உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 5/22 பக். 24-27
  • பிறக்கும் தீவுகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிறக்கும் தீவுகள்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஹவாய்த் தீவுக்கூட்டம்
  • தீவு உருவாதல்
  • நகரும் தீவுகள்
  • புதிய தீவுகள் பிறப்பதும் . . .
  • . . . பழைய தீவுகள் மறைவதும்
  • செயலில் உயர்வெப்பப் புள்ளி
  • எரிமலைகள்—நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்களா?
    விழித்தெழு!—1996
  • கானரித் தீவுகள்—சாதகமான சீதோஷ்ணநிலை, கவர்ந்திழுக்கும் இயற்கைக் காட்சி
    விழித்தெழு!—1994
  • உறங்கும் ராட்சதனின் நிழலில் வாழ்தல்
    விழித்தெழு!—2007
  • இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குதல்
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 5/22 பக். 24-27

பிறக்கும் தீவுகள்

“ஹவாய்.” ஹவாய்த் தீவுகள், வெப்பமண்டல பரதீஸ், பளிச்சென்றிருக்கும் கடற்கரைகள், இதமான தடக்காற்று ஆகியவற்றைக் கற்பனை செய்துபார்க்க வைக்கின்றன. ஆனால், இந்தத் தீவுகள் வெகு தொலைவில் தனித்து இருப்பது உங்களுக்குத் தெரியுமா? வரைபடத்தில் ஹவாய் தீவைப் பார்த்தீர்களென்றால், இத்தீவுகள் வட பசிபிக் பெருங்கடலின் நடுவில் ஒன்றோடொன்று சேர்ந்து இருப்பதைக் காண்பீர்கள். அதாவது, இவை முக்கிய நிலப்பரப்பின் கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து கண்களுக்கு எட்டாத் தொலைவில் இருக்கின்றன! ஆகவே, நீங்கள் பின்வருமாறு கேட்டுக்கொள்ளலாம், ‘இத்தீவுகள் அங்கே எப்படி தோன்றின? எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான தீவுகள் உருவாகும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்களா? நாம் நடமாடும் இந்தப் பூமியைப் பற்றி இத்தீவுகள் என்ன சொல்கின்றன?’

ஹவாய்த் தீவுக்கூட்டம்

ஹவாய் தீவைப் பார்க்க வரும் அநேகருக்கு, வடமேற்கிலிருந்து தென்கிழக்காக ஒன்றையடுத்து ஒன்றாக அப்பகுதியில் அமைந்துள்ள எட்டு தீவுகள் தெரியும்; அவற்றில் மிகப் பெரிய தீவுகள், கவாய், ஓஹு, மோலோகாய், லனை, மாய், ஹவாய். சிறிய நீஹாவ் தீவு கவாய் தீவுக்கு மேற்கே அமைந்துள்ளது; கஹுலாவ் தீவோ மாய் தீவுக்கு தென்மேற்கே அமைந்துள்ளது. ஹவாய் தீவு, பிக் ஐலண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பரப்பளவு 10,000 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்டது; ஆனால் சிறிய கஹுலாவ் தீவின் பரப்பளவோ 117 சதுர கிலோமீட்டர் தான். அத்துடன், இத்தீவுத் தொடரில், மிக மிக சிறிய 124 தீவுகள் அல்லது குட்டித் தீவுகளும் அடங்கும்; ஆக இவை யாவும் சேர்ந்து வடமேற்கு பகுதியில் தொலைவில் அமைந்துள்ளன. இத் தீவுத் தொடரின் வடமேற்கு முனைக்கு அருகிலிருக்கும் மிட்வே தீவுகள், பிக் ஐலண்டிலிருந்து கிட்டத்தட்ட 2,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது! பெரும்பாலும் குட்டித்தீவுகள் பவழத்தாலும் மணலாலுமே ஆனவை; ஆக அவற்றின் மொத்த புறப்பரப்பளவே வெறும் எட்டு சதுர கிலோமீட்டர் தான். பொருத்தமாகவே, ஹவாய்த் தீவுக்கூட்டம் என இத்தீவுகள் அனைத்தையும் சேர்த்து சிலர் அழைக்கின்றனர்.

