விலங்ககம்—வனவிலங்குகளின் கடைசி நம்பிக்கையா?
சமீப காலங்களில் இவ்வுலகின் முன்னேற்றமடைந்து வருகிற விலங்ககங்களில் ஒரு அமைதியான புரட்சி ஏற்பட்டிருக்கிறது. இதன் வெளிப்புற அத்தாட்சியாக அவை தங்கள் இடத்தின் அமைவுகளை அதிக மனிதாபிமான, “நிலப்பரப்பு அமிழ்வு” கோட்பாட்டிற்கு இசைவாக மாற்றியமைத்திருக்கின்றன—மிருகங்களின் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு இசைவாக செடிகள், பாறைகள், கொடிகள், மூடுபனி, சப்தங்கள், மேலும் ஒத்துவாழக்கூடிய மிருகங்கள் மற்றும் பறவைகள் அடங்கிய ஒரு சூழலை ஏற்படுத்துவதை உட்படுத்துகிறது. இவை அதிக செலவை உட்படுத்திய போதிலும்—ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஒவ்வொரு வருடமும் விலங்ககங்களையும் நீர்ப்பிராணிக்காட்சி சாலைகளையும் மேம்படுத்த 120 கோடி டாலர் செலவு செய்யப்படுகிறது—விலங்ககங்களின் புதிய இலட்சியம் மிகுந்த பாகத்தின் காரணமாக மாற்றங்கள் அவசியமானதாக எண்ணப்படுகின்றன.
அடுத்த நூற்றாண்டிற்கான முக்கிய வேலை
உயிரியல்சார்ந்த வறுமை இந்தக் கிரகத்தை பயமுறுத்திக் கொண்டிருக்க, உலகின் முன்னிலையிலிருக்கும் விலங்ககங்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றை 21-ம் நூற்றாண்டிற்கான தங்களுடைய முக்கிய வேலையாக தீர்மானித்திருக்கின்றன. இந்த சவாலால் தூண்டப்பட்டு அதன் அவசரத்தன்மையால் உந்துவிக்கப்பட்டவையாய், சில விலங்ககங்கள், விலங்ககம் என்ற பெயரையும்கூட நிராகரித்துவிட்டு “வனவிலங்கு சரணாலயம்” அல்லது “பாதுகாப்புப் பூங்கா” போன்ற வார்த்தைகளையே தேர்ந்தெடுத்திருக்கின்றன.
இந்தப் புதிய பாதையில் வழிகாட்டியாகத் திகழ்வது உலக விலங்ககப் பாதுகாப்புத் திட்டம் (ஆங்கிலம்) என்ற பிரசுரம். “விலங்கக வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக” ஒரு எழுத்தாளரால் வருணிக்கப்படும் திட்டம், அடிப்படையில், ஒரு விலங்கியல் சார்ந்த பத்திரம். அது, “உலகின் பல்வகைப்பட்ட வனவிலங்குகளைப் பாதுகாக்க இவ்வுலகின் விலங்கக மற்றும் நீர்ப்பிராணிக்காட்சி சாலையின் பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் விளக்குகிறது.” இந்தப் புதிய வழிமுறையைப் பற்றிய எந்த சந்தேகங்களையும் நீக்குவதாக, திட்டம் இவ்வாறு கூறுகிறது: “வனவிலங்கு பாதுகாப்பிற்கு அது என்ன உதவிசெய்கிறதோ, அதன் அடிப்படையிலேயே ஒரு விலங்கக அல்லது நீர்ப்பிராணிக்காட்சி சாலை தொடர்ந்திருப்பதற்குத் தகுதியுடையதாக இருக்கும்.”
