படிப்பு 16
நிதானம்
பேச்சாளர் பேசுவதற்கு எழும்போது பயப்படுவது சகஜம்தான்; முக்கியமாக அடிக்கடி பேச்சு கொடுக்காதவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். வெளி ஊழியத்தில் முதல் சில வீடுகளில் பேசுவதற்கு ஒரு பிரஸ்தாபி ஓரளவு பயப்படலாம். தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டபோது எரேமியா இவ்வாறு பதிலளித்தார்: “இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்.” (எரே. 1:5, 6) எரேமியாவுக்கு யெகோவா உதவி செய்தார், அவர் உங்களுக்கும் உதவி செய்வார். காலப்போக்கில், நீங்களும் நிதானத்தை வளர்த்துக்கொள்ள முடியும்.
நிதானமாக பேசுகிற ஒரு பேச்சாளர் பதற்றமின்றி இருக்கிறார். இது அவருடைய சரீர தோற்றத்தில் தெரிகிறது. அவருடைய தோரணை இயல்பாகவும் சூழ்நிலைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. கை அசைவுகள் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. அவருடைய குரல் தெளிவாகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது.
நிதானமாக பேசுகிறவரைப் பற்றிய இந்த வருணனை உங்களுக்கு பொருந்தாது என நீங்கள் உணர்ந்தாலும், உங்களால் முன்னேற முடியும். எப்படி? ஒரு பேச்சாளர் ஏன் பயப்படுகிறார், நிதானத்தை இழக்கிறார் என்பதை நாம் ஆராயலாம். இதற்கு காரணம் உடல் ரீதியிலானதாக இருக்கலாம்.
ஒரு சவாலை எதிர்ப்படும்போது அதை நன்கு சமாளிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருக்கலாம், ஆனால் நம்பிக்கையோ இல்லாதிருக்கலாம்; இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கவலை உங்களை கவ்விக்கொள்கிறது. அதனால், அதிகமாக அட்ரீனல் இயக்கு நீரை சுரக்கும்படி உடலுக்கு மூளை சமிக்கைகள் தருகிறது. அட்ரீனல் நீர் அதிகமாய் சுரப்பதால் இதயத் துடிப்பு அதிகமாகலாம், சுவாச அளவு வேறுபடலாம், அதிகமாக வியர்க்கலாம், அல்லது கை, கால்கள் உதறலாம், குரலில் நடுக்கம் ஏற்படலாம். உங்களுடைய சக்தியை ஒன்றுதிரட்டி இந்த நிலைமையை சமாளிப்பதற்கு உங்களுடைய உடல் முயல்கிறது. இப்பொழுது, பெருக்கெடுக்கும் இந்த சக்தியை ஆக்கபூர்வ சிந்தனைக்குள் செலுத்தி உற்சாகம் பொங்க உரையாற்றுவது எப்படி என்பதை தெரிந்துகொள்வதே சவால்.
கவலையை எப்படி குறைப்பது. ஓரளவு கவலைப்படுவது சகஜம்தான் என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் நிதானத்தைக் காத்துக்கொள்வதற்கு, கவலையின் அளவை குறைத்து உங்களுடைய சூழ்நிலையை அமைதியான, கண்ணியமான முறையில் சமாளிக்க வேண்டும். இதை நீங்கள் எப்படி சாதிக்கலாம்?
