்றவர்களுக்கு செய்தியனுப்புகிறது. முந்தைய பைபிள் காலங்களில், குறிப்பிட்ட பாணியிலமைந்த உடை உடுத்துவது ஒரு நபரை ஒழுக்கங்கெட்டவராக, அல்லது தாறுமாறானவராக அடையாளப்படுத்தியது. (நீதிமொழிகள் 7:10) அதே விஷயம் இன்று பொதுவாக உண்மையாய் இருக்கிறது; இறுக்கமாக, பகட்டாக, அல்லது உடல் அங்கங்களைப் பிரத்தியேகமாய்க் காட்டும்படியாக உடை அணிவது தவறான நோக்குடன் கவனத்தைக் கவரலாம். மெய்தான், தாங்கள் விரும்பும் விதத்தில் உடையணியும் உரிமை தங்களுக்கிருப்பதாக சிலர் உணரலாம். ஆனால் எழுத்தாளர் எலிசபெத் போவல் கூறுவதைப்போல, “பணத்தைத் திருடுவது சரியானதுதான் என்று நம்பின ஆட்களோடு நீங்கள் வேலை செய்தீர்களென்றால், பர்ஸ் இணைக்கப்பெற்ற பெல்ட்டை உங்கள் இடுப்பில் அணியவேண்டாமென நான் சொல்லுவேன். . . . சமுதாயத்தினுடைய மனப்பான்மைகளின் . . . பலவீனத்தை நீங்கள் புரிந்துகொண்டு அதனால் பாதிக்கப்படுவதிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள முயல வேண்டும்.” பைபிளின் ஆலோசனை இவ்விதத்தில் நம் நாளுக்கேற்றதாக உள்ளது. ‘தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும் [“அடக்கத்துடனும்,” NW], தெளிந்த புத்தியினாலும் . . . தங்களை அலங்கரிக்கவேண்டும்’ என்று அது பெண்களுக்கு அறிவுரை கூறுகிறது. (1 தீமோத்தேயு 2:10) அடக்கமாக உடை அணியுங்கள், அப்போது அசிங்கமான பேச்சு, அல்லது செயல்கள் ஆகியவற்றுக்கு இலக்காகும் சந்தர்ப்பம் குறைவாக இருக்கலாம்.
3. உங்கள் கூட்டுறவுகளைக் குறித்து கவனமாயிருங்கள்! பாலினத் தாக்குதலுக்கு ஆளான தீனாள் என்ற பெயருடைய ஓர் இளம் பெண்ணைப் பற்றி பைபிள் கூறுகிறது. தெளிவாகவே அவள் தன்னைத் தாக்கவிருந்தவனின் கவனத்தைக் கவர்ந்தாள், ஏனெனில் அவள் “வழக்கமாய் கானான் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்”—தாறுமாறான நடத்தைக்குப் பேர்போன பெண்கள்! (ஆதியாகமம் 34:1, 2, NW) அதேபோல் இன்று, பாலுறவைத் தூண்டும் விஷயங்களைப் பற்றி உரையாடுவதற்குப் பேர்போன உடன் வேலையாட்களோடு நீங்கள் வழக்கமாய் அரட்டையடித்துக்கொண்டு—அல்லது செவிகொடுத்துக்கொண்டு—இருந்தால், பாலுறவு நோக்கோடு அணுகுகையில் நீங்கள் இணங்குபவர்களாய் இருப்பீர்கள் என்று சிலர் முடிவு செய்பவர்களாய் இருக்கலாம்.
நீங்கள் உங்கள் உடன் பணியாளர்களிடம் அலட்சியமாய் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் அந்த உரையாடல் கண்ணியமற்றதாக மாறினால், ஏன் உங்களை வெறுமனே விடுவித்துக்கொள்ளக் கூடாது? அக்கறையூட்டும் வகையில், உயர்ந்த ஒழுக்க தராதரங்களுக்குப் புகழ்பெற்றவர்களாய் இருப்பதானது, தொல்லையிலிருந்து தங்களைப் பாதுகாப்பதாக யெகோவாவின் சாட்சிகளில் பலர் கண்டிருக்கின்றனர்.—1 பேதுரு 2:12.
