தீர்வு என்ன?
அகதிகளின் நிலைமை முழுமையாகவே நம்பிக்கையற்ற ஒன்றல்ல. உலகம் முழுவதுமாக, போரினாலும் மற்ற பிரச்சினைகளாலும் இடம் பெயர்ந்திருப்போருக்கு உதவ மனிதநேய அமைப்புகள் முயற்சி செய்கின்றன. அவர்கள் உதவியளிக்கும் ஒரு முக்கிய வழியானது, அகதிகள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச்செல்ல உதவுவதாகும்.
அகதிகள், கொல்லப்படுவோமோ, துன்புறுத்தப்படுவோமோ, கற்பழிக்கப்படுவோமோ, சிறையிலடைக்கப்படுவோமோ, அடிமையாக்கப்படுவோமோ, கொள்ளையிடப்படுவோமோ அல்லது பட்டினிபோடப்படுவோமோ என்றெல்லாம் பயந்து தங்கள் வீட்டையும் சமுதாயத்தையும் நாட்டையும் விட்டுச் செல்கிறார்கள். ஆகவே அகதிகள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கு முன், அவர்கள் தப்பி ஓடுவதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆயுதப் போர் இறுதியில் முடிவடைந்தாலும்கூட, சட்ட ஒழுங்கு இல்லாமை, வீடுகளுக்குத் திரும்புவதன்பேரிலான உற்சாகத்தை ஜனங்கள் இழக்கும்படி செய்கிறது. ருவாண்டாவின் அகதியும் ஆறு பிள்ளைகளுக்குத் தாயுமான ஆக்னஸ் இவ்வாறு சொன்னார்: “ருவாண்டாவிற்கு எங்களை [திரும்பவும்] அனுப்புவது எங்களை பிரேதக்குழிகளுக்கு அனுப்புவதுபோல் இருக்கும்.”
இருந்தபோதிலும், 1989 முதற்கொண்டு, 90 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியிருக்கின்றனர். இவர்களில் சுமார் 36 லட்சம் பேர் ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானத்திற்கு திரும்பியிருக்கின்றனர். ஆறு நாடுகளிலிருந்து மற்றுமொரு 16 லட்சம் அகதிகள், 16 வருட உள்நாட்டுப் போரினால் நாசமாக்கப்பட்டிருந்த ஒரு தேசமான மொஸாம்பிக்கிற்குத் திரும்பினர்.
திரும்புவது சுலபமல்ல. அகதிகள் திரும்பிச்செல்லும் நாடுகள் அடிக்கடி பாழாய் கிடக்கின்றன—கிராமங்கள் இடிபொருட்களால் நிறைந்திருக்கின்றன, பாலங்கள் இடித்துத்தள்ளப்பட்டிருக்கின்றன, சாலைகளிலும் வயல்களிலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு, திரும்பிச்செல்லும் அகதிகள் தங்களது வாழ்க்கையை மாத்திரமல்ல, ஆனால் தங்களது வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மற்ற அனைத்தையுமே முதலிலிருந்து திரும்ப கட்ட வேண்டும்.
ஆயினும், போரின் தீ ஓர் இடத்தில் அணைந்து அகதிகள் திரும்பச்செல்வதை சாத்தியமாக்கினாலும், வேறெங்காவது அது பற்றிக்கொண்டு புதிய அகதிகளின் பெருக்கெடுப்பை உருவாக்குகிறது. ஆகவே, அகதிகள் பிரச்சினையைத் தீர்ப்பது, மக்கள் தங்கள் உயிர்களுக்காக தப்பி ஓடச் செய்யும் போர், அடக்குமுறை, பகைமை, துன்புறுத்துதல் மற்றும் பிற காரணக்கூறுகளான அதன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதை அர்த்தப்படுத்துகிறது.
உலக அகதிகளின் நிலை 1995 (ஆங்கிலம்) இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “மறுக்கமுடியாத உண்மை . . . என்னவென்றால், [அகதி அவலத்திற்கான] தீர்வுகள் எந்த மனிதநேய அமைப்பின் கட்டுப்பாட்டிற்கும் அப்பால் உள்ள அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதார காரணிகள்மீது இறுதியில் சார்ந்திருக்கின்றன.” பைபிளின்படி, தீர்வுகள், மனிதநேய அமைப்பாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, பூமிக்குரிய எந்த அமைப்பினாலும் எட்ட முடியாததாய் இருக்கின்றன.
அகதிகளே இல்லாத ஓர் உலகம்
எனினும், ஒரு தீர்வு இருக்கிறது. தங்கள் வீடுகளிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் பிரிக்கப்பட்டிருப்போர்மீது யெகோவா தேவன் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதாக பைபிள் காண்பிக்கிறது. பூமியின் அரசாங்கங்களுக்கு மாறாக, மனிதவர்க்கம் எதிர்ப்படும் எல்லா சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதற்கு அவருக்கு வல்லமையும் ஞானமும் இருக்கிறது. அதை, பூமியின் விவகாரங்களின் மீது சீக்கிரத்தில் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவிருக்கும் பரலோக அரசாங்கமான தமது ராஜ்யத்தின் மூலம் அவர் செய்வார்.
கடவுளுடைய ராஜ்யம் எல்லா மனித அரசாங்கங்களையும் மாற்றீடு செய்யும். இப்போதிருப்பதுபோல் பூமியில் அநேக அரசாங்கங்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, முழு கிரகத்தையும் ஆளப்போகும் ஒரேவொரு அரசாங்கமே அப்போது இருக்கும். பைபிள் இவ்வாறு முன்னறிவிக்கிறது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
பைபிளில் மத்தேயு 6:9-13-ல் காணப்படும் மாதிரி ஜெபத்தை நீங்கள் ஒருவேளை அறிந்திருப்பீர்கள். ஜெபத்தின் ஒரு பாகம் இவ்வாறு சொல்கிறது: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” அந்த ஜெபத்திற்கு இசைவாக, பூமியின்பேரிலான கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்ற கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் ‘வரும்.’
கடவுளுடைய ராஜ்யத்தின் அன்பான ஆட்சியின்கீழ், சர்வலோக சமாதானமும் பாதுகாப்பும் இருக்கும். பூமியின் மக்களுக்கிடையேயும் தேசங்களுக்கிடையேயும் இனிமேலும் பகைமையோ சண்டையோ இருக்காது. (சங்கீதம் 46:9) இனிமேலும் தங்கள் உயிர்களுக்காக தப்பி ஓடும் அல்லது முகாம்களில் தளர்வுற்றிருக்கும் கோடிக்கணக்கான அகதிகள் இருக்கமாட்டார்கள்.
ராஜ்யத்தின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் . . . விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்,” என்பதாக கடவுளுடைய வார்த்தை வாக்களிக்கிறது.—சங்கீதம் 72:12-14.
[பக்கம் 10-ன் படம்]
விரைவில் அனைவரும் ஒருவரையொருவர் உண்மையான சகோதர சகோதரிகளாக பாவித்து நடத்துவர்