நெஞ்சை விட்டு நீங்காத பாடல்
“ ‘அரியணையில் வீற்றிருக்கிறார் மகிமையில் மகத்துவமுள்ள யெகோவா’ என்று வார்த்தை பூக்களால் தொடுத்த ஒரு பாமாலையை நான் பள்ளியில் பாடினேன். ஆனால், நான் அடிக்கடி யோசிப்பேன், ‘யார் இந்த யெகோவா?’ ”
இப்படிச் சொன்ன வென் கூச் ஒரு யெகோவாவின் சாட்சி, இவருடைய வாழ்க்கை சரிதையை காவற்கோபுரம் பத்திரிகை எழுத்தில் படம்பிடித்துக் காட்டியது. a இவருக்கு உதித்த இதே யோசனை இவரது சரிதையை வாசித்த மற்றொரு வாசகிக்கும் உதித்தது. அ.ஐ.மா., வாஷிங்டனிலுள்ள ஸீட்டலில் வசிக்கும் வீரா என்ற பெண்மணி, “எனக்கும் இதே அனுபவம் பள்ளியில் படிக்கும்போது ஏற்பட்டது” என்று சொல்கிறார்.
ஏதோ ஒரு பாட்டு செவி எனும் ஒலிவாங்கியில் நுழைந்து வீராவின் இதய நாடாவில் பதிந்தது. யார் இந்த யெகோவா என்பதை அறிய வேண்டும் என்று வென் கூச்சை போலவே வீராவின் ஆவலும் கொழுந்துவிட்டு எரிந்தது. பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளுடைய பெயராகிய யெகோவாவை பற்றி இவருடைய சகோதரர் சொன்னபோது, 1949-ல் வீராவின் ஆவல் தணிந்தது.
வீரா அரை நூற்றாண்டு காலமாக ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்து வருகிறார். ஆனால் உயர்நிலை பள்ளியில் படித்த அந்தப் பாமாலை ஒருபோதும் அவர் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. “இந்தப் பாமாலையை வருஷக்கணக்காக தேடினேன்” என்று அவர் சொல்கிறார். கடைசியில், ஒரு மியூசிக் ஸ்டோரின் உதவியால் அதை கண்டுபிடித்துவிட்டார் வீரா. இது 1825-ல் இயற்றப்பட்டது. இதை இயற்றியவர் ஃபிரான்ஸ் சூபெர்ட். இந்த இன்னிசையுடன் கைகோர்த்து வரும் பாடல் வரிகள் யெகோவாவை துதிக்கின்றன. உதாரணமாக, பின்வரும் வார்த்தைகள் அந்தப் பாமாலையின் சரத்தில் கோர்க்கப்பட்டிருந்த சில பூக்கள்:
“கர்த்தராகிய யெகோவாவே மகத்துவமுள்ளவர்! வானமும் பூமியும் வாழ்த்துப் பாடுதே அவர் அற்புத வல்லமையை. . . . கேட்கிறீரே அதை சீறும் புயலில், கேட்கிறீரே அதன் கர்ஜணையை இடியென முழங்கிடும் நீரோட்டத்தில். . . . கேட்கிறீரே அதை ரீங்காரமிடும் கானகங்களில். காண்கிறீரே அதை தகதகவென ஜொலிக்கும் தங்கநிற புல்கள் அலையென அசைகையில்; காண்கிறீரே அதை நறுமணம் கமழும் மலர்களின் மிடுக்கான உடையில், காண்கிறீரே அதை நீல வானில் நீந்தும் விண்மீன்களில், . . . கேட்கிறீரே அதை இடிமுழக்கத்தின் எதிரொலியில், காண்கிறீரே அதை விண்ணை கிழித்துவரும் மின்னலில். ஒலிக்கிறதே நித்தியத்தின் ஆண்டவராம் . . . யெகோவாவின் வல்லமை துடிக்கும் உன் இதயத்தில். நோக்கியிரு விண்ணவரையே, நம்பியிரு அவர் தயவையும் கருணையையும். . . . கர்த்தராகிய யெகோவாவே மகத்துவமுள்ளவர்!”
வீரா குறிப்பிடுகிறார்: “1800-களிலேயே கடவுளுடைய பெயரை அறிந்தவர்களும் துதித்தவர்களும் இருந்தார்கள் என்பதை மக்களுக்கு காண்பிப்பதற்கு இந்தப் பாமாலையின் வரிகளை சிலசமயங்களில் பயன்படுத்தியிருக்கிறேன்.” பூர்வ காலம் முதற்கொண்டே, விசுவாசமுள்ள ஆடவரும் பெண்டிரும் யெகோவாவை பாடல்களால் துதித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்தப் பழக்கம் நித்தியத்துக்கும் தொடரும், வானத்தையும் பூமியையும் படைத்தவரை துதிப்பதற்கு இருக்கின்றனவே எல்லையில்லா காரணங்கள்!
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம், மார்ச் 1, 1998-ஐக் காண்க.
[பக்கம் 25-ன் படம்]
வீரா