மத சுதந்திரம்—வரமா சாபமா?
கிறிஸ்தவமண்டலத்தில் மத சுதந்திரம் என்ற கொள்கை கடுமையான பிரசவ வேதனையோடுதான் ஆரம்பமானது. சகிப்புத்தன்மை இல்லாமை, தப்பெண்ணங்கள், கொள்கைப் பிடிவாதம் ஆகியவற்றை எதிர்த்து நடந்த போராட்டமே அது. கொடூரமான மதச் சண்டைகளில் கோடிக்கணக்கான ஜனங்களின் உயிரை இது பலி வாங்கியிருக்கிறது. வேதனைகள் நிறைந்த இந்த சரித்திரம் நமக்கு எதை கற்பிக்கிறது?
“துன்புறுத்தல் என்பது கிறிஸ்தவ சரித்திரத்தோடு ஒன்றர கலந்துவிட்ட, பிரிக்கமுடியாத உண்மை” என ராபின் லேன் ஃபாக்ஸ், பேகன்ஸ் அண்ட் கிறிஸ்டியன்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். பூர்வ கிறிஸ்தவர்கள், ஒரு மத உட்பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர். சமுதாய ஒழுங்கை கெடுப்பதாகவும் வீண்பழி சுமத்தப்பட்டனர். (அப்போஸ்தலர் 16:20, 21; 24:5, 14; 28:22) இதன் விளைவாக, சிலர் சித்திரவதை செய்யப்பட்டனர்; ரோம விளையாட்டு அரங்கங்களில், கொடிய மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டனர். இப்பேர்ப்பட்ட கடுந்துன்புறுத்தலை எதிர்ப்பட்ட சமயத்தில், இறையியலாளர் டெர்டுல்லியன் (8-ம் பக்கத்தில் இருக்கும் படத்தைக் காண்க) போன்றவர்கள் மத சுதந்திரத்திற்காக வாதாடினர். “அவரவர்களுடைய சொந்த நம்பிக்கைகளுக்கேற்ப, ஒவ்வொரு தனிமனிதனும் போற்றி பூஜிக்க வேண்டிய, இயற்கையாகவே அமைந்த, மனிதனுடைய அடிப்படை சிறப்புரிமை இது” பொ.ச. 212-ல் என்று எழுதியிருக்கிறார்.
ரோமர்களால் முடுக்கிவிடப்பட்ட கிறிஸ்தவர்களின் துன்புறுத்தல், பொ.ச. 313-ல், கான்ஸ்டன்டைனால் மிலன் சாசனத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அது, கிறிஸ்தவர்களுக்கும் புறமதத்தினருக்கும் சமமாக மத சுதந்திரத்தை அளித்தது. ரோம சாம்ராஜ்யத்தில், “கிறிஸ்தவம்” சட்டப்பூர்வ அந்தஸ்தை பெற்றது, துன்புறுத்தலின் அலையை ஓயச் செய்தது. இருப்பினும், சுமார் பொ.ச. 340-ல், கிறிஸ்தவரென உரிமைபாராட்டிக் கொண்ட எழுத்தாளர் ஒருவர் புறமதத்தினர் துன்புறுத்தப்பட வேண்டுமென கோரினார். முடிவாக, பொ.ச. 392-ல், பேரரசர் முதலாம் தியோடோசியஸ் புறமதத்தை தடை செய்தார். கான்ஸ்டாண்டிநோபிள் சாசனத்தின் மூலம், அவருடைய பேரரசு முழுவதும் புறமதம் தடை செய்யப்பட்டது. ஆம், மத சுதந்திரத் தளிர் துளிர்க்கையிலேயே கிள்ளி எறியப்பட்டது. ரோம “கிறிஸ்தவம்” தேசிய மதமாக்கப்பட்டு, துன்புறுத்தல் திட்டத்தில் சர்ச்சும் அரசும் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கின. இது பல நூற்றாண்டுகள் நீடித்தது. இதன் விளைவால், 11 முதல் 13-ம் நூற்றாண்டுகளின் பேரளவில் இரத்தம் சிந்தப்பட்ட சிலுவைப் போர்களிலும், 12-ம் நூற்றாண்டில் துவங்கிய கொடூரமான ஒடுக்குமுறை விசாரணைகளிலும் அது உச்சக்கட்டத்தை எட்டியது. நிறுவப்பட்ட திருச்சபையையும் அதன் பிரத்தியேகமான கோட்பாடுகளையும் எதிர்த்து துணிச்சலோடு கேள்வி கேட்டவர்கள் முரண் கோட்பாட்டாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர். அக்காலத்தில் சூனியக்காரர்களை வேட்டையாடி கொன்றனர்; எனவே அதேபோன்ற சூனிய வேட்டை சூழ்நிலைக்குள் இவர்களும் தள்ளப்பட்டு வேட்டையாடப்பட்டனர். இப்பேர்ப்பட்ட குரூரச் செயல்களைத் தூண்டியது எது?
