படிப்பு 37
நிதானமும் தனிப்பட்ட தோற்றமும்
1 நிதானமுள்ள ஒரு பேச்சாளர் தளர்ந்த நிலையிலுள்ள ஒரு பேச்சாளராக இருக்கிறார். நிலைமையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் காரணத்தால் அவர் அமைதியாகவும் பதற்றமின்றியும் இருக்கிறார். மறுபட்சத்தில், நிதான குறைவு ஓரளவு தன்னம்பிக்கைக் குறைவைக் காண்பிக்கிறது. இரண்டும் சேர்ந்தே செல்கின்றன. அதன் காரணமாக, “தன்னம்பிக்கையும் நிதானமும்” என்பது பேச்சு ஆலோசனைத் தாளில் ஒரே குறிப்பாக பட்டியலிடப்பட்டிருக்கிறது.
2 தன்னம்பிக்கையும் நிதானமும் ஒரு பேச்சாளரின் பங்கில் விரும்பத்தக்கவையாக இருக்கையில், மிதமிஞ்சிய தன்னம்பிக்கையோடு இவற்றைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. உட்கார்ந்திருந்தால் அளவுக்கு அதிகமாக தளர்ந்த நிலையில் கர்வமாக அல்லது அகம்பாவமாக அல்லது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டும், வீட்டுக்கு வீடு பிரசங்கித்துக்கொண்டிருந்தால் அளவுக்கு அதிக சாவதானமாக கதவுகம்பத்தின்மேல் சாய்ந்துகொண்டிருப்பதன் மூலமாகவும் இது வெளிப்படுத்தப்படுகிறது. உங்கள் அளிப்பில் ஏதோ ஒன்று மிதமிஞ்சிய தன்னம்பிக்கையான மனநிலையைத் தெரிவிப்பதாக இருந்தால், உங்கள் பள்ளி கண்காணி தனியாக உங்களுக்கு ஆலோசனை கொடுப்பார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஏனென்றால் உங்கள் ஊழியத்தின் பலன்தரத்தக்க தன்மையைத் தடைசெய்யக்கூடிய நீங்கள் கொடுக்கும் இப்படிப்பட்ட அபிப்பிராயத்தை மேற்கொள்ள உங்களுக்கு உதவிசெய்வதில் அவர் அக்கறையுள்ளவராக இருப்பார்.
3 இருந்தபோதிலும், நீங்கள் ஒரு புதிய பேச்சாளராக இருந்தால், மேடையை நெருங்கும்போது தைரியமில்லாமலும் கூச்சமுள்ளவராகவும் உணருவதற்கு அதிக சாத்தியமுண்டு. பலன்தராத ஓர் அளிப்பை நீங்கள் செய்யப்போவதாக உங்களை நம்பச் செய்யும் உண்மையான நடுக்கமும் அசெளகரியமான உணர்வும் உங்களுக்கிருக்கலாம். இது இவ்வாறு இருக்கவேண்டியதில்லை. ஊக்கமான முயற்சியினாலும் அவை ஏன் குறைவுபடுகின்றன என்பதை அறிந்துகொள்வதாலும் தன்னம்பிக்கையையும் நிதானத்தையும் முயன்று அடைய முடியும்.
4 சில பேச்சாளர்கள் தன்னம்பிக்கையில் குறைவுபடுவதற்குக் காரணமென்ன? பொதுவாக ஒன்று அல்லது இரண்டு காரணங்களும் சேர்வதால் ஆகும். முதலாவது, தயாரிப்பு குறைவு அல்லது அவர்களுடைய பொருளைப் பற்றிய தவறான நோக்குநிலை. இரண்டாவது, பேச்சாளர்களாக தங்களுடைய தகுதிகளைப் பற்றிய எதிர்மறையான ஒரு நோக்குநிலை.
