எழில் கொஞ்சும் தோட்டத்திற்கு ஓர் உலா
அன்பு மழை பொழியும் என் அன்னைக்கு ரோஜா மலர்கள் என்றால் கொள்ளை ஆசை. அவர் பூக்களின் புன்னகையில் மனதை பறிகொடுத்திருந்ததால் அவற்றை தாலாட்டி சீராட்டி வளர்த்து வந்தார். சிறகடித்துப் பறக்கும் சின்னஞ்சிறு சிட்டாக தோட்டத்தில் பறந்து திரிந்தேன். களையெடுப்பதற்கும் “அலங்காரம்” செய்துவிடுவதற்கும் அவற்றை பேணி காப்பதற்கும் பல மணிநேரத்தை நீராக அள்ளித் தெளித்தேன். தோட்ட வேலை இன்பம் பொங்கும் இனிய வேலை என்பதை என் அன்னை எனக்கு காண்பித்தார். ஆர்வம் எனும் விதைகளை என் உள்ளத்தில் விதைத்தார், அது வேர்விட்டு கிளைவிட்டு கனிவிட்டு வளர்ந்து வாழ்நாள் முழுவதும் தழைத்தோங்கியது.
பெர்கிலேவிலுள்ள கலிபோர்னியா பல்கலையில் கல்லூரி படிப்புக்காக என் வீட்டுக்கு பிரியாவிடை கொடுத்துச் சென்றபோது, எழில் கொஞ்சும் தோட்டத்தில் சிறகடித்துப் பறந்த நாட்கள் சிறகொடிந்தது போல ஆயின. என்ஜினியருக்காக படித்துக் கொண்டிருந்தபோது, கல்லூரி வளாகத்திலிருந்த அழகிய தோட்டத்தைக் கண்டு அகமகிழ்ந்தேன். வியட்நாமில் போர் சீறிக்கொண்டிருந்தது, என்னுடைய எதிர்கால வாழ்வில் ஓர் இமாலய மாற்றம் ஏற்பட்டது.
வளர்ந்துவரும் நாடுகளுக்கு உதவும் தொண்டர் குழுவில் சேர தீர்மானித்தேன். பயிற்சிக்காக வாஷிங்டனில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டேன். அங்கிருந்த வளாகம் சொக்கவைக்கும் ‘பாரடைஸ்’ போல மிளிர்ந்தது. தென்றல் வீசும் ஏரிகள், பூத்துக்குலுங்கும் தோட்டங்கள், பச்சைக்கம்பளம் பாவிய புல்தரைகள், பனியை போர்வையாக போர்த்திய முகடுகள்—என் ‘இயற்கை கேமிரா’வை திருப்பிய இடங்களெல்லாம் இயற்கையின் கைவண்ணமும் கலைவண்ணமுமே தெரிந்தன. அந்தச் சமயத்தில், சான் ஆன்டிராஸில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிய பொலிவியாவில் உள்ள லா பாஸாவுக்கு 1964-ல் சென்றேன். என்னே முரண்பாடு! அது கடல் மட்டத்திலிருந்து 3,500 மீட்டர் உயரத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. அங்கே தோட்டங்களோ அதிகமில்லை, தோட்ட வேலை நினைவலைகளாகவே நெஞ்சில் மோதியது.
பொலிவியாவில் இரண்டு வருஷங்களுக்குப்பின், ஹவாயிலுள்ள வஹியா உயர்நிலை பள்ளியில் எனக்கு ஆசிரியர் பணி. ‘சன்செட் பாய்ன்ட்’ கடற்கரையில் அமைந்திருந்த ஒரு குடிலோடு உறவாடினேன். பாம் மரங்கள்மீதும் வேறுசில வெப்பமண்டல தாவரங்கள்மீதும் மோகம் கொண்டேன். நான் ‘பாரடைஸில்’ இருப்பதைப் போன்ற உணர்வு என் இதய தடாகத்தில் நீந்தி விளையாடியது. பின்பு எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது—என் சிந்தையைக் கவர்ந்த பாம் மரங்கள் நிரம்பிய தோட்டத்தை எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் உருவாக்க வேண்டும்.