மத ஒற்றுமை, அரசுக்கு நிலையான, உறுதியான அஸ்திவாரத்தை அளிக்கிறது என்றும் வித்தியாசமான மதங்கள் சமுதாய ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கின்றன என்றும் காரணங்காட்டி மத சகிப்புத்தன்மை இல்லாமை வளர்க்கப்பட்டது. 1602-ல், இங்கிலாந்தில், ராணி எலிசபெத்தின் மந்திரிகளில் ஒருவர் “இரண்டு மதங்களைப் பொறுத்துக் கொள்ளுகிற அரசு எப்போதுமே நிலையற்றதுதான்” என வாதிட்டார். ஆனால், இம்மதங்கள் நிறுவப்பட்ட மதத்திற்கு அல்லது அரசிற்கு உண்மையிலேயே ஊறு விளைவிக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதைவிட, மதக் கோட்பாட்டிற்கு இணங்காதவர்களை தடை செய்வது மிக எளிது. “ஆபத்தான அல்லது தீங்கற்ற முரண் கோட்பாட்டாளர்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை வரையறுக்க அரசியல் அதிகாரங்களோ அல்லது சர்ச் அதிகாரங்களோ சிறிதளவுகூட முயலவில்லை” என்று த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், வெகு விரைவில் மாற்றம் வரவிருந்தது.
சகிப்புத்தன்மையின் வேதனைமிக்க பிறப்பு
புராட்டஸ்டாண்டிஸத்தின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாததாய் இருந்தது. இம்மத உட்பிரிவால் கிளப்பிவிடப்படதே ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம். புராட்டஸ்டண்ட் சமயச் சீர்திருத்த இயக்கம், வியத்தகு வேகத்தில், மதத்தின் அடிப்படையில், ஐரோப்பாவையே இரண்டாக பிளந்துவிட்டது. இவ்வியக்கம், மனசாட்சிக்கான சுதந்திரம் எனும் கருத்தை உலக அரங்கில் காட்சிக்குக் கொண்டு வந்தது. உதாரணமாக, 1521-ல், பிரசித்திப் பெற்ற சீர்திருத்தவாதி மார்டின் லூத்தர், “என்னுடைய மனசாட்சி, கடவுளுடைய வார்த்தைக்கே கட்டுப்பட்டது” என்று தன்னுடைய அபிப்பிராயங்களை மெய்ப்பித்துக் கூறினார். இப்பிளவு, முப்பது ஆண்டுகள் போர் (1618-48) என்னும் தீயை மூட்டிவிட்டது. இதனால், அடுத்தடுத்து நடந்த கொடூரமான பல மதப் போர்கள் ஐரோப்பா முழுவதையும் நாசமாக்கியது.
