ரியோ டி ஜெனிரோ—அழகுப் பெட்டகம்
பிரேஸிலில் இருந்து விழித்தெழு! நிருபர்
ரியோடி ஜெனிரோவில் இல்லாததா! கடற்கரைகளும், மலைகளும், ஏரிகளும், வெப்பமண்டலக் காடுகளும் அப்பப்பா கண்கொள்ளாக் காட்சிதான். “நவரத்தினங்களை வாரி இறைத்தாற்போல் கவர்ந்திழுக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகள் எல்லாப் பக்கமும் கொட்டிக்கிடக்க, எந்தப் பக்கம் முதலில் பார்ப்பது! தீர்மானிப்பது கஷ்டமே” என அந்நாட்டை சுற்றிப் பார்த்த ஒருவர் வியந்தார். ரியோ டி ஜெனிரோ, அல்லது வெறுமனே ரியோ, உலகிலுள்ள மிக அழகிய நகரங்களுள் ஒன்றாக அநேகரால் கருதப்படுகிறது. “ரியோ” என்ற பதத்தின் அர்த்தம் “ஆறு.” ஆனால், இந்நகரமோ வளைகுடா மீது கம்பீரமாக வீற்றிருக்கிறது.—பக்கம் 18-ல் உள்ள பெட்டியைக் காண்க.
ரியோவின் நகர்ப்புறத்தில் 1.1 கோடி மக்கள் வாழ்கின்றனர். வன்முறை, வேலையில்லா திண்டாட்டம், வீட்டு வசதி இல்லாமை போன்ற நகர்ப்புறத்துக்கே உரிய பிரச்சினைகளும் இருக்கின்றன. இதுமட்டுமா! தூய்மைக்கேடு பற்றியும் தாறுமாறான போக்குவரத்து பற்றியும் சொல்லவும் வேண்டுமா! இவை இப்படி இருந்தாலும், ரியோவின் மக்கள் அந்நகரத்தை சிடாடே மாராவில்யோசே (அற்புதமான நகரம்) என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு கேரியோகாவின் a சொற்களில் சொல்ல வேண்டுமெனில்: “ரியோ மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும் ஒரு நகரம். கதிரவன் புன்னகை பூக்கும் நாளில் வேலைக்கு போகும்போதும் வரும்போதும் நாம் பார்க்கும் கடற்கரைகளும் மலைகளும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன.” மிதமிஞ்சி வருணிப்பது போல் தோன்றுகிறதா? நீங்களே வந்து பாருங்களேன்.
வளைகுடாக்கள், கடற்கரைகள், புன்னகை பூக்கும் கதிரவன்
நம்முடைய டூரை ரியோவின் பிறப்பிடமாகிய கானபாரா வளைகுடாவில் இருந்து துவங்குவோமா? அதனுடைய 380 சதுர கிலோமீட்டர் பரப்பு முழுவதிலும் காடுகளடங்கிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவை மலைகளாலும் குன்றுகளாலும் சூழப்பட்டு இருக்கின்றன. இவற்றில் மிகப் பிரபலமானவை கார்கோவடோ (“கூனல் முதுகு” இதன் அர்த்தம்) மலையும் ஷூகர்லோஃப் (போர்ச்சுகீசில், பாவோ டி அக்யூகர்) மலையுமே. கடல் மட்டத்திலிருந்து 704 மீட்டர் உயரத்தை கார்கோவடோவின் முகடு எட்டிப்பிடிக்கிறது. 30 மீட்டர் உயரமும் 1,145 டன் எடையுள்ள, கைகளை விரித்து நிற்கும் இயேசுவின் சிலை இம்முகட்டிற்கு மணிமுடியாக அமைந்துள்ளது. ஷூகர்லோஃப் மலை, 395 மீட்டர் உயரமே உடையது. அந்தக் காலத்தில் குடியேறியவர்களின் சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தப்பட்ட கூம்பு வடிவ தோற்றமே இதற்கு இப்பெயரை சம்பாதித்து தந்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் சிறிய ட்ரெயினிலோ, ஏதாவதொரு வண்டியின் மூலமோ கார்கோவடோ மலையில் ஏறலாம். அங்கிருந்து கேபிள் காரில் ஜம்மென்று அமர்ந்து பயணிகள், ஷூகர்லோஃபின் முகட்டிற்கு சொகுசாக செல்லலாம். இங்கிருந்து ரியோ நகரைப் பார்க்கும்போது, கருநீலக் கடல் ஒரு புறமும் வனப்புமிக்க பச்சை பசேல் காடுகளும் தத்தித்தத்திச் செல்லும் சிறு அலைகளைக் கொண்ட ராட்ரீகோ டீ ஃப்ரேடஸ் ஏரி மறுபக்கமும் இருக்க இடையில் ஒய்யாரமாய் இருக்கும் ரியோவின் செழிப்பு உங்களை திணறடித்துவிடும்.