இத் தீவுகளுக்கும் குட்டித்தீவுகளுக்கும் அஸ்திவாரமாக இருப்பவை, சுற்றியுள்ள கடல் தரைக்கு மேலாக சராசரியாக 4,000 மீட்டர் உயரத்துக்கு மேலெழுந்த அகன்ற மேடைகளே என்பதை நாம் கருத்தில் கொண்டால், அவை வெறுமனே வெளியே தெரியும் மிகப்பெரிய மலைகளின் உச்சிப்பகுதிகளே என அறிவோம். உண்மையில், சமுத்திரத் தரையின் அடிப்பாகத்திலிருந்து அளந்தால், ஹவாய் தீவிலுள்ள மென்னா கீ, மென்னா லோ ஆகிய இடங்களின் உயரம் சுமார் 10,000 மீட்டர். இதனால் இவை ஒருவிதத்தில் உலகத்திலேயே மிக உயரமான மலைகளாகும்!

தீவு உருவாதல்

ஹவாய் தீவை சற்று கூர்ந்து ஆராய்வோம். பெரிய தீவில், ஒன்றோடொன்று இணைந்த ஐந்து பெரிய எரிமலைகள் அடங்கியுள்ளன என புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் மிகப் பெரிய மூன்று எரிமலைகளை—மென்னா கீ, உறங்கும் எரிமலை என கருதப்படுகிறது; ஹவாய் தீவிலேயே மிக உயரமான சிகரம் என்ற பெருமை இதற்குண்டு; இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4,205 மீட்டர்; மென்னா லோவின் உயரமோ 4,169 மீட்டர்; கன அளவில் ஹவாய்த் தீவுகளிலேயே இதுதான் மிகப் பெரிய எரிமலை; இங்கு உள்ளதிலேயே இளைய எரிமலை கீலாவீ; இது இத்தீவுக்குத் தெற்கே அமைந்துள்ளது—அநேக பார்வையாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். கூடுதலாக, கோஹாலா எரிமலை இத்தீவின் வடமேற்கு முனையாய் அமைந்துள்ளது; ஹூவலலை, கோனா கடற்கரையோரத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

இந்த எரிமலை ஒவ்வொன்றும், பொங்கி வழிந்து அடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான லாவா பாய்வுகளால் ஆனவை. வெடிப்புகள் நீருக்கடியில் ஆரம்பிக்கின்றன; வெளியே வரும் லாவா உடனே குளிர்ச்சியடைகிறது; ஆகவே புற அடுக்குகளை உருவாக்குவதோடு, நாக்கு வடிவில் பாய்ந்தோடுகிறது; இவையே, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்படுகையில், தலையணைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதுபோல் காட்சியளிக்கின்றன. மேலெழும்பும் எரிமலை நீருக்கு மேலே தெரியும்போது, லாவா பாய்வுகள் வேறொரு தோற்றத்தைப் பெறுகின்றன. வழவழப்பான, மேடுபள்ளங்களைக் கொண்ட, கயிறுபோன்ற அமைப்புகளையுடைய மேற்பரப்புகளை விவரிக்க “பகோஃகோ” என்ற பெயரையும், கரடுமுரடான சீரற்ற பரப்பை விவரிக்க “ஆ” என்ற பெயரையும் எரிமலை ஆய்வாளர்கள் ஹவாய் மொழியில் சூட்டியிருக்கின்றனர். அகன்ற, லேசான மலைச்சரிவு போன்று வளர்ந்துவரும் எரிமலை, பண்டைய ரோம படைவீரர்களது கேடயம் போன்று காணப்படுகிறது. மாக்மா அல்லது பாறைக் குழம்பு மேற்பரப்புக்கு அருகிலுள்ள குழிகளிலிருந்து கக்கப்பட்டால் அல்லது வெளியே வந்தால், அந்த எரிமலை உச்சியில் அகன்ற வாய்க்குழிகள் உருவாகின்றன. மேலும், எரிமலைக்கு உட்புறம் சேமிக்கப்பட்டுள்ள மாக்மாவும் குமுறுகையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஏற்படுத்தப்படும் அழுத்தம், எரிமலையின் ஒரு பாகத்தை கடலை நோக்கி தள்ளுகிறது; இவ்வாறு தள்ளுவதன் மூலம், ஒடுக்கமாயுள்ள இடைவெளிகளை பெருமளவில் உருவாக்குகிறது. இறுதியில், மென்னா கீ எரிமலை உருவானபோது இருந்ததைப் போலவே, கேடய எரிமலை வெடிப்புகள் மிகவும் வெடிக்கும் தன்மை உள்ளவையாய் ஆகின்றன; இவ்வாறு, இந்த எரிமலையில் அங்கும் இங்குமாக கூம்பு வடிவ எரிமலைக் குழம்புத்துண்டுகளைக் குவிக்கின்றன.

