உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 9/22 பக். 3-4
  • அல்ஸைமர் நோயை சமாளித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அல்ஸைமர் நோயை சமாளித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அல்ஸைமர் நோய் என்பது என்ன?
  • நோயாளியின் மதிப்பைக் காத்தல்
    விழித்தெழு!—1998
  • பராமரிப்பாளர்கள் என்ன செய்யலாம்?
    விழித்தெழு!—1998
  • “இந்த விழித்தெழு! எங்களுக்கென்றே எழுதப்பட்டது”!
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 9/22 பக். 3-4

அல்ஸைமர் நோயை சமாளித்தல்

“தென் ஆப்பிரிக்க தங்கச் சுரங்கம் ஒன்றில் என் கணவர் ஆல்ஃபி ஃபோர்மேனாக வேலை பார்த்துவந்தார்” என சாலி விவரிக்கிறார். “வேலையிலிருந்து தான் ஓய்வு பெற விரும்புவதாக திடீரென்று ஒருநாள் அவர் என்னிடம் சொன்னபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அப்போது அவருக்கு வயது 56 தான். அதுவும் அவர் சாமர்த்தியமானவரும், கடின உழைப்பாளியும்கூட. பிறகு ஒருநாள், அவருடன் வேலைபார்க்கும் ஆட்களிடமிருந்து நான் தெரிந்துகொண்டது என்னவென்றால், வேலையில் தீர்மானம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் ஆல்ஃபி வழக்கத்துக்கு மாறான தவறுகளைச் செய்திருந்தாராம். அவர்களோ பெரும்பாலும் அவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டார்களாம்.

“அவர் ஓய்வு பெற்ற பிறகு, ஓர் ஹோட்டலை வாங்கினோம். ஆல்ஃபிக்கு எல்லா வேலையும் தெரியும் என்பதால் அந்த இடத்தைப் பழுதுபார்க்கும் வேலைகளை அவரே செய்துவிடுவார் என்று நினைத்தோம். என்னவென்று பார்த்தால், எடுத்ததற்கெல்லாம் வேலைக்கு ஆட்களை வெளியிலிருந்து வரவழைத்தார்.

“அதே வருடத்தில், டர்பன் கடற்கரையில் விடுமுறையை கழிப்பதற்காக எங்களுடைய மூன்று வயது பேத்தியை கூட்டிச் சென்றிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்டுக்கு எதிர்ப்புறம் இருந்த துள்ளும் மேடையில் (trampoline) விளையாட அவளுக்கு கொள்ளை ஆசை. ஒருநாள் மதியம் சுமார் 4:30 மணி இருக்கும், அப்போது ஆல்ஃபி அவளை அந்தத் துள்ளும் மேடையில் துள்ளி விளையாட கூட்டிச் சென்றார். அரை மணிநேரத்தில் திரும்பி வந்துவிடுவதாக சொல்லிவிட்டுச் சென்றார். மாலை 7 மணி இருக்கும், அப்பொழுதும் அவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் போலீஸுக்கு போன் செய்தேன். ஆனால், ஒருவர் காணாமற்போய் 24 மணிநேரம் வரை வீடு திரும்பாதபோதுதான் அவர்கள் தேட ஆரம்பிப்பார்களாம். அன்று இரவு எனக்குப் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. ஏனென்றால், அவர்களை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அடுத்தநாள் மதியம், யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாரென்று பார்த்தால், அங்கு கையில் பேத்தியுடன் ஆல்ஃபி நின்றிருந்தார்.

“‘எங்க போயிருந்தீங்க?’ என்று நான் கேட்டேன்.

“‘எம்மேல கோபப்படாதே, எங்க போனேன்னு எனக்கே தெரியல’ என்று அவர் சொன்னார்.

“‘பாட்டிம்மா, நாங்க காணாப்போயிட்டோம்’ என்று கொஞ்சினாள் எங்கள் பேத்தி.

“எப்படியிருக்கிறது பாருங்கள், ரோட்டைக் கடந்தால் எங்கள் அப்பார்ட்மென்ட்; ஆனால் அவர்களோ வழி தெரியாமல் காணாமற் போய்விட்டனர்! அவர்கள் அந்த இரவு எங்குத் தங்கியிருந்தார்கள் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. எப்படியோ, என் நண்பர் ஒருவர் அவர்களைக் கண்டுபிடித்து சரியான அப்பார்ட்மென்ட்டைக் காட்டிக் கொடுத்திருக்கிறார்.”