5 எது உங்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கும்? அடிப்படையில் உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்பதை அறிந்திருப்பது அல்லது அதைக் குறித்த நம்பிக்கை. அது நிலைமையைக் கைக்குள் வைத்திருப்பதையும் அதைக் கட்டுப்படுத்த முடிவதையும் பற்றிய உறுதியாகும். மேடையில் இதற்கு கொஞ்சம் அனுபவம் தேவைப்படலாம். பல பேச்சுக்களைக் கொடுத்திருக்கும் காரணத்தால் இதுவும்கூட வெற்றிகரமாய் அமையும் என்பதாக நியாயமாகவே நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம். ஆனால் ஒப்பிடுகையில், நீங்கள் புதியவராக இருந்தாலும்கூட இதற்கு முன்னால் கொடுத்த பேச்சுக்கள் உங்களை உற்சாகப்படுத்த வேண்டும், ஆகவே விரைவில் இந்தப் பண்பை நியாயமான அளவு நீங்கள் வெளிப்படுத்த முடிகிறவராக இருக்க வேண்டும்.
6 நீங்கள் அனுபவமுள்ளவராக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, தன்னம்பிக்கைக்கு மற்றொரு இன்றியமையாத தேவை உங்கள் பொருளைப் பற்றிய அறிவும் இந்தப் பொருள் மதிப்புள்ளது என்ற திட நம்பிக்கையுமாகும். உங்கள் தலைப்புப் பொருளைச் செம்மையாக முன்கூட்டியே தயாரிப்பதை மட்டுமல்ல, பேச்சுக் கொடுப்பதற்கு கவனமுள்ள தயாரிப்பையும்கூட அது அர்த்தப்படுத்துகிறது. இது உங்களுடைய சொந்த தேவாட்சிக்குட்பட்ட முன்னேற்றத்துக்காகவும், அதே சமயத்தில் ஆஜராயிருக்கும் சகோதரர்களின் அறிவுரைக்காகவும் என்பதை உணருவீர்களேயானால், நீங்கள் ஜெப சிந்தையோடு மேடையை நெருங்குவீர்கள். தலைப்புப் பொருளில் ஆழ்ந்துபோய் உங்களையும் உங்கள் நடுக்கத்தையும் மறந்துபோவீர்கள். நீங்கள் மனிதர்களை அல்ல, கடவுளைப் பிரியப்படுத்துவதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பீர்கள்.—கலா. 1:10; யாத். 4:10-12; எரே. 1:8.
7 இது நீங்கள் சொல்லப்போகிற அனைத்துக் காரியங்களையும் உறுதியாக நம்ப வேண்டும் என்று அர்த்தமாகிறது. உங்கள் தயாரிப்பில் இது இவ்விதமாக இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். பின்னர் அக்கறையூட்டும் உயிரோட்டமுள்ள ஒரு பேச்சைத் தயாரிப்பதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்தபின்பு, உங்கள் பேச்சு இன்னமும் சுவையில் குறைவுபடுவதாக அல்லது உயிரற்றிருப்பதாக உணர்ந்தால், உற்சாகமுள்ள கேட்போர் உங்கள் பேச்சுக்கு ஊக்கமூட்டிவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே உங்கள் சொந்த அளிப்பின் மூலம் உங்கள் கேட்போரை உணர்ச்சித்துடிப்புள்ளவர்களாகச் செய்யுங்கள், அவர்களுடைய ஆர்வம், நீங்கள் அளிக்க இருப்பதில் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
8 ஒரு மருத்துவர் வியாதியின் நோய்க்குறிகளுக்காகப் பார்ப்பது போலவே, மன அமைதி குறைவுபடுவதைச் சந்தேகத்திற்கிடமின்றி சுட்டிக்காட்டும் அறிகுறிகளை உங்கள் ஆலோசகர் கவனிப்பார். ஒரு நல்ல மருத்துவர் நோய்க்குறிகளுக்கு அல்ல, ஆனால் உங்கள் நோயின் காரணத்துக்குச் சிகிச்சையளிப்பது போலவே, உங்கள் ஆலோசகர் தன்னம்பிக்கை மற்றும் நிதானத்தின் குறைவுக்கு உண்மையான காரணங்களை மேற்கொள்ள உங்களுக்கு உதவிசெய்ய முயற்சிசெய்வார். இருப்பினும், நோய்க்குறிகளை அறிந்து அவற்றை கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வது, அந்த நோய்க்குறிகளின் அடிப்படையான காரணங்களை மேற்கொள்ள உண்மையில் உங்களுக்கு உதவிசெய்யும். அவை யாவை?
