அவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
விழித்தெழு!-வுடன் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில், இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்று “பண்பாட்டுப் பேற்றையும் ஒருநிலைப்படுத்துதலையும் நாங்கள் எதிர்ப்படுவது. உதாரணமாக, எங்கள் மொழியை நாங்கள் இழந்துவருகிறோம். ஒரு காலத்தில் இது ஒரு திட்டமிட்ட அரசு கொள்கையாய் இருந்தது. கல்வியின் வாயிலாக எங்களை ‘நாகரிகப்படுத்த’ பெருமுயற்சிகள் எடுக்கப்பட்டன. விடுதிகளுள்ள பள்ளிகளுக்கு நாங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, எங்கள் பூர்வீக மொழிகளைப் பேசுவதிலிருந்து தடைசெய்யப்பட்டோம்,” என்று செய்யன் குடியினரின் அமைதித் தலைவர் லாரன்ஸ் ஹார்ட் கூறினார். ஸன்டிரா கின்லச்சின்னீ நினைவுகூருகிறார்: “என் பள்ளி விடுதியில் நான் நவகோ மொழியைப் பேசினால், அந்த ஆசிரியர் என் வாயை சோப்பால் கழுவிவிடுவார்!”
தலைவர் ஹார்ட் தொடர்கிறார்: “சமீபத்தில் உற்சாகமூட்டும் ஓர் அம்சமானது, வெவ்வேறு குடிகளால் விழிப்பு நிலை ஏற்பட்டுவந்திருக்கிறது. தங்களது மொழிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டாலொழிய அவை மறைந்துபோய்விடும் என்று அவர்கள் உணர்கின்றனர்.”
கலிஃபோர்னியா பழங்குடியினரின் ஒரு மொழியான கரக் மொழியைப் பேசுபவர்களில் பத்துப்பேர் மட்டுமே மீந்திருக்கின்றனர். ஜனவரி 1996-ல், கட்டாவ்பா மொழியைப் பேசிவந்த கடைசி இந்தியரான ரெட் தண்டர் க்ளௌடு (கார்லஸ் வெஸ்டெஸ்), 76 வயதில் இறந்தார். பல்லாண்டுகளாக அவரோடு அம்மொழியைப் பேச அவருக்கு எவரும் இல்லாதிருந்தனர்.
அரஸோனாவிலுள்ள நவகோ மற்றும் ஓப்பி ஒதுக்கீட்டுப் பகுதிகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொருவருமே நவகோ அல்லது ஓப்பியோடு ஆங்கிலமும் பேசுகின்றனர். இந்தியரல்லாத சாட்சிகளும் நவகோ மொழியைக் கற்றுவருகின்றனர். நவகோ குடிகளில் பலர் தங்கள் மொழியில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்களாய் இருப்பதால் தங்கள் பைபிள் கல்விபுகட்டும் வேலையைச் செய்வதற்காக, சாட்சிகள் நவகோ மொழியைத் தெரிந்துவைத்திருக்க வேண்டியுள்ளது. ஓப்பி மற்றும் நவகோ மொழிகள் இன்னும் வழக்கில் உள்ளன, இளைஞர்கள் பள்ளியில் அவற்றைப் பயன்படுத்த உற்சாகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பூர்வீக அமெரிக்கக் கல்வி
ஐக்கிய மாகாணங்களில், 16,000 மாணவர்களுடன் 29 இந்தியக் கல்லூரிகள் உள்ளன. முதலாவதானது அரஸோனாவில் 1968-ல் திறக்கப்பட்டது. “எங்களுக்கென்று நாங்களாகவே தீர்மானிக்கும் நிலைமைகளில் கல்விபுகட்டும் உரிமையான இது, பூர்வீக இந்திய மக்களைப் பாதிக்கும், மிகவும் வியப்பூட்டும் புரட்சிகளுள் ஒன்று” என்று அமெரிக்க இந்தியர்களின் மேல்நிலைக் கல்விக்குழுவைச் சேர்ந்த, டாக்டர் டேவிட் கிப் கூறினார். ஸின்ட்டா க்ளெஸ்கா யுனிவர்ஸிட்டியில், லக்கோட்டா மொழி அத்தியாவசியமான ஒரு பாடம்.
