உலகை கவனித்தல்
குற்றத்தின் அதிக விலை
ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு நாளும் சுமார் 94,000 குற்றச் செயல்கள் இழைக்கப்படுவதாக நீதித்துறை மதிப்பீடு செய்கிறது. இக் குற்றங்களுக்காக ஐ.மா. குடிமக்கள் என்ன விலையைச் செலுத்துகின்றனர்? பொருளியல் ஆய்வாளர் எட் ரூபன்ஸ்டீன் கூறுவதன்படி, நேரடியான விலைகள்—கார்கள், ரொக்கப்பணம், நகை போன்ற தனிப்பட்ட சொத்து இழப்புகள் உள்ளிட்டவை—ஒவ்வொரு ஆண்டும் 2,000 கோடி டாலரை நெருங்குகின்றன. என்றபோதிலும், இத்துடன், சட்ட அமலாக்கம், நீதிமன்றங்கள், சிறைகள், மற்றும் திரும்பி வரும் உத்தரவாதத்தின் மீதான விடுதலை ஆகிய முறைகளுடன் சம்பந்தப்பட்ட செலவுகளும் உள்ளன. இது அத் தொகையை சுமார் 10,000 கோடி டாலராக்குகிறது. மேலும், குற்றத்துக்கு பலியானோர் அடிக்கடி பயம், காயம், அல்லது மனச்சோர்வு ஆகியவற்றின் தாக்குதலால் துன்புறுவதால், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிடுவதன் மூலம் இந்த எதிர்மறையான உணர்வுகளைப் பலர் சமாளிக்கின்றனர். ஆகவே, உற்பத்தி இழப்புகள், எளிதில் “குற்றத்திற்கு பலியானோரின் விலைகளை ஆண்டுக்கு 25,000 கோடி டாலர் முதல் 50,000 கோடி டாலர் வரையாக” அதிகரிக்கிறது என்பதாக ரூபன்ஸ்டீன் கூறுகிறார்.
குற்றத்துக்கு உடந்தையான துறவிகள்
தாய்லாந்தில், ஆம்ஃபிட்டமைன்களுக்கு அடிமையான, புதிதாக சமயம் மாறியிருந்த ஒரு புத்த மதத் துறவி, பிரிட்டனைச் சேர்ந்த, 23 வயதான ஒரு சுற்றுப்பயணியைக் கற்பழித்துக் கொலை செய்திருந்ததாக ஒத்துக்கொண்டான் என்பதாக உவர்ல்ட் பிரஸ் ரிவ்யூ அறிக்கை செய்கிறது. என்றபோதிலும், இக் குற்றம், சமீபத்தில் புத்த மதகுருமாரின்மீதான ஓர் “ஊழல் தொடரில்” ஒன்றேயாகும். “அதிகரித்துவரும் குற்றங்களின் எண்ணிக்கையோடு, பொருள் சம்பந்தப்பட்ட பேராசையும் புத்தமதத்தைக் கெடுத்து வருகிறது.” எவ்வகையில்? “மோட்டார் ஓட்டிகளால் ஓட்டப்பட்ட மோட்டார் வண்டிகளில் பயணம் செய்யும் சில துறவிகளுக்கு, அதிர்ஷ்ட மந்திரங்களை விற்பது ஓர் லாபகரமான தொழிலாய் இருக்கிறது.” அதன் விளைவாக, “ஒரு காலத்தில் மரியாதை காட்டப்பட்ட புத்த மத குருக்களின் மீதான மக்களின் விசுவாசம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.” துறவிகளிடையே “போதை மருந்து துர்ப்பிரயோகத்தை” தடைசெய்யும் ஒரு முயற்சியில், “வெறியூட்டும் பொருளின் நச்சகற்றும் மையங்களை மடங்கள் திறந்துள்ளன” என்றும் அப் பத்திரிகை குறிப்பிடுகிறது.
