உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 10/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வீட்டில் இம்சை வீதியே கதி
  • இப்படியும் மறதியா?
  • உங்கள் வரிசை ஆமைவேகத்தில் நகருவது ஏன்?
  • ஆப்பிரிக்க குருமாரின் அட்டகாசம்
  • பிரசங்கியார் கைகளில் துப்பாக்கி
  • குழந்தைக்குத் தேவை அணைக்கும் கரங்கள்
  • கல்லறைக்குப் போகும் ஃபாஷன் நாய்கள்
  • கரும்பு தின்னவும் கூலி!
  • செக்ஸ் வியாபாரத்தின் பலியாடுகள்
  • ஜெட் லேக்கிற்கு ஒளிச் சிகிச்சையா?
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1996
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • சிறார் விபசாரம்—ஓர் உலகளாவிய பிரச்சினை
    விழித்தெழு!—1997
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 10/8 பக். 28-29

உலகை கவனித்தல்

வீட்டில் இம்சை வீதியே கதி

“தெருவோரப் பிள்ளைகளில் 90 சதவீதத்தினருக்கு குடும்பம் ஒன்று இருக்கிறது. [இத் தெருவோரப் பிள்ளைகளில்] சுமார் 90 சதவீதத்தினர் தங்களது பெற்றோரால் இம்சிக்கப்பட்டதாலேயே வீட்டைவிட்டு ஓடினர். பிறகு குற்றச்செயல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்” என ரீஜனல் சென்டர் ஃபார் அட்டென்ஷன் டு மிஸ்டிரீட்டட் சில்ட்ரன் [Crami (க்ராமி)] நிறுவனத்தின் ஒத்திசைவாளர் என்ஸா மாட்டார் குறிப்பிடுகிறார். “பிள்ளைகள் திடீரென்று வேறுவிதமாய் நடந்துகொள்ளுதல், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அவர்கள் உடலில் காயங்கள் ஏதாவது காணப்படுதல்” இவை உள்ளிட்ட துர்ப்பிரயோகங்களின் அடையாளங்கள் எவற்றையாவது டாக்டர்களும் ஆசிரியர்களும் கண்டுபிடித்தால் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என மாட்டார் ஆலோசனை கூறுவதாக பிரேஸிலைச் சேர்ந்த ஓ எஸ்டாடோ ட எஸ். பாலோ செய்தித்தாள் அறிவிக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஏனெனில் க்ராமி நிறுவனத்தின் உதவியை தாங்களாகவே நாடிய சிறுவர்கள் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே. தங்கள் பிள்ளைகளை இம்சிக்கும் பெற்றோர் அடிக்கடி அவர்களுக்குக் கொடுக்க முன்வரும் உதவியை உதறித்தள்ளுகின்றனர். ஏன்? க்ராமி நிறுவனத்தின் தலைவரான ஸாவோ ரோபர்ட்டூ ஸ்காம்ப்பாரின் இவ்வாறு கூறுகிறார்: “தங்கள் பிள்ளைகளை கண் மூக்கு தெரியாமல் அடித்து உதைக்கும் பெற்றோர், தாங்கள் சிறுவயதில் பட்ட இம்சையையே தங்கள் பிள்ளைகளும் படட்டும் என்று நினைக்கின்றனர். இதன் மூலம் தங்கள் பிள்ளைகளுக்குத் தாங்கள் கற்றுக்கொடுப்பதாக நினைத்துக்கொள்கின்றனர்.”

இப்படியும் மறதியா?