இச்சண்டைகள் முன்னேற்றப் பாதைக்கு அடிகோலாக அமையவில்லை என்பதை, இத்தீமூண்டு, கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த பிறகு பாதியில்தான் அநேகர் உணர ஆரம்பித்தனர். எனவேதான், பல சாசனங்கள் தொடர்ச்சியாக அமலுக்குக் கொண்டு வரப்பட்டன. இவற்றில் ஒன்றே பிரான்ஸில் (1598) தோன்றிய நான்டெஸ் சாசனம். இருப்பினும், போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஐரோப்பாவில் இவற்றால் சமாதானத்தை நிலைநாட்ட முடியவில்லை. இந்த சாசனங்கள் மூலமே, ஆமை தன்னுடைய ஓட்டிற்குள்ளிருந்து மெல்ல மெல்ல வெளியே வருவதுபோல், சகித்தல் என்னும் நவீன நாளைய கருத்தும் வந்தது. முதலில், “சகித்திருத்தல்” என்ற வார்த்தை எதிர்மறையான அர்த்தத்தையே கொடுத்தது. 1530-ல், பிரபல மனித பண்பாட்டியலாளர் இராஸ்மஸ் “குறிப்பிட்ட சூழ்நிலைமையின்கீழ், மத உட்பிரிவுகளை நாம் சகிக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் . . . , சந்தேகத்திற்கு இடமில்லாமல், அது கெடுதியே—நிச்சயமாகவே, அதிக கெடுதியே—ஆனால், போரைக்காட்டிலும் கெடுதியல்ல” என்று எழுதினார். இந்த பாதகமான மனப்பான்மையின் காரணமாகத்தான், 1561-ல், பிரான்ஸைச் சேர்ந்த பால் ட ஃப்வா போன்றவர்கள் “சகித்திருத்தல்” என்பதைப் பற்றி பேசுவதற்கு பதிலாக “மத சுதந்திரம்” பற்றி பேச விரும்பினர்.
காலப்போக்கில், சகித்திருத்தல் தீங்கானதாக அல்ல, உரிமைகளின் பாதுகாவலராக எண்ணப்பட்டது. இனிமேலும், அது பலவீனத்திற்கு சலுகையாக அல்ல, ஆனால் உத்திரவாதமாகவே கருதப்பட்டது. பலதரப்பட்ட நம்பிக்கைகளும் வித்தியாசமாக சிந்திக்கும் உரிமையும் பேணி காக்கப்பட ஆரம்பித்த போதுதான், நவீன சமுதாயத்திற்கு அடித்தளமிடப்பட்டது. அப்போதுதான் மதவெறி அடங்கி ஒடுங்க ஆரம்பித்தது.
18-ம் நூற்றாண்டின் இறுதியில், சகிப்புத்தன்மையை சுதந்திரத்தோடும் சமத்துவத்தோடும் இணைத்துப் பார்ப்பது ஆரம்பிக்கப்பட்டது. இது, சட்டங்கள், உறுதிமொழிகள் வடிவத்தில் வெளிப்பட்டது. பிரான்ஸில், குடிமகன், தனிமனிதன் உரிமைகளுக்கான உறுதிமொழி (1789), அல்லது ஐக்கிய மாகாணங்களில், உரிமைகள் மசோதா (1791) போன்ற பிரபலமான உறுதிமொழிகளும் மசோதாக்களும் வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்கள், 19-ம் நூற்றாண்டு முதற்கொண்டு முற்போக்கு எண்ணத்தை தோற்றுவித்தது. இதனால், சகிப்புத்தன்மை, சுதந்திரம் இவ்விரண்டும் சாபமாக அல்ல, வரங்களாகவே கருதப்பட்டன.
எப்படிப்பட்ட சுதந்திரம்
சுதந்திரம் என்பது விலைமதிப்பில்லா பொக்கிஷமாக இருந்தாலும் அது மற்ற காரியங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதிகப்படியான சுதந்திரம் என்கிற பெயரில், அரசு இயற்றும் சட்டங்கள் தனிநபர் சிலருடைய உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றன. சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சில, சமீப காலங்களில், பல ஐரோப்பிய நாடுகளில் காரசாரமாக விவாதிக்கப்படுகின்றன. இதோ, அவற்றில் சில: அரசாங்க சட்டங்கள் எந்தளவுக்கு ஒரு நபரின் சொந்த வாழ்க்கையில் அதிகாரம் செலுத்த வேண்டும்? அது எந்தளவுக்கு பயன்தரும்? சுதந்திரத்தை அது எப்படி பாதிக்கிறது?