இவ்வாறு நடந்தபிறகு, கணவர் ஆல்ஃபியை ஒரு நரம்பியல் மருத்துவரிடம் கூட்டிச்சென்றார் சாலி. இவர் டிமென்ஷியாவால் (ஞாபகசக்தி குறைவு) சிரமப்படுவதாக மருத்துவர் உறுதியாக சொல்லிவிட்டார். கடைசியில் பார்த்தால், ஆல்ஃபிக்கு அல்ஸைமர் நோய் [ஏடி (AD)] இருந்திருக்கிறது. அதற்கு சரியான சிகிச்சையோ நிவாரணமோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.a “தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில், இதய நோய், புற்றுநோய், ஸ்ட்ரோக் ஆகிய பெரிய நோய்களின் அணிவரிசையில் நான்காவது இடத்தை தக்கவைத்துக் கொண்டு அநேகரைக் கொல்கிறது இந்த ஏடி நோய்” என நியூ சயன்டிஸ்ட் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை கூறுகிறது. இது, “வயோதிபத்தில் மிகப் பரவலாக ஏற்படும் நாள்பட்ட நோய்” என அழைக்கப்படுகிறது. ஆனால் ஏடி நோய், ஆல்ஃபியைப் பாதித்ததுபோல், சற்று முன்னதாகவேயும்கூட ஒருவரை பாதிக்கலாம்.

பணக்கார நாடுகளிலுள்ள அநேக மக்களின் வாழ்நாள் நீடித்திருப்பதால், டிமென்ஷியாவால் இத்தனை பேர் அவதியுறுவர் என்று முன்னுரைப்பது அச்சுறுத்துகிறது. ஓர் ஆய்வின்படி, 1980-க்கும் 2000-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில், பிரிட்டனில் 14 சதவீத அதிகரிப்பும், அமெரிக்காவில் 33 சதவீத அதிகரிப்பும், கனடாவில் 64 சதவீத அதிகரிப்பும் இருக்கலாம். 1990-ல் ஆஸ்திரேலிய டிவி டாக்குமென்டரி இவ்வாறு குறிப்பிட்டது: “ஆஸ்திரேலியாவில் இப்போது அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,00,000 பேர் என கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்நூற்றாண்டின் முடிவுக்குள், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,00,000-க்கு அதிகரிக்கலாம்.” வருஷம் 2000-க்குள் உலகளவில் 10 கோடி பேர் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்படுவர் என கணக்கிடப்படுகிறது.

அல்ஸைமர் நோய் என்பது என்ன?

இந்நோய்க்கான காரணம் என்னவாய் இருக்கும் என்பதை அறிந்துகொள்ள எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளபோதிலும், ஏடி ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் எது என்பது இன்னும் அறியப்படவில்லை. என்றபோதிலும், ஏடி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை செல்கள் படிப்படியாக அழிந்து, மூளையின் சில பகுதிகள் நிஜமாகவே சுருங்கிவிடுவதாக அறியப்பட்டிருக்கிறது. ஞாபக சக்தியையும் சிந்திக்கும் திறனையும் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்களே இந்நோயால் மிக மோசமாக தாக்கப்படுகின்றன. இந்நோயின் ஆரம்பக்கட்டத்தில், மூளை அமைப்பில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் அந்த நோயாளியின் குணங்கள் பெரிதும் மாறுபடுகின்றன. மூளையின் மற்ற பகுதிகள் சற்று பிந்தி பாதிக்கப்படலாம். அவற்றுள் சில, பார்வையைக் கட்டுப்படுத்தும் பகுதி, தொடுதல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பகுதி, தசை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மோட்டார் கார்டெக்ஸ் பகுதி ஆகியவை. இவ்வாறு ஏற்படும் மாற்றங்கள், “ஒருவருக்கு கீழ்க்காணும் வேதனை தரும் நிலையை ஏற்படுத்துகிறது; அதாவது, அவரால் நடக்க முடியும், பேச முடியும், சாப்பிட முடியும், ஆனால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. இவரே ஏடியால் பாதிக்கப்பட்டவர்களின் தெளிவான உதாரணம்” என சயன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை விளக்குகிறது.

