நோயாளியின் மதிப்பைக் காத்தல்
சாலி தன் கணவரை நரம்பியல் மருத்துவரிடம் கூட்டிச்சென்றதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தென் ஆப்பிரிக்காவின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அந்த மருத்துவர் ஆல்ஃபியிடம் அத்தேர்தல் முடிவுகளைப் பற்றி விசாரித்தபோது அவர் திருதிருவென்று விழித்தார், பதிலொன்றும் சொல்லவில்லை. பிறகு, மூளையை ஸ்கேன் செய்து பார்த்தபின்பு, அந்த மருத்துவர் தன் வியப்பை சாதுரியமின்றி இவ்வாறு கொட்டிவிட்டார்: “இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எத்தனை என்பதுகூட இவருக்குத் தெரியாமல் போகலாம். இவரது மூளை போய்விட்டது!” அவர் பின்பு சாலியிடம் ஆலோசனை கூறினதாவது: “பணசம்பந்தப்பட்ட விவகாரங்களை செட்டில் செய்துவிடப் பார். சொல்லமுடியாது, இந்த ஆள் உன் மேலேயே சீறிப் பாயலாம்.”
“என் கணவரையா அப்படி சொல்கிறீர்கள்! இல்லையில்லை, அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார்!” என்று சாலி மறுப்பு தெரிவித்தார். காலப்போக்கில் சாலி சொன்னதே சரி என்பது உறுதியானது. அல்ஸைமர் நோய் (AD) வந்த நோயாளிகளில் சிலர் அவ்வாறு சீறிப் பாய்ந்துள்ள போதிலும் ஆல்ஃபி அவ்வாறு நடந்துகொள்ளவே இல்லை. (பெரும்பாலும் ஏமாற்ற உணர்வினால் அவ்வாறு நடந்துகொள்ள நேரிடலாம். சில சமயங்களில் ஏடி நோயால் பாதிக்கப்பட்டவரை நல்லவிதமாக நடத்துவதால் அவ்வாறு நடப்பதைக் குறைக்கலாம்.) ஆல்ஃபிக்கு இன்ன நோய்தான் என்று திட்டமாக அந்த மருத்துவரால் சொல்ல முடிந்தபோதிலும், அந்த நோயாளியின் மதிப்பைக் காக்கவேண்டியதன் அவசியத்தை அவர் சரியாக உணரவில்லை. இல்லாவிடில், ஆல்ஃபியின் நிலையைப் பற்றி சாலியிடம் தனியாக தயவுடன் அவர் பேசியிருப்பார்.
“எந்த வகையான டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, நோயாளிகளின் மதிப்பையும் மரியாதையையும் சுய கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டியது மிக மிக அவசியம்” என எனக்கு கனவு காணும் வயது கடந்துவிடுகையில் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. நோயாளியின் மதிப்பைக் காக்க ஒரு முக்கியமான வழி எதுவென்று லண்டனின் அல்ஸைமர் நோய் சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட பேச்சுத் தொடர்பு (ஆங்கிலம்) என்ற ஆலோசனை ஏடு பின்வருமாறு விளக்குகிறது: “மற்றவர்களுக்கு முன்னால், அவர்கள் என்னவோ அங்கு இல்லாததுபோல் பாவித்து அவர்களைப் பற்றி [ஏடி நோயாளிகளைப் பற்றி] ஒருபோதும் பேசாதீர்கள். அவர்களுக்கு நீங்கள் பேசுவது முழுவதும் புரியாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவர்களை நீங்கள் ஒதுக்கிவிட்டதாகவும், அதனால் மரியாதை குறைந்து விட்டதாகவும் அவர்கள் உணருவர்.”
தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது சில ஏடி நோயாளிகளுக்கு நிச்சயமாகவே தெரியும் என்பதே உண்மை. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் ஒரு நோயாளி தன் மனைவியுடன் அல்ஸைமர் நோய் சங்கக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். பின்னால் அவர் இவ்வாறு குறிப்பு தெரிவித்தார்: “அவர்கள் பராமரிப்பாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லித் தருகிறார்கள். நான் ஒருத்தன் அங்கு இருந்தும் யாருமே நோயாளியைப் பற்றி பேசவில்லை என்ற இந்த உண்மையை என்னால் கிரகிக்கவே முடியவில்லை. . . . அது அவ்வளவு ஏமாற்றமாய் இருந்தது. ஏனென்றால் எனக்கு அல்ஸைமர் நோய். நான் சொல்வதெல்லாம் சம்மந்தா சம்மந்தமில்லாதது. ஆகவே யாருமே நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.”
ஆக்கபூர்வமாய் இருங்கள்
நோயாளிகளின் மதிப்பைக் காக்க உதவுவதற்கு ஆக்கபூர்வமான அநேக வழிகள் உள்ளன. முன்பெல்லாம் அவர்களால் எளிதாக செய்ய முடிந்த சில அன்றாட வேலைகளுக்கெல்லாம் இப்பொழுது யாருடைய உதவியாவது தேவைப்படலாம். உதாரணமாக, முன்பெல்லாம் அவர்கள் கடிதத்தொடர்பு கொள்வதில் வல்லவர்களாக இருந்திருக்கலாம்; அப்படி இருந்திருந்தால், இப்பொழுது நீங்கள் அவருடன் சேர்ந்து உட்கார்ந்து அந்தந்த நண்பர்களுக்கு அவர் பதில் கடிதம் எழுத உதவ முடியும். அல்ஸைமர் நோய்—உங்களுக்குப் பிரியமானவர்களையும் உங்களையும் பராமரித்துக்கொள்ளுதல் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் ஷாரன் ஃபிஷ் என்ற பெண்மணி அல்ஸைமர் நோயாளிகளுக்கு உதவும் வகையில் நடைமுறையான வழிமுறைகளைக் காட்டுகிறார்: “சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிவைப்பது, அவற்றைத் துடைப்பது, வீடு கூட்டுவது, துவைத்த துணிகளை மடிப்பது போன்ற அர்த்தமுள்ளவையும் பிரயோஜனமுள்ளவையுமான எளிய வேலைகளை ஒன்றுசேர்ந்து செய்ய முயலுங்கள்.” பிறகு அவர் விவரிப்பதாவது: “அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரால், வீடு முழுவதையும் கூட்ட முடியாமலோ, முழு குடும்பத்திற்கும் சமைக்க முடியாமலோ போகலாம். ஆனால் படிப்படியாகவே இவ்வாறு செய்ய முடியாமல் போகும். இன்னும் அவருக்கு இருக்கும் திறமையை எந்தளவுக்கு உங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியுமோ, அந்தளவுக்கு பயன்படுத்தி அந்தத் திறமையைக் காத்துக்கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் செய்யும்போது, உங்களுக்குப் பிரியமானவரின் சுயகௌரவத்தைக் காப்பாற்றவும் நீங்கள் உதவுகிறீர்கள்.”
ஏடி நோயாளியான ஒருவர் தான் செய்யும் வேலைகளை சரிவர செய்யாமல் இருக்கலாம். எனவே இன்னொரு தரம் நீங்கள் வீட்டைக் கூட்ட வேண்டியதோ, தட்டுகளைக் கழுவ வேண்டியதோ வரலாம். இருந்தபோதிலும், நோயாளி ஒரு பயனுள்ள நபர் என்று தன்னைப் பற்றி உணர அனுமதிப்பதன் மூலம், அவருடைய வாழ்க்கையில் திருப்தியை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். ஒரு வேலையை அவர் சரியாக செய்யாவிட்டாலும்கூட அவரைப் பாராட்டுங்கள். தன்னால் எவ்வளவு நன்றாக செய்ய முடியுமோ அவ்வளவு நன்றாக அவர் செய்திருக்கிறார் என்பதை மறவாதீர்கள். ஏடி நோயாளிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவும் போற்றுதலும் தேவை. அதுவும் அவர்கள் வெவ்வேறு வேலைகளை படிப்படியாக சரிவர செய்யாமல் போகும் நிலை ஏற்படும்போது இன்னும் அதிக ஆதரவும் போற்றுதலும் தேவை. “திடீரென்று, எதிர்பார்க்காத சமயத்தில் தாங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படலாம்” என 84 வயது ஏடி நோயாளியான கணவரையுடைய கதி சொல்கிறார். “நோயாளியை பராமரிப்பவர்கள், ‘நீங்க நல்லாதான் செஞ்சீங்க’ என்று கனிவுடன் அவரை தட்டிக்கொடுத்து ஆதரவு அளிப்பதன் மூலம் உடனுக்குடன் தேற்றலாம்.” அல்ஸைமர் நோயாளிகளின் தோல்வியுறா நடவடிக்கைகள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “‘நீங்கள் நன்றாக செய்திருக்கிறீர்கள்’ என்று நாம் செய்த ஒரு வேலையைப் பற்றி எவராவது நம்மிடம் சொல்வதைக் கேட்கவே நாம் அனைவரும் விரும்புகிறோம்; டிமென்ஷியா நோயாளிகளுக்கு இந்தத் தேவை இன்னும் அதிகமாய் இருக்கும்.”