அமெரிக்காவிலுள்ள சான் டியகோவுக்கு வந்தேன். பின்பு கலிபோர்னியாவிலிருந்து டியரா டெல் ஃபியூகோவுக்கு வந்து அடுத்த 18 திங்களை அங்கு கழித்தேன். இந்தச் சமயத்தில் பைபிளை வாசிக்க ஆரம்பித்தேன். நான் பயணம் செய்தபோது, கானகங்களிலும் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் பல மணிநேரத்தை செலவிட்டேன். நான் பைபிளில் வாசித்தவற்றை மனதில் அசைபோட்டு பார்த்தேன். கடைசியாக, 1972-ல் சான் டியகோவுக்குத் திரும்பினேன். கணிதவியல் ஆசிரியர் பணியை கலிபோர்னியாவிலுள்ள கொரானடோவில் ஆரம்பித்தேன். இந்த வேலை எனக்கு அதிக திருப்திகரமாக இருந்தது, பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். என்னுடைய சொந்த வீட்டின் பின்புறத்திலுள்ள வெப்பமண்டல தோட்டத்தைப் பற்றிய எண்ணம் பூவாகி காயாகி கனியானது.
என் முதல் தோட்டம்
மே 1973-ல், பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் அமைந்திருந்த ஒரு சிறிய வீட்டை வாங்கினேன். அது கலிபோர்னியாவிலுள்ள ஓசன் கடற்கரை காற்றை சுவாசித்து கொண்டிருந்தது. அங்கே மலை உச்சியில் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் உலவினேன். எழில்மிகு தோட்டம் அமைக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை கனவை நனவாக்குவதற்கு ஏற்ற ரம்மியமான சூழல்!
முதலில் தோட்ட வேலையை மனம்போன போக்கில் செய்துவந்தேன். படியேற முயன்று தடுக்கி விழும் அனுபவமாகவே அது இருந்தது. என் மனம் ஒரு செடியை விரும்பினால், அதை வாங்கி நட்டு வைப்பேன். என் கண்ணுக்கு விருந்தளித்தவற்றையும் என் மனதை கவர்ந்தவற்றையும் தொடர்ந்து நட்டுவந்தேன். அவை வளர்ந்து வருவதை—கனிதரும் மரங்களாக, பைன் மரங்களாக, இலையுதிரும் மரங்களாக, பசுமைமாறா மரங்களாக, புதர்ச் செடிகளாக, பூஞ்செடிகளாக வளர்ந்து வருவதை—கண்டு ரசித்தேன். இது போன்ற அநேக பெயர்களை நீங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம், அவற்றையெல்லாம் நான் வளர்த்தேன்.
என் சிறுபிராயத்தில் என்னுடைய நினைவுப் பந்தலில் படர்ந்திருந்த அநேக செடிகளும் அதில் அங்கம் வகித்தன. அவற்றை வளர்ப்பது மனதுக்கு இதமாகவும் வேடிக்கையாகவும் ஆரோக்கியமளிப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் இருந்தது. இந்தப் படைப்புகளின் வனப்பை, வடிவமைப்பை, நுட்பத்தை, நோக்கத்தை என் மனமேடையில் அரங்கேற்றி ரசித்தேன்.
எல்லா தாவரங்களும் என்னை கவரவில்லை அல்லது என்னுடைய ரசனைக்கு ஒத்துவரவில்லை. ஆகவே பெரும்பாலானவற்றை ஒதுக்கிவிட்டேன். நான் ஒரு விசேஷித்த வடிவமைப்பை தேடிக்கொண்டிருந்தேன். அலங்கோலமாகவும் ஆக்ரோஷமாகவும் வளர்ந்த தாவரங்களை நான் வரவேற்கவில்லை. அவை அதிக வேலையை வாங்கின, அதிக பராமரிப்பையும் தேவைப்படுத்தின! மிகவும் அரிய தாவரங்களையே என் மனம் அரவணைத்தது—சாதாரணமான அல்லது தோட்டத்திற்குரிய தாவரங்களிடம் என் மனம் மயங்கவில்லை. விசேஷித்த, தனித்தன்மைமிக்க தாவரத்தின்மீதே காதல் கொண்டேன். அதுவே என் காதல் வலையிலும் சிக்கியது!
