படிப்பு 8
போதிய சத்தம்
பொதுப் பேச்சு கொடுப்பவர் போதிய சத்தத்தோடு பேசவில்லை என்றால் கேட்பவர்களில் சிலர் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். பிரஸ்தாபி வெளி ஊழியத்தில் மிக மென்மையான குரலில் பேசினால், கேட்பவரின் கவனம் நழுவிவிடலாம். கூட்டங்களில் சபையார் பதில்களைப் போதிய அளவு சத்தமாக சொல்லவில்லை என்றால், தேவைப்படும் உற்சாகத்தை மற்றவர்கள் பெற மாட்டார்கள். (எபி. 10:24, 25) மறுபட்சத்தில், தவறான இடத்தில் பேச்சாளர் சத்தத்தைக் கூட்டினால் சபையாருக்கு பிடிக்காது, எரிச்சலாகக்கூட இருக்கும்.—நீதி. 27:14.
கேட்போரை கருத்தில் கொள்ளுங்கள். யாரிடம் பேசுகிறீர்கள்? தனிப்பட்ட ஒரு நபரிடமா? ஒரு குடும்பத்திடமா? வெளி ஊழியம் செல்லவிருக்கும் சிறிய தொகுதியிடமா? முழு சபையிடமா? அல்லது பெரிய மாநாட்டிற்கு வந்திருப்போரிடமா? ஒரு சந்தர்ப்பத்தில் பொருத்தமாக இருக்கும் சத்தம் மற்றொரு சந்தர்ப்பத்திற்கு பொருந்தாது என்பதில் சந்தேகமில்லை.
பல்வேறு சந்தர்ப்பங்களில், கடவுளுடைய ஊழியர்கள் பெரிய கூட்டத்தினரிடம் பேசியிருக்கின்றனர். சாலொமோனின் நாட்களில் எருசலேம் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது எந்த ஒலிபெருக்கி சாதனங்களும் இருக்கவில்லை. ஆகவே சாலொமோன் உயர்ந்த மேடையின் மீது நின்றுகொண்டு “உரத்த சத்தத்தோடே” மக்களை ஆசீர்வதித்தார். (1 இரா. 8:55; 2 நா. 6:13) பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டபோது, திரளானவர்கள்—ஆர்வம் காட்டிய சிலரும் பரியாசம் செய்த பிறரும்—எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்களின் சிறிய தொகுதியினரை சூழ்ந்தனர். அப்போது பேதுரு நடைமுறை ஞானத்தைப் பயன்படுத்தி, “நின்று, . . . உரத்த சத்தமாய்” பேசினார். (அப். 2:14) இவ்வாறு வலுவான சாட்சி கொடுக்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நீங்கள் போதிய சத்தத்தோடு பேசுகிறீர்களா இல்லையா என எப்படி சொல்லலாம்? சபையாரின் பிரதிபலிப்பே மிகச் சிறந்த அளவுகோல். சிலர் கேட்க சிரமப்படுவதை நீங்கள் கவனித்தால் உங்கள் சத்தத்தை கூட்ட முயல வேண்டும்.
தனிப்பட்ட ஒருவரிடம் பேசினாலும் சரி ஒரு தொகுதியினரிடம் பேசினாலும் சரி, கேட்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மனதில் வைப்பது நல்லது. சரியாக காது கேட்காதவர்கள் இருந்தால் நீங்கள் குரலை உயர்த்த வேண்டும். ஆனால் வெறுமனே முதிர்வயதால் மெதுவாக பிரதிபலிக்கும் நபர்களிடம் கத்திப் பேசுவது அவர்களுக்கு பிரயோஜனமாய் இராது. மாறாக, நீங்கள் கோபத்தில் கத்துவதாக நினைத்துக்கொள்வார்கள். சில கலாச்சாரங்களில், மிக சத்தமாக பேசுவது, கோபத்திற்கு அல்லது பொறுமையின்மைக்கு அடையாளமாக கருதப்படுகிறது.
இடைஞ்சல் ஏற்படுத்தும் சத்தங்களை கருத்தில் கொள்ளுங்கள். வெளி ஊழியம் செய்யும்போது, எவ்வளவு சத்தமாக பேச வேண்டும் என்பதை அந்தந்த சூழ்நிலைகளே கண்டிப்பாக தீர்மானிக்கும். போக்குவரத்து இரைச்சல், ரகளை செய்யும் பிள்ளைகள், குலைக்கும் நாய்கள், சத்தமான இசை, காதைப் பிளக்கும் டிவி சத்தம் ஆகியவற்றை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கலாம். மறுபட்சத்தில், வீடுகள் நெருக்கமாக அமைந்திருக்கும்போது, நீங்கள் மிக சத்தமாக பேசினால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் கவனம் ஈர்க்கப்படும், வீட்டுக்காரரோ தர்மசங்கடமாக உணர்வார்.