தர்மசங்கடமாய் நடந்துகொள்ளும்போது என்ன செய்வது
தங்களுக்குப் பிரியமானவர்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்போது, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பராமரிப்பவர்களுக்குத் தெரிய வேண்டும். பலருக்கு முன்பு இருக்கையில், நோயாளி கழிவுகளை அடக்க முடியாமல் தவிக்க நேரிடும் பயமே பயங்களிலெல்லாம் மிக மோசமானதாகும். “இப்படிப்பட்ட செயல்கள் எப்பொழுதும் நேரிடுவதில்லை. பொதுவாக இவற்றைத் தடுத்துவிடவோ குறைத்துவிடவோ முடியும்” என அல்ஸைமர் நோயாளியின் நோயும் பிற குழப்பமான நிலையும் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் டாக்டர் ஜெரி பென்னட் விவரிக்கிறார். அவர் மேலும் சொல்வதாவது: “எது முக்கியம் என்றும் எது முக்கியம் அல்ல என்றும்கூட நிதானித்துப் பார்க்க வேண்டியது அவசியம். ஏனென்றால், அந்தச் செயலோ, சுற்றியிருப்பவர்களோ முக்கியமல்ல; நோயாளியின் மதிப்பைக் காப்பதுதான் முக்கியம்.”
இப்படிப்பட்ட தர்மசங்கடமான நிகழ்ச்சி நடந்தால், நோயாளியை திட்டிவிடாதீர்கள். அதற்கு மாறாக, பின்வரும் ஆலோசனையை பொருத்த முயலுங்கள். அதாவது: “அமைதியாய் இருங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். நோயாளி வேண்டுமென்றே எரிச்சல் உண்டாக்குவதில்லை என்பதை மறவாதீர்கள். மேலும், நீங்கள் எரிச்சலடையாமலும் பொறுமையிழக்காமலும் இருந்து, கண்ணியத்துடனும் உறுதியுடனும் நடந்துகொண்டால் அவர்கள் இன்னும் அதிகமாய் உங்களுடன் ஒத்துழைக்கலாம். இந்தப் பிரச்சினை உங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவைக் கெடுத்துவிடாதபடி உங்களால் ஆன எல்லாவற்றையும் செய்யுங்கள்.”—லண்டனின் அல்ஸைமர் நோய் சங்கம் பிரசுரித்த கழிவுகளை அடக்க முடியாமை (ஆங்கிலம்) என்ற ஆலோசனை ஏடு.
அவர்களுக்கு திருத்தம் தேவையா?
ஏடி நோயாளிகள் சரியில்லாத விஷயங்களை அடிக்கடி சொல்வர். உதாரணமாக, வெகு நாட்களுக்கு முன்பாக இறந்துவிட்ட உறவினர் எவராவது வருவதற்குத் தாங்கள் காத்திருப்பதாக அவர்கள் சொல்லலாம். அல்லது, தங்கள் மனதளவில் உள்ளவற்றை உண்மையில் காண்பது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம், ஏடி நோயாளியை திருத்த வேண்டுமா?
