நடந்ததை நினைத்துப் பார்க்க வேண்டுமா?
“யூதர்களால் யூதப் படுகொலையை மறக்க முடியுமா?” டெக்ஸஸ், சான் அன்டோனியோவிலுள்ள மெக்ஸிகன் அமெரிக்கன் கல்ச்சுரல் சென்டரின் தலைவர் விர்ஜில் எலிசான்டோ இந்தக் கேள்வியை எழுப்பினார். இந்த நூற்றாண்டில் நடக்கும் அட்டூழியங்கள் பொதுமக்களின் மனதில் அழிக்கமுடியாதபடிக்கு பதிந்துவிடும் என்பதை இது காட்டுகிறது. ஆர்மேனியர்களின் இனப்படுகொலையும் (1915-23), கம்போடியர்களில் ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டதும் (1975-79) இருபதாம் நூற்றாண்டில் நடந்த கொடூரமான சம்பவங்களில் அடங்கும். ஆனால், அட்டூழியங்களைப் பற்றிய பட்டியல் இதோடு நின்றுவிடுவதில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் சித்திரவதையாளர்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில், நடந்த அட்டூழியங்களை மறக்கும்படி அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் மக்களுக்கு பல தடவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். உதாரணமாக, பொ.ச.மு. 403-ம் ஆண்டில் கிரீஸிலுள்ள ஆதன்ஸ் நகரில் இதுதான் நடந்தது. மக்களை அடக்கியொடுக்கிய முப்பது கொடுங்கோலர்களின் சர்வாதிகார ஆட்சி அந்நகரில் அப்போதுதான் முடிவடைந்திருந்தது. அவர்கள் ஏற்படுத்திய சிறு குழுவாளராட்சி (oligarchy), அதனுடைய எதிரிகள் அனைவரையுமே கொன்று குவித்திருந்தது. புதிய ஆளுநர்கள் முந்தைய கொடுங்கோல் அரசின் ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு (“மறதி” அல்லது “மறந்தநிலை” என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது) வழங்கும் ஒரு ஆணையை பிறப்பிப்பதன் மூலம் சமுதாய இணக்கத்தை ஏற்படுத்த விளைந்தனர்.
ஆணைக்கு அடங்கி மன்னித்துவிடுவதா?
அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் நினைவுகளை மறக்கும்படி சட்டம்போடுவது எளிதாக இருக்கலாம். அரசியல் லாபத்துக்காக ஆட்சியாளர்கள் அவ்வாறு செய்யலாம். அதுதான் பூர்வ கிரீஸிலும், இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல ஐரோப்பிய நாடுகளிலும் நடந்தது. உதாரணமாக, இத்தாலியில், 2,00,000-க்கும் அதிகமான குடிமக்களுக்கு 1946-ம் ஆண்டில் “பாஸிஸ ஆட்சியில் நடந்த அக்கிரமங்களில், பெருமளவோ, சிறிதளவோ பங்கு கொண்ட குற்றத்திற்காக” பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது என்று லா ரேப்பூப்ளிக்கா செய்தித்தாள் சொன்னது.
அரசாங்கம் அல்லது பொதுநல அமைப்புகளின் தீர்மானங்கள் ஒரு விஷயம். ஆனால், சமுதாயத்திலுள்ள தனிப்பட்ட நபர்களின் மனோபாவமோ மற்றொரு விஷயம். மிருகத்தனமான சண்டைகளுக்கும் படுகொலைகளுக்கும் மற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கும் உட்படுத்தப்பட்ட நிராதரவான குடிமக்களை, நடந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள் என்று சட்டத்தின்மூலம் கட்டாயப்படுத்த முடியாது.
இந்த நூற்றாண்டில் மட்டுமே நடந்த போர்களில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்திருக்கின்றனர்; அதுவும் சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்த பிறகு. யுத்தமில்லாத நாட்களில் நடந்த படுகொலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நடந்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. பெருவாரியான மக்கள் இவற்றில் ஒன்றையும் மறந்துவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கின்றனர்.
மறக்க விளைவோர்
கொடூரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களையோ அவர்களுடைய சந்ததிகளையோ, மன்னித்து மறந்துவிடும்படி புத்திசொல்பவர்கள், கடந்த காலத்தை நினைவுகூருவது, அதுவும் அது நடந்து பல பத்தாண்டுகள் கடந்துவிட்ட பிறகு நினைவுகூருவது, பிரிவினையைத்தான் உண்டாக்கும் என்று அடித்துச் சொல்கின்றனர். மறந்துவிடுவது ஒற்றுமையை தரும்; ஆனால், நடந்துமுடிந்தவற்றை நினைவுகூருவது, அது எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும்சரி, அவற்றை சரிசெய்து விடாது என்றும் சொல்கின்றனர்.
