உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 9/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பயங்கரமான கம்ப்யூட்டர் கேம்ஸ்
  • சீர்கெட்டுப்போன சமுத்திரங்கள்
  • போலி மருந்துகள்
  • ஐக்கிய மாகாணங்களில் துப்பாக்கி வெறி
  • உலகின் மிக நீண்ட தொங்கும் பாலம்
  • ஆபத்திலிருக்கும் தாவரங்கள்
  • ஆஸ்பத்திரியில் இன்ஃபெக்‍ஷன்
  • பறக்கையில் உயிர்காக்க சீட்-பெல்ட் அணியுங்கள்
  • மின்சார சிக்கனம்
  • சவக் கடலுக்கே சவ அடக்கம்
  • நீங்கள் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறீர்களா?
    விழித்தெழு!—1999
  • ஒப்பற்றது ஆனால், உயிர்களற்றது!
    விழித்தெழு!—2008
  • புதிய மருந்துகளுக்காக விந்தையான தேடுதல்
    விழித்தெழு!—1994
  • டென்மார்க் கிரேட் பெல்ட்டின் குறுக்கே
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 9/22 பக். 28-29

உலகை கவனித்தல்

பயங்கரமான கம்ப்யூட்டர் கேம்ஸ்

பிரேஸிலின் நீதித்துறை, “சர்ச்சைக்குரிய ஒரு கம்ப்யூட்டர் கேமின் விற்பனையைத் தடைசெய்திருக்கிறது; ஏனென்றால், அதில் விளையாடுபவர்கள் எவ்வளவு கார்களைத் திருடி, எவ்வளவு போலீஸ்காரர்களைக் கொல்லுகிறார்களோ அவ்வளவு அதிக பாயின்ட்டுகளைப் பெறுவார்கள்” என ராய்டர்ஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது. அந்த விளையாட்டு “ஆபத்தானது, ஏனென்றால் திருட்டும் கொலையும் சர்வசாதாரணமானது என காண்பிக்கிறது; அதில் விளையாடும் இளைஞர்களை வன்முறையில் ஈடுபட தூண்டலாம்.” அதுமட்டுமல்ல 1997-ல், “வயதான மற்றும் கர்ப்பிணி பெண்கள் உட்பட பாதசாரிகளைக் கொன்றால் அதிக பாயிண்ட்டை கொடுக்கும்” மற்றொரு கம்ப்யூட்டர் கேமையும் அந்த அமைச்சகம் தடைசெய்தது. ப்ரோகான் என்ற நுகர்வோர் உரிமை சங்கத்தின் பெண் சார்புப்பேச்சாளர் கூறினார்: “இந்த விதமான விளையாட்டுகள் வன்முறையைத் தூண்டிவிடுவதால் ஆபத்தையும் தீங்கையும் விளைவிக்கும்; மேலும் பிள்ளைகள் வன்முறையை சர்வசாதாரணமானது என நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.”

சீர்கெட்டுப்போன சமுத்திரங்கள்

“கண்மூடித்தனமாக மீன்பிடிப்பது, நஞ்சான ரசாயனங்கள், கதிரியக்க கழிவுகள் ஆகியவை சமுத்திரங்களை ஆபத்திற்கு உள்ளாக்குகின்றன; அதனால் இந்தப் பூமியில் உயிர் வாழ்வதற்கான அடிப்படையே சீர்கெட்டு வருகிறது” என நாசாயுஷ நாய ப்ரெஸெ என்ற செய்தித்தாள் கூறுகிறது. இந்த வரிசையில் முன்னணியில் இருப்பது கருங்கடல்தான் என கீலா நாக்ரிக்டன் என்ற செய்தித்தாள் கூறுகிறது. உலகம் முழுவதிலும் அழியும் நிலையிலிருக்கும் சூழலமைப்புகளில் அதுவும் ஒன்று. அதில் 90 சதவிகிதம் முற்றிலும் உயிரற்று போய்விட்டது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் விளைவால் உக்ரேன் கடற்கரையை மோதும் அலைகள், பச்சை கலந்த பிரௌன் நிறமாக மாறியிருக்கின்றன. கடந்த கோடை காலத்தின்போது, ஒடெஸ்ஸா நகரைச் சுற்றியுள்ள கடற்கரைகள் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு வாரத்திற்கு மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருந்தன. “கருங்கடல் மரண அடி வாங்கியிருக்கிறது. அது மரிக்கும்படி நாம் விட்டுவிட்டால் கற்பனை செய்துபார்க்க முடியாத விளைவுகளை அனுபவிப்போம்” என ருமேனிய ஜனாதிபதி எமில் காண்ஸ்டான்டீனிஸ்கூ கூறினார். ஆகவேதான், 1998-ஐ “சர்வதேச சமுத்திர ஆண்டு” என ஐக்கிய நாட்டு சங்கம் அறிவித்திருக்கிறது.

