பூமியின் மறைந்துகொண்டிருக்கும் வனவிலங்குகள்
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
உயிருடனிருக்கும் காட்டுமிருகங்களை—ஒரு புலி, ஒரு திமிங்கலம், அல்லது ஒரு கொரில்லாவை—பார்ப்பதிலும், அவற்றின் சத்தத்தைக் கேட்பதிலும் நீங்கள் கிளர்ச்சியடைவதில்லையா? ஒரு கோலாவை வளர்க்க? கண்ணுக்கு எட்டின தூரம் பரவியிருக்கும், இடப்பெயர்ச்சி செய்யும் மிருகக்கூட்டத்தின் ஓட்டத்தினால் அதிரும் பூமியை உணர? ஆனால் விசனகரமாக, அநேக மக்கள் இப்படிப்பட்ட சந்தோஷமான அனுபவங்களை—ஒரு அருங்காட்சியகமோ, ஒரு புத்தகமோ, அல்லது ஒரு கம்ப்யூட்டரோ அவர்களுக்கு ஒரு சந்தோஷமான அனுபவமாக இருந்தாலொழிய ஒருபோதும் அனுபவிக்கமாட்டார்கள்—இது ஏன் இவ்வாறிருக்கிறது?
ஏனென்றால், நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும்போதே, ஆயிரக்கணக்கான தாவரங்களும் மிருகங்களும் தடுக்க முடியாத ஒரு அழிவை நோக்கித் தள்ளப்படுகின்றன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணரான டாக்டர் எட்வர்ட் ஓ. வில்சன், ஒரு வருடத்திற்குள் 27,000 இனங்கள், அல்லது ஒருமணி நேரத்திற்குள் மூன்று இனங்கள் அழிகின்றன என்று கணிக்கிறார். இந்த வேகத்தில் போனால், 30 வருடங்களில் பூமியின் இனங்களில் 20 சதவிகிதம் அழிந்து போய்விடமுடியும். ஆனால் அழிவு விகிதம் ஒரேவிதமாக இல்லாமல், அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இனங்கள் அழிந்துபோகும் என்று கணிக்கப்படுகிறது!
அழிவின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஒரு மிருகம் ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகமாகும். திருட்டுத்தனமாக வேட்டையாடுவதானது அதன் எண்ணிக்கையை இருபது வருடங்களுக்குள் 65,000-த்திலிருந்து வெறும் 2,500-க்குக் குறைத்திருக்கிறது. போர்னியோ மற்றும் சுமத்ராவின் அழிந்து கொண்டுவரும் காடுகளில் 5,000-த்திற்கும் குறைவான ஒராங்குட்டான்கள் மட்டுமே மீந்திருக்கின்றன. இந்த அபாயம் நீர்வாழ் உயிரினங்களையும் பாதித்திருக்கிறது. இதற்குப் பலியான ஒரு உயிரினம் சீனாவின் யாங்ஸி ஆற்றின் அழகிய பைட்ஸி டால்பின். தூய்மைக்கேடும் கண்மூடித்தனமான மீன்பிடித்தலும் இவற்றில் வெறும் நூறு மாத்திரமே மீந்திருக்கும்படி செய்திருக்கின்றன; இன்னும் பத்து வருடத்திற்குள் அவை எல்லாம் இறந்துவிடக்கூடும்.
விலங்ககப் புத்தகம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் லின்டா கோப்னர் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “பல்வேறு துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல விஷயங்களில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கின்றனர்; ஆனால் இனங்களையும் இந்தக் கிரகத்தின் உயிரியல் செழிப்பையும் காப்பாற்ற வேண்டிய அவசரத்தன்மையை பற்றியதில் அவர்களுடைய ஒருமித்த கருத்து: அடுத்த ஐம்பது வருடங்கள் நெருக்கடியானவை.”
குற்றம் யாருடையது?