பொது உரிமைகளையும் தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய விவாதத்தை, செய்தித் தொடர்பு சாதனங்கள் கோடிட்டு காண்பிக்கின்றன. போதியளவு சான்று எதுவுமின்றி சில மதத் தொகுதிகள்மீது மூளைச்சலவை, பணம் பறித்தல், குழந்தை துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. அதுமட்டுமின்றி, பல கடுங்குற்றச் செயல்களை செய்ததாகவும் அவைமீது வீண்பழி சுமத்தப்படுகிறது. சிறுபான்மை மதத் தொகுதியினர் பற்றிய செய்திகளை செய்தித்துறை விரிவாக விளம்பரப்படுத்துகிறது. “கருத்து வேறுபாட்டுக்குழு” அல்லது “மத உட்பிரிவு” போன்ற இழிவான பெயர்களிட்டு அழைப்பது தினசரி வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது. சில சமயங்களில், அரசாங்கங்கள், பொது அபிப்பிராயங்களின் செல்வாக்கிற்கு அடிமைகளாகி இருக்கின்றன. இதனால், ஆபத்தானவை என்பதாக அழைக்கப்பட்ட கருத்து வேறுபாட்டுக் குழுக்களின் ஒரு பட்டியலையே தயாரித்திருக்கின்றன.
மதத்தையும் அரசையும் ஒன்றாக சேர்க்காமல், சகிப்புத்தன்மையையும் போற்றி பாதுகாத்த பெருமை பிரான்ஸையே சாரும். அது “தனியுரிமை, சமத்துவம், தோழமை” என்பவற்றின் தாயகம் என மார்தட்டிக் கொள்கிறது. இருப்பினும், அந்த நாட்டில் “புதிய மத இயக்கங்களை ஏற்கத்தகாததாக மறுப்பதற்கு உதவும் ஒரு கல்வி திட்டத்தை பள்ளிகளில்” அமல்படுத்த சிபாரிசு செய்யப்பட்டதென நம்பிக்கை மற்றும் மத சுதந்திரம்—ஓர் உலக அறிக்கை புத்தகம் கூறுகிறது. இப்படிப்பட்ட திட்டம் மத சுதந்திரத்தையே குழிதோண்டி புதைத்துவிடும் என்று அநேகர் எண்ணுகின்றனர். எந்த விதத்தில்?
மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள்
சட்டத்தை மதித்து அதற்கு கீழ்ப்படியும் எல்லா மதத் தொகுதிகளையும் அரசு சமமாக பாவிக்கும்போதுதான் உண்மையான மத சுதந்திரம் நிலவும். இதற்குமாறாக, அந்த அரசு அங்குள்ள மதத் தொகுதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியை மதம் என கருதமுடியாது என தீர்மானித்து, மற்ற மதங்களுக்கு அளிக்கும் விசேஷ சலுகைகளை மறுத்தால், மத சுதந்திரத்திற்கு சமாதி கட்டியதாகவே அர்த்தம். “ஒரு மதத்தை அங்கீகரிக்கப்பட்ட மதமாக அறிவிக்க தனக்குத்தான் உரிமையிருப்பதாக நினைத்துக்கொண்டு, விதிமுறையின்றி டிரைவர்களுக்கு லைசென்ஸ் அளிப்பதுபோல், அங்கீகாரம் வழங்கினால், மத சுதந்திரம் என்னும் புனித கருத்தும் காற்றோடு போய்விடும்” என்று, 1997-ல், டைம் பத்திரிகை சுட்டிக்காட்டியது. இவ்வாறு, விதிமுறை ஏதுமின்றி தீர்மானிப்பது “தெரிந்தோ அல்லது தெரியாமலேயோ சர்வாதிகாரத்திற்கு வழிநடத்தும்” என்று சமீபத்தில் ஒரு பிரெஞ்சு அப்பீல் கோர்ட் அறிவித்தது.