9 பொதுவாக பேசுகையில், அடக்கி வைக்கப்பட்டுள்ள உணர்ச்சிகள் அல்லது மன இறுக்கத்துக்கு இரண்டு வடிகால்கள் இருக்கின்றன. அவற்றை சரீர அல்லது உடல் அறிகுறிகளெனவும் குரலின் மூலமாக வெளிப்படுவது எனவும் வகைப்படுத்தலாம். இவை எந்த அளவுக்கு வெளிப்படுத்தப்பட்டாலும், அந்த நபர் நிதானத்தில் குறைவுபடுகிறார் என்று நாம் சொல்கிறோம்.
10 உடல் தோற்றத்தில் நிதானத்தை வெளிப்படுத்துதல். அப்படியென்றால் நிதானத்தின் முதல் அத்தாட்சி உங்கள் உடல் தோற்றத்தில் வெளிப்படுகிறது. தன்னம்பிக்கை குறைவுபட்டால் உங்களைக் காட்டிக்கொடுத்துவிடும் சில காரியங்களை இங்கே காணலாம். கைகளை முதலில் கவனியுங்கள்: கைகளைப் பின்னால் கோத்துக்கொள்ளுதல், பக்கவாட்டில் கைகள் விறைப்பாக இருத்தல் அல்லது பேச்சாளர் நிலைமேடையை இறுக்கமாக பற்றிக்கொள்ளுதல்; ஜேப்பிகளுக்குள் கையைத் திரும்பத் திரும்ப போட்டும் எடுத்தபடியும் இருத்தல், மேல்சட்டைப் பொத்தானை போட்டும் அவிழ்த்தும்கொண்டிருத்தல், குறிக்கோளில்லாமல் கன்னம், மூக்கு, மூக்குக்கண்ணாடியிடமாக கைகளைக் கொண்டுசெல்லுதல்; முழுமைப்பெறாத சைகைகள்; கைக்கடிகாரம், பென்சில், மோதிரம் அல்லது குறிப்புகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பது. அல்லது கால்களை ஓயாது ஆட்டிக்கொண்டிருப்பது, உடலை பக்கவாட்டில் இங்குமங்குமாக அசைப்பது போன்றவற்றையும் கவனியுங்கள்; முதுகு செறிகோலைப் போல அல்லது முழங்கால்கள் வளைந்திருப்பது; அடிக்கடி உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டிருப்பது, மறுபடியும் மறுபடியும் விழுங்கிக்கொண்டிருப்பது, வேகமாகவும் ஆழமில்லாமலும் மூச்சுவிடுவது.
11 நடுக்கத்தின் இந்த எல்லா அத்தாட்சிகளையும் உணர்வுடன்கூடிய முயற்சியினால் கட்டுப்படுத்தலாம் அல்லது குறைத்துவிடலாம். அந்த முயற்சியை நீங்கள் செய்தால் உங்கள் தோற்றத்தில் நிதானத்தின் அபிப்பிராயத்தை கொடுப்பீர்கள். ஆகவே இயற்கையாகவும் சீராகவும் சுவாசித்து தளர்ந்த நிலையிலிருக்க தீர்மானமாக முயற்சிசெய்யுங்கள். பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் நிறுத்தம் கொடுங்கள். உங்கள் கேட்போர் நிச்சயமாகவே சாதகமாகப் பிரதிபலிப்பர், முறையே இது நீங்கள் நாடிக்கொண்டிருக்கும் தன்னம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவும். கேட்போரைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு அல்லது உங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டில்லாமல் உங்கள் பொருளில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.
12 கட்டுப்படுத்தப்பட்ட குரலின் மூலமாக நிதானத்தைக் காண்பித்தல். அசாதாரணமான உயர்தொனிநிலை, குரல் நடுக்கம், தொண்டையைத் திரும்பத் திரும்ப சரிசெய்துகொள்ளுதல், பதற்றத்தின் காரணமாக குறைவுபடும் எதிரொலியால் அசாதாரணமான மெல்லிய தொனி ஆகியவை நடுக்கத்தை வெளிப்படுத்தும் குரலின் தொடர்பான அத்தாட்சிகளாகும். இந்தப் பிரச்சினைகளையும் இயற்கைப் பழக்கங்களையும்கூட ஊக்கமுள்ள முயற்சியினால் வென்றுவிடலாம்.