மறக்க வைப்பதற்கான முயற்சியில், மனித இனத்துக்கு எதிராக செய்யப்பட்ட திடுக்கிட வைக்கும் அக்கிரமங்கள் உண்மையில் நடக்கவேயில்லை என்று மறுக்கும் அளவுக்கு சிலர் செல்கிறார்கள். சரித்திரத்தை திருத்தும் சுயபாணி ஆசிரியர்களின் செல்வாக்கே இதற்குக் காரணம். உதாரணமாக, யூதப் படுகொலை நடைபெறவேயில்லை என்றும்கூட சிலர் வாதிடுகின்றனர்.a கொலைக்களங்களாக முன்பு பயன்படுத்தப்பட்ட இடங்களுக்கு, அதாவது ஆஸ்விட்ச், டிரிபிளிங்கா போன்ற இடங்களுக்கு, மக்களை கூட்டிச் செல்கின்றனர். அந்த இடங்களில் நச்சுப்புகை அறை என்ற ஒன்று இருந்திருக்கவே இல்லை என்று பார்வையாளர்களிடம் தெரிவிக்கின்றனர். அதை எக்கச்சக்கமான ஆட்கள் கண்ணாரக் கண்டபோதிலும், மலைபோல குவிந்திருக்கும் ஆதாரங்களும் பதிவுகளும் இருந்தபோதிலும்கூட இவ்வாறு சொல்கின்றனர்.
சரித்திரத்தை திருத்தும் இந்தப் பொய்யர்களின் கருத்துக்கள் குறிப்பிட்ட சில தொகுதியினரிடம் வெற்றியடைவது எப்படி? ஏனென்றால், சிலர் தங்கள் பொறுப்பையும் தங்கள் நாட்டு மக்களின் பொறுப்பையும் மறந்துவிட தீர்மானிக்கிறார்கள். ஏன்? தேசப்பற்று, சுயகொள்கைகள், அல்லது யூதர்களுக்கு எதிரான மனநிலை அல்லது அதுபோன்ற மற்ற மனநிலையே இதற்குக் காரணம். அட்டூழியங்கள் மறக்கப்பட்டுவிட்டதென்றால், பொறுப்புகளும் மறைந்துவிடும் என்று இந்தச் சரித்திர சீர்திருத்தவாதிகள் முடிவுகட்டுகின்றனர். பொறுப்புணர்ச்சியற்ற இத்தகைய சீர்திருத்தவாதிகளின் முடிவை பெருவாரியான மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். பிரெஞ்சு சரித்திர ஆசிரியர் ஒருவர் இவர்களை, “நினைவுகளின் கொலையாளிகள்” என அழைத்தார்.
அவர்கள் மறப்பதில்லை
தங்களுக்குப் பிரியமானவர்கள் போரிலோ கொடூரமான விதத்திலோ இறந்துபோனதை மறந்துவிடுவதென்பது, அதிலிருந்து தப்பினவர்களுக்கு ஒன்றும் சாமானிய விஷயமல்ல. தாங்களும், தங்களுக்குப் பிரியமானவர்களும் அனுபவித்த துயரங்கள் மற்றவர்களுக்குப் பாடமாக அமையும், அதாவது, அத்தகைய குரூரமான செயல்கள் மீண்டும் நடப்பதை தடுக்க உதவும் என்று இவர்கள் நம்புகின்றனர். அதன் காரணமாகவே, பெரும்பான்மையோர் இந்தப் படுகொலைகளையும் இனப் படுகொலைகளையும் நினைவுகூர விரும்புகிறார்கள்.
