உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 5/22 பக். 24-27
  • தேனீ வளர்ப்பு—“தேன்சிந்தும்” கதை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேனீ வளர்ப்பு—“தேன்சிந்தும்” கதை
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “தினசரி அற்புதங்களைப்” பராமரிப்பவர்
  • பலன்தரும் தேனீ வளர்ப்பின் இரகசியம்
  • பல்வேறு விளைபொருட்கள்
  • “இயல்பான ஞானமுள்ளவை”
  • தேன் மனிதனுக்கு தேனீ தரும் பரிசு
    விழித்தெழு!—2005
  • காட்டுத் தேன்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • கொட்டாத தேனீக்களை தேடி வாரீர்!
    விழித்தெழு!—2000
  • கார்னியோலா தேனீ போன்ற சுறுசுறுப்பு
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 5/22 பக். 24-27

தேனீ வளர்ப்பு—“தேன்சிந்தும்” கதை

கிரீஸிலிருந்து விழித்தெழு! நிருபர்

மிதமான விடியலொளி வானில் தயங்கித் தயங்கிப் படர்கிறது. அதிகாலைக் குளிரிலும் பனியிலும், மலையடிவார சாலையோரமாய் ஒரு லாரி மெதுவாய் வந்து நிற்கிறது. இரு நிழலுருவங்கள்—கையுறைகள், பூட்ஸ், பருத்தி மேலாடைகள், முகத்திரையுடைய அகல-விளிம்புள்ள தொப்பிகள் ஆகியவற்றுடன்—தோன்றுகின்றன. கவனமாகவும் ஆர்வத்தோடும் அநேக மரப்பெட்டிகளை லாரியில் ஏற்றுகின்றன. தந்திரமாக களவாடும் திருடர்களா? இல்லை, தங்களது பொக்கிஷமான தேனீ கூட்டத்தை நன்கு பராமரிக்கும் தேனீ வளர்ப்போர்தான் இவர்கள்—மது சொரியும் பூக்கள் நிரம்பிய மற்றொரு சோலையை நோக்கி பிரயாணப்படுகின்றனர்.

தேனீ வளர்ப்போர், ஒரு விசேஷித்த பூச்சியோடு செயல்தொடர்புகொள்வதாய் பெருமைப்பட்டுக்கொள்ளும் விசேஷித்த ஆட்கள். தேனையும் தேன் மெழுகையும் உண்டாக்கி பல்வேறு செடிகளில் மகரந்தக் கலப்பு செய்வதால் பொருளாதார ரீதியில் எல்லா பூச்சிகளைக் காட்டிலும் மதிப்புள்ளதாய் கருதப்படும் தேனீ ஒருபுறமிருக்கிறது. தேனீ வளர்ப்பை வைத்தே பிழைப்பு நடத்தும் மக்கள் மறுபுறமிருக்கின்றனர்; இவர்கள் இந்தச் சிறிய ஜந்துக்களை நேசித்து, தேனீ வளர்க்கும் ஒருவர் சொல்லும் பிரகாரம், “அவற்றை விலாவாரியாக தெரிந்துவைத்திருக்கின்றனர்.”

“தினசரி அற்புதங்களைப்” பராமரிப்பவர்

தேனீ வளர்ப்பது அப்படியொன்றும் பெரிய விஷயமல்ல என்பதாக தோன்றலாம்: வெறுமனே தேனீக்கள் நிரம்பிய அநேக தேன் பெட்டிகளை எடுத்து, மது சொரியும் பூக்கள் நிரம்பிய சோலைகளில் வைத்துவிட்டு, பின் அவற்றிலிருந்து கிடைக்கும் பொருட்களை எடுத்துக்கொள்ள சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செல்ல வேண்டும். ஆனால் உண்மையில் அது அப்படியல்ல. உண்மையிலேயே என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, தேனீ வளர்க்கும் தொழிலில் திறம்பட்டவர்களாயிருந்த ஜான் மற்றும் மரியாவோடு நாங்கள் பேசினோம்; தங்களது பிரியமான தொழிலைப் பற்றி அவர்கள் ஆர்வத்தோடு சொன்னார்கள்.