என்னுடைய முதல் பாம்
1974-ல், சிறுசெடிகளை சீராட்டி வளர்க்கும் தொட்டிலாகிய நர்சரிக்கு சென்றேன், அங்கே என்னுடைய தேடலுக்கான பதிலை கண்டுபிடித்தேன். அது வானவில் வடிவில் ஜொலிக்கும் கிரீடமாக, நீலம்கலந்த பச்சை நிறத்தில் இறகுகள் போல இலைகளுடன் மிகவும் அழகாக காட்சியளித்தது. அதுதான் பியூட்டியா கேப்பிடேடா. உலகிலேயே மிகவும் ‘அழகிய பாம்’ என அதற்கு புகழாரம் சூட்டியுள்ளனர் பலர். அது இனிப்பாக, சுவைமிகு கொட்டைகளுடன் இருப்பதால் சிலசமயங்களில் ‘ஜெல்லி பாம்’ எனவும் அழைக்கப்படுகிறது. அது தென் அமெரிக்காவிலிருந்து வருகிறது, அதை பராமரிப்பது எளிது, அது 16 அடி உயரம் வளருகிறது. கடைசியில், என்னுடைய தோட்டம் கவனத்தைக் கவரும் ஒன்றாக ஆனது. உலகிலேயே அபூர்வமான வெப்பமண்டல பாம் மரங்கள் வளர்க்கப்படும் கண்காட்சி திடலாக ஆனது! “தாவர சாம்ராஜ்யத்தின் இளவரசனை” என் தோட்டமெனும் சிங்காசனத்தில் அமர்த்தினேன்.
சீக்கிரத்திலேயே வித்தியாசமான நர்சரியிலிருந்து அபூர்வமான, அழகிய பாம் மரக் கன்றுகள் என் தோட்டத்தில் கொலுவீற்றிருக்க ஆரம்பித்தன. அங்கே ஒரு நர்சரியின் மூலையில் எனக்கு நேர் எதிரிலேயே பிரமாதமான பாம் நின்றுகொண்டிருந்தது—அதுதான் மெக்ஸிகன் புளூ பாம். அது விறைப்பான, பச்சை கலந்த நீலநிறத்துடன், இறக்கை வடிவ இலையுடன் அடிமரத்தின் நுனியிலிருந்து கிரீடத்திலுள்ள விசிறிபோல விரிந்திருந்தது. அந்தப் பூவின் முனைகள் அழகிய இளமஞ்சள் நிறத்தில் வில்போன்று நீட்டிக்கொண்டிருந்தன. பருவமடைந்த ஒரு மரம் சுமார் 40 அடி உயரம்வரை வளருகிறது.
இப்பொழுது நான் உண்மையிலேயே பாம் மரங்களிடம் மனதை பறிகொடுத்திருந்தேன். அந்த அபூர்வ தாவரங்களில் அநேகத்தை நான் எங்கே கண்டுபிடிக்க முடியும்? சான் டியாகோவை சுற்றியுள்ள இடங்களில் விசாரிக்க ஆரம்பித்தேன், ஆனால் அவ்வளவாக பலனில்லை. பின்பு தகவல்களின் தங்கச் சுரங்கம்—சர்வதேச பாம் சங்கத்தின் தென் கலிபோர்னியா கிளை—என் கண்ணில் பட்டது. இந்த சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆயிரக்கணக்கானோர் 81 நாடுகளில் இருக்கிறார்கள். மனிதனுக்கு தெரிந்த—200 இனங்களுக்கும் சுமார் 3,000 வகைகளுக்கும் மேற்பட்ட—எல்லா பாம் மரங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமே இங்கு இருக்கிறது! அதன் அங்கத்தினர்களுக்காக தென் கலிபோர்னியா கிளை த பாம் ஜர்னல் என்ற இதழை பிரசுரிக்கிறது. இது புதுப்புது தகவல்கள் அடங்கிய மதிப்புமிக்க ஒரு தகவல் சுரங்கம்.
இந்தத் தொடர்பு, என்னுடைய சின்னஞ்சிறு தோட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பாம் மரங்களை வளர்ப்பதற்கும் வாங்குவதற்கும் அடிகோலியது. நான் குறைவாகத்தான் மதிப்பிட்டு சொல்கிறேன், ஏனெனில் அது மட்டுமே சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவை பங்குபோட்டு கொள்கிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கடல்போன்ற கணக்கற்ற வகைகளில் என்னுடைய தோட்டத்திலுள்ள பாம் மரங்கள் சில துளிகளே. அவற்றில் எனக்கு பிடித்தமானவை எவை?