ஆஸ்விட்ச் கான்சன்ட்ரேஷன் முகாமில் நாசிக்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் உலகிற்கு தெரியவந்ததன் வருடாந்தர நினைவு விழாவைக் கொண்டாட ஜெர்மன் அரசு தீர்மானித்தது. அதற்கான காரணம்? “இவ்வாறு நினைவுகூருவது வரும் சந்ததிக்கு எச்சரிப்பாக அமையும்” என்று ஜெர்மன் பிரஸிடென்ட் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 50-ம் ஆண்டு நிறைவு விழாவின்போது இரண்டாம் போப் ஜான் பாலும் இவ்வாறே தெரிவித்தார்: “வருடங்கள் கடந்து செல்லச்செல்ல, இந்தப் போரைப் பற்றிய நினைவுகள் மங்கிவிடக் கூடாது. மாறாக, நம்முடைய சந்ததிக்கும் இனிவரும் சந்ததிக்கும் இது ஒரு கடுமையான பாடமாக இருக்க வேண்டும்.” இருந்தபோதிலும், முற்காலங்களில் நடந்த அட்டூழியங்களையும் அதற்கு பலியானவர்களையும் நினைவுகூருவதில் கத்தோலிக்க சர்ச் நிலையான கொள்கையை உடையதாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
பிற்கால சந்ததிகள் இந்த நூற்றாண்டிலும், இதற்கு முன்பும் நடந்த இனப் படுகொலைகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் எச்சரிக்கப்படவும் வேண்டும் என்பதற்காக நிறைய மியூசியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன் டி.சி.-யிலுள்ள ஹோலகாஸ்ட் மெமோரியல் மியூசியமும் லாஸ் ஏஞ்ஜலிஸிலுள்ள பேட் ஹாஷோவா மியூசியம் ஆஃப் டாலரன்ஸும் அவற்றில் சில. அதைப் போலவே, இந்தப் பொருளை மையமாகக் கொண்டு நெஞ்சை நெகிழவைக்கும் டாக்குமெண்டரிகளும் சினிமாக்களும்கூட தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மனிதர் மற்ற மனிதரால் சித்திரவதை செய்யப்பட்டதை மனிதவர்க்கம் மறந்துவிடக்கூடாது என்ற முயற்சியில்தான் இவை செய்யப்படுகின்றன.
ஏன் நினைக்க வேண்டும்?
“கடந்த காலத்தை மறந்து விடுகிறவர்கள் அதே தவறை மறுபடியும் செய்வார்கள்” என்று ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த அமெரிக்க தத்துவ அறிஞர் ஜார்ஜ் சன்டயானா எழுதினார். வேதனைக்குரிய விதமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து செல்லும்போது, மனித இனம் அதனுடைய கடந்த காலத்தை சீக்கிரமாக மறந்துவிடுகிறது. இவ்விதமாக அதே ஈவிரக்கமற்ற அட்டகாசங்களை திரும்ப திரும்பச் செய்கிறது.
மனித இனம் நீண்ட காலமாகவும், கொடூரமாகவும் பெருவாரியான மக்களை கொன்று குவித்திருக்கிறது. இது, மனிதனை மனிதன் அடக்கியாளுவது ஒட்டுமொத்தமான தோல்வியைத் தழுவியிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஏன் இப்படி நடந்தது? ஏனென்றால் மனிதர்கள் திரும்பத் திரும்ப அதே அடிப்படையான தவறை செய்திருக்கிறார்கள். அதாவது கடவுளையும் அவருடைய சட்டங்களையும் அசட்டை செய்திருக்கிறார்கள். (ஆதியாகமம் 3:1-6; பிரசங்கி 8:9) இன்று, பைபிளில் தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட விதமாக, “கோணலும் மாறுபாடுமான சந்ததி” தங்கள் முன்னோர்களை அப்படியே பின்பற்றுகிறது. அதற்குரிய விளைவுகளையும் அறுவடை செய்கிறது.—பிலிப்பியர் 2:15; சங்கீதம் 92:7; 2 தீமோத்தேயு 3:1-5, 13.
நம்முடைய இந்தக் கலந்துரையாடலில், சிருஷ்டிகராகிய யெகோவாவையும் உட்படுத்தியிருப்பதால், அவருடைய கண்ணோட்டம் என்ன என்பதையும் பார்ப்போம். அவர் எதை மறக்கிறார், எதை நினைக்கிறார்? தொடர்கதையாகிவிட்ட மனித அட்டூழியங்களுக்கு என்றாவது விடிவு உண்டா? ‘பொல்லாரின் தீமை முடிவுக்கு வருமா?’—சங்கீதம் 7:9, பொது மொழிபெயர்ப்பு.
[அடிக்குறிப்புகள்]
a சரித்திரத்தை திருத்தி எழுதும் சரித்திராசிரியர்களின் வாதங்கள் பொய் என்பதன் பேரிலான தகவலைப் பெற, மே 8, 1990 விழித்தெழு! பக்கம் 4-8-ல் உள்ள “அந்தப் படுகொலை—ஆம், அது உண்மையிலேயே நடந்தது!” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு/படங்கள்][
ஆஸ்விட்ச் கான்ஸன்ட்ரேஷன் முகாமிலுள்ள பிணம் எரிக்குமிடமும் சூளையும்
“கடந்த காலத்தை மறந்துவிடுகிறவர்கள் அதே தவறை மறுபடியும் செய்வார்கள்.”—ஜார்ஜ் சன்டயானா
[படத்திற்கான நன்றி]
Oświęcim Museum