உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 9 பக். 111-பக். 114 பாரா. 2
  • குரல் வேறுபாடு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குரல் வேறுபாடு
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • கருத்து அழுத்தமும் குரலில் ஏற்றத்தாழ்வும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • குரல் வேறுபாடு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • போதிய சத்தம்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • சப்தமும் நிறுத்தமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 9 பக். 111-பக். 114 பாரா. 2

படிப்பு 9

குரல் வேறுபாடு

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

குரலின் ஒலியை வேறுபடுத்துங்கள். குரலின் சத்தம், வேகம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை மாற்றுவதைக் குறித்து இந்தப் படிப்பில் கவனிப்போம்.

ஏன் முக்கியம்?

சரியான குரல் வேறுபாடு பேச்சிற்கு உயிரூட்டுகிறது, உணர்ச்சிகளைத் தூண்டுகிறது, செயல்பட உந்துவிக்கிறது.

குரலில் வேறுபாடு இல்லையேல், பேசும் விஷயத்தில் உங்களுக்கு உண்மையான ஆர்வமே இல்லாததுபோல் தெரியலாம்.

எளிய முறையில் அழுத்திப் பேசுவது, நீங்கள் சொல்வதை புரிந்துகொள்ள சபையாருக்கு உதவும். ஆனால் சத்தத்திலும் வேகத்திலும் ஏற்றத்தாழ்விலும் வேறுபாடுகளை நன்கு பயன்படுத்துவது பேச்சிற்கு இன்னுமதிக இனிமை சேர்க்கும். அதைக்காட்டிலும், நீங்கள் சொல்வதைக் குறித்து நீங்களே எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை கேட்பவர்களுக்கு வெளிப்படுத்தும். பேசும் தகவலைக் குறித்த உங்கள் மனப்பான்மை, அவர்களது மனப்பான்மையை பாதிக்கலாம். மேடையிலிருந்து பேசினாலும் சரி வெளி ஊழியத்தில் பேசினாலும் சரி இதுவே உண்மை.

மனித குரல், பலவிதமாக மாறும் திறமை பெற்ற அற்புத கருவியாகும். அதைச் சரியாக பயன்படுத்துவது பேச்சிற்கு உயிரூட்டும், இருதயத்தை எட்டும், உணர்ச்சிகளை தூண்டும், செயல்பட வைக்கும். ஆனால், எந்தெந்த இடங்களில் சத்தத்தை அதிகரிப்பது, வேகத்தை கூட்டுவது, அல்லது ஏற்றத்தாழ்வை மாற்றுவது என்பதை குறித்து வைத்துக் கொள்வது மட்டுமே போதாது. இந்த அடையாளங்களைப் பார்த்து குரலை வேறுபடுத்தும்போது பேச்சு செயற்கையாக தொனிக்கும். உங்கள் பேச்சிற்கு உயிர்த்துடிப்பையும் பல்சுவையையும் சேர்ப்பதற்கு பதிலாக கேட்பவர்களை நெளிய வைக்கும். சரியான குரல் வேறுபாடு இருதயத்திலிருந்து எழுகிறது.

குரல் வேறுபாட்டை ஞானமாக பயன்படுத்தும்போது கவனம் அநாவசியமாக பேச்சாளர்மீது ஈர்க்கப்படாது. மாறாக, கலந்தாலோசிக்கப்படும் பொருளின் உண்மையான அர்த்தத்தை கிரகிக்க சபையாருக்கு உதவும்.

சத்தத்தை பொருத்தமாக மாற்றுங்கள். உங்கள் குரலின் ஒலியை வேறுபடுத்துவதற்கான ஒரு வழி, சத்தத்தை பொருத்தமாக மாற்றுவதாகும். ஆனால் சலிப்பூட்டும்படி ஒரே விதத்தில் சத்தத்தை கூட்டுவதும் குறைப்பதுமாக இருக்கக் கூடாது. இது, நீங்கள் சொல்வதன் அர்த்தத்தை மாற்றிவிடலாம். அடிக்கடி சத்தத்தைக் கூட்டினால், கேட்பதற்கு இனிமையாக இருக்காது.

