உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 12/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • 2000-மும் கிறிஸ்துவும்
  • கண்ணுக்குப் புலப்படாத “சூப்பர் நுண்ணியிரிகள்”
  • மன உளைச்சலின் விளைவு
  • வேகமாக வாசிக்க பேப்பரே
  • யாரை விட்டுவைத்தது கடைசிகாலம்
  • பழிவாங்குதல் எங்கள் பிஸினஸ்
  • இலை தழை மேயும் நண்டுகள்
  • பல கோடி மைல்களுக்கு அப்பால்
  • பிறந்தும் பிறவாத பிள்ளைகள்
  • எந்தளவு கொடிய அச்சுறுத்தல்?
    விழித்தெழு!—2003
  • நுண்ணுயிரிகள் பழிவாங்குதல்
    விழித்தெழு!—1996
  • நோயை ஒழிப்பதில் வெற்றியும் தோல்வியும்
    விழித்தெழு!—2004
  • உலக சுகாதார நிலை—அதிகரித்துவரும் இடைவெளி
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 12/22 பக். 28-29

உலகை கவனித்தல்

2000-மும் கிறிஸ்துவும்

“பிரிட்டிஷ்காரர்களில் ஆறில் ஒருவர் என்கிற விகிதத்திற்கும் குறைவான ஆட்களே, கி.பி. 2000-த்தை இயேசுவோடு இணைத்துப் பார்க்கின்றனரென கணக்கெடுப்பு காட்டுகிறது” இஎன்ஐ புல்லட்டின் கூறுகிறது. ஒரு கேலப் சர்வே “ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டங்களைப் பற்றி மக்களுடைய மடமையை அம்பலப்படுத்தியது. இது எதை ஞாபகப்படுத்த கொண்டாடப்பட்டது என்பதை இக்கணக்கெடுப்பில் பங்கு கொண்டவர்களில் 37 சதவிகிதத்தினர் அறிந்திருக்கவில்லை. . . . இக்கொண்டாட்டங்கள் ஒரு புதிய நூற்றாண்டு துவக்கத்தை குறிக்கிறதென 18 சதவிகிதத்தினர் கூறினர். கி.பி. 2000-வது ஆண்டைக் குறிக்கிறதென 17 சதவிகிதத்தினர் கூறினர்.” இயேசுவின் பிறப்பிற்கும் 2000-வது ஆண்டிற்கும் உள்ள தொடர்பை 15 சதவிகிதத்தினர் மட்டுமே தெரிந்திருக்கின்றனர். அநேக மக்களுக்கு ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம் என்பது “ஃப்ரெண்ட்ஸோட சேந்து குடிச்சி, கும்மாளமடிக்கிறதையும் ஊரெல்லாம் சுத்திப்பாக்கிறதையும்தான்” அர்த்தப்படுத்துவதாக எஸெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் அந்தோணி கிங் கூறுகிறார். ஆங்லிகன் பிஷப் கேவின் ரீட் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: “தனது கலாச்சார மற்றும் ஆவிக்குரிய பிரக்ஞை இழந்த சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்.”

கண்ணுக்குப் புலப்படாத “சூப்பர் நுண்ணியிரிகள்”