அமெரிக்கன் இண்டியன் காலெஜ் ஃபண்டின் தலைவரான ரான் மக்நில் (ஹங்க்பாப்பா லக்கோட்டா) கூறுவதன்படி, ஐக்கிய மாகாணங்களிலுள்ள எந்தத் தொகுதியிலும் பூர்வீக அமெரிக்கர்களில்தான் வேலையில்லாத் திண்டாட்ட எண்ணிக்கை 50 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையாக இருக்கிறது, மேலும் இந்தியர்களுக்குத்தான் மிகக் குறைந்த வாழ்நாள் எதிர்பார்ப்பு இருக்கிறது, மேலும் நீரழிவு, காச நோய், குடிப்பிரச்சினை ஆகியவற்றில் அதிகளவு உள்ளது. மேம்பட்ட கல்வி, உதவி செய்வதற்காக எடுக்கப்படும் படிகளில் ஒன்றாக மட்டுமே இருக்கிறது.
புனித நிலங்கள்
பூர்வீக அமெரிக்கர்களில் பலருக்கு, அவர்களுடைய மூதாதையரின் நிலங்கள் புனிதமானவை. சட்டமாமன்ற மேலவை உறுப்பினர் ஒருவரிடம் வயிட் தண்டர் கூறினபடி: “எங்களுக்கு இங்கிருக்கும் எங்கள் நிலமே உலகத்திலேயே மிக விருப்பமான பொருள்.” உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் செய்யும்போது, தங்கள் நிலம் வெள்ளையனின் உபயோகத்துக்கென்றும், ஒரேயடியாக உடைமையாகவும் சொந்தமாகவும் கொள்ளப்படுவதற்கு அல்ல என்றும், இந்தியர்கள் அடிக்கடி ஊகித்துக்கொண்டனர். தங்கத்தைத் தேடி சுரங்கம் வெட்டுபவர்கள் குவிந்தபோது, சியோக்ஸ் இந்தியக் குடிகள், 1870-களில் டக்கோட்டாவைச் சேர்ந்த பிளாக் ஹில்ஸில் மதிப்புமிக்க நிலத்தை இழந்தனர். 1980-ல் எட்டு சியோக்ஸ் பழங்குடியினருக்கு ஈட்டுத்தொகையாக 10 கோடியே 50 லட்சம் டாலரை ஐ.மா. அரசு செலுத்தும்படி ஐ.மா. உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இந்நாள்வரையாக அப் பழங்குடியினர் அப் பணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்—தங்கள் புனித நிலமான தென் டக்கோட்டாவைச் சேர்ந்த பிளாக் ஹில்ஸ் அவர்களுக்குத் திரும்பவும் கொடுக்கப்படுவதே அவர்களின் விருப்பம்.
சியோக்ஸ் இந்தியர்களில் பலருக்கு, பிளாக் ஹில்ஸில் ரஷ்மோர் மலையில் செதுக்கப்பட்ட வெள்ளையராயிருந்த தலைவர்களின் முகங்களைப் பார்க்க விருப்பமில்லை. அருகிலிருந்த ஒரு மலையின்மீது, சிற்பிகள் இன்னும் பெரியதொரு சிற்பத்தைச் செதுக்கிவருகின்றனர். அது, ஓக்லாலா சியோக்ஸ் குடியைச் சேர்ந்த படைத்தலைவர் கிரேஸி ஹார்ஸினுடைய சிற்பம். முகம் ஜூன் 1998 வாக்கில் முற்றுப்பெறும்.
இன்றைய சவால்கள்
நவீன உலகில் தப்பிப்பிழைக்க, பூர்வீக அமெரிக்கர்கள் பல வழிகளில் தங்களை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டியவர்களாய் இருந்திருக்கின்றனர். பலர் இப்போது நன்கு கற்றவர்களாயும், கல்லூரி சென்றவர்களாயும், பழங்குடியினரின் சூழலுக்கு நன்கு பயன்படும் வகையில் திறமைகளைப் பெற்றவர்களாயும் இருக்கின்றனர். ஓர் உதாரணம், மிச்சிகனைச் சேர்ந்த பழங்குடியினரான, நல்ல விதமாகப் பேசப்படும், பர்ட்டன் மக்கர்ச்சி என்ற சிப்பவா. பொது ஒளிபரப்பு சேவைக்காக உண்மைக்கதைகளை அவர் படமாக்கியிருக்கிறார்; இப்போது அரஸோனாவைச் சேர்ந்த ஓப்பி ஒதுக்கீட்டுப் பகுதியிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார், மாநிலம் முழுவதிலும் கல்லூரி வீடியோ வகுப்பறை நிகழ்ச்சிநிரல்களை நிகழ்த்திவருகிறார். மற்றொரு உதாரணம், ஹார்வர்ட்டில் பயின்றவரான, ஓனிடா பழங்குடித் தலைவர் ரே ஹால்பிரிட்டர்.