“ஒரு வார்த்தையை தவறாக உச்சரிக்கும்போதோ, இலக்கணப் பிழையுடன் பேசும்போதோ . . . ஒவ்வொரு முறையும் தங்கள் பிள்ளைகளைத் திருத்திக்கொண்டே இருக்கும் பெற்றோர்களும் உள்ளனர். ஆனால், அவ்வாறு செய்வதனால் என்ன விளைவடைகிறது என்றால், பிள்ளைக்கு மனக்கசப்பு ஏற்பட்டு, தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது. தான் சொல்ல நினைப்பதற்கு இடைஞ்சலே ஏற்படுகிறது, அல்லது பாராட்டப்படுவதே இல்லை என்று அந்தப் பிள்ளை நினைக்கிறது. அதைப் போலவே எப்பொழுது பார்த்தாலும் திருத்தப்படும் ஏடி நோயாளியும் நினைத்துவிடலாம்” என அல்ஸைமர் நோய்—உயிரோடு மரிப்பதை சமாளித்தல் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் ராபர்ட் டி. வுட்ஸ் விவரிக்கிறார். பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி பைபிள், “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்” என்று ஆலோசனை கூறுவது அக்கறைக்குரியது. (கொலோசெயர் 3:21) எப்பொழுது பார்த்தாலும் திருத்தப்படுவதால் பிள்ளைகள் திடனற்றுப்போனால், பெரியவர்கள் திடனற்றுப்போவது எவ்வளவு நிச்சயம்! “அந்த நோயாளி பெரியவர் என்பதையும் அவருக்கு சுதந்திரம் என்றால் என்ன, சாதிப்பது என்றால் என்ன என்பதெல்லாம் தெரியும் என்பதையும் மறவாதீர்கள்” என தென் ஆப்பிரிக்காவின் ஏஆர்டிஏ செய்திமடல் (ஆங்கிலம்) எச்சரிக்கிறது. தொடர்ந்து திருத்திக் கொண்டே இருப்பது, ஏடி நோயாளியை திடனற்றுப்போக மட்டும் செய்வதில்லை; அவருக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்தலாம்; வன்முறையாளராய் மாற்றிவிடவும் செய்யலாம்.
ஏடி நோயாளிகளுக்கு எவ்வளவுதான் இயலும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அவரைப் பராமரிப்பவர்களுக்கு உதவுவதற்கும், இயேசு கிறிஸ்து குறிப்பிட்டதில் ஒரு நல்ல பாடம் இருக்கிறது. அவர் தமது சீஷர்கள் தவறான கருத்தைக் கொண்டிருந்தபோது உடனுக்குடன் திருத்தவில்லை. சில சமயம் விஷயத்தை அவர்களுக்குச் சொல்லாமல் தக்கவைத்துக் கொண்டார். ஏனெனில் அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வரவில்லை. (யோவான் 16:12, 13) நல்ல உடல் ஆரோக்கியமுள்ள மனிதரின் மட்டுப்பாடுகளுக்கே இயேசு அந்தளவுக்கு கரிசனை காட்டினார் என்றால், கடும் வியாதியில் தவிக்கும் பெரியவரின் தீங்கற்ற புதுப்புது கருத்துகளுக்கு ஏற்றாற்போல் வளைந்துகொடுக்க மனமுள்ளவராய் நீங்கள் இருக்க வேண்டியது எவ்வளவு அதிக அவசியம்! ஏடி நோயால் அவஸ்தைப்படுபவருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய உண்மையை உணரவைக்க முயலுவது எப்படி இருக்கிறதென்றால், அவர் சக்திக்கு மிஞ்சி அவரிடம் எதிர்பார்ப்பது அல்லது அவரை வற்புறுத்துவது போல் இருக்கிறது. அவரிடம் தர்க்கம் செய்துகொண்டிருப்பதற்கு மாறாக, பேசாமல் இருந்துவிடுவது அல்லது சாதுரியத்துடன் அந்த விஷயத்தை மாற்றி வேறொரு விஷயத்தைப் பேச ஆரம்பித்துவிடுவது நல்லதல்லவா?—பிலிப்பியர் 4:5.