போலி மருந்துகள்

“இந்தப் பூமியில் விற்கப்படும் மருந்துகளில் சுமார் 8 சதவிகிதம் போலியானவையே” என லா ஃபிகாரோ மாகஸீன் கூறுகிறது. பிரேஸிலில் விற்கப்படும் மருந்துகளில் 30 சதவிகிதமும், மலைக்கவைக்கும் விதமாக நைஜீரியாவில் 60 சதவிகிதமும் போலி மருந்துகளே என உலக சுகாதார சங்கம் தெரிவிக்கிறது. போலி மருந்துகளின் தயாரிப்பு 30,000 கோடி டாலர் வியாபாரம் என்பதாக சொல்லப்படுகிறது. நிழலுலக தாதாக்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த வியாபாரத்தைத் தடைசெய்ய மருந்து கம்பெனிகளும் போலீஸும் சர்வதேச அமைப்புகளும் அயராது உழைத்தபோதிலும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவை இதுவரை காணமுடியவில்லை. போலி மருந்தை உட்கொள்வது, மருந்து சாப்பிட்டோம் என்ற ஆத்ம திருப்தி வேண்டுமானால் கொடுக்கலாம், ஆனால் சில சமயங்களில் உயிரையும் வாங்கிவிடும். “போலி மருந்து, நோயாளியின் ஆரோக்கியத்தோடு கண்ணாமூச்சி விளையாட்டுதான் விளையாடுகிறது” என லா ஃபிகாரோ மாகஸீன் கூறுகிறது.

ஐக்கிய மாகாணங்களில் துப்பாக்கி வெறி

“அமெரிக்காவிற்கும் [ஐக்கிய மாகாணங்கள்] மற்ற நாடுகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் மிகவும் தெளிவானது” என தி எகனாமிஸ்ட் கூறுகிறது. “1996-ல், கைத் துப்பாக்கிகளை உபயோகித்து நியூ ஜீலாந்தில் 2 பேரும், ஜப்பானில் 15 பேரும், பிரிட்டனில் 30 பேரும், கனடாவில் 106 பேரும், ஜெர்மனியில் 211 பேரும், ஐக்கிய மாகாணங்களில் 9,390 பேரும் கொல்லப்பட்டனர்.” ஒவ்வொரு வருடமும் ஐக்கிய மாகாணங்களில் நடக்கும் சுமார் 5 லட்சம் குற்றச்செயல்களிலும் ஏறக்குறைய 35,000 கொலைகளிலும் துப்பாக்கிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன; இதில் தற்கொலைகளும் விபத்துக்களும் அடங்கும். இருந்தாலும், ஐக்கிய மாகாணங்களில் துப்பாக்கிகள் வைத்திருப்போர், “என்ன ஆனாலும்சரி துப்பாக்கிகளை விடுவதாக இல்லை” என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. “மற்ற அநேக நாடுகள் செய்திருப்பதைப் போல, கண்டிப்பான கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு மாறாக அவர்கள் அதற்கு எதிராக செயல்படுகின்றனர்.” இப்போது 31 மாகாணங்கள், ஜனங்கள் கைத் துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்செல்ல அனுமதிக்கும் பர்மிட் வழங்குகின்றன.

