எதிர்ப்பின் மத்தியில் நடத்தப்பட்ட ருமேனிய மாநாடுகள்
“தேவ சமாதான தூதுவர்கள்” என்ற தலைப்பில் யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாடு ஒன்று ருமேனியாவிலுள்ள புகாரெஸ்ட்டில் 1996 ஜூலை 19 முதல் 21 தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் உட்பட சுமார் 40,000 பிரதிநிதிகள், ஐரோப்பாவைச் சேர்ந்த 20 லட்சம் பேரைக் கொண்ட இந்த அழகிய தலைநகருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். 60,000 பேர் உட்காரக்கூடிய நேஷனல் ஸ்டேடியம் இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஜூன் 24-ல், தவறான தகவல் பெற்றிருந்த ருமேனிய அதிகாரிகள் மாநாட்டை நடத்த அனுமதி வழங்க மறுத்தனர்.
மாநாட்டை ரத்து செய்வதற்கான ஆணையை நீக்கச்செய்யும்படி யெகோவாவின் சாட்சிகள் விடாது முயன்றனர். ஆனால் முயன்றும் பயனில்லாமற்போயிற்று. ஆகவே, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் வட அமெரிக்கா மற்றும் ஜப்பானிலிருந்தும் அழைக்கப்பட்டிருந்த அயல்நாட்டுப் பிரதிநிதிகளான பல்லாயிரக்கணக்கானோர் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஜூலை 12 முதல் 14 தேதிகளில் நடைபெறவிருந்த மாநாட்டுக்குச் செல்லும்படியாக மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டி இருந்தது. கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்களால் கணிசமான செலவும், இடைஞ்சலும் பலருக்கு ஏமாற்றமும் ஏற்பட்டன.
ஆனால் உள்ளூரிலிருந்த ருமேனிய பிரதிநிதிகளுக்கென்று என்ன ஏற்பாடுகள் செய்யப்படலாம்? க்ளுஜ்-நாப்போக்கா மற்றும் ப்ரசோவ் நகர்களிலுள்ள அதிகாரிகள் தொடர்பு கொள்ளப்பட்டனர். முடிவில், அங்கு ஜூலை 19 முதல் 21 தேதிகளில் மாநாடுகளை நடத்துவது சாத்தியமாயிற்று. என்றபோதிலும், பல ருமேனியர்களுக்கு க்ளுஜ்-நாப்போக்காவுக்கோ, ப்ரசோவுக்கோ போக முடியவில்லை. ஆகவே, செப்டம்பர் 13 முதல் 15 தேதிகளில், பாயமாராவில் ஒரு மாநாடும் புகாரெஸ்ட்டில் மற்றொரு மாநாடும் நடத்தப்பட்டன.
புகாரெஸ்ட்டில் நடத்தும்படி முதலில் திட்டமிடப்பட்ட மாநாடு ஏன் ரத்து செய்யப்பட்டது? புகாரெஸ்ட் நகர் உட்பட ருமேனியாவில் மாநாடுகள் நடத்தப்படும்படி, பிறகு தங்கள் நோக்குநிலைகளை மாற்றிக்கொள்ள சில அதிகாரிகளை எது தூண்டுவித்தது?
அந்த எதிர்ப்புக்குப் பின்னால் இருந்தது யார்?
புடாபெஸ்ட்டில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின்போது, ஹங்கேரியில் வெளியிடப்படும் செய்தித்தாளான ஜினெஷ் வாஸர்னாப் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது: “அவர்கள் தங்களுடைய வருடாந்தர சர்வதேசக் கூட்டத்தை புகாரெஸ்ட்டில் வைத்து நடத்தவே முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களிடமிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாய், அவ்வாறு நடத்த ருமேனிய அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.” அந்த எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது சர்ச்சே என்பது வெட்ட வெளிச்சமாகியது. உதாரணமாக, அ.ஐ.மா.-வில், நியூ யார்க்கைச் சேர்ந்த அல்பேனியில் வெளியிடப்படும் டைம்ஸ் யூனியன் செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்தது: “யெகோவாவின் சாட்சிகளுடைய ‘மத பேத’ நம்பிக்கைகள் என்று அவர் அழைத்ததற்கு எதிராக எச்சரிப்புடன் இருக்கும்படி ஆர்த்தடாக்ஸ் பிரிவின் தலைவர் டேயோக்டிஸ்ட், ஆர்த்தடாக்ஸ் பிரிவினரை எச்சரித்தார்.”
