உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 8/8 பக். 18-20
  • இறைச்சி சாப்பிடுவது தவறா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இறைச்சி சாப்பிடுவது தவறா?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சிலர் ஏன் இறைச்சி சாப்பிடுவதில்லை?
  • மிருகங்களைக் கொல்வது தவறா?
  • உணவிற்காக மிருகங்களை பயன்படுத்துதல்
  • மிருக உயிருக்கு மதிப்பு காட்டுதல்
  • மிருகங்களிடம் பரிவிரக்கம் காட்டுதல்
  • ஒரு கிறிஸ்தவர் சைவமாக இருக்கவேண்டுமா?
  • மிருகங்களை வதைப்பது தவறா?
    விழித்தெழு!—1998
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா?
    பைபிள் தரும் பதில்கள்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 8/8 பக். 18-20

பைபிளின் கருத்து

இறைச்சி சாப்பிடுவது தவறா?

“இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது.”—ஆதியாகமம் 1:29.

ஒரு சைவ இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த பதினெட்டு வயதான சுஜாதாவால், முதல் மனிதனாகிய ஆதாமுக்கு கடவுள் கொடுத்த உணவு சம்பந்தப்பட்ட அறிவுரைகளை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் அவள் சட்டென்று இவ்வாறு கேட்டாள்: “சாப்பிடுவதற்கு ஏராளமான மற்ற பொருட்கள் இருக்கும்போது, அநேகர் சாப்பாட்டுக்காக ஏன் மிருகங்களை கொல்லனும்?”

உலகமுழுவதிலும் அநேகர் இதே மனோபாவங்களை எதிரொலிக்கின்றனர். கிழக்கில் கோடிக்கணக்கானோர் சைவ உணவையே சாப்பிடுகின்றனர். அதோடுகூட, மேலை நாடுகளிலும் சைவம் உண்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் மாத்திரம், 1.24 கோடி மக்கள் தாங்கள் சைவமென சொல்லிக்கொள்கின்றனர்; பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட 30 லட்சம் பேர் அதிகம்.

ஏன் அநேகர் சைவ உணவை விரும்புகின்றனர்? மிருக உயிரை பற்றிய சரியான நோக்குநிலை என்ன? இறைச்சி உண்பது உயிருக்கான மதிப்புக் குறைவை காட்டுகிறதா? ஆதியாகமம் 1:29-ல் சொல்லப்பட்டிருப்பதை கருதுகையில், இறைச்சி உண்பது தவறா? முதலில், சிலர் ஏன் இறைச்சி சாப்பிடுவதில்லை என்பதை கவனியுங்கள்.

சிலர் ஏன் இறைச்சி சாப்பிடுவதில்லை?

சுஜாதாவை பொறுத்தவரையில், அவளுடைய உணவுத்திட்டம் அவள் மத நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டது. “மறுபிறப்புக் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள இந்துவாக நான் வளர்ந்தேன். ஒரு மனித ஆத்துமா ஒரு மிருகமாக திரும்பிவரலாம் என்பதால், மிருகங்களை எனக்கு சமமாக கருதுகிறேன். ஆகவே உணவிற்காக அவற்றை கொல்லுவது சரியென்று தோன்றவில்லை” என்று அவள் விளக்குகிறாள். மற்ற மதங்களும் சைவமாக இருப்பதையே முன்னேற்றுவிக்கின்றன.