“வீரியம் மிக்க நுண்ணுயிர் கொல்லிகளுக்கும்கூட (antibiotics) ‘சூப்பர் நுண்ணுயிரிகள்’ (Superbugs) சாவதில்லை. இது மருத்துவ நிபுணர்களுக்கு மாத்திரமல்ல, பொது மக்களுக்கும் அபாய சமிக்கையாக இருக்கிறது” என்று தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் ஸ்டார் அறிவிக்கிறது. “ஒருமுறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அல்லது முழுவதுமாக களைந்தெறியப்பட்ட நோய்கள் மாற்றமடைந்து மறுபடியும் வீரியத்தோடு வருகின்றன” என்று நோய்க்குறியியல் வல்லுநர் மைக் டவ் எச்சரிக்கிறார். நுண்ணுயிர் கொல்லிகளை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்துவதால், புதுவகையான காசநோய், மலேரியா, டைஃபாய்டு, மேகவெட்டை நோய், மூளைச்சவ்வு அழற்சி, நிமோனியா போன்ற வியாதிகளில் விளைவடைந்துள்ளது. இவற்றை குணப்படுத்துவது மிக கடினம். நவீன மருந்துகளால், இந்நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் காசநோயால் சாகின்றனர். வருமுன் காக்கும் உபாயங்களை நோயாளிகள் கையாளலாம்: முதலாவது, நிறைய தண்ணீர் குடிப்பது, தேவையான ஓய்வு எடுப்பது, தொண்டையில் நமைச்சல் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு போட்டு கொப்புளிப்பது போன்றவற்றை முயற்சி செய்யலாம். டாக்டரை ஆண்டிபயாடிக்ஸ் கொடுக்கும்படி நீங்களே வற்புறுத்தாதீர்கள். உண்மையிலேயே அவை அவசியம்தானா என்பதை அவரே தீர்மானிக்கட்டும். ஆண்டிபயாடிக்ஸுகள் எடுக்கும்படி சொல்லப்பட்டால், அவர் எத்தனை நாட்களுக்கு மருந்து கொடுக்கிறாரோ அத்தனை நாட்களும் தவறாமல் உபயோகியுங்கள். மருந்து ஆரம்பித்து ஓரிரு நாட்களிலேயே குணமாகிவிட்டதென்று இடையிலேயே நிறுத்திவிடாதீர்கள். ஜலதோஷம், ஃப்ளு போன்றவற்றை இந்த ஆண்டிபயாடிக்ஸுகள் குணப்படுத்துவதில்லை. இவை பாக்டீரியாக்களால் அல்ல, வைரஸ் நோய்க்கிருமிகளால் வருகின்றன. “உலகையே ஆட்டிவைக்கும் இந்தப் பிரச்சினை, சுகாதார சீர்குலைவை உண்டாக்கும். இப்பிரச்சினையை ஒழித்துக்கட்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடவேண்டும்” என்று டவ் கூறுகிறார்.

மன உளைச்சலின் விளைவு

“உடலில் ஏற்படும் நோய்களைவிட மன உளைச்சலே மோசமானது. தொடர்ந்து வேலைக்கு வராதிருத்தல், உற்பத்தி திறன் குறைவு ஆகியவற்றிற்கு இதுவே முக்கிய காரணம்” என பிரேசிலிய செய்தித்தாள் யூ க்ளோபூ கூறுகிறது. 1997-ல், 2,00,000 பேரின் இறப்பிற்கு மனநோயே காரணம் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அடிக்கடி மூட் மாறுவது போன்ற மனக்கோளாறுகளும் ஊறு விளைவித்திருக்கின்றன. இது, உலகம் முழுவதும் 14 கோடியே 6 லட்சம் மக்களின் தொழில் நடவடிக்கைகளை பெரிதும் பாதித்திருக்கின்றன. அதே சமயத்தில் 12 கோடியே 3 லட்சம் தொழிலாளிகள் காது கேளா பிரச்சினையாலும், 2 கோடியே 5 லட்சம் பேர் வேலை செய்யும் இடத்திலும் விபத்துக்குள்ளாகின்றனர்; இந்த எண்ணிக்கைகளை மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இவை வெகு சொற்பமே. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கை குட்வன் ஓர் ஆய்வு மேற்கொண்டார். வரும் ஆண்டுகளில் மன உளைச்சலால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரிக்கும்; இதனால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, இது உற்பத்தித் திறனையும் குறைக்கும்; இதனால் சமுதாயத்திற்குத்தான் பெருத்த நஷ்டம் என்று அந்த ஆய்வு சொல்லுகிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே, மன உளைச்சல் காரணமாக ஏற்படும் நஷ்டம் இப்போதே ஆண்டுக்கு 5,300 கோடி டாலர்.