முழுமையாக தயாரியுங்கள். உங்களுடைய பேச்சை தயாரிப்பதற்கு நேரத்தை முதலீடு செய்யுங்கள். உங்களுடைய பொருளை தெளிவாக புரிந்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்களே குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து பேசும் பேச்சாக இருந்தால், அந்தப் பொருளைப் பற்றி சபையாருக்கு ஏற்கெனவே என்ன தெரியும் என்பதையும், எதை சாதிக்க நினைக்கிறீர்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இது, மிகவும் பயனுள்ள தகவல்களைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவும். முதலில் உங்களுக்கு இது கஷ்டமாக இருந்தால், அனுபவமிக்க பேச்சாளரிடம் உங்களுடைய பிரச்சினையைப் பற்றி பேசுங்கள். உங்களுடைய தகவலையும் சபையாரையும் பற்றி ஆக்கபூர்வமாக பகுத்தாராய அவர் உங்களுக்கு உதவி செய்ய முடியும். சபையாருக்கு பயன்தரும் தகவலே உங்களுடைய கைவசம் இருக்கிறது என்பதில் நிச்சயமாயிருக்கும் போதும் அத்தகவலை மனதில் தெளிவாக வைத்திருக்கும் போதும், அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் ஆசை உங்களுடைய கவலையை மறைக்க ஆரம்பிக்கும்.
உங்களுடைய முகவுரைக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். அதை எப்படி ஆரம்பிக்க போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள். நீங்கள் பேச ஆரம்பித்த பிறகு, உங்களுடைய பயம் கொஞ்சம் கொஞ்சமாக தணியலாம்.
இதே அடிப்படை படிகள் வெளி ஊழியத்திற்கு தயாரிப்பதிலும் பொருந்துகின்றன. நீங்கள் கலந்துபேச திட்டமிடும் பொருளைப் பற்றி மட்டுமல்ல, நீங்கள் சாட்சிகொடுக்கும் ஆட்களைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்களுடைய முகவுரையை கவனமாக திட்டமிடுங்கள். முதிர்ச்சி வாய்ந்த பிரஸ்தாபிகளுடைய அனுபவத்திலிருந்து பயனடையுங்கள்.
ஒரு தொகுதியினருக்கு முன்பு பேச்சு கொடுக்கையில் மான்யுஸ்க்ரிப்டுகளைப் பயன்படுத்தினால் அதிக நிதானமாக இருப்பீர்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில், அதை பயன்படுத்தி பேச்சு கொடுக்கும் ஒவ்வொரு தடவையும் கவலை அதிகரிக்கவே செய்யலாம். உண்மைதான், சிலர் அதிக விரிவாக எழுதப்பட்ட குறிப்புகளை பயன்படுத்துகிறார்கள், வேறுசிலரோ சுருக்கமான குறிப்புகளை வைத்து பேசுகிறார்கள். ஆனால் உங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதை தவிர்ப்பதற்கும் கவலையை குறைப்பதற்கும் எது உதவும் என்றால், தாளிலுள்ள வார்த்தைகள் அல்ல, சபையாருக்கு உண்மையிலேயே பயனுள்ள ஒன்றை தயாரித்திருக்கிறீர்கள் என்ற உங்களுடைய உறுதியான நம்பிக்கையே.
உங்களுடைய பேச்சை சத்தமாக கொடுத்துப் பழகுங்கள். இப்படி பழகிப் பார்ப்பது எண்ணங்களை வார்த்தைகளில் வடிக்கும் நம்பிக்கையை உங்களுக்குத் தரும். நீங்கள் பழகிப் பார்க்கும்போது, அது உங்களுடைய நினைவில் பதிவுகளை ஏற்படுத்தும்; நீங்கள் பேச்சு கொடுக்கும்போது இவை உடனடியாக உயிர்பெற்று வார்த்தைகளாக சொரியும். எதார்த்தமான முறையில் பழகிப் பாருங்கள். உங்களுடைய சபையாரை கற்பனை செய்து பாருங்கள். பேச்சு கொடுக்கும்போது எப்படி கொடுப்பீர்களோ அது போலவே—நின்றுகொண்டோ அமர்ந்துகொண்டோ—பழகுங்கள்.