மென்மையான வெள்ளை மணலும் பிரகாசிக்கும் சூரியனும் ரியோவின் சுற்றுலாப் பயணிகளின் ஆசைக் கனவுகளை நனவாக்கிடும். கோடைகால வெப்பம் 40 டிகிரி செல்ஷியஸை தொடும்போது, ரியோவின் 80 கிலோமீட்டர் நீள கரையோரங்களில் இருக்கும் 70-க்கும் அதிகமான கடற்கரைகளில் எள் விழக்கூட இடமில்லாத அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் மொய்க்க ஆரம்பிப்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். எது மிகச் சிறந்த கடற்கரை? அது, கடற்கரைக்கு செல்பவர்களைப் பொருத்தது என்பதே பதில். கேரியோகாக்களுக்கு, அடிக்கடி விஜயம் செய்யும் இடமும், படிக்கும் அறையும், கால்பந்தாட்ட மைதானமும், வாலிபால் விளையாடுமிடமும், மதுபான ஸ்டாலும், சிற்றுண்டி சாலையும், விளையாட்டு மைதானமும், கச்சேரி சபாவும், ஜிம்னாஸியமும், அலுவலகமும், நீச்சலடிக்க உகந்த இடமும் கடற்கரைதான். ஒவ்வொரு காலையிலும், ரியோவின் வீதிகளில் ஓட்டக்காரர்களும் சைக்கிள் சவாரி செய்பவர்களும் நிரம்பி வழிவர். நல்ல வெயில் நாளில், எப்பொழுதுமே கடற்கரைகளில் மக்கள் ஜேஜேவென மொய்த்துக் கொண்டிருப்பர். கேரியோகாக்கள், பார்ப்பதற்கு சொகுசான வாழ்க்கை விரும்பிகள் போல் தோன்றலாம். ஆனால், இதற்காக அவர்கள் அதிகம் உழைக்க வேண்டிய அவசியமிருக்கிறது.
19-ம் நூற்றாண்டின் இறுதிவரை, கானபாரா வளைகுடாவின் கடற்கரைகளைச் சுற்றியே ரியோ நகரம் உருவானது. பிறகு, சமுத்திரக் கடற்கரைகளை வளைகுடாவுடன் இணைக்கும் சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டன. இவை, நகரத்தின் தென்பகுதியின் வளர்ச்சிக்கு அடிகோலின. 1923-ல், கோப்பக்கேபெனா பேலஸ் ஹோட்டல் திறக்கப்பட்டது. இதுதான், தென் அமெரிக்காவில் கட்டப்பட்ட ஆடம்பர ஹோட்டல்களில் முதலாவது. கோப்பக்கேபெனா—“சின்னஞ்சிறு சமுத்திர இளவரசி”—மிகப் பிரபலமான முதல் கடற்கரை. பின்னர், 1960-களில், எழுத்தாளர்களும் மேதைகளும் சந்திக்கும் இடமாயிற்று ஈபெனிமா கடற்கரை. ஈபெனிமாவில் ஏற்றுக்கொள்ளப்படாத பாணி, பிரேஸில் முழுவதுமே செல்லுபடியாகாது. அண்மையில் வளர்ச்சி அடைந்த ரியோவின் மிகப் பெரிய கடற்கரைகளுள் ஒன்று பாரா டா டிஸூகா. (18 கிலோமீட்டர் நீளமுடையது) பிரேஸிலின் மியாமி என்பது இதன் செல்லப்பெயர். பல புதிய குடியிருப்பு கட்டிடங்களையும் நகரத்தின் மிகப் பெரிய வர்த்தக வளாகத்தையும் இங்கு காணலாம்.
