இளைஞர் கேட்கின்றனர் . . .
தனிச்சலுகை காட்டுகையில் நான் என்ன செய்வது?
“என் தங்கச்சி என்னவிட ரெண்டு வயசு சின்னவ, அவளுக்குத்தான் எல்லா கவனிப்பும் கெடைக்கிது. . . . அது சரின்னு தோனல.”—ரிபெக்கா. a
உங்கள் சகோதரன் அல்லது சகோதரி கூடுதலான கவனிப்பைப் பெறும்போது, நீங்கள் இன்னுமதிகம் ஒதுக்கித்தள்ளப்பட்டவராக ஒருவேளை உணரக்கூடும். விசேஷித்த திறமைகளையோ, மோசமான பிரச்சினைகளையோ, உங்கள் பெற்றோரைப் போன்ற அதே அக்கறைகளையோ ஆள்தன்மையையோ உடைய உடன்பிறந்தவர் உங்களுக்கு இருந்தால், கொஞ்சம் கவனத்தை பெறுவதும்கூட உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கலாம்! நீங்கள் அதைப் பற்றி எவ்வளவு அதிகமாய் நினைக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாய் புண்பட்டவராயும் கோபமடைந்தவராயும் உணரலாம். b
என்றபோதிலும், பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.” (சங்கீதம் 4:4) நீங்கள் நிலைகுலைந்தும் கோபமாகவும் இருக்கும்போது, பின்னர் வருத்தப்படக்கூடிய ஏதாவது ஒன்றை சொல்லிவிட அல்லது செய்துவிட அதிக சாத்தியமிருக்கிறது. தன் சகோதரனாகிய ஆபேல் கடவுளோடு அனுபவித்த சாதகமான உறவைப் பற்றி காயீன் எந்தளவு கோபமடைந்தான் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். கடவுள் அவனை எச்சரித்திருந்தார்: “பாவம் உன் வாசலில் பதுங்கியிருக்கும்; அதன் ஆசை உன்மீதே யிருக்கும், நீயோ அதை மேற்கொள்ள வேண்டும்.” (ஆதியாகமம் 4:3-16, திருத்திய மொழிபெயர்ப்பு) காயீன் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாததினால் விளைவு மிகவும் மோசமானதாக இருந்தது!
நீங்கள் காயீனைப்போல மனுஷ கொலைபாதகனாக ஆகப்போவதில்லை என்பது உண்மையே. இருந்தாலும், தனிச்சலுகை காட்டுவது வருத்தந்தரும் உணர்ச்சிகளையும் மனக்கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தலாம். ஆகவே, ஆபத்துகள் உங்கள் கதவண்டையில் படுத்திருக்கலாம்! அவற்றுள் சில யாவை? இந்தச் சூழ்நிலையை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம்?
உங்கள் நாவை அடக்குங்கள்!
பெத் 13 வயதாயிருக்கையில், பெற்றோர் தன் தம்பிக்கு அதிக கவனம் செலுத்தி தன்னை நியாயமற்ற விதத்தில் நடத்தியதாக நினைத்தாள். அவள் நினைவுகூருகிறாள்: “அம்மாவும் நானும் அடிக்கடி ஒருத்தருக்கொருத்தர் சத்தம் போட்டுக்குவோம், ஆனா அதனால எந்தப் பிரயோஜனமும் இருக்கல. அவங்க சொல்றத நான் கேக்க மாட்டேன், நான் சொல்றத அவங்க கேக்க மாட்டாங்க. அதனால ஒன்னும் செய்ய முடியில.” சத்தம்போடுவது நிலைமையை அதிக மோசமாகத்தான் ஆக்கும் என்பதை நீங்களும்கூட ஒருவேளை கவனித்திருப்பீர்கள். எபேசியர் 4:31 இவ்வாறு சொல்லுகிறது: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.”
உங்கள் கருத்தை சொல்வதற்கு நீங்கள் சத்தம்போட வேண்டிய அவசியமில்லை. அமைதியான அணுகுமுறை அநேகமாக நல்ல பலனளிக்கிறது. நீதிமொழிகள் 25:15 சொல்லுகிறது: “நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.” ஆகவே உங்கள் பெற்றோர் தனிச்சலுகை காட்டும் தவறை செய்வதுபோல் தோன்றினால், சத்தம்போட்டு குற்றஞ்சாட்டாதீர்கள். தகுந்த சமயத்திற்காக காத்திருந்து, பின்னர் அமைதியான, மரியாதையான விதத்தில் அவர்களிடம் பேசுங்கள்.—நீதிமொழிகள் 15:23-ஐ ஒப்பிடுக.