“தேனீ வளர்ப்பு, தினம்தினம் அற்புதங்களைக் காண வைக்கும்” என திறந்த தேன் கூட்டின்மீது சாய்ந்தவாறு ஜான் சொல்கிறார். “இதுவரை, தேனீக்களது கூட்டுவாழ்வின் உயர்தர அமைப்பையும், மேம்பட்ட தொடர்புகொள்ளும் திறமைகளையும், சிறப்பாக வேலையாற்றும் முறைகளையும் எவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை.”

தொழில்ரீதியான தேனீ வளர்ப்பின் சரித்திரத்தைப் பார்வையிடுகையில், மரப் பொந்துகளிலும் மற்ற பொந்துகளிலும் உள்ள தேனீக் கூட்டங்களை அழிப்பதன் மூலம் முற்காலத்து தேனீ வளர்ப்போர் தேனை எடுத்திருக்கின்றனர் என ஜான் குறிப்பிடுகிறார். ஆனாலும், 1851-ல், மெழுகு தேனடைகளுக்கு இடையே தேனீக்கள் சுமார் ஆறு மில்லிமீட்டர் இடைவெளி விடுவதை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தேனீ வளர்ப்பவரான லரென்சோ லரேன் லாங்ஸ்ட்ராத் என்பவர் கண்டுபிடித்தார். இவ்வாறு, சட்டங்களுக்கிடையே இதே அளவில் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்ட செயற்கை மரப் பெட்டிகள் பயன்படுத்தப்படலாம். தேன் பெட்டியிலிருந்து தனித்தனியே சட்டங்களை எடுத்து, தேனீக்களைக் கொல்லாமல் தேனையும் மெழுகையும் எடுப்பது இப்போது சாத்தியமானது.

ஜான் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “வெற்றிகரமான தேனீ வளர்ப்புக்கு தேனீ கூட்டங்களை நீங்கள் மிகவும் நேசிக்க வேண்டும். உங்களது தேனீக்களுக்கு நீங்கள் ஒரு அப்பாவைப்போல் இருக்கிறீர்கள்; அவை இதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி பிரதிபலிக்கின்றன என நான் நம்புகிறேன். கடினமான குளிர்காலத்தில் நீங்கள் அவற்றின் டாக்டராகவும், பராமரிப்பாளராகவும், உணவளிப்பவராகவும்கூட ஆவீர்கள்.”

மரியா இவ்வாறு சொல்கிறார்: “தேனீ வளர்ப்பதில் திறம்பெற்ற ஒருவரால், பொதுவாக சுமார் எட்டாயிரத்திலிருந்து எண்பதாயிரம் தேனீக்களைக் கொண்டுள்ள ஒரு தேன் கூட்டை வெறும் கண்ணோட்டம் விடுவதன் மூலமாகவே அதிகத்தைச் சொல்ல முடியும். நீங்கள் அனுபவம்வாய்ந்தவராய் இருந்தால், கூட்டைத் திறந்தவுடன், அதன் ரீங்காரச் சத்தத்தைவைத்தே, தேனீ கூட்டம் வளமாக, செழிப்பாக, ‘சந்தோஷமாக’ இருக்கிறதா; பசியாக இருக்கிறதா; ராணி தேனீ இறந்துவிட்டதால் ‘அநாதையாக’ இருக்கிறதா; விரும்பத்தகாத ஏதோவொன்றினால் சலனமடைந்திருக்கிறதா என்றும், இவற்றைக் காட்டிலும் இன்னும் அதிகமதிகமானவற்றையும் சொல்ல முடியும்.”

பலன்தரும் தேனீ வளர்ப்பின் இரகசியம்

“தேனீ வளர்ப்பவர், கவனமாக தேர்ந்தெடுத்த இடத்தில் தனது தேன் பெட்டியை வைப்பது மிக முக்கியம்” என ஜான் விளக்குகிறார். “தேனீக்களுக்கு உணவு கிடைப்பதற்காக பூக்கள் பூத்துக்குலுங்கும் சோலைகளைத் தேட நாங்கள் படாதபாடுபடுகிறோம்.