நகரத்தால் சூழப்பட்ட காடு
ரியோவின் ரம்மியமான இயற்கைக் காட்சிகளுள் முக்கியமானது மனதை மயக்கும் பச்சைப் பசேல் மரங்களின் தொகுதியே. 350 ஏக்கர் பரப்பளவில் அமைதி தவழும் தாவரப் பூங்கா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. கூச்சல் குழப்பம் நிறைந்த கடற்கரையில் இருந்து ஒருசில நிமிடங்களில் இங்கு வந்து சேர்ந்து விடலாம். 19-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை 6,200-க்கும் அதிகமான வகை வெப்பமண்டல தாவரங்களும் மரங்களும் அலங்கரிக்கின்றன.
நகர எல்லைக்குள்ளே இருக்கும் மற்றொரு புகலிடம் டிஜூகா காடு. இது ரியோவின் மையப்பகுதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 100 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவு உடையது. உலகிலேயே மிகப் பெரிய நகர்ப்புற காடு என்ற பெருமைக்குரியது. ஒரு சமயம், பிரேஸிலின் கரையோரம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்த அட்லாண்டிக் காட்டின் ஒரு பகுதியை இக்காடு உள்ளடக்குகிறது. கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் பிங்க் ஸெகிடீபா மரங்களையும் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிறப் பூக்களை உடைய கானலஸ்-ஸான்டஸ் மரங்களையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கலாம். மார்ஃபோ வகை நீல நிற பட்டாம்பூச்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும். இங்கே பச்சை வண்ண தலையுடைய அல்லது சிவப்பு நிற கழுத்தையுடைய டேன்ஜர் குருவிகளையும் காண்பது காணக் கண்கொள்ளா காட்சி.
முக்கிய ஸ்தலத்திற்கு ஒரு பயணம்
ரியோவின் மையப்பகுதி சந்தடி நிறைந்தது. இங்கும் அங்கும் வேகமாக செல்லும் ஜனங்களுக்கு போட்டியாக பேரிரைச்சலும் உஷ்ணமும் சேர்ந்து அந்த இடத்தையே அமளிதுமளி ஆக்கிவிடுகிறது. எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்து துணிவகைகள், வாசனைத்திரவியங்கள், கால் ஆணிக்காக தயாரிக்கப்பட்ட மருந்து வகைகள் வரை, சொல்லப்போனால் எல்லாப் பொருட்களையும் விற்கும் சில்லறை வியாபாரிகளும் பாதசாரிகளும் நெரிசலில் ஒருவரோடொருவர் முட்டி மோதிக்கொள்ளாத குறைதான். ஆர்கோஸ் டா லாபா என்றழைக்கப்படும் 42 ஸ்திரமான கிரானைட் வளைவுகளைக் கொண்ட பாலத்தின் மேல் செல்லும் ட்ராமில் பயணம் செய்வதே அலாதி இன்பம்தான். இது, 1712-க்கும் 1750-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியர்களாலும் அடிமைகளாலும் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இது ரியோவின் மையப்பகுதிக்கு தண்ணீர் கொண்டுவரும் கால்வாயாக பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 1896-ல், இந்தக் கால்வாயின்மீது ட்ராம் ஓட ஆரம்பித்தது. இதுவே, அதை ஒரு மேம்பாலமாக மாற்றியது.
நகரத்தின் மையப்பகுதியில், கண்டு ரசிக்கவேண்டிய மற்றொன்று அதன் ஐரோப்பிய வாடை வீசும் பகுதியே. 1906-1908-க்குள், நுண்கலைகளின் தேசிய அரும்பொருட் காட்சியகம் கட்டப்பட்டது. இதைப் பார்த்ததுமே, பாரீஸில் இருக்கும் லியூவர் அரும்பொருட் காட்சியகம்தான் நினைவுக்கு வரும். இதன் வண்ணவண்ண சட்டங்களும் மொசைக் டைல்களும் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தை ஞாபகப்படுத்துகின்றன. மற்றுமொரு புகழ்பெற்ற கட்டிடம் முனிசிபல் தியேட்டர். இது 1909-ல் திறக்கப்பட்டது. 2,357 பேர் அமரும் வசதி உள்ளது. பாரீஸ் ஓபரா ஹாலின் பிரதிபிம்பம் இது.