உலகின் மிக நீண்ட தொங்கும் பாலம்

ஜப்பானிலுள்ள ஆகாஷி கைக்யோ பாலம், உலகிலேயே மிகவும் நீண்ட தொங்கும் பாலம் என்ற ரெக்கார்டை ஏற்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் மாதம் திறந்துவைக்கப்பட்ட அந்தப் பாலம் ஆவாஜி தீவையும் கோப் நகரத்தையும் இணைக்கிறது. “பத்து வருடம் தொடர்ந்த இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 30,800 கோடி ரூபாய் செலவுபிடித்தது. அதன் இரண்டு கோபுரங்களுக்கும் இடைப்பட்ட தூரம் 1,991 மீட்டர்” என டைம் பத்திரிகை கூறுகிறது. “90 மாடி கட்டடத்தைவிட உயரமான ஒவ்வொரு கோபுரத்திலும் அதிர்வைக் கட்டுப்படுத்தும் கருவிகள் 20 இருக்கின்றன. காற்றடித்து அந்தப் பாலம் அசைந்தால், பெண்டுலங்கள் அந்தக் கோபுரங்களை இறுக பிடித்து இழுக்கும்.” ரிக்டர் மாணியில் 8.0 அளவுள்ள பூமியதிர்ச்சிகளையும் தாங்கும்படி அந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாலத்தின் ஸ்டீல் கேபிளை நீட்டினால் இந்தப் பூமியை ஏழு தடவை அது சுற்றிவரும்.

ஆபத்திலிருக்கும் தாவரங்கள்

உலகத்தில் அறியப்பட்டுள்ள 2,70,000 தாவர வகைகளில் 12.5 சதவிகிதம், அதாவது ஒவ்வொரு 8 தாவரங்களிலும் ஒன்று அழியும் தருவாயில் இருக்கிறது. உலகமுழுவதிலும் உள்ள தாவரவியல் நிபுணர்களும் பாதுகாப்பில் அக்கறையுள்ளோரும் 20 வருட ஆராய்ச்சிக்கு பிறகு இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர். “அந்தப் பட்டியலில் இருக்கும் 10 தாவரங்களில் 9, ஒரு நாட்டிற்கு மட்டுமே உரியவை. அதன் காரணமாக தேசிய அல்லது உள்ளூர், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளால் அந்தத் தாவரங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன” என த நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது. தாவரங்கள் அழிவதற்கான இரண்டு முக்கிய காரணங்களை விஞ்ஞானிகள் சொல்கின்றனர்: (1) நகர் வளர்ச்சி, மரங்களை வெட்டுதல், விவசாயம் ஆகியவற்றிற்காக காடுகளை பெருமளவில் அழிப்பது, (2) உள்ளூருக்கு சொந்தமல்லாத தாவரங்கள் அதிகளவில் வளருவதால், உள்ளூர் தாவரங்கள் இருந்த இடம்தெரியாமல் போய்விடுவது. பாலூட்டிகளையும் பறவைகளையும்விட, “இயற்கையின் செயல்பாட்டிற்கு அடிப்படையாக இருப்பது” தாவரங்களே என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது. தாவரங்களைப் பற்றி அது மேலும் கூறுவதாவது: “சூரிய ஒளியை உணவாக மாற்றுவதன் மூலம், மனித உயிர் உட்பட மற்ற எல்லா உயிர்களிலும் பெரும்பாலானவற்றை அவையே ஆதரிக்கின்றன. அநேக மருந்துகளுக்கு மூலப்பொருட்களை அளிக்கின்றன; விவசாயத்திற்கு உபயோகமான தாவர வகைகளை உண்டாக்க ஜீன்களின் ஒரு தொகுதியையும் அவை அளிக்கின்றன. மேலும் இயற்கையின் அமைப்பிற்கு அடிப்படையாகவே அவை இருக்கின்றன; அதற்குள்தான் மற்ற எல்லா காரியங்களும் நடைபெறுகின்றன.”