மத நம்பிக்கைகள் இல்லாமல் மற்ற காரணங்களும் ஜனங்களின் உணவு பழக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. உதாரணத்திற்கு, டாக்டர் நீல் பர்னார்டு இவ்வாறு அப்பட்டமாய் சொல்கிறார்: “இறைச்சி சாப்பிடுவதற்கான காரணங்கள் பழக்கம் அல்லது அறியாமைதான்.” அவருடைய உறுதியான இந்த கருத்து, இறைச்சி சாப்பிடுவதனால் ஏற்படும் ஆரோக்கிய கேடுகளாகிய இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய் பற்றிய அவருடைய நோக்குநிலையை அடிப்படையாக கொண்டது. a

ஐக்கிய மாகாணங்களில், இளைஞர்களுக்கிடையேதான் சைவம் உண்போரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. மிருகங்களுக்கான அக்கறை ஒரு காரணமாகும். மிருகங்களை நன்னெறியுடன் நடத்தும் மக்கள் என்ற அமைப்பை சேர்ந்த ட்ரெஸி ரைமன் இவ்வாறு சொல்கிறார்: “மிருகங்களை இளைஞர்கள் நேசிக்கின்றனர். உணவிற்காக அவை கொல்லப்படுவதற்குமுன் அவற்றிற்கு என்ன நேரிடுகிறது என்பதை அறியவரும்போது, அவர்களுடைய இரக்கத்தை அது இன்னும் அதிகமாக்குகிறது.”

சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள அநேகர், தங்கள் உணவு பழக்கத்திற்கும் உணவிற்காக மிருகங்களை வளர்ப்பதற்குத் தேவைப்படும் அதிகப்படியான இயற்கை வளங்களுக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்கின்றனர். உதாரணமாக, ஒரு கிலோ மாட்டிறைச்சி கிடைப்பதற்கு ஏறக்குறைய 3,300 லிட்டரும், ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 3,100 லிட்டரும் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகவே, இறைச்சியை தவிர்ப்பதற்கு சிலருக்கு இதுவே காரணமாக அமைகிறது.

உங்களைப் பற்றியென்ன? இறைச்சி சாப்பிடுவதிலிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டுமா? அந்த கேள்விக்கு பதிலளிக்குமுன், மற்றொரு நோக்குநிலையையும் கவனியுங்கள். சங்கீதம் 50:10, 11-ல் காணப்படுவதுபோல, எல்லாவற்றையும் உண்டாக்கியவராகிய யெகோவா தேவன் இவ்வாறு சொல்கிறார்: “சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.” எல்லா மிருகங்களும் உண்மையில் கடவுளுக்கே சொந்தமாகையால், மிருக ஜீவன்களைப் பற்றியும் அவற்றை உணவிற்காக மனிதன் பயன்படுத்துவதைப் பற்றியும் சிருஷ்டிகர் எவ்வாறு உணருகிறார் என்பதை புரிந்துகொள்வது முக்கியம்.

மிருகங்களைக் கொல்வது தவறா?

சுஜாதாவைப் போல, மிருகங்கள் மனிதனுக்கு சமம் என்று நினைக்கும் சிலர், அவற்றை எந்தக் காரணத்திற்காகவும் கொல்வது தவறு—உணவிற்காக கொல்வது இன்னும் அதிக தவறு—என்று உறுதியாக நம்புகின்றனர். என்றபோதிலும், மனித மற்றும் மிருக உயிரை கடவுள் வித்தியாசப்படுத்திக் காண்கிறார் என்று வேதவாக்கியங்கள் காண்பிக்கின்றன. மேலும், அநேக காரணங்களுக்காக மிருகங்கள் கொல்லப்படுவதையும் அவை அனுமதிக்கின்றன. உதாரணமாக, இஸ்ரவேலில் ஒரு மிருகம் மனித உயிருக்கோ ஒருவரின் கால்நடைகளுக்கோ ஆபத்தாக இருந்தால் அது கொல்லப்படலாம்.—யாத்திராகமம் 21:28, 29; 1 சாமுவேல் 17:34-36.