செய்தி ஒலிபரப்பு சாதனங்களை தாங்களே குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுபோல், ஒரு தொகுதியே ஆதிக்கம் செலுத்தினால் அடிப்படை சுதந்திரமே கேள்விக்குறியாகி விடுகிறது. வேதனை தரும் விஷயம் என்னவென்றால், இப்படிப்பட்ட நிலைதான் உலகில் அநேக நாடுகளில் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, மதரீதியாக எது சரி என்பதை விளக்கும் முயற்சியில், மதப் பிரிவுகளை எதிர்க்கும் அமைப்புகள் தங்களையே வழக்குத் தொடுப்பவையாகவும், நீதிபதியாகவும், வழக்கை ஆராயும் குழுவாகவும் (jury) உயர்த்தி வைத்துக்கொள்கின்றன. பின்னர், தங்களுடைய இந்தத் தவறான கருத்தை மக்கள்மீது திணிக்க செய்தி ஒலிபரப்பு சாதனங்களை பயன்படுத்துகின்றன. இருப்பினும், இப்படிச் செய்வதால், இந்த அமைப்புகள் சில சமயங்களில் “எந்தப் பிரிவினையை நீக்க போராடுவதாக உரிமை பாராட்டுகின்றனவோ அதே பிரிவினை வாதங்களைத் தூண்டிவித்து, ‘சூனிய-வேட்டை’ சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனவென” பிரெஞ்சு செய்தித்தாள் லா மான்டே கூறுகிறது. அதே செய்தித்தாள் இவ்வாறு கேள்வி எழுப்புகிறது: “சமுதாயத்தில் சிறுபான்மை மதத் தொகுதிகளை இழிவானவர்கள் என்று முத்திரைக் குத்துவது . . . அடிப்படை சுதந்திரங்களை அச்சுறுத்துகிறதல்லவா?” ஸீட்ஷ்ரிஃப்ட் ஃப்யூர் ரெலிஜ்யான்ஸ்ப்ஸ்யூகாலஜீயில் (மத மனோதத்துவத்திற்கான பத்திரிகை) மார்டின் கிரிலேயின் மேற்கோள் இது. “மதப் பிரிவுகளின் எண்ணிக்கையைவிட, அவற்றை சூனிய-வேட்டையாடுவதே விசனத்துக்குரிய விஷயம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்: சட்டத்தை மீறாத குடிமக்களின் அமைதியை கெடுக்காமல் விட்டுவிடுவதே. ஜெர்மனியிலும், மதமும் கருத்துக்களும் தடையின்றி, சுதந்திரமாக விடப்பட வேண்டும்” என விளக்கியிருக்கிறார். அதற்கு ஒரு உதாரணத்தை இப்பொழுது நாம் சிந்திக்கலாம்.
“நேர்மை மிக்க குடிமக்கள்”—இவர்களுக்கு சூட்டப்பட்ட பட்டம் “ஆபத்தானவர்கள்”
கத்தோலிக்க சர்ச் அதிகாரங்களின் அபிப்பிராயத்தின்படி, எந்த மதத் தொகுதி “எல்லா மதப் பிரிவுகளிலேயே மிகவும் ஆபத்தானது” என ஸ்பெய்னின் பிரபலமான செய்தித்தாள் ABC குறிப்பிடுகிறது? யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியே ABC இவ்வாறு குறிப்பிட்டது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். அவர்களுக்கு எதிராக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பாரபட்சமின்றி, சரியான நோக்கோடு இருக்கின்றனவா? மற்ற மூலங்களில் இருந்து பெற்ற அறிக்கைகளை கவனியுங்கள்:
“வரி கட்டாமல் ஏய்கக்கூடாது என்றும், போர்களிலோ அது சம்பந்தப்பட்ட வேலையிலோ ஈடுபடக்கூடாது என்றும், திருடக்கூடாது என்றும் சாட்சிகள் மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். பொதுவாக செல்ல வேண்டுமென்றால், இந்த வாழ்க்கைப் பாணியை மற்றவர்கள் பின்பற்றினால், சமுதாயமாக ஒன்றுசேர்ந்து வாழ்கிற தரம் முன்னேற்றமடைய வழிவகுக்கும்.“—செர்கியோ அல்பெசனோ டேலன்டோ, நவம்பர்-டிசம்பர் 1996.
