பிரிட்டனில் மதத்தின் வீழ்ச்சி
பிரிட்டன் விழித்தெழு! நிருபர்
ஒவ்வொரு வாரமும் பிரிட்டனில் 1,500 பேர் பிரபல சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகிறார்கள் என அறிவித்தது லண்டனிலிருந்து வெளிவரும் தி சன்டே டைம்ஸ். 1980 முதற்கொண்டு இதுவரை ரோமன் கத்தோலிக்க சர்ச் சுமார் ஆறு லட்சம் பேரை இழந்துவிட்டது. சர்ச் ஆஃப் இங்லண்டில் பத்து லட்சத்திற்கும் குறைவானவர்களே ஆராதனைகளுக்குப் போகிறார்கள். இது 50 வருடத்திற்கு முன்பு சென்றவர்களைவிட பாதிக்கும் குறைவே. மேலும், ஒவ்வொரு வாரமும் 600 பேரை இந்த சர்ச் இழக்கிறது. ஆராதனை நடத்துவதற்கு பெண்களை நியமிக்க 1992-ல் சர்ச் பொதுக் குழு எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, சர்ச் ஆஃப் இங்லண்டிற்கு சுமார் 500 மத குருமார் ‘டாட்டா’ சொல்லிவிட்டனர்.
சர்ச்சைவிட்டு வெளியேறுகிறவர்களை தடுப்பதற்கும் அப்படி போனவர்களுக்கு உதவி செய்வதற்கும் யாருமே முயற்சி செய்வதில்லை, அதனால் இவர்களில் அநேகர் கோபமாகவும் ஏமாற்றமாகவும் உணருகிறார்கள் என தி டைம்ஸ் அறிவித்தது. “அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள சர்ச் தவறிவிட்டது என சிலர் சொல்வதாக” அந்தச் செய்தித்தாள் கருத்துத் தெரிவித்தது.
“பற்றாக்குறைவான ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கநெறி போதனைகளால்” பிரிட்டிஷ் சமுதாயம் ஏதோ உயிர் பிழைத்துக்கொண்டிருக்கிறது என ரோம கத்தோலிக்க கார்டினல் பேஸில் ஹியூம் கூறினார். இந்த வீழ்ச்சி தொடருவதற்கு காரணம் என்ன? “கடவுளுடைய வார்த்தை கிடைக்காத பஞ்சமே” என கேத்லிக் ஹெரல்ட் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. அது இவ்வாறு குறிப்பிட்டது: “பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளிலிருந்து சில பகுதிகள்தான் சர்ச் கூட்டங்களில் வாசிக்கப்படுகின்றன, அபூர்வமாகத்தான் அந்த வசனங்களின் சூழமைவு விளக்கப்படுகிறது. . . . புனிதர்களுடைய வாழ்க்கை கதைகளும் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி சொல்கிற பல்வேறு புத்தகங்களும் நல்லவைதான், ஆனால் பைபிளை புரிந்துகொள்வதற்கு இவையெல்லாம் போதுமானவை அல்ல.” கடைசியில் அந்தக் கட்டுரை இவ்வாறு கூறி முடித்தது: “ஆவிக்குரிய வழிநடத்துதல் அளிக்கும் நோக்கோடு கொடுக்கப்படும் நவீன, பைபிள் பிரசங்கங்கள்” குறைவுபடுகின்றன.
லின்கான்ஸையரிலிருந்து வெளிவரும் போஸ்டன் டார்கெட் என்ற செய்தித்தாளுக்கு ஒரு வாசகர் இவ்வாறு கடிதம் எழுதினார்: “மதங்கள்மீது மக்களுடைய நம்பிக்கை குறைந்துவருகிறது. . . . சர்ச் ஊழியர்கள் நாள் முழுக்க என்ன செய்கிறார்கள்? கிறிஸ்துவைப் போல அவர்கள் உண்மையிலேயே பல இடங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பதில்லை. யெகோவாவின் சாட்சிகளுடைய மதமே மக்கள்மீது அக்கறை காண்பிக்கும் ஒரே மதம். அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து சத்தியத்தை பிரசங்கிப்பதில் உள்ளப்பூர்வமாக ஈடுபடுகிறார்கள்—அவர்களுடைய கூட்டங்களுக்கு வரும்படி உங்களை அழைக்கிறார்கள். சுற்றுச்சூழல் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள், அதைப்பற்றி ஏதாவது செய்கிறார்கள். நான் ஒரு யெகோவாவின் சாட்சி அல்ல, ஆனால் அவர்களை மதித்து அவர்களுக்கு செவிகொடுக்கிறேன்.”
நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு எப்பொழுதாவது போயிருக்கிறீர்களா? அங்கே உற்சாகமளிக்கும் பயனுள்ள போதனைகளை கேட்பீர்கள். உங்களுடைய பைபிள் கேள்விகளுக்கு பதில் வேண்டுமா? கடந்த வருடத்தில், 233 நாடுகளில், மக்கள் பைபிளை புரிந்துகொள்வதற்கு உதவ 100 கோடிக்கும் அதிகமான மணிநேரங்களை இலவசமாகவே யெகோவாவின் சாட்சிகள் செலவழித்தனர். ஏறக்குறைய நாற்பது லட்சம் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கின்றனர். இந்த பைபிள் கல்வி திட்டமே இன்று மிக முக்கியமான வேலை என யெகோவாவின் சாட்சிகள் கருதுகின்றனர். இதற்கான காரணத்தை அறிய உங்களை அழைக்கிறோம்.—மத்தேயு 24:14; 28:19, 20.