ஆரம்ப காலத்திலிருந்தே, வணக்கத்தில் மிருகங்களை பலிகளாக செலுத்துவதை கடவுள் அங்கீகரித்திருந்தார். (ஆதியாகமம் 4:2-5; 8:20, 21) ஒவ்வொரு வருடமும் பஸ்காவை கொண்டாடுவதன் மூலம், அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதை நினைவுகூரும்படி அவர் இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுத்திருந்தார். இது ஒரு ஆட்டுக்குட்டியை அல்லது வெள்ளாட்டுக்கடாவை பலியிட்டு, அதன் மாம்சத்தை புசிப்பதை உட்படுத்தியது. (யாத்திராகமம் 12:3-9) மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ், மிருக பலிகளை செலுத்துவதற்கான மற்ற சந்தர்ப்பங்களும் இருந்தன.

முதல் முறையாக பைபிளை படித்தபோது, ஒரு 70 வயது இந்துப் பெண்மணி மிருக பலிகளைப் பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்ள கடினமானதாக கண்டார். ஆனால் வேதவாக்கியங்களைப் பற்றிய தன்னுடைய அறிவில் அவர் முன்னேறுகையில், கடவுளால் கட்டளையிடப்பட்ட பலிகள் ஒரு நோக்கத்தை சேவித்தன என்பதை கண்டுணர்ந்தார். பாவ மன்னிப்பிற்கான சட்டப்பூர்வ தேவையை பூர்த்திசெய்ய தேவைப்படும், இயேசு கிறிஸ்துவின் பலியை அவை அடையாளமாக சுட்டிக்காண்பித்தன. (எபிரெயர் 8:3-5; 10:1-10; 1 யோவான் 2:1, 2) அநேக சமயங்களில் இந்த பலிகள் ஆசாரியர்களுக்கும் சில சமயங்களில் வணக்கத்தாருக்கும் உணவாக சேவித்தன. (லேவியராகமம் 7:11-21; 19:5-8) உயிருள்ள எல்லா பிராணிகளுக்கும் சொந்தக்காரரான கடவுள், அப்படிப்பட்ட ஏற்பாட்டை ஒரு நோக்கத்திற்காக ஆரம்பித்துவைக்க உரிமையுடையவராக இருக்கிறார். நிச்சயமாகவே, இயேசுவுடைய மரணத்திற்குப் பிறகு, வணக்கத்தில் மிருக பலிகள் இனிமேலும் தேவையாய் இல்லை.—கொலோசெயர் 2:13-17; எபிரெயர் 10:1-12.

உணவிற்காக மிருகங்களை பயன்படுத்துதல்

உணவிற்காக மிருகங்களை கொல்வதைப் பற்றியென்ன? மனிதனுடைய ஆரம்பகால உணவுத் திட்டம் சைவமாக இருந்தது என்பது உண்மையே. ஆனால் பின்னர் மிருக மாம்சத்தையும் உட்படுத்தும்படி யெகோவா அதை விரிவாக்கினார். ஏறக்குறைய 4,000 ஆண்டுகளுக்கு முன்பு—நீதியுள்ளவராகிய நோவாவுடைய நாட்களில்—யெகோவா ஒரு உலகளாவிய ஜலப்பிரளயத்தின் மூலம் அப்போது பூமியிலிருந்த துன்மார்க்கத்திற்கு முடிவை கொண்டுவந்தார். நோவா, அவருடைய குடும்பம் மற்றும் அவர் பேழைக்குள் கூட்டிச்சென்ற பிராணிகள் ஜலப்பிரளயத்தை தப்பிப்பிழைத்தன. அவர்கள் பேழையிலிருந்து வெளியே வந்த பிறகு, முதல் முறையாக யெகோவா இவ்வாறு கூறினார்: “நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல், அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.” (ஆதியாகமம் 9:3) என்றபோதிலும், அதே சமயத்தில், கடவுள் இந்த சட்டத்தை கொடுத்தார்: “மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.” (ஆதியாகமம் 9:6) தெளிவாகவே, கடவுள் மனிதனுக்கு சமமாக மிருகங்களை கருதவில்லை.