“குறிப்பிட்ட சில சமயங்களில், [யெகோவாவின் சாட்சிகளுக்கு] எதிராக பரப்பப்படும் மறைமுகமான குற்றச்சாட்டுகளுக்கு முற்றிலும் மாறாக, அவர்கள் அரசு நிறுவனங்களுக்கு சிறிதளவேனும் ஆபத்து விளைவிப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவர்கள், சமாதானத்தை நாடும், கடமையுணர்வுடைய, அதிகாரங்களை மதிக்கும் குடிமக்கள்.”—பெல்ஜிய பாராளுமன்றத்தின் துணைத்தலைவர்.
“கூட்டுக் குடியரசு முழுவதிலுமே, யெகோவாவின் சாட்சிகளே மிகவும் நேர்மையான மக்கள்.”—ஜெர்மானிய செய்தித்தாள் சின்டல்ஃபிங்கர் ட்ஸீடுங்.
“[யெகோவாவின் சாட்சிகளை] ஒரு முன்மாதிரியான குடிமக்களாக மதிக்கலாம். அவர்கள் தவறாமல் வரி செலுத்துகின்றனர், வியாதியஸ்தரை நன்கு கவனித்துக் கொள்கின்றனர், படிப்பறிவில்லாமையை நீக்க அரும்பாடு படுகின்றனர்.”—ஐமா செய்தித்தாள் சான் பிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர்.
“நிலையான தாம்பத்திய உறவுகளைக் காத்துக்கொள்வதில் மற்ற பிரிவினர்களைக்காட்டிலும் யெகோவாவின் சாட்சிகள் பெரும் வெற்றி கண்டிருக்கின்றனர்.”—அமெரிக்கன் எத்னாலஜிஸ்ட்.
“ஆப்பிரிக்க நாடுகளிலேயே யெகோவாவின் சாட்சிகள்தான் நேர்மை தவறாத, கடும் உழைப்பாளிகள்.”—டாக்டர் ப்ரையன் வில்சன், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்ஸிட்டி.
“மனசாட்சிக்கான சுதந்திரத்தை விரிவாக்குவதில், கடந்த பல பத்தாண்டுகளாக, இந்த விசுவாசத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர்.”—நாட் ஹென்டாஃப், பேச்சுரிமை எனக்கு மட்டுமே—ஆனால் உனக்கு உரியதல்ல (ஆங்கிலம்).
“அவர்கள் . . . மக்களாட்சியின் மிக மேன்மையான சில காரியங்களைப் பேணிக் காப்பதில் அதிகம் சாதித்திருக்கின்றனர்.”—பேராசிரியர் சி. எஸ். ப்ரேடன், இவர்களும் நம்புகின்றனர் (ஆங்கிலம்).
மேலே சொல்லப்பட்ட குறிப்புகள் சுட்டிக்காட்டுகிறபடி, உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் முன்மாதிரியான குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும், அவர்கள் இலவச பைபிள் கல்வித் திட்டத்திற்கும் குடும்ப உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் புகழ்பெற்றவர்கள். மிக முக்கியமாக, ஆப்பிரிக்காவில், இவர்களுடைய எழுத்தறிவு வகுப்புகளின் மூலம் லட்சக்கணக்கானோர் நன்மை அடைந்திருக்கின்றனர். பல பத்தாண்டுகளாக அவர்கள் செய்துவரும் மனிதாபிமான செயல்களின்மூலம் ஏராளமான ஜனங்கள் புத்துணர்வு அடைந்திருக்கின்றனர்.