4. இணங்கிச் செல்லும் சூழ்நிலைகளைத் தவிருங்கள். அம்னோன் என்ற பெயருடைய ஓர் இளம் மனிதன் தாமார் என்ற பெயருடைய ஓர் இளம் பெண்ணை பாலுறவு தொடர்பாக சாதகமாய் பயன்படுத்திக்கொள்ள அவளோடு தனித்திருக்கும்படி திட்டமிட்ட விதத்தைப் பற்றி பைபிள் கூறுகிறது. (2 சாமுவேல் 13:1-14) தொல்லைபடுத்துபவர்கள் இன்று அதேபோல் நடந்துகொள்ளலாம், ஒருவேளை தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஒருவரை மதுபானம் அருந்துவதில் பகிர்ந்துகொள்ளும்படியாகவோ, அல்லது சரியான காரணம் ஏதுமின்றி, வேலைநேரத்திற்குப் பிறகு தங்கியிருக்கும்படியாகவோ அழைப்புக் கொடுக்கலாம். அத்தகைய அழைப்புகளைக் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள்! பைபிள் கூறுகிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்.”—நீதிமொழிகள் 22:3.
நீங்கள் தொல்லைபடுத்தப்பட்டால்
ஒரு பெண் குற்றஞ்சாட்டப்படாதவளாய் நடந்துகொள்ளும்போதும் சில ஆண்கள் முறையற்ற அணுகுமுறைகளைக் கையாளுவார்கள் என்பது மெய்யே. நீங்கள் இலக்காகையில் அத்தகைய அணுகுமுறைகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? நிலைகுலையாமல் அதைக் கையாளுவதை சிலர் சிபாரிசு செய்துள்ளனர்! ‘அலுவலகப் பாலுறவு வாழ்க்கைக்கு சுவையூட்டுவதாய் இருக்கிறது!’ என்று ஒரு பெண் கூறுகிறார். என்றபோதிலும், அத்தகைய பொருத்தமற்ற கவனத்தை நகைச்சுவையாகவோ அல்லது முகஸ்துதியாகவோ நோக்காமல், மெய்க் கிறிஸ்தவர்கள் அதை வெறுத்து ஒதுக்குகின்றனர். அவர்கள் ‘பொல்லாங்கானதை வெறுக்கின்றனர்,’ பொதுவாக அத்தகைய அணுகுமுறைகளின் உள்நோக்கம், ஒருவரைப் பாலுறவு ஒழுக்கக்கேட்டிற்குள் வழிநடத்துவதுதான் என்பதை உணருகின்றனர். (ரோமர் 12:9, NW; 2 தீமோத்தேயு 3:6, 7ஆ-ஐ ஒப்பிடுக.) குறைந்தபட்சம், அந்த அநாகரிகமான நடத்தை அவர்களுடைய கிறிஸ்தவ கண்ணியத்துக்கு அவமானம் இழைப்பதாகும். (1 தெசலோனிக்கேயர் 4:7, 8-ஐ ஒப்பிடுக.) அத்தகைய சூழ்நிலைகளை நீங்கள் எப்படி கையாளலாம்?
1. ஒரு நிலைநிற்கை எடுங்கள்! யோசேப்பு என்ற பெயருடைய கடவுள்-பயமுள்ள ஒரு மனிதர் ஒழுக்கங்கெட்ட பாலுறவுக்கான அழைப்புகளுக்கு எவ்விதத்தில் பிரதிபலித்தார் என்று பைபிள் நமக்குக் கூறுகிறது: “சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.” பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் யோசேப்பு அவளது காதல் கோரிக்கைகளை வெறுமனே கண்டும்காணாததுபோல் இருந்தாரா? இல்லை! அவளது அணுகுமுறைகளை தைரியத்துடன் மறுத்து, “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” என்று கூறினதாக பைபிள் சொல்லுகிறது.—ஆதியாகமம் 39:7-9.