உண்மையில், மிருகங்களைப் பற்றிய சுஜாதாவின் அசைக்க முடியாத எண்ணமானது மறுபிறப்புக் கோட்பாட்டில் அவள் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாகவே இருந்தது. இதன் சம்பந்தமாக பைபிள் விளக்குவதாவது, மனிதனும் மிருகமும் ஆத்துமாக்களாக இருக்கிறபோதிலும், ஆத்துமா அழியாததல்ல. (ஆதியாகமம் 2:7; எசேக்கியேல் 18:4, 20; அப்போஸ்தலர் 3:23; வெளிப்படுத்துதல் 16:3; NW) ஆத்துமாக்களாக, மனிதனும் மிருகமும் மரித்து, ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. (பிரசங்கி 3:19, 20) ஆனால், மனிதர்களுக்கு கடவுளுடைய புதிய உலகத்தில் உயிர்த்தெழுப்பப்படுவதற்கான அருமையான நம்பிக்கை இருக்கிறது. b (லூக்கா 23:43; அப்போஸ்தலர் 24:15) மிருகங்கள் மனிதனுக்கு சமமானவை அல்ல என்பதை இதுவும் சுட்டிக்காட்டுகிறது.

“ஆனாலும், உணவுத் திட்டத்தை ஏன் கடவுள் மாற்றினார்?” என்று சுஜாதா அறிய விரும்பினாள். தெளிவாகவே, ஜலப்பிரளயத்தினால் பூமியின் தட்பவெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. தாவரங்கள் குறைவாக இருக்கும் இடத்தில் வாழப்போகும் எதிர்கால சந்ததிகளின் தேவைகளை முன்னறிந்தவராக, யெகோவா மனிதனின் உணவுத் திட்டத்தில் மாம்சத்தை சேர்த்தாரா என்பதை பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால் எல்லா உயிர்களின் சொந்தக்காரருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உரிமை இருக்கிறது என்று சுஜாதாவால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.

மிருக உயிருக்கு மதிப்பு காட்டுதல்

ஆனாலும் சுஜாதா இவ்வாறு சிந்தித்தாள்: “மிருக உயிருக்கு நாம் கொஞ்சமாவது மதிப்பு காட்டவேண்டாமா?” நிச்சயமாக, நாம் மதிப்பு காட்டவேண்டும். நாம் இதை எப்படி செய்யலாம் என்று எல்லாவற்றையும் படைத்தவர் கூறியிருக்கிறார். “மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்” என்று அவருடைய சட்டம் ஆதியாகமம் 9:4-ல் கூறுகிறது. இரத்தத்தை சாப்பிடுவதற்கு ஏன் தடை? “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (லேவியராகமம் 17:10, 11) யெகோவா இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: ‘நீ கொல்லப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை தண்ணீரைப் போல தரையிலே ஊற்றிவிட வேண்டும்.’—உபாகமம் 12:16, 24.

இறைச்சி சாப்பிடுவதற்கான ஏற்பாடு, வேட்டையாடும் கிளர்ச்சிக்காக அல்லது ஒருவருடைய வீரத்தை காண்பிப்பதற்காக தேவையற்ற விதத்தில் மிருக இரத்தத்தை சிந்துவதை அனுமதிக்கும் என்று அர்த்தம் கொள்ளாது. இதைத்தானே நிம்ரோது செய்தான். பைபிள் அவனை ‘யெகோவாவுக்கு விரோதமான பலத்த வேட்டைக்காரன்’ என்று அடையாளப்படுத்துகிறது. (ஆதியாகமம் 10:9, NW) இன்றும்கூட, மிருகங்களை வேட்டையாடுவதிலும் கொல்லுவதிலும் கிளர்ச்சிகொள்வது சுலபமாக சிலர் மத்தியில் வளர்ந்துவிடலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு மனநிலை, மிருக உயிரை வேண்டுமென்றே அசட்டை செய்வதற்கான எண்ணத்தோடு ஒத்திருக்கிறது. கடவுள் இதை அங்கீகரிப்பதில்லை. c