முக்கியமாக, சிறைப்பட்ட நிலையில் இனப்பெருக்கம் என்பதை பற்றிய பொதுக்கல்வியும் அறிவியல் ஆராய்ச்சியும் வனவிலங்கு பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இன்றைய இளைஞர் மத்தியில் நாளைய விலங்ககப் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துகொண்டுவரும் வனவிலங்குகளின் ஒரு நீண்ட பட்டியலிலுள்ள, பாதுகாக்கப்பட்ட மிருகங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஞானமாகவும் தங்களையே அர்ப்பணித்தவர்களாயும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிப்பார்களா? மேலும் மனிதவர்க்கமானது இயற்கையைப் பற்றிய ஒரு தெளிந்த நோக்குநிலையை அடையுமா? இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, ஒவ்வொரு விலங்ககமும் ஒரு போதனையாளராக ஆகவேண்டும் என்றும் “ஒரு உலகளாவிய மனசாட்சி வலைப்பின்ன”லின் பாகமாக அதனை காணும்படியும் திட்டம் உற்சாகப்படுத்துகிறது.
விலங்ககங்கள் ஒரு உலகளாவிய வலைப்பின்னலில் ஒன்றுசேருகின்றன
தங்களுடைய வேலையின் விஸ்தாரத்தின் காரணமாக, இப்பொழுது சுமார் 1,000 விலங்ககங்களைக் கொண்ட, ஒரு உலகளாவிய வலைப்பின்னலில் அநேக விலங்ககங்கள் ஒன்றுசேர்ந்து கொண்டிருக்கின்றன. உலக விலங்கக சங்கம் மற்றும் இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சர்வதேச சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் இந்த விலங்ககங்களை ஒன்றாக சேர்த்து, ஒருங்கிணைப்பையும் வழிநடத்துதலும் தருகின்றன.
அப்படிப்பட்ட ஒத்துழைப்பிற்கான தவிர்க்கமுடியாத காரணத்தை சுட்டிக்காட்டுவதாக, விலங்ககம்—நவீன காலப் பேழை (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மறைமுகமான திருடனான உட்கலப்பை குறைக்க வேண்டுமென்றால், ஒரு விலங்ககம் தன்னிடம் உள்ள சிறிய தொகுதியான, உதாரணத்திற்கு சைபீரியப் புலிகளை வைத்துச் சமாளிப்பது மாத்திரமே போதுமானதாக இருக்காது. மாறாக, அந்தக் கண்டம் முழுவதிலும்—அல்லது உலகமுழுவதிலும்—உள்ள விலங்ககங்களில் வளர்க்கப்படுகிற சைபீரியப் புலிகள் எல்லாம் ஒரே தொகுதியாகக் கருதப்பட வேண்டும்.” உண்மையில், மலட்டுத் தன்மைக்கும் அழிவிற்கும் வழிநடத்தும் முன்னோடியாக இருக்கிற உட்கலப்பை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு ஒவ்வொரு இனத்திலும் நூற்றுக்கணக்கானவை தேவைப்படும். தெளிவாகவே, இது ஒரு தனி விலங்ககத்தின் திறமைக்கு அப்பாற்பட்டது. “நம்முடைய பூமியின் உயிரியக் கோளம் . . . பாதுகாக்கப்படுவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு, கிடைக்கக்கூடிய எல்லா வளங்களையும் ஒன்றாக திரட்டுவது அவசியமாயிருக்கும். நாம் மற்ற இனங்களை பாதுகாக்கத் தவறினால் நம்மைநாமே பாதுகாக்கத் தவறிவிடுவோம் என்று நம்பும் அநேகர் இருக்கின்றனர்” என்று திட்டம் கூறுகிறது. ஆனால், கெடுதலையே காணும் இந்த மனப்பான்மை திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸிய பூமியைப் பற்றிய பைபிளின் வாக்குறுதியை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை.—வெளிப்படுத்துதல் 11:18; 21:1-4.