“தனது தேனீக்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தேன் வளர்ப்பவர் ஆரஞ்சு மற்றும் பாஸ்வுட் (basswood) புஷ்பங்களுள்ள இடங்களைத் தேடலாம். கோடைகாலத்தின்போதும் இலையுதிர்காலத்தின்போதும், பைன் (pine) மற்றும் ஃபர் (fir) மரங்கள் நிரம்பிய பகுதியைத் தேர்ந்தெடுத்தால், தெளிவான சிவப்பு நிறத்தில் உயர்தரமான தேன் கிடைக்கும்; இது மார்க்கெட்டில் நல்ல விலைபோகும். வைல்ட் தைம் (wild thyme) பூக்கள் மலர்ந்திருக்கும் வயல்கள், தேன்களின் ராஜா என தேனீ வளர்ப்போர் அழைக்கும் உயர் ரக தேனை உண்டாக்கும். தேனீக்கள் வெள்ளை க்ளோவர் (white clover), மஞ்சள் ஸ்வீட் க்ளோவர் (yellow sweet clover), ஆல்ஃபால்ஃபா (alfalfa) போன்ற மலர்களையும் தேடிச் செல்கின்றன.”

விவேகம் மிக முக்கியம். மரியா இவ்வாறு விளக்குகிறார்: “மலைப் பகுதியில் கூடுகளை வைக்கும்போது, மலையடிவாரத்திற்கு அருகே வைப்பதுதான் பிரயோஜனமாய் இருக்கும். அப்போது தேனீக்களால் உயர பறந்து, பூத்துக் குலுங்கும் மரங்களுக்குச் சென்று, பின் பூக்களிலுள்ள மதுவை சுமந்துகொண்டு சுலபமாக அவற்றின் கூடுகளுக்கு கீழ்நோக்கி பறந்துவர முடியும். கூடுகள், மலைச்சரிவின் உச்சியில் மரங்களுக்கு மேலே வைக்கப்பட்டால் தேனீக்கள் சோர்ந்துபோகும். ஆகவே தேனீக் கூட்டத்தின் உற்பத்தியை இது பெருமளவில் பாதிக்கும்.”

ஒரு இளம் ராணி தேனீ நடுவில் உட்கார்ந்திருக்கும் ஒரு சட்டத்தை ஜாக்கிரதையாக பிடித்துக்கொண்டே ஜான் இப்படிச் சொல்கிறார்: “தேனீ கூட்டத்தின் நலனுக்காகவும் விருத்திக்காகவும் ராணி தேனீ வகிக்கும் முக்கிய பங்கை தேனீ வளர்க்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்கிறார். சிறிதளவே முட்டைகளும் தேனும் உண்டாகும் கூடுகளில், ராணி தேனீ கொல்லப்பட்டு மாற்றீடு செய்யப்பட வேண்டும். இளம் ராணி தேனீக்கள் உள்ள கூடுகளில்தான் மிக அதிக தேன் உண்டாகிறது. மேலும், புதிய தேனீக் கூட்டங்களை நாம் உண்டாக்க வேண்டுமானால், தேனீக்கள் நிரம்பிவழியும் இரு அடுக்கு பெட்டியை எடுத்து மேல் பெட்டியையும் கீழ் பெட்டியையும் பிரிக்கிறோம். ஒரு பெட்டியில் ராணி தேனீ இருக்கிறது, ஆகவே மற்றொன்றில் இளம், இணைசேர்க்கப்பட்ட ராணி தேனீயை போடுகிறோம். பூக்கள் மலரும்போது, புதிய ராணி தேனீ முட்டைகள் இட்டுக்கொண்டு கூட்டை இளம் வேலையாள் தேனீக்களால் நிரப்பிக்கொண்டிருக்கும்.”

