பாடம் 7
கடந்த காலத்திலிருந்து ஓர் எச்சரிப்பு
கெட்ட ஜனங்கள் பரதீஸை சீரழிக்க யெகோவா அனுமதிக்க மாட்டார். அவருடைய நண்பர்கள் மட்டுமே பரதீஸில் வாழ்வார்கள். கெட்ட ஜனங்களுக்கு என்ன நேரிடும்? இதற்கு விடை காண நோவா என்பவரை பற்றிய உண்மை கதையை கவனிக்கலாம். நோவா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் ஒரு நல்ல மனிதர். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய எப்போதும் அரும் பாடுபட்டார். ஆனால் மற்ற ஜனங்களோ கெட்ட செயல்களையே செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே கெட்ட ஜனங்களை அழிப்பதற்கு ஜலப்பிரளயத்தைக் கொண்டுவரப்போவதாக நோவாவிடம் யெகோவா சொன்னார். ஜலப்பிரளயம் வரும்போது நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் தப்பிப்பிழைப்பதற்கு ஒரு பேழையை கட்டும்படி நோவாவிடம் அவர் கூறினார்.—ஆதியாகமம் 6:9-18.
நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழையை கட்டினர். ஜலப்பிரளயம் வரும் என்று ஜனங்களை நோவா எச்சரித்தார். அவர்களோ செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து கெட்ட செயல்களையே செய்து வந்தார்கள். நோவா பேழையை கட்டி முடித்த பின்பு மிருகங்களை அதற்குள் ஏற்றினார், அவரும் அவருடைய குடும்பத்தாரும் அதற்குள் ஏறினார்கள். பின்பு யெகோவா பெரும் புயலை கொண்டுவந்தார். 40 நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது. பூமி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது.—ஆதியாகமம் 7:7-12.
பொல்லாத ஜனங்கள் அழிந்தார்கள், ஆனால் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் காப்பாற்றப்பட்டார்கள். யெகோவா இவர்களை ஜலப்பிரளயத்திலிருந்து பத்திரமாக காப்பாற்றி கெட்ட ஜனங்கள் இல்லாத பூமியில் திரும்பவும் வைத்தார். (ஆதியாகமம் 7:22, 23) சரியானதைச் செய்ய மறுப்பவர்களை யெகோவா மீண்டும் அழிப்பதற்கான காலம் வருகிறது என பைபிள் கூறுகிறது. நல்ல ஜனங்களை அவர் அழிக்க மாட்டார். அவர்கள் பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்.—2 பேதுரு 2:5, 6, 9.
இன்று அநேகர் கெட்டதையே செய்கிறார்கள். உலகம் முழுவதும் பிரச்சினைகளால் நிறைந்திருக்கிறது. ஜனங்களுக்கு எச்சரிப்பு கொடுப்பதற்காக யெகோவா தம்முடைய சாட்சிகளை மறுபடியும் மறுபடியும் அனுப்புகிறார். ஆனாலும் பெரும்பாலான ஜனங்கள் யெகோவாவின் வார்த்தைக்குச் செவிசாய்ப்பதில்லை. தங்களுடைய வழிகளை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. எது சரி எது தவறு என்று கடவுள் சொல்வதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை. இப்படிப்பட்ட மக்களுக்கு என்ன நடக்கும்? என்றாவது மாறுவார்களா? அநேகர் மாறவே மாட்டார்கள். பொல்லாத ஜனங்கள் நிரந்தரமாக அழிந்துபோகும் காலம் வருகிறது.—சங்கீதம் 92:7.
பூமி அழியாது; அது பரதீஸாக மாறும். கடவுளுடைய நண்பர்கள் பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்.—சங்கீதம் 37:29.