ஆஸ்பத்திரியில் இன்ஃபெக்‍ஷன்

“மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் இன்ஃபெக்‍ஷன்கள், மிகப் பெரிய பொதுநல பிரச்சினையாக இருக்கின்றன” என பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையான லா ஃபிகாரோ கூறுகிறது. பிரான்ஸில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 8,00,000 பேருக்கு இன்ஃபெக்‍ஷன் ஏற்படுகிறது; அதனால் 10,000 மரணங்கள் விளைகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இன்ஃபெக்‍ஷன் ஏற்படுவதற்கான அபாயங்களை குறைப்பதற்கு அநேக வழிகள் இருக்கின்றன. அவையாவன: ஒவ்வொரு முறையும் ஒரு புதிய நோயாளி வருவதற்கு முன் ரூம்களை கிருமிநீக்கம் செய்வது, கிருமிநீக்க வழிமுறைகளை கண்காணிப்பது, ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்குமுன் கைகளை நன்றாக கழுவுவது ஆகியவை. இந்தக் காரியங்கள் அநேகமாக அலட்சியம் செய்யப்படுகின்றன என்பது தெளிவாக இருக்கிறது. பாரீஸில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு உதவிவேலைகள் செய்தவர்களில் 72 சதவிகிதத்தினர் மட்டுமே, ஒவ்வொரு நோயாளிக்கும் உதவிய பிறகு தங்கள் கைகளை ஒழுங்காக கழுவியதாக கூறினர். இவர்களில் 60 சதவிகிதத்தினர், குறைந்தபட்ச நேரத்திற்குக்கூட தங்கள் கைகளைக் கழுவவில்லை. இப்படிப்பட்ட மோசமான புள்ளிவிவரங்கள் இருக்க “இன்னும் நிறைய முன்னேற்றம் செய்யவேண்டும் போல் தோன்றுகிறது” எனக் கூறி அந்தப் பத்திரிகை முடிக்கிறது.

பறக்கையில் உயிர்காக்க சீட்-பெல்ட் அணியுங்கள்

விமானத்தில் பயணம்செய்த அனுபவமுள்ளவர்கள் அனைவரும் அறிந்திருக்கிறபடி, விமானங்கள் திடீரென்றும் எதிர்பாராமலும் கடுமையான காற்றுக் கொந்தளிப்புகளை எதிர்ப்படலாம். அதனால் பயணிகள் காயமடைய அல்லது மரிக்கவும்கூட நேரிடலாம். விமானத்தில் அமர்ந்திருக்கும் எல்லா சமயத்திலும் சீட்-பெல்டை அணிந்திருப்பதே நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த பாதுகாப்பு வழியாகும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். “காற்றில் எப்போது கொந்தளிப்பு ஏற்படும் என்பதை கண்டறிந்து, முன்னறிவித்து, தவிர்ப்பது மிகவும் கடினம்” என யூ.எஸ்.நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் கூறுகிறது. அப்படிப்பட்ட கொந்தளிப்பைக் கண்டறிவதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். ஆனால் இப்போது, அதேவழியில் முன்னால் சென்றுகொண்டிருக்கும் மற்ற விமானங்களிலிருந்து வரும் அறிக்கைகளையே அநேக விமானங்கள் நம்பியிருக்கின்றன. கொந்தளிப்பின்போது காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சீட்-பெல்ட் அணியாமல் இருந்தனர். “ஆனால், சீட்-பெல்ட் அணியும்படி பயணிகளை எப்படி வற்புறுத்துவது என்பதை விமான நிலையங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை” என்று அந்தக் கட்டுரை ஒப்புக்கொள்கிறது.

