நேசிக்க கற்பிக்கப்பட்ட ஒரு ஜனம்
அன்பு என்பது, மதித்தலையும் நன்மை செய்தலையும், அல்லது ஒரேவித விருப்புவெறுப்புகளையும் அடிப்படையாகக் கொண்ட பாசம். அன்பு என்பது கனிவான உறவு. அது தன்னலமற்றது, உண்மைப் பற்றுறுதியானது; மற்றவர்களுடைய நலனின்மீது நன்மையான அக்கறை காட்டுவது. அன்பு என்பது வெறுப்பின் எதிர்ப்பதம். வெறுப்பால் தூண்டப்பட்ட ஒரு நபர், தன் சொந்த உணர்வுகளின் பேரிலேயே ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார்; அன்பால் தூண்டப்பட்ட நபரோ மற்றவர்களைப் பற்றி சிந்திக்கிறார்.
அன்பா அல்லது வெறுப்பா—எது உங்கள் வாழ்வில் செல்வாக்கு செலுத்துகிறது? இது, வெறுமனே ஒரு பேச்சுக்காக கேட்கப்படும் கேள்வியைக் காட்டிலும் அதிகமானது; ஏனெனில் உங்கள் நித்திய எதிர்காலம் இதன் பதிலின்மீதுதான் சார்ந்திருக்கிறது. வெறுக்க கற்பிக்கப்பட்டிருக்கும் ஓர் உலகில் வாழ்ந்துவருகையில், லட்சக்கணக்கான மக்கள் நேசிக்க கற்றுவருகிறார்கள். பல புதிய நல்ல குணங்களை அப்பியாசிப்பதன் மூலம் இதை அவர்கள் செய்துவருகிறார்கள். அவர்கள் வெறுமனே அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில்லை; அவர்கள் அதைக் கடைப்பிடிக்க கடின முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் எப்பொழுதாவது யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தீர்களென்றால், நீங்கள் பார்த்த விஷயத்தால் ஈர்க்கப்பட்டிருந்திருப்பீர்கள். எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் ஒரு சர்வதேச சகோதரத்துவத்தை உருவாக்குகிறார்கள். இதை அவர்களுடைய உள்ளூர் சபைகளிலும் அவர்களுடைய மாநாடுகளிலும் காணலாம்; ஆனால் பெத்தேல் குடும்பங்கள் என்று அவர்கள் அழைக்கும் இடத்தில் இதை இன்னும் அதிகமாய்க் காணலாம். இக் குடும்பங்கள் தன்னார்வ ஊழியர்களின் கூட்டத்தால் ஆனது; இவர்கள் ஒன்றாக வசித்தும், வேலைசெய்தும் ஒரு குடும்பமாக வாழ்கிறார்கள்; பைபிள் பிரசுரங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும், யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்படும் வேலையை அவர்களில் சிலர் அங்கு மேற்பார்வை செய்கிறார்கள். இது சாமானியமான வேலையல்ல; ஏனெனில், 1997-ல், 233 நாடுகளில் 82,000-க்கும் மேற்பட்ட சபைகளை மேற்பார்வை செய்வதை இது உட்படுத்துகிறது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய உலக தலைமை அலுவலகமும், 103 நாடுகளில் இருக்கின்ற பல்வேறு சிறுசிறு கிளை அலுவலகங்களும் உட்பட, உலகமுழுவதிலும் உள்ள பெத்தேல் குடும்பங்களில் 16,000-க்கும் மேற்பட்டவர்கள் சேவை செய்கிறார்கள்.