உங்கள் சத்தம் தகவலுக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். வெளிப்படுத்துதல் 14:6, 7-⁠ல் அல்லது வெளிப்படுத்துதல் 18:4-⁠ல் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற அவசர கட்டளையை வாசித்தாலும் சரி யாத்திராகமம் 14:13, 14-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி உறுதியான நம்பிக்கையை வெளிக்காட்டும் பகுதியை வாசித்தாலும் சரி, பொருத்தமான அளவுக்கு சத்தத்தைக் கூட்டுவது நல்லது. எரேமியா 25:27-38-⁠ல் காணப்படுவதைப் போன்ற பலமான கண்டனத்தீர்ப்பை பைபிளிலிருந்து நீங்கள் வாசிக்கையில், சத்தத்தை மாற்றுவது சில பதங்களை வலியுறுத்திக் காட்டும்.

உங்கள் குறிக்கோளையும் கருத்தில் கொள்ளுங்கள். கேட்போரை செயல்படும்படி தூண்ட வேண்டுமா? அல்லது பேச்சின் முக்கிய குறிப்புகளை சிறப்பித்துக் காட்ட வேண்டுமா? விவேகத்தோடு சத்தத்தை அதிகரிப்பது, இந்தக் குறிக்கோள்களை அடைய உதவுகிறது. இருந்தாலும், வெறுமனே சத்தத்தை உயர்த்தினால் குறிக்கோள் கைகூடாமல் போகலாம். எவ்வாறு? நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு உரத்த சத்தம் அல்ல, ஆனால் கனிவும் உணர்ச்சியுமே தேவைப்படலாம். இதை 11-ஆம் படிப்பில் கலந்தாலோசிப்போம்.

விவேகத்தோடு சத்தத்தைக் குறைப்பது எதிர்பார்ப்பை தூண்டலாம். ஆனால் அதற்கு பிறகு உடனடியாக தொனியை வலுப்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கும். கவலையை அல்லது பயத்தை தெரிவிப்பதற்கு குறைவான சத்தத்தையும் வலுவான தொனியையும் சேர்த்து பயன்படுத்தலாம். சொல்லப்படுவது மற்றதைவிட குறைந்த முக்கியத்துவம் உடையது என்பதைக் காட்டவும் சத்தத்தை தாழ்த்தலாம். இருந்தாலும் உங்கள் சத்தம் எப்போதுமே மெதுவாக இருந்தால், நிச்சயமில்லாமல் அல்லது நம்பிக்கையில்லாமல் பேசுவது போலும் நீங்கள் சொல்வதில் உங்களுக்கே ஆர்வம் இல்லாதது போலும் தெரியலாம். மிக மென்மையான தொனிகளை விவேகத்தோடு பயன்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

வேகத்தை மாற்றுங்கள். அன்றாட பேச்சில், நம் எண்ணங்களை தெரியப்படுத்தும்போது வார்த்தைகள் சரளமாக வெளி வருகின்றன. உணர்ச்சிபொங்க பேசுகையில் வேகம் அதிகரிக்கிறது. மற்றவர்கள் நாம் சொல்வதை அப்படியே ஞாபகம் வைக்க வேண்டுமென விரும்பும்போது பேச்சின் வேகம் குறையும்.

இருந்தாலும், புதிதாக பேச்சு கொடுப்பவர்கள் பெரும்பாலும் வேகத்தை மாற்றுவதே இல்லை. ஏன்? ஏனெனில் அவர்கள் வார்த்தைகளுக்கு மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். ஒரு வார்த்தை விடாமல் அனைத்தையும் எழுதி வைத்திருப்பார்கள். அவர்கள் மான்யுஸ்க்ரிப்டிலிருந்து பேச்சு கொடுக்காவிட்டாலும் வார்த்தைகளை மனப்பாடம் செய்து வைத்திருக்கலாம். இதன் காரணமாக அனைத்துமே ஒரேவித வேகத்தில் சொல்லப்படுகிறது. குறிப்புத்தாளிலிருந்து பேச கற்றுக்கொள்வது இந்தப் பலவீனத்தை மேற்கொள்ள உதவும்.

வேகத்தை திடீரென அதிகரிப்பதை தவிருங்கள்; இல்லையேல், மெதுவாக உலாவிக்கொண்டிருக்கும் பூனை நாயைக் கண்டதும் திடீரென தாவிக் குதித்து ஓடுவதைத்தான் அது நினைவுபடுத்தும். மேலும், தெளிவாக புரிந்துகொள்ள முடியாதளவுக்கு வேகமாக பேசுவதை எப்போதும் தவிருங்கள்.