கசியும் கையுறைகள்
HIV அல்லது ஈரல் அழற்சிக்கு (hepatitis) எதிராக, ஒரு ஜோடி லேட்டக்ஸ் கையுறைகள், அணிவோரைக் காப்பதற்குப் போதுமானதாய் இராமல் இருக்கலாம் என்பதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. அதுவே, “மூன்றில் ஒரு ஜோடி கையுறைகள், HIV அல்லது ஈரல் அழற்சியை ஏற்படுத்தும் அளவுள்ள வைரஸ்களை உள்ளே விட்டுவிடுவதைக்” கண்டுபிடித்தபோது, மெடிக்கல் காலெஜ் ஆஃப் விஸ்கான்ஸின் ஆய்வாளர்களால் அடையப்பெற்ற முடிவாய் இருந்தது. 1992-ல் டாக்டர்களும் நர்ஸ்களும் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட விளைவுகளைப் பற்றி புகார் செய்ததையடுத்து, அப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை பிரிவின் பொறுப்பாளரான ஜோர்டான் ஃபிங்க், லேட்டக்ஸ் கையுறைகளைச் சோதிக்க ஆரம்பித்தார். நோயாளியின் இரத்தம் அல்லது உடல் திரவங்களைத் தொட நேரிடும் மருத்துவ பணியாட்கள் ரப்பர் கையுறைகளை அணிந்துகொள்ளும்படியாக அதே ஆண்டில் ஐ.மா. அரசு அத்தியாவசியப்படுத்த ஆரம்பித்தது. ஃபிங்க் கூறுவதன்படி, தங்கள் தோலில் வெட்டுப்பட்ட, அல்லது வேறுவித விரிசல் உடைய உடல்நல பணியாளர்கள், ஒரு ஜோடி கையுறைக்கும் மேலாக அணிவதைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்பதாக அப் பத்திரிகை கூறுகிறது. என்றபோதிலும், விரிசல் இல்லாத தோலையுடைய மருத்துவ பணியாளர் அனாவசியமாக கலக்கமடைய வேண்டியதில்லை. “விரிசல் இல்லாத தோல் ஒரு நல்ல தடையாக உள்ளது” என்று ஃபிங்க் கூறுகிறார்.
மோசடி கில்லாடிகளை எதிர்த்து சமாளித்தல்
பாஸ்டன், மசசூஸட்ஸில், ஓர் உள்ளூர் டிவி நிலையத்தில் ஒரு நுகர்வோர் அறிவிப்பாளராய் 17 ஆண்டுகளைச் செலவிட்ட பிறகு, “மோசடி கில்லாடிகளின் தந்திரமான திறமைகளையும் விடாமுயற்சியையும்” மேற்கொள்ளும் வழிகளைப் பற்றிய ஒரு பட்டியலை பால லியன்ஸ் தொகுத்திருக்கிறார். லேடீஸ் ஹோம் ஜர்னல்-ல் வந்த ஒரு கட்டுரையின்படி, லியன்ஸின் ஆலோசனைகள், பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: “உங்களை அழைக்கும், முன்பின் அறிமுகமில்லாத ஒருவரோடு தொலைபேசியில் வியாபாரம் செய்ய மறுத்துவிடுவீர். உங்களுக்குப் புரியாதவற்றில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர். “இலவச” அன்பளிப்பைப் பெறுவதற்காக ஒன்றைப் பணம் கொடுத்து ஒருபோதும் வாங்காதீர். பணத்தைத் திருப்பித் தந்துவிடும் உத்தரவாதங்களில் மிதமிஞ்சிய நம்பிக்கை வையாதீர். நீவிர் அறியாத அறக்கொடை நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதைத் தவிர்ப்பீர். பயன்படுத்தப்பட்ட ஒரு காரை, ஒரு தனி மெக்கானிக்கைக் கொண்டு முன்கூட்டியே ஆய்வு செய்யாமல் ஒருபோதும் வாங்காதீர். “இவ் விதிமுறைகள் ஏதோ பழம்பாணியானதாகத் தோன்றலாம். ஆனால் அவை தொழிற்சந்தையில் இருந்துவரும் மிக மோசமான ஒரு சில மோசடிகளிலிருந்து உங்களைக் காக்கக்கூடும்” என்று லியன்ஸ் கூறுகிறார்.