மிருகங்களிடம் பரிவிரக்கம் காட்டுதல்

நவீன நாளைய இறைச்சி தொழிற்கூடங்களில் மிருகங்கள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி சைவம் உண்போரில் சிலர் இன்றும்கூட ஆழ்ந்த அக்கறையுடையோராக இருக்கின்றனர். சைவம் உண்போரின் கைப்புத்தகம் (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “வேளாண்வியாபாரம் மிருகங்களுடைய இயல்புணர்வுகளைப் பற்றி அதிக அக்கறை கொள்வதில்லை. பயங்கரமான நெருக்கடியிலும் இயற்கைக்கு மாறான சூழ்நிலையிலும் வளர்க்கப்படும் நவீன நாளைய மிருகங்கள், இதுவரையில் செய்யப்பட்டிராத அளவுக்கு அவ்வளவு அதிகம் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.”

மிருகங்களை உணவிற்காக பயன்படுத்துவது கடவுளுடைய சித்தத்திற்கு விரோதமாக இல்லையென்றாலும், அவற்றை கொடிய முறையில் நடத்துவது தவறு. “நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்” என்று நீதிமொழிகள் 12:10-ல் பைபிள் சொல்கிறது. மேலும் மோசேயின் நியாயப்பிரமாணம் வீட்டில் வளர்க்கும் பிராணிகளை சரியாக கவனித்துக்கொள்ளவேண்டிய கட்டளையையும் கொடுத்தது.—யாத்திராகமம் 23:4, 5; உபாகமம் 22:10; 25:4.

ஒரு கிறிஸ்தவர் சைவமாக இருக்கவேண்டுமா?

முன்னே சொல்லப்பட்டதுபோல, சைவமாக மாறுவதோ—அல்லது தொடர்ந்திருப்பதோ—நிச்சயமாக தனிப்பட்ட தீர்மானத்திற்குரியது. ஆரோக்கியம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் அல்லது மிருகங்களுக்கான பரிவிரக்கம் போன்றவற்றால் ஒருவர் சைவ உணவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கலாம். ஆனால் சாப்பிடுவதற்கான அநேக வழிகளில் அது ஒன்று என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். இறைச்சி சாப்பிட முடிவு செய்பவர்களை அவர் குறைகூறக்கூடாது; அதேபோல, இறைச்சி சாப்பிடும் ஒருவர் சைவம் உண்பவரை குற்றமுள்ளவராக கருதக்கூடாது. இறைச்சி சாப்பிடுவது அல்லது விலகியிருப்பது ஒருவரை மேன்மையுள்ளவராக ஆக்கிவிடாது. (ரோமர் 14:1-17) அதேபோல ஒருவருடைய உணவுத் திட்டமானது வாழ்க்கையின் முக்கிய அக்கறையாக ஆகிவிடக்கூடாது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 4:4.

மிருகங்களை கொடுமைபடுத்துவதையும் பூமியின் வளங்களை தவறாக பயன்படுத்துவதையும் பற்றியதில், இந்த பொல்லாத, பேராசையுள்ள ஒழுங்குமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, அதற்கு பதிலாக தாம் உருவாக்கின புதிய உலகத்தை ஸ்தாபிக்கப்போவதாக யெகோவா வாக்கு கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 37:10, 11; மத்தேயு 6:9, 10; 2 பேதுரு 3:13) அந்த புதிய உலகத்தில், மனிதனும் மிருகங்களும் சதாகாலங்களிலும் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருப்பர். யெகோவா ‘சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்.’—சங்கீதம் 145:16; ஏசாயா 65:25.

[அடிக்குறிப்பு]

a ஜூன் 22, 1997 விழித்தெழு! பக்கங்கள் 3-13-ஐக் காண்க.

b உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட மே 15, 1997 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 3-8-ஐக் காண்க.

c மே 15, 1990 தேதியிட்ட காவற்கோபுரம் (ஆங்கிலம்) பக்கங்கள் 30-1-ஐக் காண்க.

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

Punch

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்