யோசேப்பின் செயல்கள் ஆண்கள் பெண்கள் ஆகிய இரு பாலாருக்குமே ஒரு நல்ல மாதிரியாக இருக்கின்றன. பாலுறவு பற்றிய சிந்தனையைத் தூண்டும் பேச்சு அல்லது வலிய வம்பிழுக்கும் நடத்தை ஆகியவற்றை அறவே பொருட்படுத்தாமல் விடுவது—அல்லது இன்னும் மோசமாக, தைரியமிழப்பது—அதைச் சமாளிப்பதைக் கடினமாக்குகிறது; மாறாக, பயம் அல்லது தயக்கம் அது அதிகரிப்பதற்குக் காரணமாயிருக்கலாம்! கற்பழிப்பவர்கள் பாலினத் தொல்லையை, “ஒரு பெண் தாக்கப்படுகையில் திருப்பித் தாக்கும் சாத்தியத்தை அளவிடும் ஒரு வழியாக” பொதுவாக பயன்படுத்துகின்றனர்; “தொல்லைபடுத்தப்படுகையில் அவள் எதிர்க்காமலும் தைரியமின்றியும் இருந்தால், தாக்கப்படுகையிலும் அவள் எதிர்க்காமலும் பயப்படுகிறவளாயும் இருப்பாள் என்பதாக அவர்கள் நினைத்துக் கொள்கின்றனர்” என்று கற்பழிப்புத் தடுப்பு நடவடிக்கை ஆலோசகர் மார்த்தா லாங்கலன் எச்சரிக்கிறார். ஆகவே தொல்லையின் முதல் அறிகுறியிலேயே ஒரு நிலைநிற்கை எடுப்பது மிகவும் முக்கியமானது. ஓர் எழுத்தாளர் கூறுகிறபடி: “முடியாதென்பதை உடனடியாகவும் தெளிவாகவும் சொல்லுவது பொதுவாக தொல்லைபடுத்துபவரின் வெறுப்பூட்டும் நடத்தையை நிறுத்தச் செய்வதற்குப் போதுமானது.”
2. இல்லதை இல்லதென்று சொல்லுங்கள்! அவ்வாறு மலைப்பிரசங்கத்தில் இயேசு கூறினார். (மத்தேயு 5:37) அவரது கூற்று இச்சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானதாய் இருக்கிறது, ஏனெனில் பொதுவாக தொல்லைபடுத்துபவர்கள் விடாமல் தொடர்ந்து தொல்லைபடுத்துபவர்களாய் உள்ளனர். நீங்கள் எந்தளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும்? அது சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் தொல்லைபடுத்துபவருடைய பிரதிபலிப்பையும் பொறுத்தது. உங்களது குறிப்பைத் தெளிவாக்குவதற்குத் தேவைப்படும் அளவுக்கு உறுதித்தன்மையைப் பயன்படுத்துங்கள். சில சந்தர்ப்பங்களில், அமைதியான குரல் தொனியில் கூறப்படும் ஓர் எளிதான, நேரடியான கூற்று போதுமானது. கண்தொடர்பு கொள்ளுங்கள். நிபுணர்கள் பின்வருவதை ஆலோசனையாகக் கூறுகின்றனர்: (அ) உங்கள் உணர்ச்சிகளைக் குறிப்பிடுங்கள். (“எனக்கு இது கொஞ்சம்கூட பிடிக்காது, நீங்க . . .”) (ஆ) வெறுப்பூட்டும் நடத்தையைக் குறிப்பாகச் சொல்லுங்கள். (“. . . நீங்க தாறுமாறா, ஆபாசமா பேசும்போது . . .”) (இ) அந்த நபர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவாக்குங்கள். (“நீங்க எங்கிட்ட அப்படி பேசுறத நிறுத்தணும்னு நான் விரும்புறேன்!”)