மின்சார சிக்கனம்

“ஜெர்மானிய வீடுகளிலும் ஆபீஸ்களிலும் உபயோகிக்கப்படும் மின்சாரத்தில் 11 சதவிகிதம், உபயோகத்தில் இல்லாத ஆனால் தேவையென்றால் உபயோகிப்பதற்காக ஆன்-செய்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் சாதனங்களால் உபயோகிக்கப்படுகிறது” என்று ஆபோதாகன் உம்ஷாவு என்ற செய்திப் பத்திரிகை அறிவிக்கிறது. ஜெர்மனியைப் பொருத்தவரை, இவ்வாறு ஆன்-செய்த நிலையில் வைக்கப்பட்டுள்ள டிவி செட்டுகள், ஸ்டீரியோக்கள், கம்ப்யூட்டர்கள், மற்ற மின்சார சாதனங்கள் ஆகியவை 2,050 கோடி கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை ஒவ்வொரு ஆண்டும் உபயோகிக்கின்றன. இது, அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான பெர்லினில் வருடம் முழுவதும் செலவாகும் மின்சாரத்தைவிட அதிகமாகும். சாதனங்களை ஆன்-செய்து வைப்பதற்கு பதில் அவற்றை முழுவதும் நிறுத்திவிடுவது மின்சாரத்தையும் சேமிக்கும் உங்கள் கையையும் கடிக்காது.

சவக் கடலுக்கே சவ அடக்கம்

பூமியில் இருப்பதிலேயே மிகவும் தாழ்வானதும் மிகவும் உப்புத்தன்மை நிறைந்ததுமான சவக் கடல் வேகமாக மறைந்து வருகிறது. 1965-ல் சவக் கடலின் மட்டம், கடல் மட்டத்தைவிட 395 மீட்டர் தாழ்வாக இருந்தது. இப்போது அது கடல் மட்டத்திலிருந்து 413 மீட்டர் தாழ்வாக இருக்கிறது. அதை இரண்டாக பிரிக்கும் ஒரு சிறிய துண்டு நிலம்கூட நடுவில் தோன்றியிருக்கிறது. அதன் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த ஹோட்டல்கள் இப்போது கணிசமான அளவு விலகி நிலப்பகுதியில் இருக்கின்றன. “பொதுமக்களின் தேவைகளாலும் அரசியல் காரணங்களாலும் கடலுக்கு வந்துசேரும் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டதால் அதன் நீர்மட்டம் ஒவ்வொரு வருடமும் 80 சென்டிமீட்டர் குறைகிறது” என்று த டல்லாஸ் மார்னிங் நியூஸ் கூறுகிறது. “சவக் கடல் சாவதற்கான சாத்தியம், அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டைக் சுட்டிக் காட்டுகிறது. வறண்ட மத்திய கிழக்கில் தண்ணீரும் அமைதியும் ஒன்றோடு ஒன்று எவ்வளவு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இருக்கும் சிக்கல்கள் சுட்டிக் காட்டுகின்றன. . . . இஸ்ரேல், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் . . . இன்று, சவக் கடலின் முக்கிய நீர் வரத்தான ஜோர்டான் நதியை ஏறக்குறைய முழுமையாகவே வேறு பக்கம் திருப்பி விட்டிருக்கின்றன.” சவக் கடலின் சரித்திரத்தைப் பற்றி அந்தக் கட்டுரை கூறுகிறது: “அந்தப் பசுமையான பிராந்தியத்தில் சமவெளியின் நகரங்கள் குடியேறின; ஆனால் அவர்களுடைய ஒழுக்கமற்ற வாழ்க்கையைப் பார்த்த கடவுள் ‘சோதோம் மீதும் கொமோரா மீதும் அக்கினியையும் கந்தகத்தையும் வருஷித்து’ அந்த இடத்தை பாழ்நிலம் ஆக்கினதைப் பற்றிய பைபிளின் விவரிப்பே மிகவும் தெளிவான கதையாகும்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்