மாநாட்டிற்கு மதகுருமார் தெரிவித்த எதிர்ப்பைப் பற்றி வெளிவந்த அறிக்கைகள் உண்மையாய் இருந்தனவா? ஜூன் மாதத்தில், நகரமெங்கிலும்—சர்ச் கட்டடங்களுக்குள்ளும், கட்டடச் சுவர்களிலும் பக்கங்களிலும், சுரங்கப்பாதைகளிலும்—புகாரெஸ்ட்டில் வசிப்பவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நிந்தனையான கூற்றுக்களையுடைய சுவரொட்டி விளம்பரங்களைக் காண ஆரம்பித்தனர். அதில், “ருமேனியா மக்கள் அனைவருக்கும்!” என்று தலைப்பிடப்பட்டிருந்த விளம்பரம் இவ்வாறு கேட்டது: “ருமேனியாவுக்கு இப்போது யெகோவா-கூட்டத்தாரின் சர்வதேச மாநாடு ஒன்று . . . ஜூலை 19-21-ல் தேவையா? கிறிஸ்தவர்களே—இந்த சாத்தானிய மாநாட்டை நாம் எதிர்ப்போமாக!”
“யெகோவா-கூட்டத்தார் ஆபத்துக்கு கவனம் செலுத்துவீர்!” என்று தலைப்பிடப்பட்டிருந்த மற்றொரு விளம்பரம் உறுதியுடன் கூறியது: “யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவத்துக்கு எதிராக போராடுகின்றனர். . . . அவர்கள் நம் ஜனங்களைப் பிரித்து மத சண்டையை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். . . . அனைத்து ருமேனியர்களே, இந்த மாநாட்டுக்கு எதிராக போராடுவீர்!”
“இன்னுமொரு விளம்பரம், “செயல்பட வாரீர்!” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. “ருமேனியாவின் ஆர்த்தடாக்ஸ் சகோதரத்துவம் . . . ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் ஒரு கண்டனக் கூட்டத்துக்கு வரும்படி ஆர்த்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்த அனைத்து விசுவாசிகளையும் அழைக்கிறது.” அந்த விளம்பரத்தின் முடிவில் இவ்வாறு இருந்தது: “இந்த மாநாட்டை ரத்து செய்யக்கோரி அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வோம். நம் மூதாதையரின் விசுவாசத்தைக் காக்க வாரீர். கடவுள் நமக்குத் துணைபுரிவாராக!”
யெகோவாவின் சாட்சிகளை “கம்யூனிஸ பிரிவைச் சேர்ந்த ஓர் அரசியல் அமைப்பு” என்று உறுதியுடன் கூறும் ஒரு துண்டுப்பிரதியையும் மத குருமார் வெளியிட்டு விநியோகித்தனர். ஆனால் இதுவும் அப்பட்டமான பொய்யே. மேலும் இது பொய்யே என்று ஒருவேளை பெரும்பாலான ருமேனியர்களுக்குத் தெரியும். யெகோவாவின் சாட்சிகள் சமீப ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்டுகளால் துன்புறுத்தப்பட்டு அடிக்கடி சிறைப்படுத்தப்பட்டனர் என்று அவர்களுக்குத் தெரியும்.
மனநிலைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டன
சர்ச்சால் ஏவப்பட்ட தாக்குதல்களை எதிர்க்குமாறு ருமேனியாவுக்கு உள்ளும் புறம்பும் இருந்து கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டன; பிறருக்கு அளிக்கப்பட்ட அனுகூலங்களை சாட்சிகளுக்கும் அளிப்பதே நியாயமானது என்று அரசு அதிகாரிகளால் உணர முடிந்தது. ஃப்ளாக்ராண்ட் என்ற புகாரெஸ்ட் செய்தித்தாள் ஒன்று முன்னறிவித்தது: “இந்த முதல் சர்வதேச மாநாட்டுக்கு எதிராக கொடுமை, பகைமை, வன்மம் போன்ற மனப்போக்கைக் கொண்டிருப்பது ஒரு வினோதமான விளைவையே ஏற்படுத்தும். சாட்சிகளிடமிருந்து மக்களை விலகியிருக்கச் செய்வதற்கு மாறாக, இந்தச் செயல் அவர்களின் அக்கறையையும், ஆர்வத்தையும், சகிப்புத்தன்மையையும், இரக்கத்தையுமே தூண்டுவிக்கும்.”