சபையில் அல்லது மாநாடுகளில் பேச்சுக்களை கொடுக்கும் சகோதரர்களும் பல்வேறு சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. திறந்த வெளியில் பேச்சு கொடுப்பதற்கும் நல்ல ஒலியமைப்பு வசதியுள்ள மன்றத்தில் பேச்சு கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. லத்தீன் அமெரிக்காவில் இரண்டு மிஷனரிகள் ஆர்வம் காட்டிய ஒருவரின் வீட்டு முற்றத்தில் பொதுப் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர்; ஆனால் பக்கத்து நாற்சந்தியில் பட்டாசுகளின் சத்தம், அதோடு பக்கத்திலேயே ஒரு சேவலும் ஓயாமல் கத்திக்கொண்டு இருந்தது!
பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் சத்தம் இடைஞ்சலை ஏற்படுத்தினால் அது ஓயும்வரை உங்கள் குரலை உயர்த்திப் பேச வேண்டும் அல்லது பேசுவதை நிறுத்த வேண்டும். உதாரணத்திற்கு, தகரக் கூரையுள்ள கட்டடத்தில் கூட்டம் நடக்கையில் திடீரென மழை கொட்டினால் பேச்சு துளிகூட காதில் விழாது. குழந்தை அழும்போது அல்லது சிலர் தாமதமாக வரும்போது பேச்சை கவனித்துக் கேட்பது நிச்சயமாகவே ஒரு சவால். நீங்கள் சொல்லும் தகவல்களிலிருந்து சபையார் முழுமையான பயன் பெறும்படி இப்படிப்பட்ட கவனச்சிதறல்களை சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
ஒலிபெருக்கி கிடைத்தால் உதவியாக இருக்கும்; ஆனால் அது கிடைத்தாலும், சூழ்நிலை தேவைப்படுத்துகையில் பேச்சாளர் தன் பங்கில் சத்தமாக பேச வேண்டியது இன்னும் அவசியமாகவே இருக்கும். அடிக்கடி மின் தடங்கல் ஏற்படும் இடங்களில், பேச்சாளர்கள் மைக்கின் உதவி இல்லாமலே பேச்சை தொடர வேண்டியதாகிறது.
கலந்தாலோசிக்கப்படும் தகவலை கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் பேச்சிலுள்ள தகவலின் இயல்பும், எந்தளவு சத்தம் தேவை என்பதை தீர்மானிக்கும். வலிமையுடன் பேச வேண்டிய விஷயத்தை மிக மெதுவாக சொல்லி பேச்சு வலுவிழந்து போகும்படி செய்துவிடாதீர்கள். உதாரணத்திற்கு, அன்பு காட்ட வேண்டியதைப் பற்றிய அறிவுரையைவிட கண்டனத்தீர்ப்புகளை வசனங்களிலிருந்து வாசிக்கும்போது, உங்கள் சத்தம் அதிகரிக்க வேண்டும். தகவலுக்குப் பொருத்தமாக சத்தத்தை கூட்டிக் குறையுங்கள், ஆனால் உங்களுக்கே கவனத்தை ஈர்க்காத விதத்தில் அதைச் செய்ய கவனமாக இருங்கள்.
உங்கள் குறிக்கோளை கருத்தில் கொள்ளுங்கள். உயிர்த்துடிப்போடு செயல்படும்படி சபையாரைத் தூண்ட விரும்பினால் நீங்கள் ஓரளவு சத்தமாக பேச வேண்டியிருக்கலாம். அவர்களது எண்ணத்தை மாற்ற விரும்பினால், மிக சத்தமாக பேசி அவர்களுக்கு வெறுப்பூட்டாதீர்கள். ஆறுதலளிக்க முயலுகிறீர்கள் என்றால் மென்மையாக பேசுவது விரும்பத்தக்கது.