உங்கள் பெற்றோரின் குறைகளையே நீங்கள் கவனித்தால் அல்லது “நியாயமற்ற விதத்தில்” நடந்துகொள்கிறார்கள் என்று அவர்களைத் திட்டினால், அவர்கள் உங்களைவிட்டு விலகிப்போக அல்லது எதிர்த்துப் பேசுகிறவர்களாக ஆகும்படியே செய்வீர்கள். மாறாக, அவர்களுடைய செயல்கள் உங்களை எப்படி பாதித்திருக்கின்றன என்பதில் கவனம் செலுத்துங்கள். (‘நீங்க என்ன அசட்டை செய்றது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.’ ) உங்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்கள் அதிக விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். “கேட்கிறதற்குத் தீவிரமாயும்” இருங்கள். (யாக்கோபு 1:19) ஒருவேளை, உங்கள் உடன்பிறந்தாரிடம் அதிக கவனம் செலுத்துவதற்கான நியாயமான காரணங்கள் உங்கள் பெற்றோருக்கு இருக்கலாம். நீங்கள் அறியாத ஏதாவது பிரச்சினைகள் ஒருவேளை அவருக்கு இருக்கலாம்.
ஆனால், கோபமாக இருக்கும்போது நீங்கள் ஒருவேளை அதிக ஆத்திரப்பட்டுப் பேசிவிடும் பழக்கமுடையவராக இருக்கிறீர்கள் என்றால் என்ன செய்வது? “தன் ஆவியை அடக்காத மனுஷ[னை]” “மதிலிடிந்த” பட்டணத்திற்கு நீதிமொழிகள் 25:28 ஒப்பிடுகிறது; அவனுடைய சொந்த அபூரண விருப்பங்களால் அவன் மேற்கொள்ளப்படும் சாத்தியமுள்ளது. மறுபட்சத்தில், உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறமையானது உண்மையான பலத்திற்கு அத்தாட்சியாக இருக்கிறது! (நீதிமொழிகள் 16:32) அப்படியென்றால், உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு கோபம் தணியும்வரை, ஒருவேளை அடுத்தநாள் வரையாகக்கூட, ஏன் காத்திருக்கக்கூடாது? அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகிவிடுவதும், காலார நடப்பது அல்லது சில உடற்பயிற்சிகள் செய்வது போன்றவையும் உதவியாக இருக்கலாம். (நீதிமொழிகள் 17:14) உங்கள் உதடுகளை கட்டுப்படுத்துவதன் மூலம், புண்படுத்தும் அல்லது முட்டாள்தனமான ஒன்றை சொல்வதிலிருந்து உங்களை காத்துக்கொள்ளலாம்.—நீதிமொழிகள் 10:19; 13:3; 17:27.
மறைமுகமான கீழ்ப்படியாமை
தவிர்க்க வேண்டிய மற்றொரு படுகுழி கீழ்ப்படியாமை. குடும்ப பைபிள் படிப்பிற்கு இடையூறு ஏற்படுத்தும்போது தன் தம்பி எப்போதுமே தண்டிக்கப்படுவதில்லை என்பதை பதினாறு வயதான மரீ கவனித்தாள். பட்சபாதமாக தோன்றிய இந்தக் காரியத்தால் ஏமாற்றமடைந்தவளாக, படிப்பில் கலந்துகொள்ள மறுப்பதன்மூலம் “ஸ்டிரைக்” செய்தாள். ஏதாவது ஒன்று நியாயமாயில்லை என்று நீங்கள் நினைத்தால், அப்போது அமைதிப் போராட்டத்தை அல்லது ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியிருக்கிறீர்களா?
அப்படியானால், உங்கள் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணி கீழ்ப்படியும்படி கூறும் பைபிள் கட்டளையை மீறுவதாக இப்படிப்பட்ட சூழ்ச்சிகள் இருக்கின்றன என்பதை உணருங்கள். (எபேசியர் 6:1, 2) மேலுமாக, கீழ்ப்படியாமை பெற்றோரோடுள்ள உங்கள் உறவைக் கெடுக்கும். உங்கள் பிரச்சினைகளை பெற்றோருடன் பேசித் தீர்த்துக்கொள்வது சிறந்தது. “செம்மையான மறுமொழி சொல்லுகிறவன்” மற்றவர்களுடைய மரியாதையைப் பெறுவான் என்று நீதிமொழிகள் 24:26 சுட்டிக்காட்டுகிறது. மரீ தன் தாயுடன் அந்த விஷயத்தைப் பற்றி பேசியபோது, அவர்கள் சமரசமானார்கள்; காரியங்கள் முன்னேற ஆரம்பித்தன.