சாக்கரும் சாம்பாவும்
கேரியோகாக்கள் கால்பந்தாட்ட ரசிகர்கள். பிரபலமான விளையாட்டுக் குழுக்களின் போட்டிகள் வந்தால் போதும் மாராகானான் விளையாட்டுத் திடல் ஜேஜேவென்று மக்கள் திரளால் நிரம்பி வழியும். இது உலகிலேயே மிகப் பெரிய கால்பந்தாட்டத் திடல் என்பது நன்கு அறியப்பட்டதே. இதில் நடந்த சில போட்டிகளுக்கு 2,00,000 பேர் வரை கூடிவந்திருக்கின்றனர். ஆனால் இப்பொழுதோ, ரசிகர்களின் பாதுகாப்பையும் வசதியையும் முன்னிட்டு இதில் அதிகபட்சமாக 1,00,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரியோகாக்களுக்கு பிடித்தமான நடனம் சாம்பா; இது பிறந்தது ஆப்பிரிக்காவில். நகரம் முழுவதிலும் இருக்கும் சாம்பா பள்ளிகள், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான டான்ஸர்களை—ஆண்கள், பெண்கள், பிள்ளைகள்—காந்தம் போல் கவர்ந்திழுக்கிறது. நாற்பது நாள் நோன்புக்கு சற்று முன்பு, கேளிக்கைக் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 5,000 டான்ஸர்கள் என எல்லாப் பள்ளிகளும் அணிவகுப்பில் கலந்து கொள்ளும். இதற்காகவே சிறப்பாக கட்டப்பட்ட மைதானம் சாம்போட்ரோமோ. அதில், இரண்டு இணையான கான்கிரீட் திறந்தவெளி உயர்காட்சி மேடைகள் உள்ளன. அதிலிருந்து 1,00,000 வசதியாக இருந்து இந்த அணிவகுப்பைப் பார்க்கலாம். வருந்தத்தக்க விதத்தில், இந்தக் கேளிக்கைக் கொண்டாட்டம், குடிவெறியில் கார் ஓட்டுவது, போதை மருந்து துர்ப்பிரயோகம், வரைமுறையற்ற பாலுறவு ஒழுக்கக்கேடு போன்றவை கட்டுக்கடங்காமல் போவதற்கு இழிபெயர் பெற்று வருகிறது.
ரியோவின் பிரச்சினைகள்
பல பத்தாண்டுகளாக, ரியோ டி ஜெனிரோவே பிரேஸிலின் தொழில் மையமாக இருந்தது. ஆனால், இப்பெருமையை 1950-களில் சாவோ பாலோ தட்டிப்பறித்துவிட்டது. சொகுசு வாழ்க்கைக்கான மோகத்தால் அநேகர் கிராமங்களை அம்போ என்று விட்டுவிட்டு ரியோ நகரத்திற்கு படை எடுத்தனர். இதனால், நகர மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் அடுக்குமாடி கட்டிட வீடுகளில் புளிமூட்டை போல் நெருக்கப்படுகின்றனர். வசதி வாய்ப்பற்றவர்களோ, மலைகளில், திடீரென காளான் போல் முளைத்த குடியிருப்புத் தொகுதிகளை—குச்சுவீடுகளை அல்லது ஃபாவெலாஸ்களைக்—கட்டிக் கொண்டனர். முதன் முதலில் கழிக்கப்பட்ட பெட்டிகள், டின்களைக் கொண்டு இவ்விருப்பிடங்களை அமைத்து, அவற்றை துத்தநாகத் தகடுகளால் மூடினர். தண்ணீர்க்குழாய்களோ, மின்சாரமோ, சாக்கடை நீருக்கான போக்கிடமோ இல்லை. ஆனால், அவர்கள் வசித்த பகுதி வேலை செய்யும் இடத்திற்கு அருகாமையில் இருந்ததுதான் வாழ்க்கையை இலகுவாக்கியது. இன்றோ, பிரமாண்டமான அடுக்குமாடி கட்டிடங்களைத் தொட்டாற்போல், மலைப்பகுதியையே மூடிமறைக்கும் குடிசைப்பகுதிகள், கோப்பக்கேபெனா, ஈபெனிமா மலைகளுக்கு பார்டர் வைத்தாற்போல் அமைந்திருக்கின்றன. மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் போல் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருக்கும் இந்த வித்தியாசத்தை இங்கே இருப்பதுபோல் உலகில் சில பகுதிகளே தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன.