உதவிக்காக யெகோவாவிடம் ஜெபியுங்கள். இப்படிப்பட்ட ஜெபத்திற்கு அவர் பதிலளிப்பாரா? “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (1 யோ. 5:14) நீங்கள் கடவுளை கனப்படுத்தவும் அவருடைய வார்த்தையிலிருந்து பயனடைய மக்களுக்கு உதவி செய்யவும் விரும்பினால், அவர் கண்டிப்பாக உங்களுடைய ஜெபத்திற்கு பதிலளிப்பார். உங்களுடைய நியமிப்பை நிறைவேற்ற இந்த உறுதி உங்களை மிகவும் பலப்படுத்தும். மேலும், நீங்கள் ஆவியின் கனிகளை—அன்பு, சந்தோஷம், சமாதானம், சாந்தம், இச்சையடக்கம் போன்றவற்றை—அபிவிருத்தி செய்யும்போது, சூழ்நிலைகளை நிதானத்தோடு கையாளுவதற்குத் தேவைப்படும் மனநிலையை வளர்த்துக்கொள்வீர்கள்.—கலா. 5:22, 23.
அனுபவம் பெறுங்கள். எந்தளவுக்கு வெளி ஊழியத்தில் பங்குகொள்கிறீர்களோ அந்தளவுக்கு பயம் குறைவாக இருக்கும். கூட்டங்களில் எந்தளவுக்கு அதிகமாக பதில் சொல்கிறீர்களோ அந்தளவுக்கு மற்றவர்கள் முன்பு பேசுவதும் எளிதாக இருக்கும். சபையில் நீங்கள் கொடுக்கும் பேச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஒவ்வொரு பேச்சிற்கும் முன்பு உங்களுக்கு உண்டாகும் பயத்தின் அளவும் குறையலாம். நீங்கள் பேசுவதற்கு அதிக வாய்ப்புகளைப் பெற விரும்புகிறீர்களா? அப்படியானால், பள்ளியில் மற்றவர்கள் தங்களுடைய நியமிப்புகளை கையாள முடியாதபோது அவர்களுக்குப் பதிலாக பேச்சு கொடுப்பதற்கு முன்வாருங்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட படிகளை எடுத்தப்பின், நீங்கள் நிதானம் இழந்ததை தெளிவாக சுட்டிக்காட்டும் அறிகுறிகளை ஆராய்ந்து பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். அறிகுறிகளை அடையாளம் கண்டுகொண்டு அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை கற்றுக்கொள்வது நிதானத்தோடு பேசுவதற்கு உதவும். இந்த அறிகுறிகள் உடல் ரீதியில் அல்லது குரல் ரீதியில் இருக்கலாம்.
உடல் ரீதியிலான அறிகுறிகள். நீங்கள் நிதானமாக அல்லது நிதானமில்லாமல் இருப்பது உடல் தோற்றத்திலிருந்தும் கை அசைவுகளிலிருந்தும் தெரிகிறது. முதலில் கைகளை கவனியுங்கள். பின்புறம் கைகளை இறுகப் பற்றிக்கொள்வது, பக்கங்களில் விறைப்பாக பிடித்துக்கொள்வது, அல்லது பீடத்தை இறுக்கமாக பிடித்துக்கொள்வது; அடிக்கடி கைகளை பாக்கெட்டுக்குள் போடுவது, எடுப்பது, கோட் பட்டன்களை கழற்றுவது, மாட்டுவது, தேவையில்லாமல் தாடையை, மூக்கை, கண்ணாடியை தொடுவது; அடிக்கடி கைக்கடிகாரத்தை, பென்சிலை, மோதிரத்தை, அல்லது குறிப்புத்தாள்களை நகர்த்துவது; கை சைகைகள் வெடுக்கென்றோ அல்லது முழுமை பெறாமலோ இருப்பது—இவையனைத்தும் நிதானம் இழந்திருப்பதைக் காட்டுகின்றன.