என்னுடைய தோட்டத்திலுள்ள சில “அழகிகள்”
மொத்தத்தில், எனக்கு எல்லா மரங்களுமே பிடிக்கும், ஆனால் சில மரங்கள் உண்மையிலேயே தனித்தன்மையானவை. கவர்ச்சிகரமான தோற்றத்திற்காக அல்லது அவற்றிற்கு கவசம்போல அமைந்த முட்களுக்காக அல்லது கூர்முனைகளுக்காக நான் முக்கியமாக கவர்ந்திழுக்கப்படுகிறேன். சிலவற்றை அவற்றின் நிறத்திற்காக அல்லது பருமனுக்காக அல்லது தென் கலிபோர்னியாவின் மத்திய தரைக்கடல் சீதோஷண நிலையில் வளர்க்கும் சவாலுக்காக கவர்ந்திழுக்கப்படுகிறேன்.
என்னிடம் உள்ள விசேஷித்த மரங்களில் ஒன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையின் தொலைவிலுள்ள மடகாஸ்கரைச் சேர்ந்தது. அது பிஸ்மார்கியா நோபிலிஸ் பாம். நான் அதை விரும்புவதற்கு காரணம்? அதன் தனித்தன்மைமிக்க ஊதா கலந்த நீலநிறம், அதன் ஆபூர்வத்தன்மை, அதன் இலை வடிவம். பல பாகங்களைக் கொண்ட அதன் இலைகள் ஒவ்வொன்றும் சுமார் 9 கிலோகிராம் எடையுடையது. இதுவே இம்மரத்தை உலகிலுள்ள பெரிய பாம் மரங்களில் ஒன்றாக்குகிறது.
பிடித்தமான மற்றொன்று மீன்வால் போன்ற பாம். இது, வட இந்தியா, மியன்மார், இலங்கை போன்ற மலைப்பாங்கான இடங்களிலிருந்து வருகிறது. ஓரளவு குளிராக இருந்தபோதிலும் சான் டியாகோவில் என்னுடைய மரம் மிகவும் நன்றாக வளருகிறது. சொல்லப்போனால், இங்கு பாம் மரங்களை வளர்க்கும் சவாலை நான் விரும்புகிறேன். அதனால்தான் என்னுடைய தோட்டத்தில் போர்னியோவிலிருந்து கொண்டுவரப்பட்ட மரத்தை—ஆரெங்கா அன்டியூலடிஃபோலியாவை—வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறேன். இதற்கு அகலமான, பிரத்தியேகமான, அலைகள் போன்ற மேற்பரப்பைக் கொண்ட இலைகள் இருக்கின்றன.
சமீபத்தில் என்னுடைய தோட்டம் எனும் குடும்பத்தோடு இணைந்துகொண்ட பாம் மரம் பியூரிடியோகென்டியா ஹெப்பலா. இது, தென் பசிபிக்கிலுள்ள பிரெஞ்சு கடலுக்கு அப்பால் இருக்கும் பிராந்தியமாகிய நியூ கலிடோனியாவிலிருந்து வருகிறது. இதுவரை நன்றாகவே வளருகிறது. இதோடு எனக்கு விசேஷமாக பிடித்த மற்ற மரங்களாகிய ஹவாய் பிரிட்சார்டியா ஹில்டிபிரான்டி அல்லது லௌலு பாம் மரத்தையும் சொல்லலாம். இது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இறக்கை வடிவிலான இலைகளை கொண்டது. இது ஒரு சூரிய பிரியன், நிச்சயமாகவே தனித்தன்மையானதே.
பயமுறுத்தும் பாம் எதுவென்றால் டிரித்ரிநாக்ஸ் அகான்பதகோமா, அல்லது முட்கள் நிறைந்த நார்போன்ற பாம். இதன் அடிமரத்தில் ஊசி போன்ற வடிவில் முட்கள் உள்ளன. “என்னை நெருங்காதே!” என்று எச்சரிப்பதைப் போல இருக்கிறது.
சமீபத்தில் சைகாட்களை வளர்க்க ஆரம்பித்திருக்கிறேன். பாம் மரத்தைச் சேர்ந்த ஒன்றாக இல்லாதபோதிலும், தோற்றத்தில் பாம் மரத்தைப் போல ஆனால் ரொம்ப குட்டையாக இது இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமானவற்றில் ஒன்று என்செப்பலார்டாஸ். இதில் வியக்கத்தக்க இலைகள் இருக்கின்றன, இது காற்றில் துள்ளுவது போல தோன்றும். இது எல்லாருடைய கண்களையும் பறிக்கிறது. இதன் விதைப் பை அல்லது கூம்பி, பொதுவாக பெரிதாகவும் தாவரத்தின் பக்கவாட்டிலிருந்து வெளிப்படுவதாகவும் இருக்கும். அவை அன்னாசிப் பழத்தைப் போல காட்சியளிக்கின்றன.