இந்தச் சேரியில் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகள் இப்போது செங்கற்களால் கட்டப்படுகின்றன. வீதிகளை அமைத்து, வசதிகளை உருவாக்குவதன் மூலம் இப்பகுதிகளை முன்னேற்றுவிக்க நகர்ப்புற கட்டிடங்களை திட்டமிடுபவர்கள் முயன்றனர். ஆனால், அது லேசுப்பட்ட விஷயமல்ல. சமீப கணக்கெடுப்பின்படி, 9,00,000-க்கும் அதிகமானோருக்கு ரியோவின் 450-க்கும் மேற்பட்ட சேரிப்பகுதிகளே தஞ்சம் அளிக்கின்றன. இவற்றில் மிகப் பெரிய குடியிருப்பு ரோசின்யே ஆகும். இதில் 1,50,000 பேர் வாழ்கின்றனர். இங்கு வசிக்கும் அன்டோன்யூ, ஈபெனிமாவில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்கிறார். அவர் இதை “நகருக்குள்ளே ஒரு நகரம்” என்பதாக விளக்குகிறார். கேபிள் டிவி, ரேடியோ, FM ரேடியோ ஸ்டேஷன், தேர்ச்சி பெற்ற கால்பந்தாட்ட குழு, சாம்பா பள்ளி ஆகியவை இங்கு வசிப்பவர்களின் வசதிக்காக இருக்கின்றன. ஆனால், மனதைப் பிசையும் கொடிய மறுபக்கமும் இந்த வாழ்க்கைக்கு உண்டு. கோடை மழை, மலைகளில் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. இது அநேகர் காயமுறுவதிலும் ஏன் மரணத்திலும்கூட முடிவடைகிறது. மீண்டும் காடாக்கும் சமீபத்திய திட்டம், ஆபத்தான சில இடங்களில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றி இருக்கின்றன. இது ஓரளவு நிலைமையை முன்னேற்றுவித்து இருக்கிறது.
மற்றொரு மிகப் பெரிய பிரச்சினை குற்றச்செயலாகும். போதை மருந்து வியாபாரத்தை தொழிலாகவே செய்யும் வாலிபர்களே இதன் பிரதான பலியாடுகள். இங்கு வசிப்பவர்களுக்கும் போதை மருந்து வியாபாரிகளுக்கும் இடையே உள்ள உறவை குறிப்பிட்ட விதிகள் தக்கவைக்கின்றன. “இங்கே கொள்ளைகள் இல்லை, கற்பழிப்போ அல்லது வழிப்பறியோ இல்லை. இந்த மாதிரி குற்றச்செயல்களை செய்ய எவரும் துணிவதில்லை. அப்படி செய்தால் மரணதண்டனைதான் முடிவு என்பதை ஜனங்கள் அறிவார்கள்” என இப்படிப்பட்ட ஒரு சேரிப்பகுதியில் 40 ஆண்டுகள் வாழ்ந்து வருகிற ஸாவோன் சொல்லுகிறார். இங்கு வசிப்பவர்களின் ஆதரவையும் இரக்கத்தையும் பெற போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மற்ற குற்றச்செயல்களில் முனைபவர்களைத்தான் தண்டிப்பர். “நிலைமைகள் ஓரளவுக்கு மாறினாலும், சவ அடக்கத்திற்கும், மருந்துக்கும் சாப்பாட்டுக்கும், வீட்டு வாடகை கட்டுவதற்கும், கேளிக்கை செலவுகளுக்கும் இங்கு வசிப்பவர்கள் இன்னும் போதைமருந்து வியாபாரிகளையே நம்பி இருக்கின்றனர்” என ஸாவோன் மேலும் விளக்குகிறார்.
