எமது வாசகரிடமிருந்து
ஆடைகள் நான் உங்களுக்கு எழுதுவது, “எந்த மாதிரி ஆடை அணிகிறோம்—அது அவ்வளவு முக்கியமா?” (பிப்ரவரி 8, 1999) என்ற கட்டுரை பற்றியது. ‘எங்களுக்கு ஏற்ற வேளையிலே போஜனம்’ கொடுப்பதற்காக நீங்கள் செய்யும் எல்லா வேலைக்காகவும் என் பாராட்டு. (மத்தேயு 24:45) ஆனால் அந்தக் கட்டுரையிலிருந்த சில விஷயங்கள் சொந்தக் கருத்துக்களைத் தெரிவிப்பது போல் இருந்தன. “உங்களுக்கு பிரியமான சினிமா, விளையாட்டு . . . நட்சத்திரங்களின் படம் T-சர்ட்டில் விளம்பரம் செய்யப்படுகிறதென்றால் . . . உருவ வழிபாட்டிற்கு வழிநடத்துமல்லவா!” என்ற வரிகளை எழுத உங்களுக்கு உரிமையில்லை. பைபிள் கட்டளை எதையும் மீறாமலே ஒரு விளையாட்டு வீரனை விரும்பலாம், ஏன் பாராட்டவும் செய்யலாமே!
எம். டி., பிரான்ஸ்
இப்படி வெளிப்படையாக தெரிவிப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் சட்டங்களை இயற்றுவதோ இன்னின்ன ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்று விதிகளை ஏற்படுத்துவதோ எங்கள் நோக்கமில்லை. ‘தெளிந்த புத்தியினால்’ தங்களது ஆடைகளைத் தெரிவு செய்யும்படி வாசகர்களை எமது கட்டுரை உற்சாகப்படுத்தியது. (1 தீமோத்தேயு 2:9, 10) T-சர்ட்டுகளைப் பற்றிய குறிப்பு எதுவும் இதைத்தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஆனால் குறிப்பிட்ட சில பாணிகளில் உடுத்துவது, உடுத்துபவருக்கே உலை வைத்துவிடலாம் என்ற சாத்தியத்தைத்தான் அந்தக் கட்டுரை ஒப்புக்கொண்டது. ஒருவரது திறமையையோ ஆற்றலையோ வியந்து பாராட்டுவதில் எந்தத் தவறும் இல்லாதிருக்கலாம்; ஆனால், பைபிள் தராதரத்தின்படி வாழாத ஒருவரது வாழ்க்கைப் பாணியையோ ஒழுக்கநெறியையோ இவர் வியந்து பாராட்டுகிறார் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு உங்களுடைய ஆடைகள் ஏற்படுத்தினால், அது ஞானமானதா?—ED.
சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படுதல் “சர்வாதிகார கொடுங்கோலாட்சியில் 50 வருடங்கள்” (பிப்ரவரி 22, 1999) என்ற கட்டுரையில், லெம்பிட் டோமின் நெஞ்சைப் பிளக்கும் சரிதையை வாசித்ததும் என் மனம் வேதனையால் உருகியது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அவர் தாக்குப்பிடித்தார் என்றால் அது யெகோவா தேவன் பேரில் அவருக்கிருந்த அளவுகடந்த விசுவாசத்தையே காட்டுகிறது. முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நம் சகோதரர்களுக்குக் கிடைத்துள்ள புதிய சுதந்திரம் அவர்களுக்குத் தகுந்ததுதான்.
ஜே. டி., ஐக்கிய மாகாணங்கள்
பாடும் மரம் இயற்கை பற்றி நீங்கள் பிரசுரிக்கும் கட்டுரைகளுக்காக என் இதயங்கனிந்த நன்றி. குறிப்பாக, “பாடும் மரம்” (மார்ச் 8, 1999) என்ற தலைப்பில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விசிலடிக்கும் முள் மரங்கள் பற்றி எனக்கு முன்பெல்லாம் தெரியவே தெரியாது. விசிலடிக்கும் முட்களையும், மரத்தண்டில் உருவாகிய புல்லாங்குழல் துளைகளையும் கையில் எடுத்து, காற்று எனும் இசைக்கலைஞன் இசைக்கும் இசை பற்றி நான் வாசித்ததும் உடனே என் நினைவுக்கு வந்தது, சங்கீதம் 96:12, 13 தான். அது பாடுவதாவது: “அப்பொழுது கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.” இந்த அரிய மரமும் அதற்கே உரிய பாணியில் யெகோவாவைத் துதிக்கிறது.
எம். டி.,இத்தாலி
ரியோ டி ஜெனிரோ ரியோவிலேயே பிறந்து வளர்ந்து இப்போதும் இங்கேயே வசிக்கும் எனக்கு, “ரியோ டி ஜெனிரோ—அழகுப் பெட்டகம்” (மார்ச் 8, 1999) என்ற கட்டுரை தேனாய் தித்தித்தது. விஷயம் நிறைந்தும் காணப்பட்டது. ரியோவின் ‘இமேஜ்’ ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ‘நுனிப்புல்’ இதழியல்தான்.
ஓ. டி. சி., பிரேஸில்
எப்பொழுதும் போலவே நீங்கள் அளித்துள்ள தகவல் கவனமாக தயாரிக்கப்பட்டிருந்தது. ரியோவின் சமூக பிரச்சினைகளுக்கு வழக்கமாக பழிபோடப்படும் ஏழைகளைப் பற்றிய துவேஷ மனப்பான்மையை நீங்கள் காட்டவில்லை.
வி. ஆர். எல்., பிரேஸில்
பெற்றோருக்கு கடிதம் “உள்ளம் திறந்து பெற்றோருக்கு கடிதம்” (மார்ச் 8, 1999) என்ற கட்டுரையை வாசித்ததும் எனக்குள் உற்சாகம் பிறந்தது. என் பெற்றோருக்கும் இதையே நான் எழுதியிருக்க வேண்டும். கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதிலும் ஊழியத்தில் தவறாமல் பங்கேற்பதிலும் விருந்தினரை உபசரிப்பதிலும் அவர்கள் சிறந்த முன்னுதாரணம். என் அப்பா ஓர் உதவி ஊழியர்; எனவே அவர் சபை சம்பந்தமான வேலைகளில் மூழ்கியிருந்திருக்க வேண்டும். ஆனாலும், எங்களுடைய பொழுதுபோக்கிற்காக அடிக்கடி ஏற்பாடு செய்வார்; இதனால் எங்கள் பள்ளித்தோழர்களைப் பார்த்து நாங்கள் பொறாமைப்பட்டதேயில்லை. அந்தோ! அவர் கிறிஸ்தவ மாநாடு ஒன்றுக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பும் வழியில் சாலை விபத்தில் பலியானதும் எங்கள் வாழ்க்கையே அடியோடு மாறிவிட்டது. ஆனாலும் ராஜ்யத்துக்கே முதலிடம் என்ற அவரது வாழ்க்கைப் பாணியையும் என் அம்மாவின் விசுவாசத்தையும் நினைக்கும்போது, யெகோவாவை தொடர்ந்து சேவிக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு வேகம் பிறப்பதுண்டு.
எஸ். கே., ஜப்பான்