ஆர்லன் யங் ஹட்ஃபில்ட் நவகோ டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதுபவராய், நவகோ இளைஞர்களுக்கு, அனுபவங்களில்லை, அல்லது, அவர்கள் வளர்ந்துவருகையில் அவர்களுடைய பெற்றோரும் தாத்தாபாட்டிமாரும் செய்த தியாகங்களையும் செய்யவில்லை என்று கூறினார். அவர் எழுதினார்: “[நவீன] வசதிகள் இருப்பதால் அவர்கள் எக்காலத்திலும் விறகு சேகரிக்கவோ, வெட்டவோ இல்லை, தண்ணீர் இறைக்கவில்லை, அல்லது அவர்களுடைய மூதாதையர்களைப் போல ஆடுகளைப் பராமரிக்கவில்லை. வெகு காலத்துக்கு முன்பு சிறார்கள் செய்துவந்ததுபோல, எங்கள் குடும்பங்களுக்கு ஆதரவு தருவதில்லை.” அவர் முடிவாகக் கூறுகிறார்: “எங்கள் பிள்ளைகளின்மீது தவிர்க்கமுடியாமல் செல்வாக்கு செலுத்தும் சமூகப் பிரச்சினைகள் பலவற்றிலிருந்து விடுபடுவது கூடாத காரியம். உலகின் பிற பகுதிகளிலிருந்து எங்கள் குடும்பங்களையோ, ஒதுக்கீட்டுப்பகுதிகளையோ தனியே பிரிக்க முடியாது, எங்கள் முன்னோர்கள் நடத்திவந்ததைப் போன்ற வாழ்க்கைக்கு எங்களால் திரும்பிச் செல்லவும் முடியாது.”
அங்குத்தான் பூர்வீக அமெரிக்கர்களுக்கு சவால் இருக்கிறது—வெளியில் தீவிரமாய் மாறிவரும் உலகோடு மாற்றியமைத்துக்கொள்ளும் அதே சமயத்தில், தனித்தன்மை வாய்ந்த பழங்குடிகளின் பாரம்பரியங்களையும் மதிப்புகளையும் எப்படி கடைப்பிடிப்பது.
போதைமருந்துகளையும் மதுவையும் எதிர்த்துப்போராடுவது
இந்நாள்வரையாக, மதுபானம் அருந்துவது பூர்வீக அமெரிக்க சமுதாயத்தைப் பாழாக்கிவருகிறது. ஓப்பி மற்றும் நவகோ குடிகளிடையே குழந்தை நல நிபுணராகவும் பொதுநல மருத்துவராகவும் 12 ஆண்டுகளாகப் பணியாற்றியிருந்த டாக்டர் லரேன் லார்ச், விழித்தெழு! நிகழ்த்திய ஒரு நேர்காணலில் கூறினார்: “மதுபானப்பழக்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோல் ஒரு கடும் பிரச்சினையாய் இருக்கிறது. பலமான உடலையுடையோர் கரணை நோய், திடீர் மரணம், தற்கொலை, மனிதக்கொலை ஆகியவற்றுக்கு பலியாகின்றனர். பிள்ளைகள், துணைவர், மற்றும் கடவுளையும்விட மதுபானப்பழக்கம் முன்னுரிமை எடுப்பதைப் பார்ப்பது வருந்தத்தக்கது. சிரிப்பு கண்ணீராகவும், மென்மையான பண்பு வன்முறையாகவும் மாற்றப்படுகிறது.” அவர் மேலும் கூறினார்: “நவகோ மற்றும் ஓப்பி குடியினரால் முன்பு புனிதமாகக் கொள்ளப்பட்ட சடங்குகள் சிலவும்கூட, இப்போது சில சமயங்களில் குடிவெறியாலும் அக்கிரமத்தாலும் நிந்திக்கப்படுகின்றன. மதுபானம் இவ்வழகிய மக்களை அவர்களின் உடல்நலம், அவர்களின் புத்திநுட்பம், அவர்களின் கற்பனைத்திறம், அவர்களின் மெய்யான ஆள்தன்மை ஆகியவற்றிலிருந்து அழிக்கிறது.”