சில சமயங்களில், அவஸ்தைப்படுபவரின் பிரமைகள் எவையும் நிஜமானவை அல்ல என்று அவரிடம் படித்துப் படித்துச் சொல்வதற்குப் பதிலாக, அவற்றுக்கு தலையசைப்பது மிகவும் அன்பான செயலாய் இருக்கலாம். உதாரணமாக, ஏடி நோயால் அவஸ்தைப்படுபவரின் கண்களுக்கு ஒரு காட்டு மிருகமோ கற்பனைப் பகைவரோ வாசல் திரைக்குப் பின்னால் ஒளிந்திருப்பதாக “தெரிகையில்” அவருக்கு பயம் ஏற்படலாம். இதுவா அதுவா என அவரிடம் வாக்குவாதம் செய்வதற்கு இது நேரமல்ல. அவர் மனதுக்குத் “தெரிவது” எதுவோ, அதுவே அவருக்கு நிஜமானது, ஆகவே அவருடைய உண்மையான அச்சங்களைத் தணிக்க வேண்டும். திரையை விலக்கி, பின்புறம் சற்று எட்டிப் பார்த்துவிட்டு, நீங்கள் இப்படி சொல்ல வேண்டியிருக்கலாம், “இன்னொரு தடவை நீங்கள் அவனைப் ‘பார்த்தால்’ சொல்லுங்கள். நான் ஒரு கை பார்த்துக்கொள்கிறேன்” என்று தைரியப்படுத்தலாம். நோயாளியின் நோக்குநிலைக்கு இசைவாக நடப்பதன் மூலம், “அவரது மனதின் கற்பனையால் தோன்றும் பயங்கரமான, அச்சுறுத்தும் பொய்யான தோற்றங்களை . . . கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஓர் உணர்வை” நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். “இதனால், உங்களை நம்பி இருக்கலாம் என அவருக்குத் தெரிகிறது” என்று பெண் டாக்டர்களான ஆலிவர் மற்றும் பாக், அல்ஸைமர் நோயாளிகளை சமாளித்தல்: உணர்ச்சிப்பூர்வமாக பராமரிப்பவர் தப்பிப்பிழைப்பதற்கான வழிகாட்டி (ஆங்கிலம்) என்ற தங்களது புத்தகத்தில் விவரிக்கின்றனர்.
“நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்”
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எல்லா ஆலோசனைகளையும் கடைப்பிடிப்பது சிரமமாய் இருக்கலாம். குறிப்பாக, அதிக வேலைப்பளு உள்ளவர்களுக்கும் குடும்ப பொறுப்புகள் உள்ள மற்றவர்களுக்கும் அவ்வாறு இருக்கலாம். பராமரிப்பாளர் எப்பொழுதாவது பொறுமை இழந்துவிடும் சமயம் நேரிடலாம். அப்போது சுய கட்டுப்பாட்டை இழந்து, ஏடி நோயாளியை மரியாதையுடன் நடத்த தவறிவிடலாம். இவ்வாறு நடக்கையில், குற்ற உணர்வு மேலிட அனுமதியாமல் இருப்பது முக்கியம். இந்த நோயின் இயல்பு காரணமாக, ஒருவேளை நோயாளி அந்தச் சம்பவத்தை வெகுசீக்கிரத்தில் மறந்துவிடலாம்.
மேலும், பைபிள் எழுத்தாளர் யாக்கோபு குறிப்பிடுவதாவது: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷ[ன்].” (யாக்கோபு 3:2) நோயாளியை பராமரிக்கும் மனிதர்கள் எவருமே பரிபூரணராக இல்லை; அதனால் ஓர் ஏடி நோயாளியை பராமரிக்கும் சிரமமான வேலையில் தவறுகள் செய்துவிடுவதை எதிர்பார்க்கலாம். அடுத்த கட்டுரையில், ஏடி நோயாளியை பராமரிக்கும் பொறுப்பை சமாளிப்பதற்கும், ஏன் மகிழ்ந்து அனுபவிப்பதற்கும்கூட, பராமரிப்பாளர்களுக்கு உதவியிருக்கும் மற்ற விஷயங்களைக் கலந்தாராய்வோம்.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
தொடர்ச்சியான ஆதரவும் போற்றுதலும் நோயாளிகளை வாழவைக்கிறது
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
‘சொல்லப்படும் விஷயங்கள் நோயாளிக்குப் புரியலாம். ஆகவே அவருடைய நிலையைப் பற்றியோ, நோயைப் பற்றியோ அவரது முன்னிலையில் எதுவும் பேசாதீர்கள்’
[பக்கம் 6-ன் பெட்டி]
நோயாளியிடம் சொல்ல வேண்டுமா?