வித்தியாசப்பட்ட வேகங்களில் பேசுவதற்கு, வெறுமனே சீரான இடைவெளிகளில் வேகத்தை கூட்டவும் குறைக்கவும் முயலாதீர்கள். இவ்வகையான பேச்சுப் பாணி, நீங்கள் சொல்லும் தகவலை மெருகூட்டுவதற்குப் பதிலாக அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும். நீங்கள் சொல்லும் விஷயம், தெரியப்படுத்த விரும்பும் உணர்ச்சிகள், உங்கள் குறிக்கோள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல் வேகத்தை மாற்ற வேண்டும். மிதமான வேகத்தில் பேச்சை கொடுங்கள். பரபரப்பான விஷயத்தை தெரிவிக்க, எப்போதும் போலவே வேகமாக பேசுங்கள். அதிக முக்கியமில்லாத குறிப்புகளை அல்லது விவரங்கள் தேவைப்படாத சம்பவங்களை கூறும்போதும் வேகமாக பேசுவது பொருத்தமாக இருக்கும். இதனால் பேச்சு பல்சுவையுடன் இருக்கும், அளவுக்கு அதிக சீரியஸாக தொனிக்காது. மறுபட்சத்தில் வலுவான வாதங்களும் முக்கிய குறிப்புகளும் முடிவுரைகளும் வழக்கமாய் மெதுவாக சொல்லப்பட வேண்டும்.

ஏற்றத்தாழ்வை மாற்றுங்கள். ஒருவர் சுமார் ஒரு மணிநேரத்திற்கு ஓர் இசைக் கருவியை வாசிப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் ஒரே ஸ்வரத்தில் இசைக்கிறார்​—⁠முதலில் சத்தமாக, பின் மென்மையாக, சிலசமயம் வேகமாக, பின் மெதுவாக. சத்தத்திலும் வேகத்திலும் மாற்றம் இருக்கிறது, ஆனால் ஏற்றத்தாழ்வில் மாற்றமே இல்லை; ஆகவே அந்த “இசை”யில் இனிமையும் இல்லை. அதேவிதமாக ஏற்றத்தாழ்வில் மாற்றங்கள் இல்லை என்றால் நம் குரல் காதுகளுக்கு இனிமையாக ஒலிக்காது.

ஏற்றத்தாழ்வில் மாற்றங்கள் செய்வது எல்லா மொழிகளிலும் ஒரேவித விளைவை ஏற்படுத்துவதில்லை என்பதை மனதில் வைக்க வேண்டும். சைனீஸ் மொழி போன்ற ஒலிப்புமுறை மொழிகளில், ஏற்றத்தாழ்வை மாற்றுவது வார்த்தையின் அர்த்தத்தை மாற்றிவிடலாம். ஒலிப்புமுறை மொழிகளல்லாதவற்றிலும், ஏற்றத்தாழ்வை மாற்றுவதால் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கலாம். உதாரணத்திற்கு, குரலை லேசாக ஏற்றி, சத்தத்தையும் அதற்கேற்றாற்போல் அதிகரித்து, இவ்வாறு தகுந்த இடங்களில் அழுத்தலாம். அல்லது ஏற்றத்தாழ்வை மாற்றுவது அளவையோ தூரத்தையோ சுட்டிக்காட்டலாம். வாக்கியத்தை ஏற்றத்தோடு முடிப்பது, ஒரு கேள்வி கேட்கப்படுவதை சுட்டிக்காட்டலாம். சில மொழிகளில் கேள்வியை இறக்கத்தோடு முடிக்க வேண்டியிருக்கலாம்.

உற்சாகத்தையும் பரபரப்பையும் காட்ட குரலை ஏற்ற வேண்டியிருக்கலாம். துக்கத்தையும் கவலையையும் தெரிவிக்க குரலை இறக்க வேண்டியிருக்கலாம். இங்கே குறிப்பிடப்படும் உணர்ச்சிகள், கேட்போரின் இருதயங்களை எட்ட பேச்சாளருக்கு உதவும். அந்த உணர்ச்சிகளை வெளிக்காட்ட வேண்டுமென்றால், வார்த்தைகளை சொல்வது மட்டும் போதாது. நீங்களும் அவ்வாறே உணர்கிறீர்கள் என்பதை உங்கள் குரலில் காட்டுங்கள்.