வின்டோ ராக், அரஸோனாவில், நவகோ குடிகளின் நீதித் துறையில் ஒரு மத்தியஸ்தரான ஃபில்மர் புளூஹௌஸ், போதைமருந்து மற்றும் மதுபான துர்ப்பிரயோகத்தை, “சுய-மருந்து மருத்துவம்” என்று நாசூக்காக விவரித்தார். இத் துர்ப்பிரயோகம் துயரங்களை மறக்கடிக்கவும் ஒருவர் வேலையில்லா, மேலும் அடிக்கடி நோக்கமில்லா ஒரு வாழ்க்கையின் கடும் நிஜத்திலிருந்து தப்பிக்க உதவவும் துணைபுரிகின்றன.
என்றபோதிலும், வெள்ளையனால் அறிமுகம் செய்யப்பட்ட “வெறுப்பூட்டும்” குடியைப் பூர்வீக அமெரிக்கர்களில் பலர் வெற்றிகரமாய் எதிர்த்துப் போராடியுள்ளனர், மேலும் போதைமருந்துக்கு அடிமையாவதை எதிர்த்து வெற்றிபெறப் போராடியுள்ளனர். வாஷிங்டன் மாநிலத்தின் ஸ்போக்கேன் இந்திய ஒதுக்கீட்டுப்பகுதியைச் சேர்ந்த கிளைட் மற்றும் ஹென்ரியெட்டா ஏப்ரஹாம்ஸன் இரு உதாரணங்களாகும். கிளைட் உறுதியான உடல்கட்டும், கரிய மயிரும் கண்களும் கொண்டவர். அவர் =15விழித்தெழு!-விடம் விளக்கினார்:
“எங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியில், ஒதுக்கீட்டுப் பகுதியில் வாழ்ந்துவந்தோம்; அதன்பிறகு கல்லூரி செல்வதற்காக ஸ்போக்கேன் நகருக்கு மாறிச்சென்றோம். மதுபானம் மற்றும் போதைமருந்துகள் உள்ளிட்ட எங்கள் வாழ்க்கைப்பாணியை நாங்கள் விரும்பவில்லை. இதுதான் எங்களுக்குத் தெரிந்த வாழ்க்கைமுறை. அவை குடும்பத்தில் ஏற்படுத்திய பிரச்சினைகளை நாங்கள் கண்டிருந்ததால் இவ்விரண்டு செல்வாக்குகளையும் வெறுப்பவர்களாகவே நாங்கள் வளர்ந்துவந்தோம்.
“பிறகு யெகோவாவின் சாட்சிகளோடு எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் நகருக்குச் செல்வதற்கு முன்பெல்லாம் அவர்களைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டிருந்ததில்லை. எங்களுடைய முன்னேற்றம் மெதுவாய் இருந்தது. ஒருவேளை, நாங்கள் அறிந்திராதவர்களை, விசேஷமாய் வெள்ளையரை உண்மையிலேயே நம்பாததால் அவ்வாறிருந்தது. சுமார் மூன்று ஆண்டுகள் குறிக்கோளற்ற வேதப்படிப்புகளைக் கொண்டிருந்தோம். நிறுத்துவதற்கு எனக்கு மிகக் கடினமாய் இருந்த பழக்கம் மரிஜூவானா புகைப்பது. எனக்கு 14 வயதாய் இருந்தபோதிலிருந்தே புகைத்துவந்திருந்தேன், நிறுத்த முயலுவதற்கு முன்பு எனக்கு 25 வயது. வயதுவந்த இளைஞனாய் இருந்த என் வாழ்க்கையில் பெரும்பாலும் நான் வெறித்திருந்தேன். 1986-ல், ஜனவரி 22 தேதியிட்ட (ஆங்கில) விழித்தெழு!-வில், “மரிஜூவானாவை மற்றவரெல்லாம் புகைக்கிறார்—நான் ஏன் கூடாது?” என்ற கட்டுரையை நான் வாசித்தேன். மரிஜூவானாவைப் புகைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று—விசேஷமாக, ‘பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்’ என்று கூறும் நீதிமொழிகள் 1:22-ஐ வாசித்தபிறகு—அது என்னைச் சிந்திக்க வைத்தது.