இந்த முன் அறிவிப்பு எவ்வளவு உண்மையாய் நிரூபித்தது! ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கடிதங்களின் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகாரெஸ்ட்டிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திடம் தங்களுடைய மதகுருக்களின் செயல்களைக் குறித்த தங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்தனர். யெகோவாவின் சாட்சிகள், ருமேனியாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச் சித்தரித்துக் காட்டியதைப் போன்ற இயல்புடையவர்கள் அல்லர் என்று அவர்களைப் பற்றிய விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.
ஜூலை 6, 1996 தேதியிட்ட டிமிஷோவாரா என்ற ருமேனிய செய்தித்தாளுக்கு எழுதுகையில், மாரியுஸ் மீலா இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவா-கூட்டத்தாரை அவ்வளவு கடுமையாக குற்றஞ்சாட்டியவர்களில் 99 சதவீதத்தினருக்கு, அவர்களிடம் பேசுவதற்கோ, அல்லது அவர்களின் கூட்டங்கள் ஒன்றுக்கு ஆஜராவதற்கோ போதியளவு ஆர்வம் இருக்கவில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும்.” அவர் மேலும் கூறினதாவது: “ஆர்த்தடாக்ஸ் விசுவாசிகளான நாம், நம்முடைய சொந்தக் கண்களில் இருக்கும் உத்திரத்துக்கு வேண்டி அதிக சிரத்தையெடுப்பதும், நம் அயலாரின் கண்களிலுள்ள துரும்பைக் கடவுளின் மேம்பட்ட நியாயத்தீர்ப்புக்கு விட்டுவிடுவதும் மிகவும் கட்டியெழுப்புவதாய் இருக்கும்.”—மத்தேயு 7:3-5.
பிறகு, பிரசித்தி பெற்ற முதல் நூற்றாண்டு வழக்குரைஞர் கமாலியேல், இயேசுவைப் பின்பற்றுவோரை எதிர்த்துவந்த மதத் தலைவர்களுக்குக் கொடுத்த பேச்சை திரு. மீலா மேற்கோள் காட்டினார். அதாவது, “இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்.” (அப்போஸ்தலர் 5:38, 39) முடிவாக, மீலா எழுதினதாவது: “நம் மனப்பாங்கு, குடியாட்சிக்கெதிரானதாகவும், பைபிளுக்கு எதிரானதாகவும், சமூகத்திற்கு எதிரானதாகவும் இருக்கிறது.”
சீக்கிரத்தில், ஐரோப்பாவின் பிற பகுதிகளிலிருந்தும் ஐக்கிய மாகாணங்களிலிருந்தும் மாநாடு ரத்து செய்யப்பட்டதைக் குறித்த கண்டனச் செய்திகள் வர ஆரம்பித்தன. “ ‘யெகோவாவின் சாட்சிகளுக்கு’ எதிராக ருமேனியாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பிரதிநிதியான தலைவர் டேயோக்டிஸ்ட் எடுத்த பொதுப்படையான நிலைநிற்கைக்குக்” கண்டனம் தெரிவித்த ஒரு செய்தியை ருமேனிய ஹெல்சிங்கி குழு வெளியிட்டது.
