பாடம் 6
பரதீஸ்—மிக விரைவில்!
பரதீஸ் மிக விரைவில் வரும் என்பதை பூமியில் நடக்கும் கெட்ட காரியங்கள் காட்டுகின்றன. பரதீஸ் வருவதற்கு முன்பு நாம் கொடிய காலங்களை சந்திப்போம் என பைபிள் சொன்னது. நாம் அப்படிப்பட்ட காலத்தில்தான் வாழ்கிறோம்! நடக்கும் என்று பைபிள் சொன்ன சில சம்பவங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
பெரிய போர்கள். “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியிருக்கிறது. 1914-ம் ஆண்டு முதல், இரண்டு உலகப் போர்களும் பல சிறிய போர்களும் நடந்திருக்கின்றன. அவற்றால் லட்சக்கணக்கான மக்கள் மாண்டிருக்கிறார்கள்.
பரவலாக நோய். “பல இடங்களில் . . . கொள்ளைநோய்களும்” உண்டாகும். (லூக்கா 21:11) இது நிறைவேறியிருக்கிறதா? ஆம், நிறைவேறியிருக்கிறது. புற்றுநோய், இருதய நோய், காசநோய், மலேரியா, எய்ட்ஸ், இன்னும் பல்வேறு நோய்கள் லட்சக்கணக்கான ஆட்களை கொன்று குவித்திருக்கின்றன.
உணவு பற்றாக்குறை. சாப்பிட போதுமான உணவில்லாமல் தவிக்கும் மக்கள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பசியினால் லட்சக்கணக்கானோர் சாகிறார்கள். பரதீஸ் வெகு விரைவில் வரும் என்பதற்கு இது மற்றொரு அடையாளம். பைபிள் சொல்கிறது: “பஞ்சங்களும் . . . உண்டாகும்.”—மாற்கு 13:8.
பூமியதிர்ச்சிகள். “பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” (மத்தேயு 24:7) இதுவும் நம்முடைய நாளில் நடந்திருக்கிறது. 1914-ம் ஆண்டு முதல், பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பூமியதிர்ச்சிகளால் இறந்திருக்கிறார்கள்.
பொல்லாத ஜனங்கள். மனுஷர்கள் ‘பண ஆசையுடையோராயும்,’ ‘தன்னலம் நாடுவோராயும்’ இருப்பார்கள். ‘கடவுளை விரும்புவதைவிட சிற்றின்பத்தையே அதிகம் விரும்புவோராய்’ இருப்பார்கள். ‘தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாய்’ இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:1-5, பொ.மொ.) இது போன்ற ஆட்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் கடவுளுக்கு மரியாதை காட்டுவதில்லை, கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறவர்களுக்கும் தொல்லை கொடுக்கிறார்கள்.
குற்றச்செயல். ‘அக்கிரமமும் மிகுதியாக’ இருக்கும். (மத்தேயு 24:12) பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்பொழுது குற்றச்செயல் மிக மோசமாக இருக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். திருட்டு, மோசடி, தாக்குதல் ஆகியவை எந்த சமயத்திலும் நடக்கலாம் என்ற பயத்திலேயே எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் வாழ்கிறார்கள்.
கடவுளுடைய ராஜ்யம் சமீபம் என்பதையே இவையனைத்தும் காட்டுகின்றன. பைபிள் சொல்கிறது: “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” (லூக்கா 21:31) தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது கடவுளுடைய பரலோக அரசாங்கம், அதுவே பூமியில் பரதீஸை கொண்டுவரும். கடவுளுடைய ராஜ்யம் மனித அரசாங்கங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.—தானியேல் 2:44.