உலகிலுள்ள செயல்படும் எரிமலைகளிலேயே, மென்னா லோவும் கீலாவீயும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஹவாய்த் தீவுகளில் நெடுங்காலமாய் குடியிருப்பவர்களிடமிருந்தும், மிஷனரிகளிடமிருந்தும், விஞ்ஞானிகளிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பதிவுகள், மென்னா லோவில் 1832 முதல் 48 எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதையும், கீலாவீயில் 1790 முதல் 70-க்கும் அதிகமான எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இந்த எரிமலை வெடிப்புகள், சில மணிநேரம் முதல் பல ஆண்டு வரைகூட நீடித்திருக்கின்றன. அனைவருக்கும் தெரிந்த மிக நீண்டகால எரிமலை வெடிப்பு, கீலாவீயில் அமைந்துள்ள ஹாலமௌமௌ வாய்க்குழி எனப்படும் லாவா நிறைந்த ஓர் ஏரியாகும். இது, 1800-களின் முற்பகுதியிலிருந்து 1924 வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. தற்போது, கீலாவீ ஜனவரி 1983 முதல் செயல்பட்டு வருகிறது; எப்பொழுதாவது, கண்டுகளிக்கத்தக்க வகையில், கடலுக்குள் பாய்ந்திருக்கும் லாவா நெருப்பு வீழ்ச்சிகளையும் ஆறுகளையும் ஏற்படுத்தியுள்ளன.

திரவ நிலையிலுள்ள லாவாவையே பெரும்பாலும் கக்குவதால், ஹவாய்த் தீவுகளில் வெடிக்கும் எரிமலைகள் வெடிக்காத தன்மையுள்ளவையாக அல்லது வெடிப்புத் தன்மை குறைவானவையாக இருந்திருக்கின்றன. என்றாலும் எப்பொழுதாவது சில சந்தர்ப்பங்களில், மாக்மாவுடன் நிலத்தின் அடியிலுள்ள நீரும் கலப்பதால், நீராவி குபுகுபுவென்று வெளிவருகிறது. அப்படிப்பட்ட ஒரு வெடிப்பு 1790-ல், சுமார் 80 பேரைக் கொன்றது; உள்நாட்டு போர்வீரர்களின் ஒரு தொகுதியினரும் அவர்களின் குடும்ப அங்கத்தினர்களும், கீலாவீ கக்கிய வெப்ப வாயுக்களாலும் எரியும் குழம்புத் துண்டுகளாலும் சூழப்பட்டபோது மடிந்தனர்.

நகரும் தீவுகள்

ஹவாய், மாய் ஆகிய இரு தொலைதூர தென்கிழக்குத் தீவுகள் மட்டுமே செயல்படும் எரிமலைகளாய் இருந்திருக்கின்றன என கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறு காட்டுகிறது. குழப்பமூட்டும் இச் சூழ்நிலை, விஞ்ஞானிகள் இத்தீவுத் தொடரின் பாறை வரலாற்றை ஆய்வு செய்ய தூண்டியது. லாவாவுக்குள், கதிர்வீச்சு தன்மை கொண்ட பொட்டாசியத்தின் சிறுசிறு துகள்களும், அதன் சிதைவுப் பொருளான ஆர்கானும் கலந்திருந்தன; இவற்றின் உதவியால் ஆய்வுக்கூடத்தில் பாறையின் வயதுகளை அளவிட முடிந்தது. வடமேற்கு நோக்கிச் செல்லச் செல்ல, பல கோடிக்கணக்கான ஆண்டுகளில் ஹவாய்த் தீவுகளின் பாறைகளுடைய வயது படிப்படியாக அதிகமாகி வந்ததை இப்படிப்பட்ட ஆய்வு காட்டியது.