உரத்த குரலை திறம்பட பயன்படுத்துவது. ஏதோவொன்றில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ஒருவரது கவனத்தை ஈர்க்க முயலும்போது உரத்த குரலில் பேசுவது உதவும். பெற்றோர்கள் இதை அறிந்திருப்பதால், விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை நேரமாகிவிட்டதென உரத்த குரலில் கூப்பிடுகிறார்கள். சபைக் கூட்டத்தினரை அல்லது மாநாட்டிற்கு வந்திருப்போரை அமைதியாக அமரச் செய்யவும் சேர்மன் உரத்த குரலில் பேச வேண்டியிருக்கலாம். ஊழியத்தின்போது, திறந்த வெளியில் வேலை செய்பவர்களை அணுகுகையில் பிரஸ்தாபிகள் சத்தமாக வணக்கம் சொல்லலாம்.
ஒருவரது கவனத்தை ஈர்த்த பிறகும்கூட தொடர்ந்து போதிய சத்தத்தில் பேச வேண்டியது அவசியம். மிகவும் மெல்லிய குரலில் பேசினால், பேச்சை சரியாக தயாரிக்காததுபோல் அல்லது சொல்வதில் நம்பிக்கை இல்லாததுபோல் தொனிக்கும்.
கட்டளையை உரத்த குரலில் கொடுக்கும்போது மக்கள் செயல்படும்படி தூண்டப்படுவர். (அப். 14:9, 10) அதேவிதமாக, சத்தமிட்டு கட்டளையிடும்போது ஆபத்தும் தவிர்க்கப்படலாம். பிலிப்பியில், கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக நினைத்து சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்யவிருந்தான். அப்போது “பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றார். இவ்விதமாக தற்கொலை தடுக்கப்பட்டது. பிறகு பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்காரனிடமும் அவனது வீட்டாரிடமும் சாட்சி கொடுத்தனர்; அவர்கள் அனைவரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்.—அப். 16:27-33.
சத்தமாக பேசுவதில் முன்னேறுவது எப்படி. போதிய சத்தத்தோடு பேசுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள சிலருக்கு மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது. ஒருவருக்கு சன்னக் குரல் இருப்பதால் மெதுவாக பேசலாம். இருந்தாலும் முயற்சி எடுத்தால், மென்மையாக பேசும் சுபாவம் மாறாவிட்டாலும், முன்னேற்றம் செய்யலாம். சுவாசத்திற்கும் தோரணைக்கும் கவனம் செலுத்துங்கள். நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் பழகுங்கள். தோள்களை பின்னாக தள்ளி, மூச்சை நன்றாக இழுத்து வெளிவிடுங்கள். நுரையீரல்களின் அடிப்பகுதியை காற்றால் நிரப்பத் தவறாதீர்கள். இந்தக் காற்றே, சரியாக பயன்படுத்தப்படுகையில் பேச்சின் சத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வேறு சிலருக்கு, மிக உரக்கப் பேசுவது பிரச்சினையாக இருக்கலாம். ஒருவேளை திறந்த வெளியில் அல்லது இரைச்சலான சூழலில் வேலை பார்த்ததால் இந்தப் பழக்கம் அவர்களுக்கு வந்திருக்கலாம். அல்லது, கத்திப் பேசும் மக்கள் மத்தியில் அவர்கள் வளர்ந்திருக்கலாம்; அந்த வளர்ப்பு சூழலில் குறுக்கே பேசுவதும் சகஜமாக இருந்திருக்கலாம். இதன் காரணமாக, தங்கள் கருத்தை தெரிவிக்க மற்றவர்களைவிட உரக்கப் பேசுவதுதான் ஒரே வழி என அவர்கள் நினைக்கிறார்கள். “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும்” தரித்துக்கொள்ள வேண்டுமென்ற பைபிள் அறிவுரையை அவர்கள் படிப்படியாக ஏற்று நடக்கையில், மற்றவர்களோடு உரையாடும்போது தங்கள் சத்தத்தை சரிசெய்து கொள்வார்கள்.—கொலோ. 3:12.
நல்ல தயாரிப்பு, வெளி ஊழியத்தில் தவறாமல் பங்குபெறுவதால் கிடைக்கும் அனுபவம், யெகோவாவிடம் செய்யும் ஜெபம் ஆகியவை போதிய சத்தத்துடன் பேச உங்களுக்கு உதவும். மேடையிலிருந்து பேசினாலும் சரி வெளி ஊழியத்தில் ஒருவரிடம் பேசினாலும் சரி, நீங்கள் சொல்வதை கேட்பதன் மூலம் மற்றவர்கள் எப்படி உதவி பெறலாம் என்பதிலேயே உங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முயலுங்கள்.—நீதி. 18:21.