பெரும்பாலான பெத்தேல் குடும்பங்களில், அந்தக் குறிப்பிட்ட கிளை அலுவலகம் அமைந்திருக்கும் நாட்டின் குடிமக்களே அதிகம்பேர் உள்ளனர். ஆனால் அவர்கள் மட்டும் இல்லை. சில பெத்தேல் குடும்பங்களில் பல்வேறு தேசத்தவரும், குலத்தவரும் அல்லது இனத்தவரும், முன்பு வெவ்வேறான மத பின்னணியைச் சேர்ந்தவர்களாய் இருந்தவர்களும் அடங்கியுள்ளனர். உதாரணமாக, ஜெர்மனியைச் சேர்ந்த ஸெல்ட்டர்ஸில் அமைந்துள்ள பெத்தேல் குடும்பத்தில் கிட்டத்தட்ட 1,200 பேரில், சுமார் 30 தேசத்தவர்கள் இருக்கிறார்கள். வெறுப்பற்ற ஒரு சூழலில், சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வசிக்க, சேவைசெய்ய, சேர்ந்து வழிபட எது அவர்களுக்கு உதவுகிறது? அவர்கள் கொலோசெயர் 3:14-ல் கூறப்பட்ட பைபிள் புத்திமதியைப் பின்பற்றிவருகிறார்கள்; அது கூறுவதாவது:
“அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்”
எவருமே முழுவதுமாய் உடை அணிந்தவராக பிறக்கவில்லை; அல்லது வெறுமனே அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பதன் மூலமாகவும் உடை அணிபவராவதில்லை. ஒருவர் அணிந்துகொள்வது, திட்டவட்டமான தீர்மானங்களைச் செய்வதையும் பிறகு அதைக் கடைப்பிடிப்பதில் கடின முயற்சி செய்வதையும் உட்படுத்துகிறது. அதைப்போலவே, எவருமே அன்பைத் தரித்துக்கொண்டவராய் பிறக்கவில்லை. அதைப்பற்றி வெறுமனே பேசிக்கொண்டிருப்பது போதாது. முயற்சி தேவை.
உடை அணிவது பல நோக்கங்களை நிறைவேற்றுகிறது. அது உடலைப் பாதுகாக்கிறது; காண சகிக்காத உடல் உறுப்புகளை அல்லது அபூரணங்களை மறைக்கிறது; மேலும் ஓரளவுக்கு ஒரு நபரின் ஆளுமையை வெளிக்காட்டுகிறது. அன்பும் அதைப்போன்றதே. அது ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது; ஏனெனில் நீதியான நியமங்களின்பேரிலும் சரியான கூட்டுறவின்பேரிலும் அன்பு கொள்வது, ஆபத்தை ஏற்படுத்தப்போகும் கூட்டுறவை அல்லது இடங்களை ஒரு நபர் தவிர்க்கும்படி உந்துவிக்கிறது. அது, நமக்கு அருமையாய் இருக்க வேண்டிய தனிப்பட்ட உறவுகளைக் காத்துக்கொள்ள உதவுகிறது. அன்புள்ள ஒரு நபருக்கு, பிரதிபலனாக அன்புகாட்டலாம்; மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பவர், தனக்குத்தானே தீங்கை ஏற்படுத்திக்கொள்ளாமல் தவிர்க்கலாம்.
மேலும், காணசகிக்காத உறுப்புகள் போன்ற நம் குணங்களின் தன்மையை அன்பு மறைக்கிறது; அது ஒருவேளை உடன் மனிதருக்கு தொந்தரவாய் இருக்கலாம். பெருமையான, அகந்தையான, சுயநலமான, அன்பற்ற மக்கள் தவறும்போது அவர்களிடம் நாம் நடந்துகொள்வதைக் காட்டிலும், அன்பான மக்கள் ஏதாவது சிறிய தவறுகளைச் செய்துவிடும்போது, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட நாம் தயாராய் இருக்கிறோமல்லவா?
அன்பைத் தரித்துக்கொள்ளும் மக்கள், கிறிஸ்துவைப் போன்ற குணநலன்களின் அழகை வெளிக்காட்டுகிறார்கள். ஆனால், உடல் அழகு என்பது வெறும் மேல்பூச்சு மட்டுமே; ஆவிக்குரிய அழகோ, முழு நபரிலும் பரவியிருக்கிறது. அவர்களுடைய உடல் தோற்றத்தின் காரணமாக அல்லாமல், உண்மையில் அவர்களுடைய கனிவான குணங்களால் அழகானவர் என்பதாக நீங்கள் நினைக்கும் மக்களை ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். மறுபட்சத்தில், அழகிய பெண்களாக அல்லது அழகிய ஆண்களாக இருந்தவர்களின் சுயரூபம் வெளியில் தெரியவந்ததும், நம் கண்களுக்கு அழகாயிருந்த எல்லா தடயத்தையும் இழந்துவிட்டவர்களையும் நம்மில் பெரும்பாலானவர்கள் சந்தித்திருக்கிறோம். அன்பைத் தரித்துக்கொண்டிருப்பவர்களோடு சேர்ந்திருப்பது என்னே இன்பமானது!