பராமரிப்பாளர்களில் அநேகர், தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அல்ஸைமர் நோய் (ஏடி) இருப்பதை அவருக்குத் தெரிவிக்க வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். அப்படிச் சொல்லிவிட வேண்டும் என நீங்கள் தீர்மானித்தால், எப்படி சொல்ல வேண்டும், எப்பொழுது சொல்ல வேண்டும்? தென் ஆப்பிரிக்க அல்ஸைமர் நோய் மற்றும் சம்பந்தப்பட்ட உடல்நிலை கோளாறுகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திமடலில் பின்வரும் சுவாரஸ்யமான குறிப்பு அடங்கியிருந்தது:
“என் கணவருக்கு இப்போது 81 வயது. சுமார் ஏழு வருடமாக அல்ஸைமர் நோய் அவரை ஆட்டிப்படைத்து வருகிறது. இருந்தாலும், இந்நோய் மெதுமெதுவாகத்தான் அதிகரித்து வருகிறது. . . . அவருக்கு அல்ஸைமர் நோய் இருந்துவந்ததாக அவரிடம் சொல்வது நல்லதல்ல என்று வெகுநாட்களாக நினைத்துவந்தேன். அதனால், ‘என்ன செய்வது, வயது 80 ஆகிவிட்டதென்றால் இதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டியதுதான்!’ என்று அவரே அடிக்கடி சொல்லும் பேச்சுக்கு நானும் தலையசைத்துக்கொண்டே வந்தேன்.”
நோயாளிக்கு இருக்கும் நோயைப் பற்றி தயவுடனும் எளிய முறையிலும் அவரிடம் தெரிவிப்பதை சிபாரிசு செய்த ஒரு புத்தகத்தை அந்த வாசகர் குறிப்பிட்டார். ஆனால் இந்த ஆலோசனைப்படி தன் கணவரிடம் தெரிவித்துவிட்டால் அவர் மனம் உடைந்து போவாரோ என அஞ்சி உண்மையை மறைத்துவைத்தார்.
அவர் இவ்வாறு தொடர்ந்து கூறுகிறார்: “நண்பர்கள் தன்னைச் சூழ்ந்திருக்கையில், முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் நிலை வந்துவிடுமோ என்ற தன் பயத்தை ஒருநாள் என் கணவர் என்னிடம் வெளிப்படுத்தினார். இதுவே சரியான சமயம்! ஆகவே, (வியர்த்து விறுவிறுத்துப் போய்) அவருக்குப் பக்கத்தில் முழங்கால்படியிட்டு, அவருக்கு அல்ஸைமர் நோய் இருப்பதாக சொல்லிவிட்டேன். அப்படியென்றால் என்ன என்பதெல்லாம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அது ஒரு நோய் என்றும், அதனால்தான் அவருக்கு முன்பு எளிதாய் இருந்த [வேலைகள்] எல்லாம் இப்போது சிரமம் ஆகிவிட்டன என்றும் அதுவே அவரது மறதிக்கும் காரணம் என்றும் நான் விளக்கினேன். அல்ஸைமர் நோயாளிகள்: இனிமேலும் அதை உதறிவிடக் கூடாது (ஆங்கிலம்) என்ற உங்கள் புரோஷரிலிருந்து வெறும் இரண்டு வாக்கியங்களைக் காட்டினேன். அதாவது, ‘அல்ஸைமர் நோய் என்பது, ஞாபகத்தை படிப்படியாக இழக்கச் செய்யும் மூளையை பாதிக்கும் நோய். . . . அது வயோதிபத்தின் காரணமாக ஏற்படும் ஒரு விளைவல்ல; மாறாக, இது ஒரு நோயே.’ அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் இவரது நோயைப் பற்றி தெரியும், ஆகவே புரிந்துகொள்வார்கள் என்றும் அவரிடம் உறுதி கூறினேன். இதைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்துவிட்டு, ஆச்சரியத்துடன் இவ்வாறு தெரிவித்தார்: ‘அப்படியா விஷயம்! இப்பதான் புரியுது!’ இந்த அறிவைப் பெற்றவுடன், அவர் விட்ட நிம்மதிப் பெருமூச்சைக் கண்ட நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்!