குறிக்கோளே முக்கியம்
ஒன்றுமறியாத அப்பாவி மக்களை இரையாக்கிக் கொள்ளும் பழிபாவங்களுக்கு சிறிதேனும் அஞ்சாதவர்களால் நிரம்பி வழிகிறது சமுதாயம். இதன் காரணமாக, மத உரிமைகளைப் பற்றிய கேள்வி எழும்போது, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது மிகமிக அவசியம். பத்திரிகை நிருபர்கள், அநேக சந்தர்ப்பங்களில், மதத்துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களை அணுகுவதில்லை. ஆனால், அங்கத்தினர்கள் குறைந்துகொண்டே போகும் சர்ச்சுகள் தரும் தகவல்களின் பேரிலேயே அல்லது சந்தேகத்துக்கிடமான நோக்கத்தை உடைய மதப் பிரிவுகளை எதிர்க்கும் அமைப்புகள் தரும் தகவல்களின் பேரிலேயே சார்ந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட தகவல்களை வைத்து செயல்படுவது மத சுதந்திரத்தை மேம்படுத்த எந்தளவுக்கு உதவும்? உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளை “மதப் பிரிவுகளிலேயே மிகவும் ஆபத்தானவர்கள்” என அழைத்த செய்தித்தாள், இந்த விளக்கத்தை “[கத்தோலிக்க] சர்ச்சின் நிபுணர்களிடம்” இருந்து பெற்றதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. மேலும், மதப் பிரிவுகளைப் பற்றிய இப்படிப்பட்ட கட்டுரைகளில் பெரும்பாலானவை அவற்றை எதிர்க்கும் அமைப்புகளிடத்தில் இருந்து வந்தவையே என ஒரு பிரெஞ்சு பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மெய்யான தகவல்களைப் பெறுவதற்கான அதிக பாரபட்சமற்ற வழி இது என நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?
“ஒரு மதத்திற்கும், மத உட்பிரிவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதற்கு இவை [மதப் பிரிவுகளை எதிர்க்கும் அமைப்புகள்] தரும் விளக்கம் முற்றிலும் ஜோடிக்கப்பட்டதே. எனவே அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது” என மனித அடிப்படை உரிமைகளின்பேரில் அக்கறை காட்டும் ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளும் பன்னாட்டு நீதிமன்றமும் கூறுகின்றன. அப்படியெனில், “மத உட்பிரிவுகள்” எனும் இழிவான பதங்களை சிலர் ஏன் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்? மத சுதந்திரம் அச்சுறுத்தப்படுவதற்கு மற்றுமொரு சான்று இதுவே. இந்த முக்கியமான, அடிப்படை சுதந்திரத்தை எப்படி காப்பது?
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
மத சுதந்திரத்திற்காக வாதாடியவர்கள்
16-ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் மதப் போர்களின் இரத்தக் களரியிலிருந்து மத சுதந்திரத்திற்கான அறைக்கூவல் உச்சஸ்தாயியில் எழுந்தது. இன்று, மத சுதந்திரத்தைப் பற்றி பேசும்போது இந்த அறைக்கூவல்களை சிந்திப்பது அவசியமே.
செபாஸ்டியன் ஷடெயான் (1515-63): “முரண்கோட்பாட்டாளர் என்றால் என்ன? நம்முடைய கருத்துக்களுக்கு இணங்காத அனைவரும் முரண்கோட்பாட்டாளர்கள் என்பதாகவே நாம் கருதுகிறோம். இதைத்தவிர வேறே காரணங்கள் எனக்கு தெரியவில்லை. . . . இந்த பிராந்தியத்திலோ அல்லது நகரத்திலோ நீங்கள் மெய்யான விசுவாசியாக கருதப்படலாம். ஆனால், அடுத்த பிராந்தியத்திலோ அல்லது நகரத்திலோ நீங்கள் முரண்கோட்பாட்டாளர்களாக கருதப்படுவீர்கள்.” மத சுதந்திரம் பற்றிய விவாதத்தின் மையப் பொருளை, பிரசித்திப் பெற்ற பிரெஞ்சு பைபிள் மொழிபெயர்ப்பாளரும் சகித்திருத்தலுக்காக வலுவாக வாதாடுபவருமான ஷடெயான் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறார்: முரண்கோட்பாட்டாளர் யார் என்பதை எவர் விளக்குவது?