ஒரு தேனீ எவ்வளவு காலம் உயிர்வாழ்கிறது? வேலையாள் தேனீ எந்தளவுக்கு சுறுசுறுப்பாய் இருக்கிறதோ அந்தளவுக்கு அதன் வாழ்நாள் குறைகிறது என நமக்கு சொல்லப்படுகிறது. கோடை காலத்தில், ஒரு தேனீ, மணிக்கு சுமார் 21 கிலோமீட்டர் வேகத்தில், நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணிநேரங்கள் பூக்களைத் தேடி பறந்துசெல்கையில் வெறுமனே ஆறு வாரங்கள்தான் உயிர்வாழ்கிறது. குளிர்காலத்தில் தேனீக்கள் அவ்வளவு கடினமாக உழைப்பதில்லை, ஏனென்றால் நாள் ஒன்றுக்கு வெறுமனே இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களே வேலைசெய்து இவ்வாறு பல மாதங்கள் உயிர்வாழ்கின்றன.

பல்வேறு விளைபொருட்கள்

சந்தேகமில்லாமல், தேனீ வளர்ப்பு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது தேன்தான். இந்தத் தித்திப்பான, பிசுபிசுப்பான திரவம், வேலையாள் தேனீயால் மாற்றப்பட்ட பூக்களின் மதுதான். சராசரியாக, தொழில்ரீதியான தேன்கூடு வருடத்திற்கு 29 கிலோகிராம் தேனை உற்பத்தி செய்யலாம். தேன் மெழுகு, தேனீக்களின் உழைப்பால் கிடைக்கும் மற்றுமொரு மதிப்புள்ள விளைபொருளாகும். ஒரு தேன்கூடு சுமார் ஐந்திலிருந்து ஆறு வருடங்களுக்கு பயனளிக்கும். அதன் பின்னரோ, அதன்மீது அநேக கிருமிகளும் ஒட்டுண்ணிகளும் வளர்ந்திருப்பதால் நிறம் கருமையாகிவிட்டிருக்கிறது, ஆகவே அதை மாற்ற வேண்டும். வேண்டாமென ஒதுக்கப்பட்ட தேன்கூடுகளிலிருந்து தேன் மெழுகு எடுக்கப்படுகிறது. வியாபார ரீதியில், ஒவ்வொரு டன் தேனுக்கும் 9-லிருந்து 18 கிலோகிராம் வரை தேன் மெழுகு சராசரியாக உற்பத்தியாகிறது.

ராணியும் வேலையாளும் ஆணும் வளருவதற்குத் தேவையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், கொழுப்பு ஆகியவற்றின் முக்கிய மூலப்பொருளான மகரந்தம், அநேக உடல்நல கோளாறுகளுக்கு நல்ல மூலிகை மருந்து எனவும் சிலரால் போற்றப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு சுமார் ஐந்து கிலோகிராம் மகரந்தத்தை ஒரு தேன் கூட்டிலிருந்து சேகரிக்க முடியும். தேன் பிசின் என்பது, கூட்டை வெப்பமாக வைத்துக்கொள்ளவும் அகற்றமுடியாதபடி பெரிதாயிருக்கும் ஏதாவது புகுந்துவிட்டால் அதைப் பிடித்துக்கொள்ளவும் தேனீக்கள் பயன்படுத்தும் பொருளாகும்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ, நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்களில் நான்கில் ஒரு பகுதியின் உற்பத்தி, மகரந்தச் சேர்க்கை செய்வதில் தேனீக்களுக்கிருக்கும் திறன்மீதே சார்ந்திருக்கிறது. ஆப்பிள்கள், பாதாம்பருப்புகள், தர்பூசணிகள், ப்ளம், பேரிக்காய், வெள்ளரிக்காய்கள், இதர வகையான பெர்ரிக்கள் என அனைத்துமே மகரந்தச் சேர்க்கைக்காக தேனீக்களை சார்ந்திருக்கின்றன. அவ்வாறேதான் அநேக தானியங்கள், காரட்டுகள், வெங்காயம், ஏன் சூரியகாந்திப் பூக்களும்கூட தேனீக்களை சார்ந்திருக்கின்றன. இறைச்சியும் பால் சம்பந்தமான பொருட்களும்கூட தேனீக்களால் பாதிக்கப்படுகின்றன; கால்நடைகளுக்கு தீவனமாகும் ஆல்ஃபால்ஃபா மலர்களில் அவை மகரந்தச் சேர்க்கையை நடப்பிக்கின்றன.