விலங்ககங்கள் வெற்றிபெறுவதற்கு உதவக்கூடிய வழிகள்
இந்த அழிவின் நெருக்கடியானது, சிறைப்பட்ட நிலையில் இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யக்கூடிய சில அதிநவீன தொழில்நுட்பத்தின், சர்வதேச அளவில் கிடைக்கக் கூடிய உதவிகள் உருவாக்கப்படுவதை தூண்டியிருக்கிறது. அவை: கலப்பற்ற இனங்களின் மரபுவழி புத்தகங்கள் (studbooks) சர்வதேச விலங்கக வருடாந்தரபுத்தகம் (International Zoo Yearbook [IZY ]) மற்றும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான சர்வதேச இனங்கள் பற்றிய தகவல் தொகுப்பு (International Species Information System [ISIS]).
ஒவ்வொரு விலங்கியல் சார்ந்த கலப்பற்ற இனங்களின் மரபுவழி புத்தகமும், உலக முழுவதிலுமுள்ள எல்லா விலங்ககங்களிலும் வாழக்கூடிய, ஒரே இனத்தைச் சேர்ந்த மிருகங்களைப் பற்றிய தகவல்களை வரிசைப்படுத்திக் கூறுகிறது. ஒரு சர்வதேசப் பதிவாக இருப்பதனால், ஆரோக்கியமான இனங்கலக்கக்கூடிய மரபணுக்களின் சேமிப்பை கொண்டிருக்கவும், ‘மறைமுகமான திருடனாகிய’ உட்கலப்பை தடுக்கவும் இது உதவியாக இருக்கிறது. பெர்லின் விலங்ககம் 1923-ல், முதல் உலக யுத்தத்தால் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட விஸன்ட் அல்லது ஐரோப்பிய காட்டெருமையை இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்த போது, முதலாவது விலங்கக கலப்பற்ற இனங்களின் மரபுவழி புத்தகத்தை ஆரம்பித்தது.
கலப்பற்ற இனங்களின் மரபுவழி புத்தகங்கள், IZY மற்றும் மிருகங்களின் பரவியிருத்தல் பற்றிய தகவல் ஆகிய விஞ்ஞானத் தகவல் உலகமுழுவதும் கிடைக்க வகை செய்யும்படி, 1974-ல் ஐக்கிய மாகாணங்களில், ISIS கம்ப்யூட்டர் வலைப்பின்னலில் சேர்க்கப்பட்டது. அதன் விரிவாகிக் கொண்டேபோகும் மின் வலைப்பின்னல்களும், அபரிமிதமான, அதிகரித்துக்கொண்டே இருக்கும் விவரத்தொகுப்புகளும் மிகப்பெரிய விலங்ககம் என்ற கோட்பாட்டை உண்மை ஆக்குவதற்கு விலங்ககங்கள் ஒன்றாக வேலை செய்ய உதவியிருக்கின்றன.
விலங்ககங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயிரியல் சார்ந்த உபகரணங்களில் சில: டி.என்.ஏ. அடையாளக்குறிகள், கருமாற்றிப் பொருத்துதல், ஆய்வகக் கருவுறுதல் மற்றும் உறை நிலையியல் (விந்துவையும் கருவையும் உறைய வைத்தல்) ஆகியவையே. டி.என்.ஏ. அடையாளக்குறிகள் மிருகங்களின் பெற்றோர்களை 100 சதவிகித துல்லியத்துடன் கண்டுபிடிக்க விலங்ககங்களுக்கு உதவுகிறது. மந்தைகளாக வாழும் மிருகங்கள் மத்தியில் உட்கலப்பை தவிர்க்க இது அத்தியாவசியமானது; ஏனென்றால் அவற்றில், பெற்றோர்களைக் கண்டுபிடிப்பது கடினம். இதற்கிடையில், கருமாற்றிப் பொருத்துதலும் ஆய்வகக் கருவுறுதலும் இனப்பெருக்கத்தை விரைவுபடுத்துகின்றன. இதன் ஒரு வழியானது அருகிவரும் இனங்களுக்கு கிடைக்கக்கூடிய “பெற்றோரை” அதிகரிப்பதன் மூலமே. எப்படியென்றால், அவற்றினுடைய கருக்களை நெருங்கிய தொடர்புடைய மற்றொரு மிருகத்திற்குள் செலுத்துவதன் மூலம்—நாட்டு மிருகங்களுக்குள்கூட—அவை மாற்றுத் தாய்களாக செயல்படுகின்றன. இந்த முறையானது ஹோல்ஸ்டின் மாடு, ஒரு கௌரை (காட்டெருமை) பிறப்பிப்பதையும், வீட்டில் வளர்க்கும் ஒரு பூனை, விரைவாக அருகிவரும் இந்திய காட்டுப் பூனையை பிறப்பிப்பதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல, அருகிவரும் இனங்களின் இனப்பெருக்க நிலையிலுள்ளவற்றை இடமாற்றம் செய்வதன் செலவு, அபாயம் ஏற்படும் நிலை மற்றும் மன அதிர்ச்சியை அது குறைக்கிறது. எடுத்துச் செல்ல வேண்டியவை, கருக்கள் அல்லது உறைந்த விந்து நிறைந்த ஒரு பெட்டி மட்டுமே.