பிரிந்துபோவதன் ஆபத்து
தனிச்சலுகை காட்டுவதை சமாளிக்க, உங்கள் குடும்பத்திடமிருந்து விலகுவது அல்லது கவனத்திற்காக அவிசுவாசிகளிடம் திரும்புவது மற்றொரு ஆபத்தான வழிமுறையாகும். இதுவே கஸ்ஸாண்ட்ராவுக்கு நடந்தது: “என் குடும்பத்திலிருந்து விலகி, ஸ்கூல்ல இருந்த என்னோட உலகப்பிரகாரமான ஃபிரண்ட்ஸ்கிட்ட நெருக்கமானேன். எனக்கு பாய்ஃபிரண்ட்ஸ்கூட இருந்தாங்க; அது என் பெற்றோருக்குத் தெரியாது. அப்புறம், நான் செய்றது சரியில்லன்னு எனக்கு தெரிஞ்சதனால ரொம்ப சோர்வடஞ்சு போயி, குற்றவுணர்வுக்கு ஆளானேன். அந்தச் சூழ்நிலையிலிருந்து வெளிய வர விரும்புனேன்; ஆனா என் பெற்றோர்கிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியில.”
முக்கியமாக நீங்கள் நிலைகுலைந்தும் தெளிவாக சிந்திக்க முடியாமலும் இருக்கும் சமயத்தில், உங்கள் குடும்பத்திலிருந்தும் உடன் வணக்கத்தாரிடமிருந்தும் உங்களை விலக்கி வைத்துக்கொள்வது ஆபத்தானது. “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்” என்று நீதிமொழிகள் 18:1 எச்சரிக்கிறது. இந்தச் சமயத்தில் உங்கள் பெற்றோரிடம் செல்வதை கடினமாக உணர்ந்தீர்கள் என்றால், நீதிமொழிகள் 17:17-ல் விவரிக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு கிறிஸ்தவ நண்பனைத் தேடுங்கள்: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” பொதுவாக அப்படிப்பட்ட “சிநேகிதன்” சபையின் முதிர்ச்சியுள்ள அங்கத்தினர்கள் மத்தியில் எளிதில் காணப்படலாம்.
அவளுக்கு தேவையிருந்த சமயத்தில் கஸ்ஸாண்ட்ராவுக்கு ஒரு நல்ல “சிநேகிதன்” கிடைத்தார்: “வட்டாரக் கண்காணி [பயண ஊழியர்] எங்க சபைக்கு வந்தப்போ, அவரோடு ஊழியம் செய்யும்படி என் பெற்றோர் என்னை உற்சாகப்படுத்தினாங்க. அவரும் அவரோட மனைவியும் அவ்வளவு எளிமையானவங்களா இருந்தாங்க; என்மேல உண்மையான அக்கறை காட்டினாங்க. நான் மனசுவிட்டு அவங்ககிட்ட பேச முடிந்தது. என்னை குறை சொல்லுவாங்கன்னு எனக்கு தோனல. வெறுமனே, ஒரு கிறிஸ்தவரா வளர்க்கப்பட்டாலே நீங்க பரிபூரணமா இருப்பீங்கன்னு அர்த்தமில்லங்கிறத அவங்க உணர்ந்தாங்க.” அவர்களுடைய உற்சாகமும் முதிர்ச்சிவாய்ந்த அறிவுரையும்தான் கஸ்ஸாண்ட்ராவுக்கு தேவையாக இருந்தன!—நீதிமொழிகள் 13:20.