“இயல்பான ஞானமுள்ளவை”

தேனீக்களது கூட்டுவாழ்வின் ஒழுங்கு, சிக்கலான சமூக வாழ்வின் ஆச்சரியத்தக்க வளர்ச்சி, சீரமைப்பிலும் தொடர்புகொள்வதிலும் அவற்றின் சிறப்பான திறன்கள் ஆகியவற்றின் நுணுக்கங்களை நம்மால் விளக்க முடியாததை நினைப்பூட்டும் விதத்தில் மரியா இவ்வாறு சொல்கிறார்: “பெரும்பாலான தேனீ வளர்ப்போர் கடவுள்மீது நம்பிக்கையுள்ளவர்கள் என நான் நினைக்கிறேன்.” தேனீக்களை ஆராய்ந்து பராமரிப்போரில் அநேகம்பேர், தேனீக்கள் “இயல்பான ஞானமுள்ளவை” என்ற உண்மைதான் இந்த எல்லாவற்றிற்கும் காரணம் என உடனடியாக சொல்கின்றனர்; அப்படிப்பட்ட இயல்பான ஞானம் நமது மகத்தான சிருஷ்டிகரான யெகோவா தேவனால் தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது.—ஒப்பிடுக: நீதிமொழிகள் 30:24, NW.

[பக்கம் 26-ன் பெட்டி/படங்கள்]

மலர்களிலிருந்து உங்கள் மேஜை வரை

1. வேலையாள் தேனீ மலருக்குள் புகுந்து அதன் மதுவை சேகரிக்கிறது

அவை மலர்களுக்குள் புகுந்து, உணவுக்குழலின் பெருக்கமான அவற்றின் தேன் பையில் பூக்களின் மதுவை சேகரிக்கின்றன. இந்தப் பையை நிரப்ப, தேனீ 1,000-லிருந்து 1,500 தடவை ஒவ்வொரு மலருக்குள்ளும் நுழைய வேண்டும்

2. தேனடையில் பூக்களின் மது சேகரிக்கப்படுகிறது

கூட்டிற்குள் நுழைந்தவுடன், வெளிவேலையாள் தேனீ அதன் தேன் பையிலுள்ள மதுவை இளம் வேலையாள் தேனீயின் வாயில் செலுத்துகிறது. பின் இந்த வேலையாள் தேனீ மதுவை ஓர் அறையில் ஊற்றி, அதைத் தேனாக மாற்றுவதற்கான வேலைகளைச் செய்கிறது

3. தேனீ வளர்ப்பவர் தேனைப் பிழிந்தெடுக்கிறார்

சூடாக்கப்பட்ட கத்தியினால், அவர் ஒவ்வொரு சட்டங்களிலுள்ள அறைகளையும் மூடியிருக்கும் மெழுகை சீவி எடுக்கிறார். பின் சட்டங்களை பிழிந்தெடுக்கும் இயந்திரத்தில் போடுகிறார், மைய எதிர்த்திசை விசையாற்றலின் மூலமாய் அது தேனைப் பிரித்தெடுக்கும்

4. ஜாடிகளில் அல்லது தனிப்பட்ட கூறுகளில் தேன் பேக் செய்யப்படுகிறது

தேனீக்கள் எந்தெந்த மலர்களிலிருந்து தேனை எடுத்திருக்கின்றன என்பதை தேன் ஜாடிகளிலுள்ள லேபிள்கள் காண்பிக்கும். கண்ணாடி தெளிவான ஜாடியாக இருந்தால், தேனின் நிறத்தைக்கொண்டு அதன் தரத்தை அறிந்துகொள்ளலாம்

5. தன் உங்கள் தேக ஆரோக்கியத்திற்கு நல்லது!

தேன் உடலில் சீக்கிரத்தில் ஜீரணமாகி, ஆற்றல் அளிக்கிறது. தீக்காயங்களுக்கும் மற்ற அநேக வகையான காயங்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படலாம் என அறிக்கைகள் காண்பிக்கின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்