ஐ.மா. ஜனாதிபதியின் மனைவி ஹில்லரி கிளின்டன் அச்சமயத்தில் ருமேனியாவுக்குச் சென்றிருக்க நேர்ந்தது. அவர் திட்டமிட்டிருந்தபடி, 18-வது நூற்றாண்டைச் சேர்ந்த கிரெட்ஸூலெஸ்கூ சர்ச்சுக்குள் நுழையாமற்போனதற்கான காரணத்தை ருமேனியாவிலிருக்கும் ஐ.மா. தூதுவர் ஆல்பிரட் மோசஸ் விளக்கினதாவது: “மத சுயாதீனம், அமெரிக்க ஐக்கிய மாகாண அரசியல் அமைப்பாலும் ருமேனிய அரசியல் அமைப்பாலும்கூட அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடிப்படைக் கொள்கை. மத சகிப்புத்தன்மை இல்லாததைக் குறித்துக் காட்டிய விளம்பரங்கள் சர்ச் கட்டடங்களுக்குள் இருந்ததானது, ஜனநாயக ஒருமைப்பாட்டுடனும், திருமதி கிளின்டனின் ருமேனிய வருகையின் நோக்கங்களுடனும் ஒத்துப்போகவில்லை.”
கடவுளுடைய ஆதரவின் அத்தாட்சி
க்ளுஜ்-நாப்போக்கா நகரில் முன்பு யெகோவாவின் சாட்சிகள் மாநாடுகளை நடத்தியிருக்கின்றனர், ஆகவே புகாரெஸ்ட்டிலிருந்த நேஷனல் ஸ்டேடியம் அவர்களுக்கு மறுக்கப்பட்டபோது, இங்குள்ள அதிகாரிகள் அவர்களை மறுபடியும் வரவேற்றனர். ஆனால் மாநாட்டை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்ததற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் க்ளுஜ்-நாப்போக்காவிலிருந்த ஸ்டேடியத்திற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. “இவ்வளவு குறுகிய சமயத்திற்குள் அவ்வளவு பெரிய மாநாட்டை ஒழுங்கமைப்பது எவ்வாறு சாத்தியமாகும்?” என்பதை ஒரு செய்தியாளர் தெரிந்துகொள்ள விரும்பினார்.
“நாங்கள் ஓர் ஒற்றுமையான அமைப்பாய் இருக்கிறோம்” என்று அவருக்குச் சொல்லப்பட்டது. “மாநாடுகளை நடத்தி எங்களுக்குப் பழக்கமிருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கள் கடவுளாகிய யெகோவா எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்.”
உண்மையில், யெகோவாவின் உதவியினாலும் ஆதரவாலும்தான் இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் அவ்வளவு அதிகமான காரியம் நிறைவேற்றப்பட்டது. அப்படிப்பட்ட குறுகிய காலப்பகுதியில் அறிவிக்கப்பட்ட மூன்று நாள் மாநாட்டுக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடிவந்திருந்ததைக் கற்பனை செய்து பாருங்கள்! உச்சக்கட்ட ஆஜர் எண்ணிக்கை 22,004; 799 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். ஆடிவரூல் ட க்ளுஜ் என்ற செய்தித்தாள் அந்த மாநாட்டுக்குப் பிறகு அறிவித்ததாவது: “இவர்கள் எப்பொழுதும் புன்னகை புரிவதும், தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் முழு ஆத்துமாவோடிருப்பதுமே இம் மக்களிடமிருந்து பெறப்பட்ட அபிப்பிராயம். அவர்களுடைய ஒற்றுமை மனதைக் கவர்ந்தது. . . . அவர்களுடைய நடத்தைகளின் மூலம் தங்களின் முன்மாதிரியான ஒழுங்கை வெளிக்காட்டினர். அசாதாரணமான சுத்தமுள்ளவர்களுமாய் இருந்தனர்.”
ப்ரசோவ்வில் நடந்தது விசேஷமாக மனதைக் கவருவதாய் இருந்தது. ஏனெனில் மாநாட்டை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்ததற்கு இரண்டு நாளுக்கு முன்புதான் அங்கீகாரம் வழங்கப்பட்டது! ஆனாலும், தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் 7,500 பேர் தங்குவதற்கான வசதிகள் பெறப்பட்டன. ஒரு சாட்சி தன்னுடைய அயலகத்தாரிடம் பேசினபோது, 30 பிரதிநிதிகள் தங்குவதற்கான இடவசதிகளை அவர்கள் செய்துகொடுத்தனர். மேலும் ப்ரசோவ்விலுள்ள ஒரு சபையைச் சேர்ந்த சாட்சிகள் 500 பிரதிநிதிகளுக்கு தங்கள் வீடுகளில் இடமளித்தனர். சில பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்துக்கு அருகில் கூடாரம்போட்டு தங்கும்படி செய்யப்பட்டனர்; மழை பெய்தபோதோ, அருகிலிருந்த அடுக்குமாடி கட்டடங்களில் வசித்த, உபசரிக்கும் தன்மையுடைய மக்கள் கீழே இறங்கிவந்து அவர்களைத் தங்கள் வீடுகளுக்குள் வந்துவிடும்படி வரவேற்றனர்.—அப்போஸ்தலர் 28:2-ஐ ஒப்பிடுக.