சில இனங்கள் முற்றிலுமாக மறைந்துபோவதற்கான சாத்தியம் இருப்பதால், அநேக விலங்ககங்கள் உறை நிலையியல்—விந்து மற்றும் கருக்களை நீண்ட கால பாதுகாப்பிற்காக உறைய வைத்தல்—முறையை கையாள ஆரம்பித்திருக்கின்றன. இந்த உறைந்த விலங்ககம், அழிவிற்கு பல பத்தாண்டுகள், அல்லது பல நூற்றாண்டுகள் கழித்துக்கூட குட்டிகள் பிறப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது! சந்தேகங்களால் நிறைந்திருந்தபோதிலும், இது “பாதுகாப்பிற்கான கடைசி நம்பிக்கை” என்பதாக அழைக்கப்படுகிறது.
காட்டில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் விலங்ககங்கள் அதிக குட்டிகளைப் பெற உதவுகின்றன
மிருகங்களையும், அவற்றினுடைய இயற்கைச் சூழ்நிலையில் அவற்றின் பழக்க வழக்கங்களையும் பற்றிய ஒரு விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சியானது, சிறைப்பட்ட நிலையில் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாதது. மேலும், அதுதானே “அமிழ்வு” அமைவுகள் தோன்றக் காரணமாக இருந்திருக்கிறது. மிருகங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும், விலங்ககங்கள் அவற்றின் உள்ளுணர்வை கருத்தில் எடுத்துக்கொண்டு அவற்றை “சந்தோஷமாக” வைத்திருக்க வேண்டும்.
உதாரணமாக, ஆண் மற்றும் பெண் சிறுத்தைப்புலிகள் காட்டில் ஒன்றுக்கொன்று தென்படாமலேயே வாழ்கின்றன. மேலும் தங்கள் சிறுநீர் மற்றும் மலத்தின் வாடையை வைத்தே அவை தொடர்பு கொள்கின்றன. பெண்புலி கூடுவதற்கு தயாராக இருக்கிறது என்பதை ஆண்புலியின் மூக்கு கண்டுபிடித்துவிடும்; பிறகு ஓரிரண்டு நாட்கள் மட்டுமே அதோடு சேர்ந்து இருக்கும். இந்த பழக்கத்தை அறிந்ததும் விலங்ககங்கள் அவற்றின் கூண்டுகளை அதற்கேற்ற விதமாக, குறுகிய கூடும் காலம் தவிர, மற்ற சமயங்களில் ஆணும் பெண்ணும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்ள முடியாதபடி மாற்றியமைத்தன. அது பலனளித்ததன் விளைவாக குட்டிகள் பிறந்தன.
