அடிமைத்தனத்தின் கோரமுகத்தை திரும்பிப் பார்த்தல்
ஆப்பிரிக்க நாட்டில், செனிகல் கடற்கரையை அணைத்து நிற்கும் டாகார் என்ற நகரத்திற்கு அருகில்தான் எல் ட காரே என்ற தீவு உள்ளது. 312 வருடங்களாக, 1848 வரை, செழித்தோங்கிய அடிமை வியாபாரத்திற்கு மையமாக விளங்கியது இத்தீவு. 1763-க்கும் 1775-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டுமே காரேயிலிருந்து நான்டெஸ் துறைமுகத்தின் வழியாக 1,03,000-க்கும் அதிகமான அடிமைகள் வியாபாரம் செய்யப்பட்டனர் என்பதை பிரெஞ்சு துறைமுகமான நான்டெஸ்ஸிலுள்ள வரலாற்று ஆவணக் கூடம் காட்டுகிறது.
இன்று, நாளொன்றுக்கு சராசரி 200 பார்வையாளர்கள் மிஸான் டெஸ் எஸ்கலா என்ற ஸ்லேவ் ஹவுஸ் மியூஸியத்தைப் பார்வையிட வருகின்றனர். நிராதரவான பலியாட்கள் பட்ட பயங்கர கொடுமைகளில் சிலவற்றை டூர் கைடு ஜோசப் நிடையா விலாவாரியாக எடுத்துரைத்தார்: “எங்களுடைய முன்னோர்கள் நாடுகடத்தப்பட்டார்கள், குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டார்கள், ஆடுமாடுகளைப் போல உடம்பில் அடையாளம் போடப்பட்டார்கள்.” முழு குடும்பத்தையும் சங்கிலியால் பிணைத்து கொண்டு சென்றார்கள். “அம்மா அமெரிக்காவுக்கும் அப்பா பிரேஸிலுக்கும் பிள்ளைகள் ஆன்டிலிஸுக்கும் என இப்படி ஆளுக்கொரு பக்கம் அனுப்பப்படலாம்” என்று அந்த கைடு விவரித்தார்.
“எடை போட்ட பிறகு, ஆண்களை அவர்களுடைய வயது, பிறப்பிடத்தை வைத்து மதிப்பிட்டார்கள். சில இனத்தவர்களுக்கு அவர்களுடைய கட்டுமஸ்தான உடலின் நிமித்தம் அதிக கிராக்கி இருந்தது; அல்லது அபரிமிதமாக இனவிருத்தி செய்பவர்களாக கருதப்பட்டார்கள். உதாரணமாக, யொருபா, ‘பொலி குதிரைகளாக’ மதிக்கப்பட்டார்கள்” என்று விளக்கினார் நிடையா.
ஏலம் விடுவதற்கு முன்பு, குறைந்த எடையுள்ள கைதிகளை வாத்துக்களைப் போல கொழுக்க வைத்தார்கள். அடிமை வியாபாரிகள் ஒவ்வொரு இரவும் இளம் பெண்களை தங்களுடைய பாலுறவு இன்பத்திற்காக பயன்படுத்தினார்கள். கிளர்ச்சி செய்யும் அடிமைகள் தூக்கிலிடப்பட்டார்கள், குரல்வளையில் அல்ல, வேதனையை நீடிப்பதற்காக மார்புக்கூட்டில் கட்டி தொங்கவிடப்பட்டார்கள்.
1992-ல் இரண்டாம் போப் ஜான் பால் காரேயை பார்வையிட்டார். “அடிமை வியாபாரத்திற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டார்; மேலும், ஆப்பிரிக்க அடிமைத்தனத்தை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்டிருந்த கத்தோலிக்க மிஷனரிகள் உட்பட, அதில் பங்குகொண்ட அனைவர் சார்பாகவும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்” என்று அறிவித்தது தி நியூ யார்க் டைம்ஸ்.
ஆனால், நடந்ததை அனைவருமே ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாய் இல்லை. இரண்டரை வருடங்களுக்கு முன்பு, அதாவது நான்டெஸ் பதிவுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, காரேயில் வருடத்திற்கு 200 முதல் 500 அடிமைகள் மட்டுமே விற்கப்பட்டார்கள் என பிரெஞ்சு ஜெஸுட் அடித்துக் கூறினார். திரு. நிடையா சொன்னார்: இதுவரை, “இந்த மாபெரும் கொடுமையை ஒப்புக்கொள்ளவோ சமாளிக்கவோ இந்த உலகம் ஒருபோதும் முன்வரவில்லை.”
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Gianni Dagli Orti/Corbis
Yann Arthus-Bertrand/Corbis
Reproduced from DESPOTISM —A Pictorial History of Tyranny