இந்நோய் ஒருவரை 5 முதல் 10 வருடத்திற்கு அலைக்கழிக்கிறது. சில சமயங்களில், 20-க்கும் மேற்பட்ட வருடத்திற்கும்கூட அல்லல்படுத்துகிறது. இந்நோய் வளர வளர, நோயாளிகளின் வேலை செய்யும் திறன் குறைந்துகொண்டே வருகிறது. முடிவில், தங்களுக்குப் பிரியமானவர்களைக்கூட அவர்களால் அடையாளம் காண முடியாமற்போகலாம். இந்நோயின் இறுதிக்கட்டத்தில், நோயாளிகள் பெரும்பாலும் படுத்த படுக்கையாகி விடுகின்றனர், அவர்களால் பேசவோ சாப்பிடவோகூட முடிவதில்லை. ஆனால், இப்படிப்பட்ட கடைசிக்கட்டத்தை எட்டுவதற்குள்ளாகவே இந்நோய்க்கு ஆளான அநேகர் இறந்துவிடுகின்றனர்.

ஏடி நோயின் ஆரம்பக்கட்டத்தில் உடல்ரீதியில் வேதனை எதுவும் தெரியாதபோதிலும், உணர்ச்சிப்பூர்வமாக அதிக வேதனை ஏற்படுகிறது. ஆகவே சிலர், இந்தத் தொல்லை படிப்படியாக மறைந்துவிடும் என்ற நினைப்பில், ஆரம்பக்கட்டத்தில் இந்நோயை சரியாகப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ளத் தவறிவிடுகின்றனர்.b என்றாலும், இந்நோயை சமாளிப்பது எப்படி என்றும், இதனால் வரும் உணர்ச்சிப்பூர்வ வேதனையை குறைப்பது எப்படி என்றும் அறிந்துகொள்வது, ஒருவருக்கு மிகுந்தளவில் நன்மை பயக்கும். “நோயாளியின் ஞாபக சக்தியை இந்நோய் இந்தளவுக்கு பாதிக்கும் என்பது ஏற்கெனவே எனக்குத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்!” என்று பர்ட் கூறினார். இவரது 63-வயது மனைவிக்கு ஏடி நோய். ஆம், ஏடி நோயைப் பற்றியும் அதைச் சமாளிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் புரிந்துகொள்வது குடும்பத்தினருக்கு மிகுந்த உதவியளிக்கும். இவற்றையும் மற்ற அம்சங்களையும் ஆய்வு செய்யும் இந்த விழித்தெழு! பத்திரிகையின் அடுத்த இரண்டு கட்டுரைகளை தயவுசெய்து வாசியுங்கள்.

[அடிக்குறிப்புகள்]

a ஏடி என்ற நோய், ஆல்லோயிஸ் அல்ஸைமர் என்ற ஜெர்மானிய மருத்துவரின் பெயரால் அப்பெயர் பெற்றது. 1906-ல், பயங்கரமான டிமென்ஷியாவால் அவதிப்பட்ட ஒரு நோயாளியின் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அந்த நோயை முதன்முதலாக கண்டறிந்து விளக்கினவர் அவரே. டிமென்ஷியா நோயாளிகளில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏடி தான் காரணம் என்றும், 65 வயதைத் தாண்டிய பிறகு பத்தில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் நம்பப்படுகிறது. மற்றொரு டிமென்ஷியா, மல்ட்டி-இன்ஃபார்க்ட் டிமென்ஷியா என்று அழைக்கப்படுகிறது. இது லேசான ஸ்ட்ரோக்கால் வருகிறது. இது மூளையைத் தாக்குகிறது.

b எச்சரிக்கை: ஒருவருக்கு ஏடி நோய் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். சுமார் 10 முதல் 20 சதவீதத்தினருக்கு டிமென்ஷியா ஏற்படுவதற்கு காரணமானவற்றை கண்டுபிடித்து குணப்படுத்த முடியும். ஏடியை டயக்னோஸ் செய்வதைப் பொறுத்தமட்டில், வயதான பெற்றோரை எப்படி பராமரிப்பது என்ற ஆங்கில புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது: “அல்ஸைமர் நோய் இருந்ததா இல்லையா என்பதை, இறந்த நோயாளியின் மூளையை பிரேத பரிசோதனையில் ஆய்வு செய்த பிறகுதான் திட்டமாய் சொல்ல முடியும். ஆனால் மருத்துவர்கள், ஒவ்வொரு நோய்க்கான பரிசோதனையையும் அவற்றுக்கான அறிகுறிகளின் அடிப்படையில் கவனித்து, இதுவாக இருக்க முடியாது, அல்லது அதுவாக இருக்க முடியாது என்று ஒவ்வொன்றாக கழித்துக் கட்டி, கடைசியில் அல்ஸைமர் நோயாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊர்ஜிதம் செய்கின்றனர்.”

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

வருஷம் 2000-க்குள் உலகளவில் 10 கோடி பேர் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்படுவர் என கணக்கிடப்படுகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்