மற்ற சவால்கள்
மலைகளுக்கும் சமுத்திரத்திற்கும் நடுவே வீற்றிருக்கும் ரியோ நகரம் சேறும் சகதியும் நிறைந்த சதுப்பு நிலத்தில்தான் வளர்ந்துள்ளது. பெரிய ஒரு மாநகரமாக வளர இந்த இடம் எவ்விதத்திலும் சாதகமாய் இல்லை. காலாகாலமாக, “சேறுசகதி, மலைகள், கடல் ஆகிய மூன்று விரோதிகளுக்கு எதிராக போரிடுவது” அவசியமாயிற்று என ரியோ டி ஜெனிரோ—சிடாடே ஈ ரஸீயன் (ரியோ டி ஜெனிரோ—நகரம் மற்றும் பிராந்தியம்) என்ற புத்தகம் விளக்குகிறது. சுற்றுவட்டாரத்திலுள்ள பல இடங்களை இணைக்க கணக்கிலடங்கா சுரங்கப்பாதைகளை கட்டியும் மேடுபள்ளங்களை நிரப்பியும் இந்தப் போரில் வெற்றி பெற முயன்றனர். இன்றைய நாட்களில், ரயில் பிரயாணம் ஒரு சாதனையாய் இருந்தபோதும், புறநகர்ப்பகுதிகளில் மக்கள் குடியேற இருப்புப்பாதைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. “நிறையப் பேர் ட்ரெயினுக்குள் முட்டிமோதிக்கொண்டு ஏறுவதால், நீங்கள் ஏறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. கதவுகிட்டே நீங்கள் நின்றாலே போதும், கூட்டம் உங்களை ட்ரெயினுக்குள் தானாகவே தள்ளிவிட்டுவிடும்” என சர்ஸியோ விளக்குகிறார். ஏழு மணிக்கு வேலைக்கு போக ஐந்து மணிக்கு புறநகர் ட்ரெயினை பிடிக்க வேண்டும் இவர். ட்ரெயினில் அந்தளவுக்கு ஜனங்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு ஏறுவதால், பெரும்பாலும் அதன் கதவுகள் திறந்த நிலையில் இருக்க, பயணிகள் வண்டியில் தொங்கிக் கொண்டே பிரயாணம் செய்வர். துணிச்சல் மிக்க கேரியோகாக்கள், ட்ரெயின் மேலே உட்கார்ந்து பிரயாணம் செய்வர். ட்ரெயின்-சர்ஃபிங் என்றழைக்கப்படுவது இதுவே. எலெக்ட்ரிக் கேபிள்கள் வரும்போது தங்கள்மேல் பட்டுவிடாமல் ஜாக்கிரதையாய் அவர்கள் விலகவேண்டும். இதில் கரணம் தப்பினாலும் மரணமே.
நகரத்தின் அழகுச் சின்னமாய் திகழும் கானபாரா வளைகுடாவை பராமரிப்பதே அடுத்த சவால். உலக வங்கி அறிக்கையின்படி, “தொழிற்சாலைகளில் இருந்து மிகுதியாக வெளியேற்றப்படும் கழிவுநீரும் சுத்தப்படுத்தாத (அல்லது அரைகுறையாக சுத்தப்படுத்திய) சாக்கடை நீரும் வளைகுடாவில் கலக்கின்றன. எனவே வளைகுடாவில் சில இடங்கள் கிட்டத்தட்ட சாக்கடையை போல் இருக்கின்றன.” இதன் விளைவோ, நாசகாரமானது. மீன்களில் பலவகை குறைந்துகொண்டே போகிறது. வளைகுடாவையே நம்பியிருக்கும் 70,000 மீனவர்களின் பாடு திண்டாட்டம்தான். மாசுபட்ட கடற்கரைகள் சுற்றுலாப்பயணிகளை விரட்டி அடித்துவிடுகின்றன. சாக்கடைநீர் திட்டத்தை விரிவாக்கவும் தொழிற்சாலைகளை கண்காணிக்கவும் அரசாங்கம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. ரியோவின் மாசுக்கட்டுப்பாடு திட்டத்தின் சின்னம் இரண்டு டால்ஃபின்கள். 2025-க்கு முன், கானபாரா வளைகுடாவில் டால்ஃபின்கள் நீந்தும் என அத்திட்டத்தின் அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்!