“என்றபோதிலும், எக்காரணத்தைக் கொண்டும்,” லாங்கலன் எச்சரிக்கிறார், “நேருக்கு நேர் எதிர்ப்படுவது வலியத்தாக்கும் ஒன்றாக மாறிவிட அனுமதிக்கக் கூடாது. பதிலுக்கு வலியத்தாக்குவது (அவமானப் பேச்சுகளைப் பயன்படுத்துவது, அச்சுறுத்துவது, வார்த்தையை துர்ப்பிரயோகம் செய்வது, ஓங்கி ஒரு குத்து குத்துவது, தொல்லைபடுத்துபவர்மீது துப்புவது) இன்னும் நிலைமையை மோசமாக்குவதாய் இருக்கிறது. வார்த்தையளவில் வன்முறையைக் கையாளுவது அபாயமானது, மேலும் தற்காப்பைத் தேவைப்படுத்தும் அளவுக்கு உண்மையிலேயே உடலளவில் தாக்கப்படும்போது தவிர, உடலைத் தாக்குவதற்கு அவசியமில்லை.” அத்தகைய நடைமுறையான ஆலோசனை ரோமர் 12:17-ல் கூறப்பட்டிருக்கும் பைபிள் வார்த்தைகளுக்கு இசைவாய் உள்ளது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்.”
நீங்கள் உங்களாலானமட்டும் முயற்சி செய்தபோதிலும் தொல்லை தொடருமானால் அப்போது என்ன செய்வது? பாலினத் தொல்லையைக் கையாளுவதற்காக சில நிறுவனங்கள் விதிமுறைகளை ஏற்படுத்தி வைத்துள்ளன. பொதுவாக ஒரு நிறுவனப் புகார் முறையை பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்துவது தானேயும் தொல்லைபடுத்துபவர் உங்களை விட்டுவிடச் செய்யும். என்றபோதிலும், அவ்வாறில்லாமலும் போகலாம். வருந்தத்தக்க வகையில், பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ, இரக்க குணமுள்ள ஒரு மேற்பார்வையாளர் கிடைப்பது எப்போதும் ஓர் எளிய காரியமல்ல. ஒரு பெண் பணியாளரால் தான் தொல்லைபடுத்தப்பட்டதாகக் கூறும் கிளென், புகார் செய்ய முயன்றார். அவர் நினைவுகூருகிறார்: “அதிகாரியிடம் நான் அதைப் பற்றிக் கூறினபோது, எனக்கு உதவி கிடைக்கவே இல்லை. உண்மையில், அதை அவர் உவகையூட்டும் ஒன்றாய் நினைத்தார். நான் அந்தப் பெண்ணைக் குறித்து எச்சரிக்கையாய் இருந்து அவளைத் தவிர்ப்பதற்காக விசேஷ முயற்சி எடுக்க வேண்டியிருந்தது.”