என்னுடைய தோட்டம் ஆட்களை கவருகிறதா? நிச்சயமாகவே கவருகிறது! என்னுடைய செடிவகைகளை கண்டு அடிக்கடி ஆட்கள் அங்கே கொஞ்ச நேரம் நின்று வியந்து பார்ப்பதை நான் கவனித்திருக்கிறேன். வீட்டின் முன்னாலுள்ள ஓர நடைப்பாதையில், மலைச்சரிவில் காட்சியளிக்கும் இந்த எழில் கொஞ்சும் வெப்பமண்டல தோட்டத்தை அவர்கள் கண்டுகளிக்க முடியும். 1997-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச பாம் சங்கத்தின் தென் கலிபோர்னியா கிளை பார்வையாளர்களுக்காக திறந்து வைத்த மூன்று தோட்டங்களில் என்னுடையதும் ஒன்று! இது “பல்வகை அழகிய பாம் மரங்களின் நினைவாலயம்” என அழைக்கப்படுகிறது. என்னென்ன விதங்களில் இந்தத் தோட்டம் எனக்கும் மற்றவர்களுக்கும் ஓர் ஆசீர்வாதமாக அமைந்திருக்கிறது?
என் தோட்டம் சாட்சி பகருகிறது
யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்ததால் 1991-ல் முழுக்காட்டப்பட்டேன். இப்பொழுது நான் ஓய்வுபெற்ற ஆசிரியர். ஆனால் ஒரு கிறிஸ்தவ மூப்பராகவும் பயனியர் ஊழியராகவும் தொடர்ந்து பணியாற்றுகிறேன். என்னிடமுள்ள பல்வகை மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் அற்புதமான வடிவமைப்பை விவரிக்கும்போது, படைப்பாளரைப் பற்றி மக்களிடம் பேசுவதற்கு என்னுடைய தோட்டத்தை ஊக்குவிக்கும் ஓர் உதாரணமாக பயன்படுத்துகிறேன். சிலசமயங்களில், பைபிளில் பாம் மரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை தெரிவிப்பதன் மூலமும் இந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறேன். (நியாயாதிபதிகள் 4:5; சங்கீதம் 92:12; NW) கடவுளிடம் நெருங்கி வருவதற்கும் கீழ்ப்படிதலுள்ள மக்கள் ‘பாரடைஸில்’ வாழ்வதற்கான அவருடைய மகத்தான நோக்கத்தை புரிந்துகொள்வதற்கும் இந்தத் தோட்டங்கள் நிச்சயமாகவே எனக்கு உதவி செய்திருக்கின்றன. ஆதியில் படைக்கப்பட்ட ‘பாரடைஸ்’ மிகவும் அற்புதகரமான ஒரு தோட்டமாக அல்லது பூங்காவாக விளங்கியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.—ஆதியாகமம் 2:8.
பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, தற்போது இந்தப் பூமியை கெடுப்பவர்களை யெகோவா அழிக்கும்போது அந்த ‘பாரடைஸ்’ மீண்டும் ஸ்தாபிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 11:18; 16:14, 16) அப்பொழுது, இந்தப் பூமியை மீண்டும் ஓர் அற்புதகரமான தோட்டமாக மாற்றுவதில் நாம் அனைவரும் பங்குகொள்ளலாம். இதற்கிடையில், என்னுடைய சிறிய தோட்டம் தொடர்ந்து படைப்பாளருக்கு துதி சேர்க்கும்.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 16-ன் படம்]
இறக்கை வடிவ மெக்ஸிகன் புளூ பாம்
[பக்கம் 16-ன் படம்]
மீன்வால் பாம்
[பக்கம் 16, 17-ன் படம்]
இடமிருந்து வலமாக: ரெட் பான்டனஸ், ராயல் பாம், டிராவலர்ஸ் பாம் (அளவின்படி அல்ல)
[பக்கம் 17-ன் படம்]
என்செபலார்டாஸ் ஃபெரோக்ஸ்
[பக்கம் 17-ன் படம்]
ஷேவிங் பிரஷ் பாம் மீது மலர்
[பக்கம் 18-ன் படம்]
என்னுடைய தோட்ட வேலை கருவிகள்