நீங்கள் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறீர்களா?
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
சிக்காக்கோ போன்ற ஒரு பெரிய நகரத்திற்கு மின்சாரம் சப்ளை செய்ய 4,000 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால் ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும் இவ்வளவு மின்சாரம் வீணாக்கப்படுகிறது. எப்படி? கம்ப்யூட்டர்கள், ஃபேக்ஸ் மெஷின்கள், விசிஆர்கள், டெலிவிஷன்கள், சி.டி. பிளேயர்கள் மற்றும் காபி மேக்கர்கள் போன்ற சாதனங்கள் உபயோகிக்கப்படாத போதும் ‘ஆன்’ செய்யப்பட்ட நிலையிலேயே விடப்படுகின்றன. தங்களுடைய கடிகாரங்கள் ஓடிக்கொண்டேயிருக்கவும், கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை பராமரிக்கவும், அந்த சாதனங்களிலுள்ள செட்டிங்குகள் அப்படியே இருக்கவும், தேவைப்படும்போது உடனடியாக செயல்படவேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு விடப்படுகின்றன.
பிரிட்டனில், ஒவ்வொரு வருடமும் இவ்வாறு வீணாக்கப்படும் மின்சாரத்தை, மின்நிலையங்கள் உற்பத்தி செய்யும்போது ஐந்து லட்சம் டன் உஷ்ணத்தை இருத்தி வைக்கும் வாயுக்களை வெளியேற்றுகின்றன. இந்த வாயுக்கள் நம் வளிமண்டலத்தில் கலந்து உலகளாவிய வெப்பத்தை அதிகப்படுத்துகின்றன. “இளைஞர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றிய எண்ணம் ஒரு ஃபாஷனை போன்று இருந்தாலும், வெகு சிலரே இந்த மின்சார உற்பத்திக்கும் உலகளாவிய வெப்பத்திற்குமுள்ள தொடர்பை புரிந்துகொள்கின்றனர்” என்று லண்டன் செய்தித்தாளான த டைம்ஸ் சொல்கிறது.
அநேக எலக்ட்ரானிக் சாதனங்கள், முழுத்திறனையும் கொண்டு செயல்படும்போது எவ்வளவு ஆற்றலை பயன்படுத்துகிறதோ அதே அளவு அது சும்மா ‘ஆன்’ செய்யப்பட்ட நிலையில் இருக்கும்போதும் பயன்படுத்துகிறது என்பதை யாரும் பெரும்பாலும் உணருவதில்லை. உதாரணத்திற்கு, ஒரு சாட்டிலைட் டிவி சிஸ்டம், செயல்படும்போது 15 வாட்ஸை பயன்படுத்துகிறது, ஆனால் அதே சிஸ்டம் செயல்படாதபோது ‘ஆன்’ நிலையில் 14 வாட்ஸை பயன்படுத்துகிறது, வித்தியாசம் 1 வாட்தான். மோசமான வடிவமைப்பும் இதற்கு ஒரு காரணமாகும். ஒரு சி.டி. பிளேயர் உபயோகிக்காதபோது ‘ஆன்’ செய்யப்பட்டு நிலையில் 28 வாட்ஸை பயன்படுத்தியது; ஆனால் அதில் இருந்தது போன்றே அம்சங்களைக் கொண்ட வேறொரு சி.டி பிளேயர் வெறும் 2 வாட்ஸ்தான் பயன்படுத்தியது. இப்போதோ ஒரு புதிய கம்ப்யூட்டர் சிப் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, அது கம்ப்யூட்டர் ‘ஆன்’ செய்யப்பட்ட நிலையில் இருக்கும்போது பயன்படுத்தும் சுமார் 10 வாட்ஸை 1 வாட்டிற்கு அல்லது வெறும் 0.1 வாட்டிற்குக்கூட குறைத்துவிடக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தூய்மைக்கேட்டிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்துவருவதால், உலகமுழுவதிலுமுள்ள உற்பத்தியாளர்கள் கடைசியில் சுமார் 100 ரூபாய் விலையுள்ள இந்த சிப்பையே ஒரு தரமான உதிரி பாகமாக பயன்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. அதுவரையில் நீங்கள் என்ன செய்யலாம்?
பிரிட்டனின் சுற்றுச்சூழல் அமைச்சர் சொல்கிறார்: “ஒவ்வொரு சாதனத்திலும் இவ்வாறு வீணாகும் மின்சாரத்தை கணக்கிட்டால், ஏதோ கொஞ்சமாக தோன்றலாம். ஆனால் இந்தத் தீவுகளில் [பிரிட்டனில்] நாம் ஆறு கோடி பேர் இருக்கிறோம். நாம் அனைவரும் உபயோகிப்பதை சேர்த்தால் அது உண்மையில் அதிகமே.” ஃபிரிஜ் போன்ற வீட்டு உபயோக சாதனங்களை அடிக்கடி ஆஃப் செய்துவிட முடியாது என்பது உண்மைதான். ஆனால் தேவையில்லாத சமயங்களில் மின் விளக்குகளை அணைத்துவிடுவது அல்லது மற்ற மின்சாதனப் பொருட்களை உபயோகிக்காதபோது சுவிட்சுகளை ஆஃப் செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது நல்லது. அவற்றை ‘ஆன்’ செய்து அப்படியே விட்டுவிடாதீர்கள். இது உங்கள் பணப்பையை கரையாமல் பாதுகாப்பதோடு, நம் கிரகம் அனாவசியமாக மாசுபடுவதிலிருந்தும் பாதுகாக்கும்.