ஆர்த்தடாக்ஸ் மதப்பிரிவைப் பெரும்பாலும் கொண்ட பல்கேரியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது ருமேனியாவின் தென்புற எல்லையாய் அமைந்துள்ளது. பல்கேரிய சாட்சிகள் நிறைந்த பேருந்துகள் புகாரெஸ்ட்டுக்கு விரைந்தபோது, சுங்க அதிகாரிகள் சிலர் ஏற்கெனவே மாநாடு நடக்கும் இடங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி அறியவந்தனர் என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது. ப்ரசோவ்வில் மொத்தம் 1,056 பல்கேரியர்கள் தங்கள் சொந்த மொழியில் முழு நிகழ்ச்சிநிரலையும் அனுபவித்தனர். மொத்தத்தில், 12,862 பேர் ப்ரசோவ் மாநாட்டுக்கு ஆஜராயினர்; 832 பேர்—அவர்களில் 66 பேர் பல்கேரியர்கள்—முழுக்காட்டுதல் பெற்றனர்.
க்ளுஜ்-நாப்போக்காவிற்கும் ப்ரசோவ்விற்கும் செல்ல முடியாதவர்களுக்கென்று பாயமாராவிலும் புகாரெஸ்ட்டிலும் செப்டம்பரில் சிறிய மாநாடுகளை ஒழுங்கமைக்க முடிந்தது. கூடுதலான இந்த இரண்டு மாநாடுகளுக்கும் ஆஜரானவர்கள் மொத்தம் 5,340 பேர், முழுக்காட்டுதல் பெற்றவர்கள் 48 பேர். இவ்வாறு, ருமேனியாவில் கடந்த கோடையில் நடைபெற்ற “தேவ சமாதான தூதுவர்கள்” மாநாடுகளுக்கு மொத்தத்தில் 40,206 பேர் ஆஜராயினர், 1,679 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். நிச்சயமாகவே, ருமேனியாவில் யெகோவாவைச் சேவிக்க விரும்புவோர்மீது அவருடைய ஆசீர்வாதம் இருக்கிறது!
புகாரெஸ்ட்டிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பிரதிநிதி கவனித்ததாவது: “முழு தேசத்திலும் ஆண்டுக்கணக்கில் சாட்சிகொடுத்ததன் மூலம் செய்யப்பட்ட விளம்பரத்துக்குச் சமமானதை மூன்றே வாரங்களில் பெற்றுவிட்டோம். உண்மையில், எது எங்களை நிறுத்தப்போவதாக ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் எண்ணியிருந்ததோ, அதுவே நற்செய்தியின் முன்னேற்றுவிப்புக்கு சாதகமாக மாறிவிட்டது.”
[பக்கம் 24-ன் படம்]
புகாரெஸ்ட் ஓர் அழகிய, நவீன நகர்
[பக்கம் 25-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளை நிந்தித்த விளம்பரங்கள்
[பக்கம் 25-ன் படங்கள்]
புகாரெஸ்ட்டில் முழுக்காட்டுதல் பெறவிருந்தவர்கள்
[பக்கம் 26-ன் படம்]
இரண்டு நாளுக்கு முன்னரே மாநாடு நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டப்ரசோவ்வில்
[பக்கம் 26-ன் படம்]
க்ளுஜ்-நாப்போக்காவில் நடைபெற்ற மாநாட்டில் ஆஜராகியிருந்தவர்களின் உச்சக்கட்ட எண்ணிக்கை 22,004