அன்பால் வெறுப்பை நீக்குதல்
வெறுப்பு அன்பால் நீக்கப்படலாம் என்ற உண்மையை 1994-ல் ஜெர்மனியிலுள்ள 1,45,958 யெகோவாவின் சாட்சிகளிடம் எடுக்கப்பட்ட சுற்றாய்வு ஒன்று காட்டியது.
மிதமிஞ்சிக் குடிப்பது, போதைப்பொருள் துர்ப்பிரயோகம் செய்வது, குற்றச்செயல் புரிவது, சூதாடுவது, சமூக விரோத அல்லது வன்முறையான நடத்தை இவை அனைத்தும் ஏதாவதொரு விதத்தில் சுயநலத்தின் வெளிக்காட்டுகளே; இவை எளிதில் வெறுப்பைத் தூண்டலாம். ஆனால் பேட்டி காணப்பட்டவர்களில் 38.7 சதவீதத்தினர், யெகோவாவின் சாட்சிகளால் பரிந்துரைக்கப்படும் உயர்ந்த பைபிள் தராதரங்களுக்கு இசைவாக நடப்பதற்காக இப் பிரச்சினைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மேற்கொண்டிருந்ததாகக் கூறினர். கடவுள் பேரிலும் நடத்தைக்கான அவருடைய நீதியுள்ள தராதரங்கள் பேரிலும் உள்ள அன்பே அவ்வாறு செய்ய அவர்களை உந்துவித்திருந்தன. பெரும்பாலும், ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் உதவியின் அடிப்படையில், யெகோவாவின் சாட்சிகளால் அன்பான உதவி அவர்களுக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளின்போது (1992-1996), 233 நாடுகளில் 16,16,894 பேர் மாற்றங்களைச் செய்வதற்கு உதவப்பட்டனர்; சகலத்தையும் ஜெயிக்கும் அன்பால் வெறுப்பை மேற்கொண்டிருக்கின்றனர்.
தன்னலமற்ற அன்பை தங்களுடைய திருமணங்களில் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம், யெகோவாவின் சாட்சிகள் நிலையான உறவுகளை அடைகிறார்கள். சில நாடுகளில் இரண்டு அல்லது மூன்றில் ஒரு திருமணம், மணவிலக்கில் முடிவடைகிறது. ஆனால் மேற்கூறப்பட்ட சுற்றாய்வு, தற்போது 4.9 சதவீத சாட்சிகள் மட்டுமே தங்கள் துணைகளிடமிருந்து மணவிலக்கு செய்யப்பட்டவர்களாய் அல்லது பிரிந்திருந்தவர்களாய் இருந்தனர் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியது. என்றபோதிலும், இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர், தாங்கள் யெகோவாவின் சாட்சிகளாவதற்கு முன்பு மணவிலக்கு செய்யப்பட்டிருந்தனர் என்பதை மறந்துவிட முடியாது.
அன்பின் கடவுள் மகத்தான போதகராய் இருப்பதாலும், தம்மை நேசிப்பவர்களுக்கு தம்முடைய வழிகளைப் போதிப்பதாலும், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் அன்பை முதலில் அவரிடமே காட்டுகிறார்கள். ‘தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்’ இருக்கும் மற்றவர்களைப்போல் அல்லாமல், யெகோவாவின் சாட்சிகள் கடவுளுக்கு முதலிடம் அளிக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:4) ஒழுங்கற்ற இந்த உலகின் வழிகளுக்கு முரணாக, சராசரி சாட்சி ஒருவர், ஒவ்வொரு வாரமும் மத நடவடிக்கைகளில் 17.5 மணிநேரத்தைச் செலவிடுகிறார். சாட்சிகள் ஆவிக்குரிய மனச்சாய்வுள்ளவர்கள் என்பது தெளிவாய் இருக்கிறது. அதுவே அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. இயேசு இவ்வாறு கூறினார்: “ஆவிக்குரிய தேவையில் உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.”—மத்தேயு 5:3, NW.