வேகமாக வாசிக்க பேப்பரே

“கம்ப்யூட்டர் மானிட்டரில் படிப்பதைவிட அச்சிடப்பட்ட பேப்பரில் படிப்பதே எளிது” என ஜெர்மன் பிரஸ் ஏஜென்ஸி டிபிஏ-பாஸிஸ்டீன்ஸ்ட் அறிவிக்கிறது. மானிட்டரில் வாசிப்பதைவிட பேப்பரில் குறைந்தளவு பிழைகளோடும் வேகமாகவும் வாசிக்கமுடியும். பேப்பரிலிருந்து வாசிப்பதைவிட மானிட்டரில் வாசிக்கும்போது, சராசரியாக 10 சதவீதம் அதிக நேரமெடுக்கிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. மினுக்குமினுக்கென சிமிட்டிக்கொண்டு இல்லாமல் சரியான அளவு ஒளியுடனும் எழுத்துக்களை மிகத் தெளிவாகக் காட்டும் தரமான மானிட்டர்களை உபயோகிக்கும்போது வாசிக்கும் வேகம் அதிகரித்திருக்கின்றது. என்றபோதிலும், பேப்பரில் வாசிக்கும் வேகத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை. “கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறவர்கள் சதா மானிட்டரையே உற்றுப்பார்க்கிறார்கள். அதில், பளிச்சென்றும், மினுக்குமினுக்கென்றும், ஒளி பிரதிபலிப்பதை திரையில் நேரிடையாக பார்க்கிறார்கள்” என்று ஜெர்மனியிலுள்ள ஆகென்னிலிருந்து மனோதத்துவ நிபுணர் மார்டீனா ட்ஸீஃப்ல் கூறுகிறார். “எழுத்து வடிவங்கள் துல்லியமாகவும் ஒளித்தரம் சிறந்ததாகவும் இருப்பதில்லை.” டிபிஏ-வின் முடிவு இதுவே: “நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கும்போது, மானிட்டர் தரமான ஒன்றா என பார்த்து வாங்குங்கள்.”

யாரை விட்டுவைத்தது கடைசிகாலம்

“இன்னும் ஒருசில வாரங்களுக்குள் கனடாவின் [நியூபௌண்ட்லாந்திலுள்ள] போலீசார் சிறு கைத்துப்பாக்கியோடு வேலைக்குச் செல்ல ஆரம்பிப்பார்கள். அப்போது நடைமுறைக்கு ஒத்துவராத கனடா கலாச்சாரத்தின் மற்றுமொரு பழமையான விநோதப் பழக்கம் முடிவுக்கு வரப்போகிறது” என்று த டோரன்டோ ஸ்டார் அறிவிக்கிறது. ராயல் நியூபௌண்ட்லாந்து காவற்படைத் தொகுதி 1729-ல் ஆரம்பிக்கப்பட்டது. “சட்டுனு எடுக்கிறாப்போல் கையில் துப்பாக்கி இல்லாம, காவல் செய்த வட அமெரிக்காவிலுள்ள கடைசி காவற்படைத் தொகுதி” இதுவே. பழைய முறையை புதிய சட்டம் ரத்து செய்தது. பழைய முறையின்படி, அதிகாரிகள் ஆயுதங்கள் எடுத்துச் செல்ல சூப்பர்வைஸரிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதி கொடுக்கப்பட்டால், அதிகாரி தனது போலீஸ் காரின் டிக்கிக்குள் உள்ள பூட்டிய பெட்டியில் துப்பாக்கியை வைத்துக்கொள்வார். அவசர சூழ்நிலை ஏற்பட்டால், உடனடியாக காரை நிறுத்தி, டிக்கியைத் திறந்து, பூட்டப்பட்ட பெட்டியைத் திறந்து, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவார். “இந்த பழைய முறை அப்பாவித்தனமாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறதென்னவோ உண்மைதான். ஆனால், 1998-களில் வேலை செய்யும், பிரத்தியேக பயிற்சி பெற்ற காவற்படையினருக்கு, தங்களுடைய ஆயுதங்களை சட்டென்று உபயோகிக்கமுடியாத நிலை, சற்றேனும் நடைமுறைக்கு ஒத்துவராதது” என்று முதலமைச்சர் ப்ரையன் டோபின் கூறுகிறார். நியூபௌண்ட்லாந்து, த ராக் என மிக நேயத்தோடு அழைக்கப்படுகிறது. குற்றச்செயல்களின் விகிதம் நாட்டிலேயே இங்குதான் மிகக் குறைவாக இருக்கிறதென்கிற பெருமை இவ்விடத்தையே சாரும். இதற்கு எடுத்துக்காட்டாக இங்கே டியூட்டியில் இருக்கும் சமயத்தில் அதிகாரிகள் சுடப்பட்டார்கள் என்ற சரித்திரமே இல்லை.