டர்க் வோல்கர்ட்சன் கோர்ன்ஹர்ட் (1522-90): “கடந்த காலத்தைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம் . . . எருசலேமில் இயேசுதாமேயும் ஐரோப்பாவில் பல உயிர்த் தியாகிகளும் . . . தங்களுடைய சத்தியத்தின் வார்த்தைகளால் [சமுதாயத்தை] குழப்பிவிட்டனர். ‘குழப்புதல்’ என்ற பதம் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கப்பட வேண்டும்.” மதத்தால் வேறுபடுவதை சமூக ஒழுங்கை குலைப்பதோடு ஒருபோதும் இணைக்கக்கூடாது என கோர்ன்ஹர்ட் விவாதிக்கிறார். அவர் இவ்வாறு வினவுகிறார்: மனசாட்சிக்கு பயந்து சட்டத்தை மதித்து, அதற்கு கீழ்ப்படிபவர்கள் உண்மையிலேயே சமூக ஒழுங்கிற்கு ஓர் அச்சுறுத்தலா?
ப்யெர் ட பெல்வா (1540-1611): “வித்தியாசமான மதங்கள் அரசின் சீர்குலைவிற்கு அடிகோலுகின்றன என நம்புவது அறியாமையே.” மத வட்டாரத்திலிருந்து வருகிற அழுத்தங்களுக்கு கூழைக்கும்பிடு போடும் அரசாங்கமாக இருந்தால் ஒழிய, அரசு அமைதி மத ஒருமைப்பாட்டின்பேரில் சார்ந்ததல்ல என மதப் போர்களின் சமயத்தில் (1562-98) எழுதிய பிரெஞ்சு வழக்கறிஞர், பெல்வா வாதிடுகிறார்.
தாமஸ் ஹெல்விஸ் (சுமார் 1550-1616): “அவருடைய [ராஜாவின்] மக்கள் எல்லா சட்டங்களுக்கும் கீழ்ப்படியும் உண்மையுள்ள பிரஜைகளாக இருந்தால், இதைவிட வேறே என்ன வேண்டும்.” பாப்டிஸ்ட் சர்ச்சை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான ஹெல்விஸ், சர்ச்சும் அரசும் தனித்தனியே பிரிந்திருப்பதை ஆதரித்து எழுதினார். எல்லா சர்ச்சுகளுக்கும் மத உட்பிரிவுகளுக்கும் மத சுதந்திரத்தைக் கொடுத்து, மக்கள்மீதும் உடமைகளின்மீது மாத்திரமே அதிகாரம் செலுத்துவதில் திருப்தி காணும்படி அரசரை உந்துவித்தார். அவருடைய எழுத்துக்கள் தற்போது சர்ச்சையில் இருக்கும் ஒரு முக்கியமான கேள்வியை கோடிட்டுக் காட்டுகிறது: மக்களின் ஆன்மீக விஷயங்களை அரசு எந்தளவுக்கு கட்டுப்படுத்தலாம்?
அநாமதேய எழுத்தாளர் (1564): “மனச்சாட்சிக்கான சுதந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், தனிநபர் ஒருவர், அவர் ஏற்றுக் கொள்ளாத மதத்தை பின்பற்றாமல் இருக்க அரசு அனுமதிப்பது மாத்திரமே போதாது; அதே காரணத்தின் அடிப்படையில் அவர் ஏற்றுக்கொள்ளுகிற ஒன்றை பின்பற்றுவதை அரசு தடைசெய்யாதிருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.”
[படங்கள்]
டெர்டுல்லியன்
ஷடெயான்
ட பெல்வா
[படத்திற்கான நன்றி]
எல்லா போட்டோக்களும்: © Cliché Bibliothèque Nationale de France, Paris