“ஆகவே, இப்பொழுதெல்லாம், எதையாவது நினைத்து அவர் கவலைப்படுவதாக தோன்றினால், அவரை என் கைகளால் அணைத்து, ‘இதற்குக் காரணம் நீங்க இல்லங்க. இந்தப் பாழாய்ப்போன வியாதிதான் உங்களைப் பிடித்து ஆட்டுகிறது’ என்று சொன்னவுடன், அவர் உடனே அமைதியாகிவிடுவார்.”
ஏடி நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்பதையும் நாம் புரிந்திருக்க வேண்டும். மேலும், பராமரிப்பாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடைப்பட்ட உறவுகளும் மாறுபடுகின்றன. ஆகவே ஏடி நோய் இருப்பதாக உங்களுக்குப் பிரியமானவரிடம் சொல்வதும் சொல்லாதிருப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்தது.
[பக்கம் 8-ன் பெட்டி]
அது உண்மையிலேயே அல்ஸைமர் நோய்தானா?
வயதானவர் ஒருவர் பெருங்குழப்பத்தில் இருக்கையில், இவருக்கு அல்ஸைமர் நோய் (AD) இருப்பதால்தான் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்று அவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள். யாரையாவது இழந்துவிட்ட துக்கம், திடீரென்று புதுவீட்டுக்கு குடிபோதல் அல்லது ஏதாவது இன்ஃபெக்ஷன் காரணமாக வயதான ஒருவர் குழப்பத்தில் இருக்கலாம். பலருடைய விஷயத்தில் வயதானவருடைய பெருங்குழப்ப நிலையை சரிசெய்துவிடலாம்.
ஏடி நோயாளிகளுக்கும்கூட, திடீரென கழிவுகளை அடக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஏடி டிமென்ஷியாவால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏடி நோய் மெதுமெதுவாகவே வளருகிறது. அல்ஸைமர் நோயாளிகளின் நோயும் பிற குழப்பமான நிலைமைகளும் என்ற புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது: “திடீர் மாற்றம், பொதுவாக (நெஞ்சு அல்லது சிறுநீர் இன்ஃபெக்ஷன் போன்ற) தீவிர பாதிப்பால் ஏற்பட்டிருக்க வேண்டும். வெகு சில [ஏடி] நோயாளிகளுக்கே வேகமாக ஏடி நோய் வளருகிறது. . . . ஆனால் பலருடைய விஷயத்தில் படிப்படியாகவே வளருகிறது. குறிப்பாக அந்த நபர் நன்றாக பராமரிக்கப்பட்டும் பிற மருத்துவ பிரச்சினைகள் அனைத்தும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், மிக மெதுவாகவே வளருகிறது.” ஏடி நோயாளி ஒருவருக்கு கழிவுகளை அடக்க முடியாத நிலை இருக்குமேயாகில், அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். அப்படிப்பட்ட பிரச்சினைகள் குணமாக்கப்படலாம். “எப்பொழுதுமே எடுக்கப்பட வேண்டிய முதல் நடவடிக்கை, [மருத்துவரை] அணுக வேண்டியதுதான்” என லண்டனின் அல்ஸைமர் நோய் சங்கம் பிரசுரித்த கழிவுகளை அடக்க முடியாமை என்ற ஆலோசனை ஏடு விவரிக்கிறது.
[பக்கம் 7-ன் படங்கள்]
அல்ஸைமர் நோயாளிகளுக்கு அன்றாட வேலைகளில் உதவுவது அவர்களது மதிப்பைக் காக்க உதவுகிறது