இத்தாலி நாட்டில் 1,600 பேரை உட்படுத்திய ஓர் ஆய்வில், 77 சதவீதத்தினர் தாங்கள் மறதியால் அவதிப்படுவதாக கூறினர் என்பதாக லா ரேப்பூப்ளிக்கா செய்தித்தாள் குறிப்பிடுகிறது. அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டவர்கள், முந்தின ஆண்டின்போது வருடத்திற்கு ஒரு முறையே வரக்கூடிய முக்கிய தினத்தைக்கூட மறந்திருந்தனர். அத்துடன், அவர்களில் 42 சதவீதத்தினருக்கு, தங்கள் காரை நிறுத்திய இடம் அடிக்கடி மறந்துவிட்டது; 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வீட்டுச்சாவியை மறந்துவிட்டிருந்தனர்; 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் பர்ஸுகளை வைத்த இடத்தை மறந்துவிட்டனர்; ஏன், 1.2 சதவீதத்தினர் தங்கள் சொந்தப்பெயரையும் குடும்பப் பெயரையும்கூட மறந்துவிட்டனர். மறுபட்சத்தில், தாங்கள் பள்ளியில் படித்த செய்யுள்களில் ஏதாவது ஒன்றையாவது இன்றுவரை அப்படியே ஞாபகம் வைத்திருப்பதாக இத்தாலியர்களில் 28 சதவீதத்தினர் சொல்கின்றனர். நீங்கள் எவ்வாறு உங்கள் ஞாபகசக்தியை மேம்படுத்திக் கொள்ளலாம்? ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியவற்றை வேறு எதனுடனாவது சம்பந்தப்படுத்திப் பார்த்து, அதை டைரியில் எழுதிவைத்துக் கொண்டு, அடிக்கடி எடுத்துப் பார்ப்பதன் மூலமும், போன் நம்பர்களையும் பாட்டு ராகங்களையும், வாகன நம்பர் பிளேட்டுகளையும்கூட மனப்பாடம் செய்து மூளைக்குப் பயிற்சியளிப்பதன் மூலமும் ஞாபகசக்தியை அதிகரிக்கலாம் என்பதாக ஒரு நிபுணர் பரிந்துரைக்கிறார்.

உங்கள் வரிசை ஆமைவேகத்தில் நகருவது ஏன்?

நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது, உங்கள் வரிசை மட்டும் ஆமைவேகத்தில் நகருவதாக உங்களுக்குத் தோன்றலாம். ஒருவேளை நிகழ்தகவு விதியினால் (லாஸ் ஆஃப் பிராபபிலிட்டி) அப்படி இருக்கலாம். ஜெர்மன் செய்தித்தாளான டி ஸைட் குறிப்பிட்டுக் காட்டுவதன்படி, அடுத்தடுத்துள்ள இரண்டு வரிசைகளில் ஒரு வரிசை உங்களுடைய வரிசையைவிட வேகமாக நகரும் வாய்ப்பு மூன்றில் இரண்டாக இருக்கும். அநேக வரிசைகள் இருந்தால் வாய்ப்பு இன்னும் குறைவே. ஆனால் நீண்ட நேரம் காத்திருப்பது மட்டுமே மக்களுக்கு எரிச்சலூட்டுவதில்லை; “தங்களது நேரம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வீணடிக்கப்படுகிறதே என்ற உணர்வுதான் மக்களுக்கு எரிச்சலூட்டுகிறது” என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில ஓட்டல்களில், லிஃப்ட்டில் செல்வதற்காக நெடுநேரம் காத்திருக்க நேரிடுவதால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க, அந்த லிஃப்ட் வைக்கப்பட்டுள்ள பொதுக்கூடங்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தங்கள் தலைமுடியை வாரிக்கொள்வது, கழுத்து டையை அட்ஜஸ்ட் செய்துகொள்வது போன்ற ஏதாவது ஒரு வேலையைச் செய்ய முடிகிறது. மேலும், இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் சற்று உதவுகிறது. இதன் காரணமாக சில சுரங்க ரயில் பாதைகளில் அடுத்த ரயில் புறப்படுவதற்கு இன்னும் எவ்வளவு நிமிடம் இருக்கிறது என்பதைக் காட்டும் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்க குருமாரின் அட்டகாசம்

“குருமார்களின் பாலியல் அட்டகாச விவகாரங்கள் ஆப்பிரிக்காவில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன” என கேத்தலிக் இன்டர்நேஷனல் பத்திரிகை அறிக்கை செய்கிறது. இப்படிப்பட்ட அட்டகாசங்களைத் தடுப்பதற்காக, வருங்கால செமிநேரியன்களை மிக கண்டிப்பான சோதனை முறைக்கு உட்படுத்துவதும், பயிற்சியளிப்பதும் அவசியம் என கத்தோலிக்க பிஷப்புகள் சிலர் சிபாரிசு செய்கின்றனர். ஆப்பிரிக்க பிஷப்புகளைக் கவலைக்குள்ளாக்கும் பிற தவறான நடத்தைகள், “குடித்து வெறிப்பது, தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபடுவது, அரசியலில் தலையிடுவது ஆகியவற்றின் மூலம் குருமாருக்குரிய மதிப்பை காத்துக்கொள்ள தவறுதல்” ஆகியவை. ஏன் இப்படிப்பட்ட விவகாரங்கள் சமீபத்தில் மட்டுமே இவ்வளவு அப்பட்டமாய் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன? “பிரஸ்ஸுக்கு இருக்கும் சுதந்திரமும், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், ரேடியோ, டிவி போன்ற தகவல் தொடர்பு மூலங்களின் மீது சர்ச்சுக்கு இருந்த கட்டுப்பாடு குறைந்திருப்பதுமே” என கேத்தலிக் இன்டர்நேஷனல் பத்திரிகை பதில் சொல்கிறது. மேலும் அது கூறுவதாவது: “ஆப்பிரிக்காவின் சில பாகங்களில் சர்ச் தலைவர்கள் சிலர் தங்களுக்குச் சாதகமல்லாத செய்திகளை வெளிவராமல் . . . தடுக்க முனைந்தபோது தோல்வியையே தழுவியுள்ளனர்.”

