துடைக்க வேண்டும் கைகளை! விரட்டவேண்டும் நோய்களை!
ஜலதோஷமும் மற்ற தொற்று நோய்களும் உங்களை எவ்வாறு தொத்திக்கொள்கின்றன? காற்றினால் அல்ல கைகளினால்தான் குறைந்தபட்சம் 80% நோய்கள் பரவுகின்றன என்பதாக ஐ.மா. கொள்ளைநோய் மற்றும் தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்களின் அமைப்பு கூறுகிறது. பொதுவாக நோய் பரவாமல் இருப்பதற்கு கைகளை உருப்படியாக கழுவுவதே சிறந்த வழி என்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் அனேகர், கழிவறையை பயன்படுத்திய பிறகும் மூக்கை சிந்திய பிறகும் சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை கழுவுவதேயில்லை. எல்லாரையும் அப்படி சொல்லிவிட முடியாதுதான். ஆனால் அவசர அவசரமாக, ஏதோ கழுவவேண்டுமே என்பதற்காக கடமைக்காக கைகளைக் கழுவுவது, நோய்கள் தொற்றும் அபாயத்தை குறைத்துப்போடாது.
கைகளை ஒழுங்காக துடைப்பதும் ரொம்ப முக்கியம். அனேகர் இதை புரிந்துகொள்வதில்லை. விசேஷமாக, கைகளை கழுவியபின்பு உலரவைப்பதற்காக உள்ள அனல்காற்று வீசும் டிரையிங் மெஷினை நன்றாக பயன்படுத்துவதில்லை என்பதாக இங்கிலாந்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட்மின்ஸ்டரின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அனேகர் சரியாக உலர்த்தாமல் ஈரக் கைகளை தங்களுடைய உடைகளில் துடைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு துடைக்கும்போது, நோயைக் கடத்தும் நுண்ணுயிரிகள் ஏதாவது கைகளில் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தால் அவை உடைகளுக்குத் தாவி, அதன்மூலம் பல இடங்களுக்குப் பரவக்கூடும். ஆராய்ச்சியாளர்களின்படி, பேப்பர் நாப்கினால் அல்லது சுத்தமான துண்டால் கைகளை நன்றாக துடைப்பது மிகவும் நல்லது.
ஐ.மா. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கைகளை கழுவுவதற்கு பின்வரும் ஆலோசனைகளை அளிக்கிறது:
• வெதுவெதுப்பான தண்ணீரையும், மென்மையான சோப்பையும் பயன்படுத்துங்கள். கைகழுவுவதற்கென்று பாத்திரத்தை பயன்படுத்தினால், அவ்வாறு பயன்படுத்தும் பாத்திரங்களை ஒவ்வொரு தடவையும் சுத்தமாக கழுவுங்கள்.
• குறைந்தபட்சம் 15 வினாடிகளுக்கு சோப்புநுரை பொங்குமளவு கைகளை நன்றாக இருபுறமும் தேயுங்கள். விரல்களுக்கிடையேயும் நகத்திற்குள்ளேயும் இருக்கும் அழுக்கு போகும்படி தேயுங்கள்.
• வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுங்கள்.
• பேப்பர் நாப்கினையோ சுத்தமான டவலையோ பயன்படுத்தி கைகளை நன்றாக துடையுங்கள். துடைத்த பிற்பாடு குழாயையோ டவல் தொங்கும் கம்பியை தொடாதீர்கள்.
• குழாயை மூடுவதற்காக டவலை பயன்படுத்துங்கள்.
• சிறுபிள்ளைகளுக்கு பைப் எட்டவில்லையென்றால் வசதியாகக் கைகளை கழுவ உதவுங்கள். மேற்குறிப்பிட்ட எல்லா வழிமுறைகளையும் பின்பற்ற உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். பிறகு மறக்காமல் உங்கள் கைகளையும் கழுவுங்கள்.