பொறாமையின் ஆபத்து
“உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?” என்று நீதிமொழிகள் 27:4 எச்சரிக்கிறது. தனிச்சலுகை காட்டப்பட்ட உடன்பிறந்தவரிடம் அவசரப்பட்டு தவறாக நடந்துகொள்ளும்படி பொறாமை சில இளைஞர்களை வழிநடத்தியிருக்கிறது. ஒரு பெண் இவ்வாறு ஒப்புக்கொண்டாள்: “நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, எனக்கு மெல்லிய, அடர்த்தியில்லாத செம்பட்டை முடிதான் இருந்தது; என் சகோதரிக்கோ அவள் இடுப்புவரை நீண்ட, பளபளப்பான தங்கநிற முடி இருந்தது. என் அப்பா அவளுடைய முடியைப் பற்றி எப்போதும் பீத்திக்கொண்டிருந்தார். அவளைத் தன்னுடைய ‘ரப்புன்செல்’ (Rapunzel) என்று சொல்லிக்கொள்வார். ஒரு நாள் இரவு, என் அம்மாவுடைய கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு, அவள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவள் படுக்கை அருகே மெதுவாக சென்று, என்னால் முடிந்தளவு முடியை வெட்டிவிட்டேன்.”—அடேல் ஃபாபரும் இலேன் மஷ்லிஷும் எழுதிய போட்டியில்லா உடன்பிறந்தவர்கள் (ஆங்கிலம்).
ஆகவே, பொறாமையை, பொல்லாத ‘மாம்சத்தின் கிரியைகளில்’ ஒன்று என்று பைபிள் கூறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. (கலாத்தியர் 5:19-21; ரோமர் 1:28-32) என்றபோதிலும், “பொறாமைப்படும் மனச்சாய்வு” நம் எல்லாரிலும் இருக்கிறது. (யாக்கோபு 4:5, NW) ஆகவே, உங்கள் உடன்பிறந்தவரை பிரச்சினையில் மாட்டிவிட, அசௌகரியமாக உணரச்செய்ய அல்லது முகத்தில் கரிபூச நினைக்கிறீர்கள் என்றால், உங்களை மேற்கொள்ள முயன்றுகொண்டு பொறாமை ‘வாசற்படியில் படுத்திருக்கலாம்’!
இப்படிப்பட்ட கேடுண்டாக்கும் உணர்ச்சிகள் இருப்பதை அறிய வந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, கடவுளுடைய ஆவிக்காக அவரிடம் ஜெபம் செய்ய முயலுங்கள். “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” என்று கலாத்தியர் 5:16 கூறுகிறது. (தீத்து 3:3-5-ஐ ஒப்பிடுக.) உங்கள் உடன்பிறந்தவருக்கான உள்ளான உணர்ச்சிகளைப் பற்றி சிந்திப்பதும்கூட உதவியாக இருக்கலாம். உங்கள் கோபத்தின் மத்தியிலும், உங்களுக்கு அவரிடத்தில் கொஞ்சம்கூட அன்பில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? “அன்புக்குப் பொறாமையில்லை” என்று வேதாகமம் சொல்லுகிறதே. (1 கொரிந்தியர் 13:4) ஆகவே, பொறாமையைத் தூண்டும், எதிர்மறையான எண்ணங்களையே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். பெற்றோரிடமிருந்து உங்கள் உடன்பிறந்தவர் அதிகமான கவனத்தைப் பெறுகிறார் என்றால், அவனோடு அல்லது அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட முயலுங்கள்.—ரோமர் 12:15-ஐ ஒப்பிடுக.
இதன் சம்பந்தமாக உங்கள் பெற்றோரோடு நீங்கள் கலந்துபேசுவதும் உதவியாக இருக்கலாம். உங்களுக்கு அதிகமான கவனம் செலுத்தவேண்டிய தேவையை அவர்கள் உணர்ந்தால், உடன்பிறந்தவர்களிடம் உங்களுக்குள்ள பொறாமை உணர்வுகளை மேற்கொள்ள அது பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், வீட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், தனிச்சலுகை காட்டுவது தொடர்ந்தால் என்ன செய்வது? உங்கள் பெற்றோருக்கு எதிராக கோபமடைந்து, சத்தம்போடவோ கலகமோ செய்யாதீர்கள். உதவி செய்யும், கீழ்ப்படிதலுள்ள மனப்பான்மையை காத்துக்கொள்ள முயலுங்கள். தேவை ஏற்பட்டால், கிறிஸ்தவ சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்தவர்களிடமிருந்து உதவியைப் பெறுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா தேவனிடம் நெருங்கிச் செல்லுங்கள். “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்.—சங்கீதம் 27:10.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b அக்டோபர் 22, 1997 விழித்தெழு! பிரதியில் “என் சகோதரனுக்கு மட்டும் ஏன் அதிக கவனிப்பு?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 19-ன் படம்]
ஒதுக்கப்பட்டதாக உணருகிறீர்கள் என்று கூறுவது பிரச்சினையை தீர்க்க உதவலாம்