வளர்ந்து கொண்டேபோகும் மக்கள்தொகையானது அழிவு விகிதத்தை அதிகரித்திருக்கிறது; ஆனால் மக்கள்தொகை அதிகரிப்பு மட்டுமே எல்லா குற்றத்திற்கும் காரணமல்ல. அநேக உயிரினங்கள்—வட அமெரிக்காவின் புலம்பெயர் புறா, நியூ ஜீலாந்தின் மோ பறவை, பெரிய கடற்பறவை (great auk), டாஸ்மேனிய ஓநாய், ஆகிய சிலவற்றை குறிப்பிட—மக்கள்தொகை ஒரு உண்மையான ஆபத்தாக ஆவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே அழிந்துவிட்டன. ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சௌத் வேல்ஸின் விலங்கியல் பூங்காக்கள் குழுவின் இயக்குநரான டாக்டர் ஜெ. டி. கெல்லி அந்த நாட்டின் நிலவரத்தைப் பற்றி, “1788-ல் குடியிருப்புகள் ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்ட பல்வகை உயிரினங்களின் இழப்பானது ஒரு தேசிய அவமானம்” என்று கூறுகிறார். சந்தேகமின்றி இந்தக் காரியமானது மற்ற அநேக தேசங்களைப் பொறுத்ததிலும் உண்மையாகவே இருக்கிறது. அது அழிவிற்கான மற்ற கொடிய காரணங்களாகிய அறியாமை, பேராசை போன்றவையும் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்த உலகளாவிய அழிவு நெருக்கடியின் காரணமாக, பாதிக்கப்பட்ட மிருகங்களின் சார்பில் ஒரு புதிய, நம்பமுடியாத கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறது—விலங்ககங்கள். அதிகமதிகமாக, நகரத்தின் மத்தியிலிருக்கும் இந்தப் பகுதிகள்தான் அநேக இனங்களின் கடைசிப் புகலிடமாகத் திகழ்கின்றன. ஆனால், விலங்ககங்களில் குறைந்த இடவசதியே இருக்கிறது; மேலும், காட்டு மிருகங்களைப் பாதுகாப்பது அதிக செலவுபிடிப்பதாகவும் கடினமானதாகவும் இருக்கிறது. மனிதாபிமானமாக செய்யப்பட்டாலும், அவற்றை அடைத்துவைக்க வேண்டிய தார்மீக நோக்குநிலையும் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, அவை விலங்ககங்களில் இருக்கும்போது மனிதனுடைய பொருளாதார தயாளகுணத்திலும் அவனுடைய பலவீனமான, அநேக சமயங்களில் நிலையற்ற, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் மீதும் முழுமையாக சார்ந்திருக்கின்றன. ஆகவே, காட்டிலிருந்து வரும் அநாதைகளாகிய இவை உண்மையில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன?
[பக்கம் 3-ன் பெட்டி]
அழிவு இயற்கையானதா?
“ஆனால், அழிவு காரியங்களின் இயற்கையான ஏற்பாட்டின் ஒரு பாகமாக இருக்கிறது இல்லையா? பதில், இல்லை என்பதே; சமீப காலங்களில் நடந்திருக்கும் அளவுக்காவது அது இல்லை. கடந்த 300 ஆண்டுகளில் பெரும்பாலும் இனங்களின் அழிவு விகிதமானது ஒரு வருடத்திற்கு ஒன்று என்றே இருந்தது. இப்பொழுது மனிதனால் ஏற்படும் இன அழிவின் விகிதமானது அதைவிட குறைந்தபட்சம் ஆயிரம் மடங்காவது அதிகமாக இருக்கிறது. . . . அழிவு விகிதங்களின் இந்த வேகமான அதிகரிப்பிற்குக் காரணம் மனித நடவடிக்கையே.”—நியூ யார்க்கின் பொது நூலக மேஜை மேற்கோள் (ஆங்கிலம்).
“நான் அநேக, அசாதாரணமான, மறைந்துபோன உயிரினங்களை நினைத்து மலைத்துப் போயிருக்கிறேன், மேலும் அவைகளின் அழிவைக் கண்டு வருத்தப்படுகிறேன், அடிக்கடி கோபமடைகிறேன். பெரும்பாலான சமயங்களில் மனிதன் தன்னுடைய பேராசை அல்லது கொடூரம், அக்கறையின்மை அல்லது கவனக்குறைவின் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த அழிவுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறான்.”—டேவிட் டே, மிருகங்களின் இறுதிநாள் புத்தகம் (ஆங்கிலம்).
“மனித நடவடிக்கையானது இனங்கள் பதிவு செய்யப்படுவதற்கு முன் அவை அழிந்துபோவதற்கு வழிநடத்தியிருக்கிறது.”—உயிரியல் சார்ந்த பாதுகாத்தல் (ஆங்கிலம்).