கால்களை முன்னும் பின்னும் நகர்த்துவது, ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு உடலை சாய்ப்பது, மிக விறைப்பாக நிற்பது, குனிந்தபடி நிற்பது, அடிக்கடி உதட்டை ஈரமாக்குவது, அடிக்கடி எச்சில் விழுங்குவது, வேகமாகவும் மேலோட்டமாகவும் சுவாசிப்பது போன்றவை நம்பிக்கையின்மையை சுட்டிக்காட்டலாம்.
விடாமுயற்சி செய்தால் பயத்தின் இப்படிப்பட்ட அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும். ஒரு சமயத்தில் ஒரு அறிகுறியை மட்டுமே கட்டுப்படுத்த முயலுங்கள். பிரச்சினையை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், அதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே ஆலோசியுங்கள். நீங்கள் இவ்வாறு முயற்சி எடுத்தால், உங்களுடைய சரீர தோற்றத்தில் நிதானம் தெரியும்.
குரல் ரீதியிலான அறிகுறிகள். பயத்திற்குரிய குரல் ரீதியிலான அத்தாட்சிகளில், உச்சஸ்தாயியில் அல்லது நடுங்கிய குரலில் பேசுவது அடங்கலாம். நீங்கள் அடிக்கடி தொண்டையை சரிசெய்யலாம் அல்லது மிக வேகமாக பேசலாம். குரலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஊக்கமாக முயற்சி எடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளையும் பழக்கங்களையும் கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் பயப்பட்டால், மேடைக்குச் செல்வதற்கு முன்பு சிலமுறை நன்கு இழுத்து மூச்சு விட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய முழு சரீரத்தையும் தளர்த்துவதற்கு முயலுங்கள். உங்களுடைய பயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நீங்கள் தயாரித்திருக்கிற விஷயங்களை சபையாருடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் காரணங்களின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, சில விநாடிகளுக்கு உங்களுடைய சபையாரை பாருங்கள். நட்புக்குரியவருடைய முகத்தைத் தேடி புன்முறுவல் புரியுங்கள். முகவுரையில் மெதுவாக பேசுங்கள், அதற்குப் பிறகு உங்களுடைய பேச்சில் மும்முரமாக இறங்குங்கள்.
என்ன எதிர்பார்க்க வேண்டும். பயவுணர்ச்சிகள் அனைத்தையும் அடியோடு ஒழித்துவிடலாம் என எதிர்பார்க்காதீர்கள். பல வருட அனுபவமுடைய பேச்சாளர்கள்கூட இன்னும் பயத்தோடுதான் மேடை ஏறுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பயத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கற்றிருக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த ஒரு பேச்சாளர் இவ்வாறு கூறினார்: “பேச்சு கொடுப்பதை நினைத்தால் எனக்கு இன்னும் வயிறு கலங்கத்தான் செய்கிறது, ஆனால் இப்பொழுது முதலில் இருந்தளவுக்கு இல்லை.”
பயத்தின் புற வெளிப்பாடுகளைப் போக்க நீங்கள் உள்ளப்பூர்வமாக முயற்சி செய்தால், சபையார் உங்களை நிதானமான பேச்சாளராக கருதுவார்கள். உங்களுக்கு இன்னும் பயம் இருக்கலாம், ஆனால் அது அவர்களுக்குத் துளிகூட தெரியாது.
பயத்திற்குரிய அறிகுறிகளை உண்டாக்கும் அட்ரீனல் இயக்குநீர் அதிகமாக சுரப்பது அதிக சக்தியையும் தருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். உணர்ச்சி ததும்ப பேசுவதற்கு அதைப் பயன்படுத்துங்கள்.
இவையனைத்தையும் பழகிப் பார்ப்பதற்கு நீங்கள் மேடைக்கு செல்லும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. அன்றாட வாழ்வில் நிதானமாகவும் கட்டுப்பாட்டோடும் தகுந்த உணர்ச்சியோடும் பேசுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். இப்படி செய்வது மேடையிலும் வெளி ஊழியத்திலும் நம்பிக்கையோடு பேசுவதற்கு பெரிதும் கைகொடுக்கும்.