ஹவாய்த் தீவுகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் இத் தீவுத் தொடரின் தென்கிழக்குப் பகுதியில் அதிகமாய் இருந்திருப்பதால், அவற்றுக்கு அடியிலுள்ள மாக்மாவின் பிறப்பிடமும் நகர்ந்து வந்திருப்பதை இது குறிப்பிட்டுக் காட்டுகிறதா? உண்மையில், உயர்வெப்பப் புள்ளி என அழைக்கப்படும் மாக்மாவின் பிறப்பிடம், நிலையானது என்பதாக புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாறாக, உயர்வெப்பப் புள்ளிக்கு மேலுள்ள பசிபிக் பெருங்கடல் தரையோ, நகர்ந்து வந்திருக்கிறது; ஆகவே அதன்மேல் அமைந்துள்ள இத்தீவு, நகரும் கன்வேயர் பெல்ட்டின் மேல் அமைந்துள்ள பாறை அடுக்குகள் போல, எரிமலைகளையும் உயர்வெப்பப் புள்ளியிலிருந்து நகர்த்தியுள்ளது. இதே நகர்வு, அருகிலுள்ள கண்டத்தின் நிலப்பகுதிக்கு எதிராகவும், கடல்தரையின் மற்ற பாகங்களுக்கு எதிராகவும் பசிபிக் கடல்தரையை அழுத்துகிறது. இதன் காரணமாகவே பசிபிக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நீங்கள் ஹவாய் தீவில் வசித்தால், உங்கள் வீடு, கடந்த ஆண்டில் இருந்ததைவிட வடமேற்கு நோக்கி சுமார் ஏழரை சென்டிமீட்டர் தூரம் நகர்ந்திருக்கும்!

ஹவாய் தீவுக்கு அடியிலுள்ளதைப் போன்ற மற்ற உயர்வெப்பப் புள்ளிகளால்தான் உலகமுழுவதிலும், அநேக எரிமலைகள் நிலத்திலோ கடலிலோ உருவாகின்றன என விஞ்ஞானிகள் குறிப்பு தெரிவிக்கின்றனர். இந்த உயர்வெப்பப் புள்ளிகளில் பெரும்பாலானவை, நகரும் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான அத்தாட்சியையும் அளிக்கின்றன; எனவே, பூமியின் மேற்பரப்பு, நீங்கள் வசிக்கும் பகுதியிலும்கூட சற்று நகர்ந்து வந்திருக்கலாம் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

புதிய தீவுகள் பிறப்பதும் . . .

பெரிய தீவில் மாபெரும் எரிமலைகள் உருவாக லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதால், இந்தக் காலப்பகுதியின்போது உயர்வெப்பப் புள்ளியிலிருந்து இத்தீவு நகர்ந்து சென்றிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அப்படியானால், இத்தீவு பாதிக்கப்படாத கடல்தரையை மோதும்போது, உயர்வெப்பப் புள்ளிக்கு மேலே, புதிய எரிமலைகளும் தீவுகளும் உருவாக வேண்டும். பெரிய தீவில் ஏற்பட்டுள்ள எரிமலைகளை அடுத்து, வேறு ஏதாவது எரிமலை பிறந்துள்ளதா?

ஆம், வேறு எரிமலையும் பிறந்துள்ளது. நீருக்கு அடியில் செயல்படும் எரிமலையாய் உள்ள லோயீஹீ எரிமலை, ஹவாய் தீவுக்கு தெற்கே வளர்ந்து வருகிறது. என்றாலும், அது கடலுக்கு மேலாக விரைவில் வெளியே தெரியும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவ்வாறு தெரியவேண்டுமென்றால், அது, இன்னும் 900 மீட்டர் உயரம் மேல்நோக்கி எழும்ப வேண்டும்; அதற்கோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம்.

. . . பழைய தீவுகள் மறைவதும்

மாபெரும் எரிமலைக் கேடயங்களும், கரடுமுரடான லாவா பாய்வுகளும் சேர்ந்து, ஹவாய்த் தீவுகளை சமுத்திரத்துக்குள்ளே மறுபடியும் மூழ்கிவிடாமல் பாதுகாப்பாய் இருப்பதைப் போல் தோன்றச் செய்கின்றன. ஆனால், ஹவாய் தீவுக்கு வடமேற்கிலுள்ள சிறு சிறு குட்டித்தீவுகளும் மூழ்கிய கடலடி மலைகளும் அவ்வாறு தோன்றச் செய்வதில்லை. உதாரணமாக, மிட்வே மற்றும் கியூரி தீவுகளிலுள்ள மணல்களும் பவழப் பாறைகளும், பெரிய எரிமலை ஏற்படுத்திய மலைகளின் மேல் உருவானவை; அவற்றின் உச்சிப்பகுதிகளோ இப்பொழுது கடல் மட்டத்துக்குக் கீழே நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளன. எரிமலைத் தீவுகள் ஏன் மறைகின்றன?