பிரேஸிலின் ஆரோக்கியப் பிரச்சினைகள்
“நம் மக்கள், தொழில் ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள மேற்கத்திய நாடுகளின் ஆரோக்கியப் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளின் தடுக்கப்படக்கூடிய நோய்கள் ஆகிய இரண்டாலும் துன்புறும் சாதகமற்ற நிலையைக் கொண்டிருக்கின்றனர்” என்று பிரேஸிலின் தேசிய கொள்ளைநோயியல் மையத்தின் இயக்குநரான டாக்டர் எட்வார்டூ லெவ்கோவிட்ஸ் வருந்தினார். பிரேஸிலைச் சேர்ந்தவர்களின் மத்தியில் உள்ள ஆரோக்கியப் பிரச்சினைகளின் முக்கிய காரணங்களை டாக்டர் லெவ்கோவிட்ஸ் குறிப்பிட்டுக் காட்டுவதாக தி மெடிக்கல் போஸ்ட்-ல் மேற்கோள் காட்டப்பட்டது. பட்டியலில் முதலாவது இருப்பவை, இதய இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட நோய், புற்றுநோய், மற்றும் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள். அடுத்ததாக, வன்முறைக் குற்றத்தாலும் விபத்துகளாலும் ஏற்படும் மரணம். “முன்னேற்றமடைந்துள்ள மேற்கத்திய நாடுகளின்” நோய்களைத் தொடர்ந்து வருபவை, மோசமான வாழ்க்கைச் சூழ்நிலையால் விளைவடையும் தொற்று நோய்கள். “பிரேஸிலின் ஜனத்தொகையில் பாதிப்பேர் ஒருவித ஒட்டுண்ணி தொற்றால் துன்புறுகின்றனர் என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று தி மெடிக்கல் போஸ்ட் கூறுகிறது. மலேரியா மட்டும் பிரேஸிலைச் சேர்ந்த 5,00,000 பேரை ஒவ்வொரு ஆண்டும் அல்லற்படுத்துகிறது. பிரேஸிலில் காணப்படும் பொதுவான பிற ஒட்டுண்ணி நோய்களாவன: ஷாகஸ் நோய், சிஷ்டசோமையாசஸ், கொக்கிப்புழு, லேஷ்மேனியாசிஸ், மற்றும் யானைக்கால் நோய்.
உறுப்பு குறைபாடு
1994-ல், ஐக்கிய மாகாணங்களில் “அயலுறுப்புப் பொருத்துதல் தேவைப்பட்ட மக்களின் எண்ணிக்கை, கொடையாளிகளின் எண்ணிக்கையைவிட கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பாகம் அதிகரித்துவிட்டது” என்பதாக தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் கூறுகிறது. 1988-லிருந்து 1994 வரையில், அயலுறுப்புப் பொருத்துதலைப் பெறும் மக்களின் எண்ணிக்கை 49 சதவீதம் உயர்ந்தது, அதே சமயத்தில் உறுப்புக் கொடையாளிகளின் எண்ணிக்கை 37 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. வழங்கீடு செய்யப்படுவதைவிட அதிகமாய் உள்ள தட்டுப்பாட்டால், ஓர் உறுப்பு கிடைக்கும் வரை காத்திருக்கையில் சில தீவிர நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த இரண்டக நிலையின்மீது குறிப்புரைப்பதாய், நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது: “அயலுறுப்பு பொருத்தும் அறுவை சிகிச்சை வழக்கத்திலிருப்பது அதிகமாகையில், பலர் அதை விரும்புகின்றனர், பட்டியலும் அதிகரிக்கிறது.” இவ்வாறு, “அயலுறுப்புகளைப் பொருத்துவது அவற்றின் வெற்றிக்கே ஒரு பலியாகிவருகிறது” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மிகுவிலையுள்ள அயலவர்