பிரசங்கியார் கைகளில் துப்பாக்கி

அமெரிக்காவைச் சேர்ந்த கென்டகி மாகாணத்தில், சர்ச்சுக்குள், பாஸ்டர்கள் துப்பாக்கிகளை மறைவாய் தங்கள் வசம் வைத்திருக்கலாம் எனும் திருத்திய சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. ஆனால், ஒரு நிபந்தனை; அந்தப் பாஸ்டர்களிடம் ஆயுதங்களை மறைவாக வைத்துக்கொள்வதற்கான லைசென்ஸ் இருக்க வேண்டும். இவ்வாறு ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிக்கை செய்கிறது. முன்பெல்லாம் இந்த லைசென்ஸை வைத்திருந்த பாஸ்டர்கள், மாகாணம் முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தலங்களுக்குள், கொலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துச் செல்லமுடியாது. 1997-ல், கென்டகியைச் சேர்ந்த சர்ச்சுகள் சிலவற்றில் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. எவருக்கும் காயம் ஏற்படாதபோதிலும், “மறைவான துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல தங்களுக்கு அனுமதி அளிக்கக் கோரி நாட்டுப்புற சர்ச்சுகளைச் சேர்ந்த ஊழியர்களும் குருக்களும் மாநில அளவில் சட்ட இயற்றுநர்களின்மீது செல்வாக்கு செலுத்தினர்” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. என்றாலும், எல்லா மதகுருமார்களுக்கும் இந்த மாற்றத்தில் விருப்பமில்லை. உதாரணமாக, கென்டகி கவுன்ஸில் ஆஃப் சர்ச்சஸ்-ன் எக்ஸிகியூட்டிவ் டைரக்டரான நான்ஸி ஜோ கெம்ப்பர் இவ்வாறு கேட்டார்: “சமாதானத்தையும் ஒப்புரவையும் நிலைநாட்ட வேண்டிய ஊழியர்கள் என்று நம்பப்பட்டவர்களே கொலை செய்யும் ஆயுதங்களைத் தங்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள்; அப்படி இருக்கும்போது, அதைக் காணும் நம் பிள்ளைகளிடம், பிரச்சினைகளை துப்பாக்கிகள் தீர்க்க முடியாது என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என நாம் எவ்வாறு எதிர்பார்க்கலாம்?”

குழந்தைக்குத் தேவை அணைக்கும் கரங்கள்

“மழலைகளின் பிஞ்சு உடலைக் கட்டியணைத்து முத்தமிடுவது, தடவிக்கொடுப்பது, தலைமுடியை வருடிவிடுவது, இவை போன்ற கொஞ்சும் கலைகளை வெளிக்காட்டாமல் வளர்த்தால் . . . அவர்களின் உடல்களில் கவலையால் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு எக்கச்சக்கமாக அதிகரிக்கும்” என்கிறது டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளின் ஓர் ஆய்வறிக்கை. குழந்தையை விட்டு தாய் பிரிந்துவிட்டாலோ, குழந்தைப் பருவத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, அவர்கள் “வளர்ந்த பின்னர் கல்விகற்பதிலும் விஷயங்களை ஞாபகம் வைப்பதிலும் கடும் பாதிப்பு ஏற்படும்” என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மழலைப் பிஞ்சுகளை “தரக்குறைவான காப்பகங்களில் விடுவதனால் கவலையால் சுரக்கும் ஹார்மோன்கள் வேலைநாட்களில் எக்கச்சக்கமாக இருப்பதாகவும், அதே சமயம் அவர்கள் வாரக்கடைசியில் வீட்டிலிருக்கும்போது அந்தளவுக்கு இருப்பதில்லை” எனவும் ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியின் விஞ்ஞானியான மேரி கார்ல்ஸன் மேலும் குறிப்பிட்டார். நம் மழலைச் செல்வங்களைப் பாசத்தோடு வருடிவிடுவதும் அவர்கள் மேல் அன்பு மழை பொழிவதும் மிகவும் அவசியம் என்பதற்கு அதிகமான அத்தாட்சியை இந்த ஆய்வு வழங்குகிறது.