சிறுத்தை ஒன்றுக்கொன்று பார்க்காமல் இருக்கும்போதே அதன் காதல் வளர்கிறது, என்றாலும் செந்நாரை (flamingo) அவ்வாறில்லை. அநேக விலங்ககங்களால் கையாள முடியாத அளவு பெரிய கூட்டமாக இருந்தால் தான் அவை இணைசேரும். ஆகவே இங்கிலாந்திலுள்ள ஒரு விலங்ககம் இவ்வாறு சோதித்துப் பார்த்தது: ஒரு பெரிய கண்ணாடியின் உதவியைக் கொண்டு நாரைக் கூட்டத்தை “இரட்டிப்பாக்கியது.” முதல் தடவையாக, அந்தப் பறவைகள் தங்கள் பிரமிப்பூட்டும் காதல் நாட்டியத்தை ஆட ஆரம்பித்தன! இந்த உதாரணங்கள், பூமியின் வனவிலங்குகள் எந்தளவுக்கு சிக்கலானவை என்பதை ஓரளவு ஊகிக்க உங்களுக்கு உதவுகின்றனவா? உண்மையில் விலங்ககங்கள் ஒரு பெரிய சவாலை எதிர்ப்பட வேண்டியிருக்கிறது.
மிருகங்களைக் காப்பாற்றுவதற்கான குறிக்கோள் எவ்வளவு நடைமுறையானது
இந்தப் புதிய திட்டத்தின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுவதாக, கூண்டில் வளர்க்கப்பட்ட சில இனங்கள் அவற்றினுடைய இயற்கையான வாழிடத்தில் மறுபடியும் விடுவிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுள் கலிபோர்னிய பெருங்கழுகு, ஐரோப்பிய காட்டெருமை, அமெரிக்க காட்டெருமை, அரேபிய மறிமான், தங்கநிற சிங்கம் போன்ற குரங்கு மற்றும் பர்ஷிவல்ஸ்கைக் குதிரை ஆகியவை அடங்கும். என்றபோதிலும், நீண்டகால பாதுகாப்பிற்கான நம்பிக்கைகள் அவ்வளவு பிரகாசமாக இல்லை.
“மனித சமுதாயம் அவ்வளவு சிக்கலானதாகவும் உலகின் பிரச்சினைகள் அவ்வளவு அதிகமானதாகவும் இருப்பதனால், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் அதிகரித்த போதிலும், அநேக அழிவிற்கு வழிநடத்தும் நிகழ்ச்சிகளைத் தடுத்துநிறுத்த முடியவில்லை” என்று திட்டம் கூறுகிறது. இதன் காரணமாக, “எதிர்பார்க்கப்படும் நெருக்கடி நிலையை மேற்கொள்ள இயற்கைப் பாதுகாப்பில் அக்கறையுள்ளவர்கள் தயாராக இருக்கவேண்டும்” என்றும் அது தொடர்ந்து சொல்கிறது. ஆகவே, இது சமுதாயத்தின் எல்லா நிலைகளிலிருந்தும் ஒத்துழைப்பைத் தேவைப்படுத்துகிறது. ஒரு விஞ்ஞான எழுத்தாளரின்படி, இன்றைய ஒத்துழைப்பானது, “தேவைப்படுவதிலிருந்து வருந்தத்தக்க அளவிற்குக் குறைவாக இருக்கிறது.” அழிவிற்கு வழிநடத்தும் அழுத்தங்கள் நேரெதிராக மாறாமல் வெறுமனே குறைந்துகொண்டிருந்தால், மிகச் சிறந்த முயற்சிகளும் ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடும். உட்கலப்பிற்கு வழிநடத்தக்கூடிய சிதறியிருக்கும், சிறிய இடங்கள் அல்ல மாறாக, போதுமான அளவுள்ள, முழுமையான வாழிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் விலங்ககங்கள் தாங்கள் வளர்த்த மிருகங்களை நம்பிக்கையுடன் மறுபடியும் காட்டில் விட்டுவிட முடியும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை நடைமுறையானதா, அல்லது வெறும் பகற்கனவா?