ரியோவின் அழகே அழகு!
இந்த குறுகிய நேர சுற்றுலாவிற்கு பிறகு, ரியோவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கும் கேரியோகாக்களுக்கும், ரியோ இன்னும் எழில் கொஞ்சும் இடமாகத்தான் காட்சியளிக்கிறது. அங்குள்ள பிரச்சினைகள்? அவை தீர்க்கப்பட்டால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அது சாதிக்கப்படும்வரை, நகரத்தின் பிரச்சினைகளை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு சமாளித்துக் கொண்டே, அதன் வனப்புமிக்க சூழலையும் அனுபவிக்க வேண்டியதைத் தவிர கேரியோகாக்களுக்கு வேறு வழியில்லை. கற்பனைப் படைப்பாற்றலையும் நகைச்சுவை உணர்வையும் சேர்த்து, வாழ்க்கையை ஓட்ட கற்றுக்கொண்டு விட்டனர் அந்நகரவாசிகள்.
[அடிக்குறிப்பு]
a “கேரியோகா” என்பது ரியோ டி ஜெனிரோவின் பூர்வீக குடிமகனையோ அல்லது அந்நகரவாசியையோ குறிக்கும் சொல்லாயிற்று.
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
யோவின் சரித்திரத்தில் மைல்கற்கள்
1502: ஜனவரி 1, ஆன்ட்ரே காங்ஸால்விஸ், போர்ச்சுகீசிய மாலுமி, கானபாரா வளைகுடாவின் நுழைவாயிலை ஆற்றின் முகத்துவாரமென தவறாக எண்ணி, அதற்கு ரியோ டி ஜெனிரோ (ஜனவரி ஆறு) என்று பெயரிட்டார்.
1565: எஸ்டேஸ்யூ டீ ஸே, போர்ச்சுகீசிய துருப்புகளின் தலைவர், காரா டீ காவ்னுக்கும் ஷூகர்லோஃப் மலைகளுக்கும் இடையே உள்ள சிறிய பகுதியில் ஆட்களை குடியேற்றினார். இப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை பாராட்டிக் கொண்ட ஃபிரெஞ்சு படையை எதிர்ப்பதற்காக அவர்களைத் தங்க வைத்தார். இந்தக் குடியிருப்பே ரியோவாக பிறகு உருவெடுத்தது.
1763: அருகிலுள்ள மீனஸ் ஸெரிஸ் மாநிலத்திலிருந்து போர்ச்சுகலுக்கு ரியோ துறைமுகம் வழியாக எடுத்துச் செல்லப்பட்ட அதிக அளவிலான தங்கம், ரத்தினங்களை நிர்வகிப்பதற்காக போர்ச்சுகீசியர்கள் ரியோவை தலைநகரம் என்ற நிலைக்கு உயர்த்தினர். ஆப்பிரிக்க அடிமை வியாபாரத்திற்கு தூண்டுதல் அளித்தது.
1808: முதலாம் நெப்போலியன், போர்ச்சுகலை தீவிர முற்றுகையிடுகையில், போர்ச்சுகீசிய அரச குடும்பம் தப்பி ஓடி ரியோவில் அடைக்கலம் புகுந்தது. போர்ச்சுகல் முடியாட்சியின் தற்காலிக அரியணையின் இருப்பிடமாக ரியோ ஆனது. 1960-ல், பிரேஸிலியா கட்டி முடிக்கப்படும்வரை ரியோ தலைநகரமாக தொடர்ந்து இருந்தது.
[படத்திற்கான நன்றி]
FOTO: MOURA
[பக்கம் 16, 17-ன் படம்]
பாரா டா டிஸூகா கடற்கரை
[பக்கம் 17-ன் படம்]
மாராகானான்: உலகின் மிகப் பெரிய கால்பந்தாட்டத் திடல்
[பக்கம் 18-ன் படம்]
ஆர்கோஸ் டா லாபா: பாலமாக மாறிய தண்ணீர்க் கால்வாய்