கல்லறைக்குப் போகும் ஃபாஷன் நாய்கள்

இப்போதெல்லாம் ஃபாஷன் இழந்த நாய்களால் ஆஸ்திரேலிய விலங்ககங்கள் நிரம்பி வழிவதாக மெல்போர்ன் நாட்டு ஹெரல்ட் சன் செய்தித்தாள் கூறுகிறது. “தற்போது கைவிடப்படும் நாய்களில் அதிகப்படியானவை அலாஸ்கன் மாலம்யூட் இனங்களே” என அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பிட்ட நாய் இனங்கள் தற்போதெல்லாம் ஃபாஷனாக இல்லாததாலோ, அவற்றின் எஜமானர்களின் ரசனைக்கு ஒத்துவராததாலோ, அவர்கள் அவற்றை உதறித்தள்ளி விடுகின்றனர். த ராயல் சொஸைட்டி ஃபார் பிரிவென்ஷன் ஆஃப் க்ரூயல்ட்டி டு அனிமல்ஸ் (ஆர்எஸ்பிசிஏ) சங்கம், சமீபத்திய சினிமா ஒன்றின் மூலம் பிரபலமான டால்மேஷன் இன நாய்கள் அடுத்தபடியாக தூக்கி எறியப்படும் என எதிர்பார்க்கிறது. நவீன ஃபாஷன் நாய்களை தூக்கி எறிவது ஒன்றும் புதிதல்ல என்பதாக ஆர்எஸ்பிசிஏ சங்கத்தின் தலைமை எக்ஸிகியூட்டிவ் ரிச்சர்ட் ஹன்ட்டர் கூறுகிறார். 1970-களில் ஆஃப்கன் ஹௌண்ட்ஸ் இனங்களுக்கும், 1980-களில், இங்லிஷ் ஷீப்டாக் இனங்களுக்கும் அதுவே நேர்ந்தது. விசனகரமாக, அவ்வாறு கைவிடப்பட்ட நாய்களில் பலவற்றை நிஜமாகவே கல்லறைக்கு அனுப்ப வேண்டியிருந்திருக்கிறது. ஆகவே, மாறிவரும் ஃபாஷன்களின் அடிப்படையில் அல்லாமல் நாய்களின் தனிப்பட்ட இயல்பின் அடிப்படையிலும் அவற்றை வளர்ப்பவரின் வாழ்க்கைப்பாணியின் அடிப்படையிலுமே நாய்களை தெரிவு செய்யும்படி ஆர்எஸ்பிசிஏ சங்கம் மக்களை உத்வேகப்படுத்துகிறது.

கரும்பு தின்னவும் கூலி!

டெஸ்ட் என்ற ஜெர்மன் நாட்டு நுகர்வோர் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஓர் அறிக்கை, அளவுக்கு மிஞ்சி டிவி பார்க்கும் பிள்ளைகள் சோம்பேறித்தனமாக உட்கார்ந்தே இருப்பதானது, அவர்களது புலன் உணர்வுகளையும் பழக்கவழக்கங்களையும் தசைகளின் செயல்பாட்டையும் பாதிக்கிறது எனவும், அதிகமாக விபத்துக்குள்ளாகும்படி செய்கிறது எனவும் குறிப்பிடுகிறது. ஜெர்மனியில், பள்ளியில் சேரும் பிள்ளைகளின் உடலை பரிசோதனை செய்து பார்த்ததில், அவர்களில் 30 சதவீதம் வரையானோர் அதிக குண்டாக இருந்தனரென்றும், 40 சதவீதம் வரையானோர் ஒத்துப்போகாதவர்களாக இருந்தனரென்றும், 60 சதவீதம் வரையானோர் நேராக உட்காரவும் நிற்கவும் சிரமப்பட்டனர் என்றும் தெரியவந்தது. பிள்ளைகள் ஓடியாடித் திரியும்படி செய்வதற்கு, ஜெர்மானிய விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கல்வியாளர்கள் ஒரு விளையாட்டுப் பெட்டியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதில் மென்மையான பிரிஸ்பீ பிளாஸ்டிக் தட்டுகள், பந்துகள், மற்ற விளையாட்டு சாமான்கள் ஆகியவை அடங்கியிருக்கும். இவை பிள்ளைகள் ஜாலியாக விளையாடவும் அதே சமயத்தில் இங்குமங்கும் ஓடியாடித் திரியவும் உதவும்.