“அப் பழக்கத்தை நான் நிறுத்திவிட்டேன், மேலும் 1986-ன் வசந்த காலத்தில், ஹென்ரியெட்டாவும் நானும் திருமணம் செய்துகொண்டோம். நவம்பர் 1986-ல் நாங்கள் முழுக்காட்டப்பட்டோம். 1993-ல், நான் சபையில் ஒரு மூப்பரானேன். எங்கள் இரு மகள்களும் 1994-ல் முழுக்காட்டப்பட்டனர்.”
சீட்டாட்டக்கூடங்களும் சூதாட்டமும் ஒரு விடையா?
1984-ல் இந்தியர்களால் நடத்தப்படும் சூதாட்டம் ஐக்கிய மாகாணங்களில் ஒன்றுகூட இல்லை. தி வாஷிங்டன் போஸ்ட் கூறுவதன்படி, இந்த ஆண்டில், 200 பழங்குடியினர் 220 சூதாட்ட நடவடிக்கைகளை 24 மாநிலங்களில் கொண்டிருக்கின்றனர். நவகோ மற்றும் ஓப்பி குடியினர், முனைப்பான விதிவிலக்குகளாவர், அவர்கள் இதுவரையில் அச் சோதனையை எதிர்த்துள்ளனர். ஆனால் சீட்டாட்டக்கூடங்களும் பிங்கோ (bingo) கூடங்களும் ஒதுக்கீட்டுப்பகுதியில் வாழ்பவர்களின் செழுமைக்கும் கூடுதல் வேலைவாய்ப்புக்கும் பாதையாய் இருக்கின்றனவா? ஃபில்மர் புளூஹௌவ்ஸ் விழித்தெழு!-விடம் இவ்வாறு கூறினார்: “சூதாட்டம் இருபுறமும் கருக்குள்ள ஒரு பட்டயம். கேள்வியானது, அது அதிகம் பேருக்குத் தீங்கிழைப்பதைவிட நன்மை பயக்குமா?” இந்திய சீட்டாட்டக்கூடங்கள் தேசியளவில் 1,40,000 வேலைகளை உருவாக்கியுள்ளதாக ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது, ஆனால் இவற்றுள் 15 சதவீதம் மட்டுமே இந்தியர்களால் நடத்தப்படுகிறது என்று குறிப்பிடுகிறது.
செய்யன் குடியின் தலைவர் ஹார்ட், சீட்டாட்டக்கூடங்களும் சூதாட்டமும் ஒதுக்கீட்டுப்பகுதியைப் பாதிக்கும் விதத்தின்மீதான தன் கருத்தை விழித்தெழு!-விடம் தெரிவித்தார். அவர் கூறினார்: “என் உணர்ச்சிகள் இருமனப்போக்குள்ளவை. ஒரே நல்ல விஷயமானது, அது வேலையையும் வருமானத்தையும் பழங்குடியினருக்குத் தருகிறது. மறுபட்சத்தில், வாடிக்கையாளரில் மிகுதியானோர் எங்கள் சொந்த ஜனங்களாய் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த சிலர் பிங்கோ ஆட்டத்துக்கு அடிமையாகியிருக்கின்றனர், மேலும், பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீடுதிரும்புவதற்கும் முன்பு, சீட்டாட்டக்கூடங்களுக்குச் செல்வதற்காக, முன்கூட்டியே அவர்கள் வீட்டைவிட்டுப் புறப்படுகின்றனர். பிறகு இப் பிள்ளைகள், தங்கள் பெற்றோர் பிங்கோ விளையாடிவிட்டுத் திரும்பிவரும்வரையில் வீட்டுச்சாவியை வைத்துக்கொண்டு தனியே வீட்டில் இருக்கின்ற பிள்ளைகளாகின்றனர்.