பிரிட்டனில், வீட்டு உரிமையாளர் தங்கள் வீடுகளை விற்கும்போது, தங்கள் அயலவரோடு கடந்த காலத்தில் ஏதேனும் சச்சரவுகள் கொண்டிருந்தால் அதற்கான விவரத்தை வெளிப்படுத்தும் ஒரு சட்டப்பூர்வ கடமையைக் கொண்டிருந்தனர் என்பதாக லண்டனின் தி சன்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது. கூச்சலிடும் அயலவரைப் பற்றி, தான் இருமுறை உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் செய்திருந்ததாக வாங்கினவர்களிடம் சொல்லத் தவறிய 80 வயதான ஒரு விதவைமீது, பொய் விவரத்திற்காகத் தொடரப்பட்ட வழக்கு வெற்றியடைந்தது. 45,000 டாலர் தொகையைச் செலுத்தும்படி தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு, இப்போது அவர் நொடித்துவிட்டார். வீட்டின் புதிய உரிமையாளர்கள் அவ்வீட்டில் ஆறு ஆண்டுகளாக வசித்தனர், ஆனால் அவர்களுடைய அயலவருக்குப் பக்கத்தில் வாழ்வது சகிக்கமுடியாததாய் இருப்பதைக் கண்டனர்; விற்பதைவிட வேறு தெரிவு இல்லை என்பதாக அவர்கள் நீதிமன்றத்தில் சொன்னார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க, அயலவராய் இருக்கப்போகிறவர்களின் நடத்தையைப் பற்றி கண்டுபிடிப்பதற்காக துப்பறிபவர்களைக் கூலிக்கு அமர்த்தும்படி வாங்குவோர் சிலர் தீர்மானித்துள்ளனர். மேலோட்டமான பரிசோதனைக்கு 75 டாலர் மட்டுமே செலவாகும்; ஆனால் இன்னும் முழுமையான பரிசோதனைக்காக 1,500 டாலர் வரையிலும் செலுத்த வாங்குவோர் சிலர் தயாராய் உள்ளனர்.
உண்மையுள்ள கடல் குதிரை
கடல் குதிரைகள் வாழ்நாள் முழுவதும் தங்கள் துணைக்கு உண்மையாய் இருப்பதாய்த் தோன்றுவதாக ஆக்ஸ்ஃபோர்டு விலங்கியலாளர் அமான்டா வின்ஸன்ட் கண்டறிந்துள்ளார். பத்து சென்டிமீட்டர் நீளமான ஹீப்போகேம்பஸ் வைட்டி உயிரினத்தை ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஆய்வு செய்கையில், மீன்களிடையே அப்பேர்ப்பட்ட உண்மைத்தன்மை இருப்பதைக் கண்டு டாக்டர் வின்ஸன்ட் வியப்படைந்தார் என்று லண்டனின் தி டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு காலையும் அந்த ஆண், முன்னேற்பாடு செய்யப்பட்ட ஓரிடத்தில் அதன் துணைக்காகக் காத்திருப்பது கவனிக்கப்பட்டது. சந்திப்பின்போது, கடல் குதிரைகள் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன; அதன்பிறகு ஒரு நடனம் ஆடுகின்றன. சந்ததியைப் பிறப்பிப்பது பகிர்ந்து செய்யும் ஓர் அனுபவம். பெட்டை தன் முட்டைகளை இட்டு, அவற்றை ஆணின் வாலில் உள்ள பிரத்தியேக பொரிக்கும் பையில் வைக்கிறது. பின்னர் ஆண் அவற்றை வளம்பெறச் செய்கிறது; அவை பிறக்கும் வரை அப்பையில் நிலைத்திருக்கின்றன. துணையொன்று மடிந்தால், பிழைத்திருக்கும் கடல் குதிரை, இணைசேராத மற்றொரு கடல் குதிரையோடு மட்டுமே இணையும். விசனகரமாக, மகிழ்விக்கும் இந்தப் பிராணிகள் தப்பிப்பிழைப்பது ஆபத்தில் இருக்கிறது, ஏனெனில் அக்வேரியங்களுக்காகவும், பாரம்பரிய ஆசிய மருந்தில் பயன்படுத்தப்படுவதற்காகவும் லட்சக்கணக்கானவை ஒவ்வொரு ஆண்டும் பிடிக்கப்படுகின்றன.