இந்த எண்ணத்தை நம்புவதற்கு கடினமாக்குகிற மற்றொரு விஷயமானது, ஒரு உலகளாவிய மாபெரும் விலங்ககத்தால் பாதுகாக்க முடிந்த இனங்களின் எண்ணிக்கையாகும் “இன்று உலகிலுள்ள எல்லா விலங்ககங்களும் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன மற்றும் இருநிலை உயிரிகளைச் சேர்ந்த வெறும் 2,000 இனங்களை மட்டுமே வைத்துக் காப்பாற்ற முடியும் என்பதுதான் கசப்பான உண்மை” என்று பேராசிரியர் எட்வர்ட் வில்சன் கூறுகிறார்; அது ஒப்பிடப்படுகையில் ஒரு மிகச் சிறிய எண்ணிக்கையே. ஆகவே எந்த இனங்களை பாதுகாக்கப்படுவதற்கு தெரிவு செய்வது என்றும் மற்றவற்றை இல்லாமையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் பெரிய பட்டியலோடு சேர்ந்துகொள்ள அனுமதிப்பது என்றும் தீர்மானிக்கும் விரும்பப்படாத வேலையை விலங்ககங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.
இத்துறையிலுள்ள வல்லுநர்களுக்கு இது ஒரு அனுகூலமற்ற கேள்வியை எழுப்புகிறது. அது என்னவென்றால்: எல்லா உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதனால், பூமியில் மீதமுள்ள உயிர்களில் பெரும்பாலானவை, மனிதவர்க்கம் உட்பட, தொடர்ச்சியாக அழியுமளவிற்கு பல்வகைப்பட்ட உயிரினங்கள் எப்போது அந்த நெருக்கடியான நிலைமையை அடையும்? விஞ்ஞானிகளால் ஊகிக்க மட்டுமே முடியும். “ஒன்று அல்லது இரண்டு அல்லது ஐம்பது இனங்கள் நீக்கப்படுதல் நம்மால் முன்னறிவிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். பின்விளைவுகளை நாம் புரிந்துகொள்வதற்கு முன்பே அழிவுகள் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன” என்று லின்டா கோப்னர் விலங்ககப் புத்தகத்தில் கூறுகிறார். இதற்கிடையில், விலங்ககம்—நவீன காலப் பேழை என்ற புத்தகம், “மிருகங்களுக்கெதிரான உலகளாவிய யுத்தமாகிய கடுந்தாக்குதலில் விலங்ககங்கள்தான் உயிரின் கடைசி பாதுகாப்பிடமாக விளங்குகின்றன. இந்த யுத்தத்தின் அளவை முன்னறிவிக்க முடியாது என்றாலும், இதற்காக எதிர்கால சந்ததிகள் நம்மையே முழுக்க முழுக்க குற்றம்சாட்டுவார்கள்” என்று சொல்கிறது.
ஆகவே நம்பிக்கை கொள்வதற்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா? அல்லது, அழிவின் படுகுழி தங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, எதிர்கால சந்ததி உயிரியல் சார்ந்த வகையில் வித்தியாசப்பட்ட இனங்களில்லாத ஒரு உலகத்தை பெற தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறதா?
[பக்கம் 7-ன் படங்கள்]
மனிதனே அவற்றின் மிகமோசமான எதிரி
[பக்கம் 7-ன் படங்கள்]
புலியும் யானைகளும்: Zoological Parks Board of NSW
[பக்கம் 8-ன் படங்கள்]
அருகிவரும் சில மிருகங்கள்—காட்டெருமை, சிறுத்தைப் புலிகள் மற்றும் கருப்பு காண்டாமிருகம்
[பக்கம் 8-ன் படங்கள்]
[படத்திற்கான நன்றி]
காட்டெருமையும் சிறுத்தைப் புலிகளும்: Zoological Parks Board of NSW
காண்டாமிருகம்: National Parks Board of South Africa