பழிவாங்குதல் எங்கள் பிஸினஸ்

ஜப்பானில் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும்சரி எங்கள் சேவை உங்களுக்கு உண்டு என்றும், “இரகசியங்கள் கண்டிப்பாக காக்கப்படும்” என்றும் உறுதியளிக்கும் ஒரு டோக்கியோ கம்பெனியின் விளம்பரம் இதோ: “உங்கள் சார்பாக நாங்கள் பழிவாங்குவோம்” என்பதே. “எங்க வாடிக்கையாளருக்கு துரோகம் செஞ்சவங்களுக்கு அதேமாதிரி திருப்பி செய்யறதுதான்” அடிப்படை தத்துவம் என, இந்தக் கம்பெனியை நடத்தும் ஒருவர் சப்பைக்கட்டு கட்டுகிறார். ஆசாஹீ ஈவினிங் நியூஸ் அறிக்கையின்படி, “வேலையையும் குடும்பத்தையும் இழக்கச் செய்தல்,” சுமுகமான உறவுகளை முறிப்பது, மேலும் “கூடவேலை செய்பவரை பதவியிலிருந்து இறக்குதல் அல்லது பாலியல் தொல்லை தரும் மேலதிகாரியை கேவலப்படுத்துதல்” போன்ற “வஞ்சந்தீர்க்கும் சட்டரீதியான செயல்களை” இந்த கம்பெனி செய்யும். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 50 பேர் இந்த கம்பெனிக்கு ஃபோன் செய்கின்றனர். இதில் 20 ஃபோன்கால் கொலை செய்வதற்கு ஒப்பந்தம் பேசுவதாகும். ஆனால், பலவந்தப்படுத்தியோ அல்லது சட்டத்தை மீறியோ செயல்படுவது இக்கம்பெனியின் நியதியல்ல. இருந்தபோதிலும், “அநேக சமயங்களில் இது அப்படித்தான் செயல்படுகிறது.” டஜன்கணக்கில் ஆட்களை இக்கம்பெனி வேலைக்கு அமர்த்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் வேறே இடங்களில் வேலை செய்பவர்களே. இதில் சிலர், தாங்களே பல துன்பங்களுக்கு ஆளானவர்கள், எனவே மற்றவர்கள் பழிவாங்குவதற்கு உதவ விரும்புகின்றனர். “நீங்க எப்பவோ செய்த காரியத்த மனசுல வச்சிக்கிட்டு உங்கள வஞ்சம் தீத்துக்க சந்தர்ப்பத்த எதிர்பாத்துக்கிட்டு சிலர் தயாரா இருப்பாங்க. இது உங்களுக்கே தெரியாம இருக்கலாம். அதனால, ஜாக்கிரதையா இருங்க” என்று அக்கம்பெனியின் சொந்தக்காரர் சொல்லுகிறார்.

இலை தழை மேயும் நண்டுகள்

எறும்புகள், கரையான்கள், புழுக்கள் போன்றவை காடுகளில் ஜமுக்காளம் விரித்ததுபோலிருக்கும் இலைகளையும் குப்பைக் கூளங்களையும் பல்வேறு ஆக்கக்கூறுகளாக சிதைக்கின்றன. ஆனால், அவ்வப்போது வெள்ளத்தால் பாதிக்கப்படுகிற வெப்பமண்டலக் காடுகளைப் பற்றியதென்ன? இந்த வேலையை நிலத்தில் வாழும் நண்டுகளே செய்துவிடுகின்றன. கோஸ்டா ரிகோவின் பசிபிக் கடலோரத்தில் பரந்து விரிந்து கிடக்கும் காடுகளில் ஒரு இலை தழையைக்கூட காணமுடியவில்லை. ஆனால், அதற்கு பதிலாக பெரிய பெரிய பொந்துகள்தான் நிறைந்து காணப்படுகின்றன என்பதை அ.ஐ.மா.-விலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் மிகுந்த ஆச்சரியத்தோடு கவனித்தார். அங்கே இரவு நேரத்தில், ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 24,000 நில நண்டுகள் என்ற விகிதத்தில், புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோல் வளையிலிருந்து வெளிக்கிளம்புவதைக் கவனித்தார். இவை சருகுகள், பழங்கள், விதைகள் போன்றவற்றை இரையாக்கிக் கொள்ள ஒரு மீட்டர் ஆழத்திலுள்ள தங்களுடைய வளைகளுக்குள் அவற்றை கொண்டு செல்கின்றன. இதனால், ஆழமான வேர்களையுடைய மரங்கள் நல்ல சத்தான உரத்தைப் பெறுகின்றன. இந்த நண்டுகள் 20 சென்டிமீட்டர் நீளமுடையவை. இவை நிலத்தில் வசிப்பதால் காற்றை சுவாசிப்பதற்கென சிறிது வித்தியாசமான செவுள்களை கொண்டிருக்கின்றன. இனப்பெருக்கத்திற்காக மட்டுமே குறிப்பிட்ட சமயத்தில் கடலுக்கு செல்லுகின்றன. காடுகளின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுமே இந்த சின்னஞ்சிறு ஜந்துக்களின் சேவையின்பேரிலேயே சார்ந்திருக்கின்றன என்று லண்டனின் த டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது.