கன உலோகங்களுக்கான ஆவல்
நிக்கல், காரீயம், துத்தநாகம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் மண்ணை மாசுபடுத்தும்போது, அந்நிலம் ஆபத்தானதாயும் பயன்படுத்தப்பட முடியாததாயும் ஆகிறது. மேல்மண்ணைச் சுரண்டியெடுத்து, நிரப்பிகளாக அவற்றைக் கழித்துவிடுவதை, அல்லது மாசுபடுத்தப்பட்ட மண்ணை நீக்கி அதை, மறைந்துள்ள உலோகங்களை வெளிவிடும் வீரியமிக்க அமிலங்களோடு சேர்த்து வினைபுரியச் செய்வதைத் தற்போதைய சுத்திகரிப்பு முறைகள் தேவைப்படுத்துகின்றன. என்றபோதிலும், இச் சுத்திகரிப்பு முறைகள், மிகவும் செலவு பிடிப்பவை. இன்னும் குறைந்த செலவிலும், சுத்தமான வழியிலும் பிரச்சினையைத் தீர்க்க இப்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர். அதற்கு தாவரப்பரிகாரம் (phytoremediation) என்று பெயர். மண்ணிலிருந்து கன உலோகங்களை உறிஞ்சி, அவ்வுலோகத்தைத் தரைக்கு மேலுள்ள இலைகளுக்கும், தண்டுகளுக்கும், பிற பாகங்களுக்கும் மாற்றும் தாவரங்களைப் பயன்படுத்துவதை இச் செய்முறை உட்படுத்துகிறது. கன உலோகங்கள் நிலமட்டத்துக்கு மேலே இழுக்கப்பட்டுவிட்டால், அத்தாவரங்களை இச் செய்முறைக்குட்படுத்தி, அவற்றிலிருந்து மதிப்புமிக்க உலோகங்களை வேறு வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதாக சயன்ஸ் பத்திரிகை கூறுகிறது.
“எரிவாயுவால் சமைப்பது—மற்றும் இளைப்பு”
அத் தலைப்பில், “மின்னடுப்பு மற்றும் சூட்டடுப்புகளைப் (ovens) பயன்படுத்தி உணவு தயாரிப்பவர்களைவிட, எரிவாயுவைப் பயன்படுத்தி சமைக்கும் பெண்களுக்கு இளைப்பு, மூச்சுத் திணறல், ஆஸ்துமாவின் பிற அறிகுறிகள் ஆகியவற்றின் அனுபவம் குறைந்தபட்சம் இரு மடங்காவது ஏற்படுவதாய்” ஆங்கிலேய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக சயன்ஸ் நியூஸ் அறிக்கை செய்தது. புறம்போக்கிக் காற்றாடிகள் பயன்படுத்தப்பட்டபோதிலும் அந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்துவந்ததாய் லண்டனிலுள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும், ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலாருமே சுற்றாய்வில் பங்கெடுத்தபோதிலும், “பெண்களில் மட்டுமே தாக்கங்கள் காணப்பட்டன—ஒருவேளை சமையலறையில் அவர்கள் அதிக நேரம் செலவழிப்பதால் அவ்வாறு காணப்பட்டது.”