சிலர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முயன்றிருக்கின்றனர். ஆனால் செய்திமூலங்களில் வாசிப்பதுபோல் வழக்கு முடிவில் மானநஷ்ட ஈடாக மிகப் பெரியளவான தொகையை வழங்குமாறு தீர்ப்பு கூறப்படுவது சாத்தியமல்ல. அதோடு, டாக்கிங் பேக் டு செக்ஷுவல் பிரெஷர் என்ற புத்தகம் எச்சரிக்கிறது: “தொல்லைக்கு எதிரான சட்டப்பூர்வ பரிகாரங்களைப் பெறுவதற்கு பேரளவான உணர்ச்சிப்பூர்வ ஆற்றலும் நேரமும் தேவை; அவை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.” நல்ல காரணத்தோடு பைபிள் எச்சரிக்கிறது: “வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே.” (நீதிமொழிகள் 25:8) சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதனால் வரும் உணர்ச்சிப்பூர்வ மற்றும் ஆவிக்குரிய பாதிப்புகளை எண்ணிப்பார்த்த பிறகு, வேறு வேலை தேடுவதை சிலர் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
தொல்லைக்கு முடிவு
பாலினத் தொல்லை புதிதான ஒன்றல்ல. அபூரணமான, சூழ்ச்சி செய்யும், பேராசையுள்ள மனித இதயத்தைப் போன்றே, அது எங்கும் நிகழும் ஒன்றாகும். ஆணைகளும் நீதிமன்ற வழக்குகளும், சமுதாயம் பாலினத் தொல்லையின்றி இருக்கும்படி ஒருபோதும் செய்ய முடியாது. பாலினத் தொல்லையை ஒழித்துக் கட்டுவதற்கு அடிப்படையில் மக்களின் இதயத்தில் மாற்றம் தேவை.
இன்று, கடவுளுடைய வார்த்தையும் அவரது ஆவியும் உலகம் முழுவதிலுமுள்ள மக்களில் அத்தகைய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது, ஏசாயா தீர்க்கதரிசியால் முன்னுரைக்கப்பட்டபடி, ஓநாய்களும் சிங்கங்களும், ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும் போன்று நடக்கக் கற்றுக்கொள்ளுவதைப் போன்றது. (ஏசாயா 11:6-9) மக்களோடு சேர்ந்து பைபிளைப் படிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான முன்னாளைய ‘ஓநாய்கள்’ உள்ளார்ந்த, நிலைத்திருக்கும் ஆளுமை மாற்றங்களைச் செய்ய யெகோவாவின் சாட்சிகள் உதவுகின்றனர். இம் மக்கள் ‘முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை களைந்துபோட்டு, தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்’ என்ற வேதப்பூர்வமான கட்டளையின்படி செய்கின்றனர்.—எபேசியர் 4:22-24.
ஒருநாள் இப்பூமி, பைபிள் தராதரங்களின்படி வாழும் ஆண்களாலும் பெண்களாலும் நிறைந்திருக்கும். தேவனுக்குப் பயந்த மக்கள், எல்லாவித துர்ப்பிரயோகங்களுக்கும் ஒரு முடிவு உண்டாகும் அந்நாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதுவரை, இன்றைய ஆட்சேபிக்கத்தக்க மெய்ச் சம்பவங்களைத் தங்களால் முடிந்தவரை மிகச் சிறந்தளவில் சமாளிக்கின்றனர்.
[அடிக்குறிப்பு]
a 1 கொரிந்தியர் 7:1-ல் கொடுக்கப்பட்டுள்ள “ஸ்திரீயைத் தொடாமலிருப்பது” பற்றிய பவுலின் எச்சரிக்கை தெளிவாகவே பாலுறவு தொடர்பைக் குறிக்கிறது, சாதாரண தொடுதலை அல்ல. (நீதிமொழிகள் 6:29-ஐ ஒப்பிடுக.) இச்சந்தர்ப்பத்தில் பவுல், விவாகமின்றி இருத்தலை உற்சாகப்படுத்துவதோடு, பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கு எதிராக எச்சரிக்கிறார்.—ஆங்கில காவற்கோபுரம் ஜனவரி 1, 1973 இதழில், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியை காண்க.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
“உங்கள் தாய், சகோதரி, அல்லது மகள் அதைக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு நீங்கள் விரும்புவீர்களா?”
[பக்கம் 8-ன் படம்]
தொழில்சார்ந்த நடத்தையும் அடக்கமான உடையும் தொல்லையிலிருந்து ஒருவரைப் பாதுகாப்பதற்கு அதிகத்தைச் செய்யக்கூடும்
[பக்கம் 10-ன் படம்]
மெய்க் கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்துவதற்கு இன்று கற்றுவருகின்றனர்