கடவுளுக்கு உண்மையாய் ஊழியம் செய்பவர், மனிதருக்காக பயப்படத் தேவையில்லை என்று சங்கீதம் 118-ன் எழுத்தாளர் கூறுகிறார். “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” (வசனம் 6) கடவுளில் முழு நம்பிக்கை வைப்பது, மற்ற மனிதர் பேரில் கொள்ளும் வெறுப்பு மற்றும் பயத்திற்கான காரணங்களில் ஒன்றை நீக்குகிறது.
கடவுள் ‘நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமும்’ உள்ளவர் என்பதை அறிந்துள்ள ஒரு கிறிஸ்தவர், தன் வாழ்விலிருந்து கோபத்தைத் துடைத்தெடுக்க கடும் முயற்சி செய்வார்; ஏனெனில் அது வெறுப்புக்கு ஒரு கூடுதலான காரணமாய் இருக்கலாம். அவர் இதை அடைய, சாந்தம், இச்சையடக்கம் உட்பட, கடவுளுடைய ஆவியின் கனிகளை வளர்ப்பது அவருக்கு உதவும்.—சங்கீதம் 86:15; கலாத்தியர் 5:22, 23.
ஓர் உண்மை கிறிஸ்தவர் தாழ்மையுள்ளவர்; தன்னைப்பற்றி எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதவர். (ரோமர் 12:3) அவர் மற்றவர்களோடு பழகும்போது, அன்பை வளர்த்துக்கொள்கிறார். வெறுப்புக்கு நேர் முரணாக, அன்பு, “சினமடையாது, தீங்கு நினையாது.”—1 கொரிந்தியர் 13:5.
ஆம்; பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு, மக்கள் வெறுப்பதற்குக் காரணமாகலாம். ஆனால் அன்பு, வெறுப்பை அதன் அடிப்படையிலிருந்தே அகற்றிப்போடுவதன் மூலம் அதன்மீது வெற்றி கொள்கிறது. உண்மையில், அன்பு, அகிலாண்டத்திலேயே வலிமைமிக்க சக்தியாய் இருக்கிறது; ஏனெனில் “தேவன் அன்பாகவே இருக்கிறார்.”—1 யோவான் 4:8.
விரைவில் வெறுப்புணர்வு நிரந்தரமாய் ஒழிந்துவிடும்
சுயநலமும் வெறுப்பும் யெகோவா தேவனுடைய குணநலன்களின் பாகமாய் இராததால், அவை என்றென்றுமாய் நிலைத்திருக்க முடியாது. அவை நீக்கப்படுவது அவசியம்; நித்திய காலமாய் நிலைத்திருக்கும் அன்பால் மாற்றீடு செய்யப்பட வேண்டும். வெறுப்பற்றதாயும், அன்பு நிறைந்ததாயும் இருக்கும் உலகமே நீங்கள் ஏங்கும் ஓர் உலகம்; அதைக் காணும்படி உயிர்வாழ்வதற்கான தேவைகளை பைபிளிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு விளக்கமளிக்க அனுமதியுங்கள்.
ஆம், ‘என் வாழ்வை எந்த குணம் செல்வாக்கு செலுத்துகிறது; அன்பா, வெறுப்பா?’ என்று நம்மில் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வது நல்லது. இது வெறுமனே ஒரு பேச்சுக்காக கேட்கும் கேள்வியைவிட அதிகமானது. கடவுளுடைய சத்துருவும், வெறுப்பின் கடவுளுமாய் இருப்பவனுக்காகத் துடிக்கும் இதயம் நீண்ட காலத்துக்குத் துடிக்காது. அன்பின் கடவுளாகிய யெகோவாவுக்கென்று துடிக்கும் இதயமோ, என்றென்றுமாய் துடிக்கும்!—1 யோவான் 2:15-17.
[பக்கம் 10-ன் படம்]
இன்றும்கூட மக்கள் அன்பு என்னும் ஆடையைத் தரித்துக்கொள்ளலாம்