இத் தீவுகளின் மேற்பரப்பில் நீர் பாய்ந்துசெல்வதாலும், இவற்றின்மீது மோதும் அலைகளாலும், மற்ற விசைகளாலும் தொடர்ந்து அரிக்கப்படுவதால் இவை படிப்படியாக மறைகின்றன. இத் தீவுகள் அவற்றின் சொந்த எடையாலேயே சமுத்திரத் தரையைக் கீழே இறக்குகையில் மூழ்கிவிடுகின்றன. சில தீவுகளின் பக்கவாட்டில் அமைந்துள்ள செங்குத்தான பாறைகள், மற்றொரு விஷயத்தை, அதாவது, எரிமலைத் தீவுகள் நிலச்சரிவுகளாலும் சிதைவுறுகின்றன என்ற உண்மையைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன; கடலுக்கடியிலுள்ள தீவுகளின் பக்கவாட்டுப் பகுதிகளைக் குறிப்பிட்டுக் காட்டும் ஒலியுணர் கருவிகளின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், கடல்தரை மீது ஏற்பட்ட பல கிலோமீட்டர் நீளமுள்ள பெரிய பெரிய நிலச்சரிவுகளை வெளிக்காட்டுகின்றன.

செயலில் உயர்வெப்பப் புள்ளி

ஹவாய் தீவில், உயர்வெப்பப் புள்ளி காரணமாக ஏற்படும், செயல்படும் எரிமலை வெடிப்புகளால் மாறிவரும் இயற்கைக் காட்சிகளை, ஹவாய் எரிமலைகள் தேசிய பூங்காவுக்குச் செல்லும் பார்வையாளர்கள் பார்க்கலாம். கீலாவீ வாய்க்குழியின் விளிம்பில் கட்டப்பட்டுள்ள ஹவாய் எரிமலை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொடர்ந்து நடைபெறும், அச்சுறுத்தும் வெடிப்புகளைக் கண்காணிக்கின்றனர். அவர்கள் செய்யும் ஆய்வுகள், எரிமலைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் பூமியின் மேற்பரப்பு எவ்வாறு மாறியிருக்கின்றன என்பதைப் பற்றியும் அதிக அறிவைப் பெற உதவியிருக்கின்றன. வலிமை வாய்ந்த புவியியல் விசைகளால்தான், ஹவாய்த் தீவுகளான இந்தப் பிரமாண்டமான தீவுத் தொடர், பசிபிக் பெருங்கடலின் நடுவில் பிறப்பிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை மதித்துணரும் நாம் பிரமிக்கத்தான் வேண்டும்.

[பக்கம் 25-ன் வரைப்படம்]

(For fully formatted text, see publication)

நீஹாவ்

கவாய்

ஓஹு

மோலோகாய்

லனை

மாய்

கஹுலாவ்

ஹவாய்

ஹவாய்த் தீவுகள்

[படத்திற்கான நன்றி]

எரிமலைகள்: Dept. of Interior, National Park Service

[பக்கம் 25-ன் படம்]

மென்னா லோவிலுள்ள லாவா ஆறு

[பக்கம் 24-ன் குறிப்பு]

கீலாவீயில் ஏற்பட்ட ஓர் எரிமலை வெடிப்பு

[பக்கம் 24-ன் படம்]

கீலாவீயின் கிழக்குப் பிளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகளின் வரிசை

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 26-ன் படம்]

மென்னா லோவிலுள்ள நெருப்புத் திரை

[படத்திற்கான நன்றி]

மேல் இடது, கீழ் வலது: Dept. of Interior, National Park Service

[பக்கம் 26-ன் படம்]

கீலாவீயில் வெடித்துள்ள நெருப்பு வீழ்ச்சி

[படத்திற்கான நன்றி]

U.S. Geological Survey

[பக்கம் 26-ன் படம்]

கீலாவீயிலுள்ள லாவா ஏரி

[படத்திற்கான நன்றி]

மேல் இடது, கீழ் வலது: Dept. of Interior, National Park Service

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்