“தாங்கள் வெற்றிபெறப்போவதாகவும் தங்கள் வருமானத்தை அதிகரிக்கப்போவதாகவும் அக் குடும்பங்கள் நினைப்பது பெரும்பிரச்சினையாய் இருக்கிறது. பொதுவாக அவர்கள் வெற்றிபெறுவதில்லை; அவர்கள் இழக்கின்றனர். மளிகை சாமான்களுக்காகவும் பிள்ளைகளின் உடைக்காகவும் தனியே எடுத்துவைத்திருந்த பணத்தை அவர்கள் செலவழிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.”
எதிர்காலம் எதை வைத்திருக்கிறது?
தென்மேற்குக் குடியினரின் எதிர்காலத்தைக் கலந்தாலோசிக்கையில் இரண்டு பிரபலமான அணுகுமுறைகள் இருக்கின்றன என்று டாம் பாட்டி விளக்குகிறார். “முதலாவதானது அமெரிக்க வாழ்க்கையின் செல்வாக்கினுள் பூர்வீக குடிகளின் கலாச்சாரங்கள் மறைந்துவிடப்போகின்றன என்பதாக ஒளிவுமறைவின்றி முன்குறிக்கிறது. இரண்டாவதானது மிகவும் தெளிவற்றதாய் இருக்கிறது . . . ‘மிகச் சிறந்த பழையவற்றையும் மிகச் சிறந்த புதியவற்றையும்’ சிந்தனையுடன் ஒன்றுசேர்க்கும் பண்பாட்டுப் பேறு பற்றி அது பெருந்தன்மையாய்ப் பேசுகிறது; அதாவது, நேர்த்தியான இந்தியன் ஒருவித கலாச்சார அஸ்தமனத்தில் தன் கைவேலைப்பாடுகளில் பழைய பாணியை விரும்பி அதில் நிலைத்திருக்கலாம், தன் மதத்தில் பலவகைகளைக் கொண்டிருக்கலாம், தன் தத்துவத்தில் அறிவுள்ளவனாய் இருக்கலாம்—ஆனால் அப்படியிருந்தும் எங்களோடு (உயர்வான [வெள்ளையனின்] கலாச்சாரத்தோடு) கொண்டிருக்கும் உறவுகளில் காரியங்களை எங்கள் நோக்குநிலையில் காண்பதற்கு இன்னும் போதிய நியாயத்தன்மையுள்ளவனாய் இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது.”
பிறகு பாட்டி ஒரு கேள்வி கேட்கிறார். “மாற்றம் தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் யார், என்ன நோக்கத்துக்காக மாற்றுவார்? . . . மற்ற எல்லாரையும் வெறுமனே முன்னேற்றமடையாத அமெரிக்கர்களாகக் கருதும் ஓர் எரிச்சலூட்டும் பழக்கம் எங்களுக்கு [வெள்ளையர்களுக்கு] இருக்கிறது. தங்களது வாழ்க்கைமுறை அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த வேண்டும் என்றும், எங்களைப் போலவே வாழவும் சிந்திக்கவும் அவர்கள் ஆவலாய் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் நினைத்துக்கொள்கிறோம்.”
அவர் தொடர்ந்து சொல்கிறார்: “ஒரு காரியம் நிச்சயம்—அமெரிக்க இந்தியனின் கதை இன்னும் முடிவடையவில்லை, ஆனால் அது எப்படி முடிவடையும், அல்லது அது எப்பொழுதாவது முடிவடையுமா என்பது காணப்படவேண்டியதாய் இருக்கிறது. ஒருவேளை, மீந்திருக்கும் இந்தியக் குடிகளை, குழப்பமுண்டாக்கும் சமூகப் பிரச்சினைகளாக நினைப்பதற்கு மாறாக, கலாச்சாரத்தின் மதிப்புமிக்க வள ஆதாரங்களாக நினைக்க ஆரம்பிப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.”
