பரிணாமம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல
மிகச்சிறிய உயிரினங்களிலிருந்து பரிணமித்ததற்கு பதிலாக கடவுளால் நேரடியாக மனிதன் படைக்கப்பட்டான் என்பதையே அநேக அமெரிக்கர்கள் நம்புகின்றனர் என்பதை ஓட்டெடுப்புகள் காட்டுகின்றன. அப்படியென்றால் அமெரிக்காவில் உள்ள அநேக அறிவியல் பாட ஆசிரியர்கள், குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சியே இதற்கு அடிப்படைக் காரணம் என்ற கருத்தை ஏன் பரப்புகின்றனர்? ஒரு காரணம், “டார்வினிய கொள்கையை தீவிரமாக நம்பும் அடிப்படைவாதிகள் . . . அநேக பல்கலைக்கழகங்களில் உள்ள விஞ்ஞான துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்” என்று பர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிப் இ. ஜான்சன் குறிப்பிடுகிறார்.
“சில சந்தர்ப்பங்களில், உயிரியல் அற்புதங்களை குருட்டுத்தனமான இயற்கைச் சம்பவங்கள் உண்டாக்க முடியுமா அல்லது உண்டாக்கியதா என்பதைப் பற்றி சந்தேகப்படுவதற்கு காரணம் இருக்கிறது என்பதாக மாணவர்களிடம் சொல்லவேகூடாது என்ற கட்டாய நிலை உயிரியல் பேராசிரியர்களுக்கு இருக்கிறது” என்று ஜான்சன் சுட்டிக்காட்டுகிறார்.
பொறியாளராகவும் விஞ்ஞானியாகவும் உள்ள மர்ஃபி ஓடீன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “உண்மையான அத்தாட்சிகளுக்கு முன்பாக நிலைத்து நிற்க முடியாத ஒரு கோட்பாட்டை தூக்கியெறிவதற்குப் பதிலாக, ‘பரிணாமம் உண்மையாக நடந்திருக்க வேண்டும்’ என்ற குருட்டு விசுவாசத்தின் அறிக்கையே ‘பரிணாம விஞ்ஞானத்தின்’ மனச்சாய்வாக ஆகிவிட்டது.” பரிணாம கோட்பாட்டுக்குச் சாதகமான அத்தாட்சி இல்லை என்பதும், அதற்குப் பாதகமான அத்தாட்சியே இருக்கிறது என்பதும் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது அல்லது மழுப்பப்படுகிறது.
ஏன்? மைக்கேல் பீஹீ என்ற மூலக்கூறு உயிரியல் அறிஞர் டார்வினது விளங்கா கோட்பாடு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “விஞ்ஞானப் புள்ளிகள், மதிப்புக்குரிய விஞ்ஞானிகள் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள், இயற்கைக்கு அப்பால் ஒன்று இருக்கிறது என்பதை நம்ப விரும்புவது இல்லை. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒருவர் இயற்கையை கட்டுப்படுத்துவதையும் அவர்கள் விரும்புவதில்லை.” ஆனால், உண்மையான அறிவியல் தான் விரும்பும் கருத்துகளை மேம்படுத்துவதற்கென, பாதகமான அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை. அதைப்போலவே எல்லா விஞ்ஞானிகளும் பரிணாமத்தை நம்புவதுமில்லை.
இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற கார்லோ ரூபியா என்ற விஞ்ஞானியை பிரேஸில் பத்திரிகையான வேஸா பேட்டி கண்டபோது இவ்வாறு கேட்டது: “நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?” அவர் ஒரு தனிப்பட்ட கடவுளை ஏற்றுக்கொள்ளாதபோதிலும், பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “இயற்கையை எந்தளவிற்கு உன்னிப்பாக கவனிக்கிறீர்களோ அந்தளவிற்கு எல்லாவற்றிலும் விவரிக்கமுடியாத ஒழுங்கமைப்பு இருக்கிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியவரும். விவரிக்க முடியாத புத்திக்கூர்மை இயற்கையில் இருப்பதால், வெறுமனே இயற்கை நிகழ்ச்சிகளை கவனித்ததில் இருந்தே ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் என்ற முடிவிற்கு நான் வருகிறேன்.”
அவர் இவ்விதம் கவனித்தார் என்பதை வாசிக்கும்போது அப்போஸ்தலன் பவுல் கடவுளைப் பற்றி குறிப்பிட்டது நம் நினைவிற்கு வருகிறது: “ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்—அதாவது என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்—உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன.”—ரோமர் 1:20, பொது மொழிபெயர்ப்பு.