அஸ்திவாரம் போடுதல். குரல் வேறுபாடு எப்போது ஆரம்பிக்கிறது? உங்கள் பேச்சிற்கு தகவலை தேர்ந்தெடுக்கும்போது. விவாதத்தை மட்டுமே அல்லது புத்திமதியை மட்டுமே தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், பேச்சில் பல்சுவையை காட்ட வாய்ப்பு இருக்காது. ஆகவே உங்கள் குறிப்புத்தாளை பகுத்தறிந்து, தகவல் நிறைந்த, சுவாரஸ்யமான பேச்சிற்கான விஷயங்கள் இருக்கிறதா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை பேச்சின் நடுவே, அது வளவளவென இருப்பது போலவும் பல்சுவையூட்ட வேண்டியது அவசியம் போலவும் நீங்கள் உணர்ந்தால் என்ன செய்வது? நீங்கள் தகவலை அளிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள். எப்படி? வெறுமனே பேசுவதற்கு பதிலாக, பைபிளைத் திறந்து, கேட்போரையும் பைபிளை திறக்குமாறு சொல்லி, பிறகு வசனத்தை வாசிப்பது ஒரு வழியாகும். அல்லது ஏதேனும் வாக்கியத்தை கேள்வியாக மாற்றி, வலியுறுத்துவதற்கு நிறுத்துங்கள். ஓர் எளிய உவமையை புகுத்துங்கள். அனுபவமுள்ள பேச்சாளர்கள் பயன்படுத்தும் உத்திகள் இவை. ஆனால் உங்களுக்கு எந்தளவு அனுபவம் இருந்தாலும்சரி, இதே கருத்துக்களை பயன்படுத்தி பேச்சை தயாரிக்கலாம்.

குரல் வேறுபாடு பேச்சிற்கு நறுமணமூட்டுவதாக சொல்லப்படலாம். பொருத்தமான குரல் வேறுபாடு சரியான அளவுக்கு பயன்படுத்தப்பட்டால் உங்கள் பேச்சு மணம் கமழும்; கேட்போரும் அதை அனுபவித்து மகிழ்வர்.

எப்படி செய்வது

  • சத்தத்தை மாற்றுதல். அவசர கட்டளைகளை, உறுதியான நம்பிக்கைகளை, அல்லது கண்டனத் தீர்ப்புகளை தெரிவிக்கும்போது சத்தத்தை மாற்றுங்கள். பேச்சில் எந்தெந்த இடங்களில் சத்தத்தை கூட்ட வேண்டும் என்பதற்கு ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள்.

  • வேகத்தை மாற்றுதல். அதிக முக்கியமில்லாத குறிப்புகளை வேகமாக சொல்வதன் மூலமும் வலுவான விவாதங்களையும் முக்கிய குறிப்புகளையும் மெதுவாக சொல்வதன் மூலமும் வேகத்தை மாற்றுங்கள். பரபரப்பான விஷயத்தை சொல்வதற்கு வேகத்தை அதிகரியுங்கள்.

  • ஏற்றத்தாழ்வை மாற்றுதல். பொருத்தமாக இருந்தால், உணர்ச்சிகளை தெரிவிக்கவும் இருதயங்களை எட்டவும் ஏற்றத்தாழ்வை மாற்றுங்கள்.

  • குரல் வேறுபாடு, உங்கள் பேச்சிற்கான தகவலை தேர்ந்தெடுக்கும்போதே ஆரம்பிக்கிறது.

பயிற்சிகள்: (1) 1 சாமுவேல் 17:17-53-ஐ மனதுக்குள் வாசியுங்கள். சத்தத்திலும் வேகத்திலும் ஏற்றத்தாழ்விலும் பொருத்தமான மாற்றங்களை எந்தெந்த இடங்களில் செய்யலாம் என கவனியுங்கள். அதன் பிறகு சத்தமாக உணர்ச்சியோடு வாசியுங்கள், ஆனால் உணர்ச்சிவசப்பட்டு வாசித்துவிடாதீர்கள். இதை பலமுறை செய்யுங்கள். (2) குரலில் நெகிழ்வை வளர்த்துக்கொள்ள, 48-51 வசனங்களை சத்தமாகவும், தடுமாற்றமின்றி எவ்வளவு வேகமாக வாசிக்க முடியுமோ அவ்வளவு வேகமாகவும் வாசியுங்கள். வேகத்தை அதிகரித்தவாறே மீண்டும் மீண்டும் வாசியுங்கள், ஆனால் தெளிவை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. பிறகு, அதே வசனங்களை எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக நிதானத்துடன் வாசியுங்கள். அடுத்ததாக, நீங்கள் செய்ய விரும்புவதை உங்கள் குரல் செய்யும் வரை மாறிமாறி வேகமாகவும் மெதுவாகவும் வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்