ஒத்திசைவு மற்றும் நீதியுள்ள ஒரு புதிய உலகில் வாழ்வு
பைபிளின் நோக்குநிலையிலிருந்து, பூர்வீக அமெரிக்கர்கள், மற்றும் எல்லா ஜாதியினர், பழங்குடியினர், மொழியினருக்கும் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்பது யெகோவாவின் சாட்சிகளுக்குத் தெரியும். ‘புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ உருவாக்குவதை யெகோவா தேவன் வாக்களித்திருக்கிறார்.—ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1, 3, 4.
ஒரு புதிய கிரகத்தை இந்த வாக்கு அர்த்தப்படுத்துவதில்லை. பூர்வீக அமெரிக்கர்களும்கூட அறிந்துள்ளபடி, மதிக்கப்படும்போதும், சரியாகக் கையாளப்படும்போதும், இப்பூமி ஓர் இரத்தினமாய் இருக்கிறது. அதற்குப் பதிலாக, தன்னலத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தும் மனிதவர்க்க அரசாங்கங்களை, ஒரு புதிய பரலோக ஆட்சிமுறை மாற்றீடு செய்யப்போவதாக பைபிள் தீர்க்கதரிசனம் குறித்துக்காட்டுகிறது. இப் பூமி, திரும்ப நிலைநாட்டப்பட்ட காடுகள், சமவெளிகள், ஆறுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பரதீஸாக மாற்றப்படும். எல்லா மக்களும் தன்னலமின்றி அந்நிலத்தைக் காக்கும் பொறுப்பில் பங்கெடுப்பர். தன்னலத்துக்காகப் பிறரைப் பயன்படுத்துவதும் பேராசையும் இனி இராது. ஏராளமான நல்ல உணவும், கட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் அங்கிருக்கும்.
மேலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலோடு, கடந்த காலத்தின் எல்லா அநீதிகளும் ஒழிந்துவிட்டிருக்கும். ஆம், அரஸோனாவிலும் நியூ மெக்ஸிகோவிலும் வாழும், பல பியூப்ளோ இந்தியர்களின் மூதாதையர்களான அனசாஸி (“பழமையானவர்கள்” என்பதற்கான நவகோ மொழி) குடியினரும், இங்கே திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒரு பூமியில் நித்திய வாழ்வுக்கான சந்தர்ப்பத்தைப் பெறுவதற்கு திரும்பி வருவர். மேலும், இந்திய வரலாற்றிலேயே பிரசித்தி பெற்ற அத் தலைவர்களும்—ஜரானமோ, சிட்டிங் புல், கிரேஸி ஹார்ஸ், டக்கம்ஸா, மான்யூயலிட்டோ, தலைவர்கள் ஜோஸஃப் மற்றும் சீயட்டல் ஆகியோரும்—இன்னும் பலரும், வாக்களிக்கப்பட்ட அந்த உயிர்த்தெழுதலில் திரும்பி வரலாம். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) அவர்களுக்கும், இப்போது கடவுளைச் சேவிக்கும் அனைவருக்கும் கடவுளின் வாக்குகள் அளிக்கும் என்னே வியக்கத்தக்க எதிர்பார்ப்பு!
[பக்கம் 15-ன் படம்]
மரத்தால் செய்யப்பட்டு மண்பூசப்பட்ட, நவகோ ஹோகனின் மாதிரி
[பக்கம் 15-ன் படம்]
கிரேஸி ஹார்ஸின் மாடல், பின்னணியிலிருக்கும் மலையிலுள்ள சிற்பத்தின் அடிப்படை
[படத்திற்கான நன்றி]
Photo by Robb DeWall, courtesy Crazy Horse Memorial Foundation (nonprofit)
[பக்கம் 15-ன் படம்]
அரஸோனா பகுதியிலுள்ள கீம்ஸ் கென்யானில், ஓப்பி மற்றும் நவகோ சாட்சிகள், முன்னால் வாணிகத்தலமாயிருந்த இந்த ராஜ்ய மன்றத்தில் கூடுகின்றனர்
[பக்கம் 16-ன் படம்]
1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த (மேஸ்ஸா வெர்டி, கொலராடோ) அனசாஸி கூடாரங்கள்
[பக்கம் 16-ன் படம்]
ஜரானமோ (1829-1909), பிரசித்தி பெற்ற அப்பாச்சி தலைவர்
[படத்திற்கான நன்றி]
Courtesy Mercaldo Archives/Dictionary of American Portraits/Dover