செக்ஸ் வியாபாரத்தின் பலியாடுகள்

உக்ரேன் நாட்டு செய்தித்தாள் ஒன்றில் ஓர் விளம்பரம் பின்வருமாறு பிரசுரிக்கப்பட்டிருந்தது: “இளம்பெண்கள்: மணமாகாத அழகிகளாய் இருக்க வேண்டும்; இளமை ததும்ப வேண்டும். உயரமாய் இருக்க வேண்டும். மாடல்களாகவும், செயலர்களாகவும், நடனக் கலைஞர்களாகவும், நடனக்கலை ஆசிரியர்களாகவும், உடற்பயிற்சியாளர்களாகவும் பணிபுரிய உங்களை அழைக்கிறோம்.” இளம் பேதைப்பெண்களை விபசார வலையில் சிக்கவைப்பதற்கு செக்ஸ் வியாபாரிகள் அறிவித்த விளம்பரத்துக்கு ஒரேவொரு மாதிரிதான் இது என்பதாக த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான உக்ரேனிய மற்றும் ரஷ்ய பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்கின்றனர். அவர்களது கனவெல்லாம், எப்படியாவது பொருளாதார ஏணியில் ஏறிவிடவேண்டும் என்பதுதான். ஆனால், அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், சிலரது பாஸ்போர்ட்டுகள்கூட குற்றவாளி “தாதாக்களால்” பறிக்கப்பட்டிருக்கின்றன; மேலும் அவர்கள் விபசார விடுதிகளில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்தாலோ, அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அடி, உதை, கற்பழிப்பு, கோரக் கொலை ஆகியவைதான். இப்படிப்பட்ட ஜெயில் வாழ்க்கையிலிருந்து தப்பிவந்த பெண்களுக்கு உக்ரேனிய மனநல நிபுணரான லியூட்மில்லா பிரூக் ஆலோசனை வழங்கி வந்திருக்கிறார். அவர் சொல்வதாவது: “இந்தப் பெண்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், நம்ப முடியாத அளவிற்கு சம்பளமோ சலுகைகளோ கொடுப்பதாக யாராவது சொன்னால் அது நம்ப முடியாத பொய்யாகத்தான் இருக்கும்.”

ஜெட் லேக்கிற்கு ஒளிச் சிகிச்சையா?

இந்நாள்வரை, இரவு பகலுக்கு ஏற்ப மனித உடலின் செயல்பாடு, விழித்திரையிலுள்ள செல்களால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதாக நினைத்தார்கள். என்றாலும், இப்போது ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, கண்களில் மட்டுமல்லாமல் மனித உடலின் பிற உறுப்புகளிலும் ஒளி உணர்வு செல்கள் இருக்கின்றன என்பதாக பிரெஞ்சு செய்தித்தாள் ல கோட்டிடையாண் ட்யூ மேடஸன் அறிக்கை செய்கிறது. ஐக்கிய மாகாணங்களில் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், தாங்களாகவே முன்வந்து பரிசோதிக்கப்பட அனுமதித்தவர்களின் முழங்காலுக்குப் பின்புறமாக ஒரு ஃபைபர்-ஆப்டிக் குழாய் பொருத்தப்பட்டது. இவர்களில் சிலருக்கு மட்டும் பிரகாசமான ஒளி பாய்ச்சப்பட்டது; பிறருக்கோ அவ்வாறு பாய்ச்சப்படவில்லை. இவர்களில் எவருமே, தங்களில் யார் யாருக்கு ஒளி பாய்ச்சப்பட்டது என அறியவில்லை. பிறகு, இரவு பகலுக்குத் தக்கவாறு ஏற்படும் மாறுபாட்டை அவரவருடைய உடல் வெப்பநிலையின் அடிப்படையிலும், உடலில் உள்ள மேலாட்டனின் என்ற ஹார்மோனின் அளவை அறிவதன் மூலமும் அளவிட்டனர். ஒளி பாய்ச்சப்பட்டவர்களுக்கு மட்டும் விழித்திருக்கும்-தூங்கும் நேரத்தில் “சுமார் மூன்று மணிநேர மாற்றம் இருந்தது” என இந்த ஆய்வைப் பற்றி அறிக்கை செய்யும் இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் செய்தித்தாள் கூறுகிறது. இது எவ்வாறு நடக்கிறது என்பது இன்னும் அறியப்படவில்லை. ஆனால் இதன்மூலம் கிடைத்துள்ள ரிஸல்ட்டை வைத்து, ஜெட் லேக், பருவகால மாற்றத்தால் ஏற்படும் மனச்சோர்வு, தூக்கமின்மைப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு பலன்தரும் வகையில் சிகிச்சை அளிக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்