பல கோடி மைல்களுக்கு அப்பால்

“இதுவரை மனிதனால் அனுப்பப்பட்ட விண்கலங்களிலேயே மிகவும் அதிகமான தூரத்திற்கு சென்று சாதனை நிகழ்த்தியது வாயேஜர்-1” என்று அஸ்ட்ரானமி பத்திரிகை கூறுகிறது. “இதற்குமுன் சாதனை நிகழ்த்தியது பயோனீர் 10 விண்கலமே; இந்த விண்கலம் கிட்டத்தட்ட அதற்கு எதிர் திசையில் அதைவிடக் குறைவான வேகத்தில் அனுப்பப்பட்டது.” பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது வாயேஜர்-1? பிப்ரவரி 17, 1998 அன்று, 1040 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இது, 1977, செப்டம்பர் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 1979, மார்ச் 5-ம் தேதி வியாழன் என்னும் கோளை கடந்தது. 1980, நவம்பர் 12-ம் தேதி சனிக் கோளை தாண்டியது. இது, சூரிய காற்றிலும், காந்தப்புலத்திலும் குறிப்புகளைத் தொடர்ந்து அனுப்புகிறது. “இதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் முதல் முறையாக ஹீலியோபாஸை (heliopause) கண்டுபிடிக்க உதவும். சூரியனுடைய காந்த சக்தி முடிவுறும் எல்லையையும் விண்மீன்களுக்கிடையே உள்ள விண்வெளியின் ஆரம்பத்தையும்தான் ஹீலியோபாஸ் என்று அழைக்கின்றனர். இதுவே, இப்படிப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்ட முதல் விண்வெளிக்கலம்” என நேஷனல் ஏரோனாடிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் கூறுகிறது.

பிறந்தும் பிறவாத பிள்ளைகள்

“பிறக்கும் குழந்தைகளில் ஒருவேளை மூன்றிலொரு பங்கு பிள்ளைகளின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை. அதனால், இப்பிள்ளைகள் அதிகாரப்பூர்வமாய் புறக்கணிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது, அவர்கள் கல்வி வாய்ப்பையும் சுகாதார பராமரிப்பையும் இழப்பதை அர்த்தப்படுத்துகிறது” என த நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. ஆப்பிரிக்காவில் சஹாராவுக்கு அருகே உள்ள நாடுகள், கம்போடியா, இந்தியா, மியான்மார், வியட்நாம் முதலிய சில ஆசிய நாடுகளும் மிகக் குறைந்தளவு பிறப்பு பதிவையே கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிதி, உலகளாவிய ஓர் ஆய்வு நடத்தியது. “ஒரு பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் அந்த பிள்ளை பிறவாததற்கு சமம்” என அந்த அமைப்பின் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் கேரல் பெல்லாமி கூறுகிறார். அநேக தேசங்களில் பிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது இன்றியமையாத் தேவையாக இருக்கிறது. அப்போது தான் அந்தப் பிள்ளை சுகாதார மையத்தில் சிகிச்சை பெறுவதற்கும் அல்லது பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கும் தகுதி வாய்ந்தது. எனவே பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகள் பெரும்பாலும் குழந்தை வேலையாட்களாகவோ அல்லது விபசாரத்திலோ ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். “வறுமை மாத்திரமே பிறப்பு பதிவு செய்யப்படுவதை தீர்மானிக்கும் அளவுகோலாக இல்லை. ஏனென்றால், அறிக்கையின்படி, லத்தீன் அமெரிக்காவின் பெரும்பகுதியிலும், மத்திய ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவிலும் அதிகபட்சமாக பிறப்பு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது” என அக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்