13 மேடைக்கு நடந்துசெல்லும்போது அல்லது உங்கள் குறிப்புகளை ஒழுங்குபடுத்தி வைக்கையிலும் அவசரப்படாதீர்கள். ஆனால் தளர்ந்த நிலையிலும் நீங்கள் தயாரித்திருக்கும் காரியங்களைப் பகிர்ந்துகொள்ள சந்தோஷமுள்ளவர்களாகவும் இருங்கள். பேச ஆரம்பிக்கையில், நடுக்கமிருப்பது உங்களுக்குத் தெரிந்தால் சாதாரணமாகச் செய்வதைவிட முன்னுரையில் நிதானமாகவும் உங்களுக்கு இயல்பானது என்பதாக நீங்கள் நினைப்பதைவிட தாழ்ந்த தொனிநிலையிலும் பேச விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். இது நடுக்கத்தைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவிசெய்யும். சைகையும் நிறுத்தமும் ஆகிய இரண்டுமே தளர்ந்த நிலையிலிருக்க உங்களுக்கு உதவிசெய்வதை நீங்கள் காண்பீர்கள்.
14 ஆனால் இந்த எல்லா காரியங்களையும் பழகிக்கொள்ள நீங்கள் மேடைக்கு போகும்வரையாக காத்திருக்கவேண்டாம். உங்களுடைய அன்றாட பேச்சில் நிதானமாகவும் கட்டுக்குள்ளும் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். மேடையிலும், அதிக அத்தியாவசியமாக இருக்கும் உங்கள் வெளி ஊழியத்திலும் அது தன்னம்பிக்கையை உங்களுக்குத் தருவதில் வெகு தூரம் செல்வதாக இருக்கும். அமைதியான பேச்சு, உங்கள் கேட்போரை செளகரியமாக உணரச்செய்யும், அவர்கள் பொருளின்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடியவர்களாக இருப்பர். கூட்டங்களில் ஒழுங்காக குறிப்புச்சொல்வது ஒரு தொகுதிக்கு முன்பாக பேசுவதற்கு பழகிக்கொள்ள உங்களுக்கு உதவிசெய்யும்.
***********
15 ஒரு நல்ல தனிப்பட்ட தோற்றம் நிதானமுடன் இருக்க உங்களுக்கு உதவலாம், ஆனால் மற்ற காரணங்களுக்காகவும் அது முக்கியமாகும். அதற்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லையென்றால், அவருடைய தோற்றம் அவருடைய கேட்போரின் கவனத்தைச் சிதறடித்துவிட அவர் சொல்லிக்கொண்டிருப்பதற்கு அவர்கள் உண்மையில் கவனம் செலுத்தாதிருப்பதை ஊழியர் காணக்கூடும். மாறாக, அவர் தன்மீதே கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார், இதை நிச்சயமாகவே அவர் செய்ய விரும்புவதில்லை. தன்னுடைய தனிப்பட்ட தோற்றத்தைக் குறித்து ஒருவர் அளவுக்கு அதிகமாக கவலையீனமாக இருந்தால், அவர் ஓர் அங்கமாயிருக்கும் அந்த அமைப்பை மற்றவர்கள் மதிப்புக்குறைவாக நோக்கும்படியும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் செய்தியை நிராகரித்துவிடும்படியும் செய்துவிடக்கூடும். இது இவ்வாறு இருக்கக்கூடாது. ஆகவே பேச்சு ஆலோசனைப் படிவத்தில் “தனிப்பட்ட தோற்றம்” பட்டியலில் கடைசியாக வந்தாலும் அது குறைந்த முக்கியத்துவமுள்ள ஒன்றாக கருதப்படவே கூடாது.
16 தகுதியான உடையும் தலை அலங்காரமும். உடையில் மட்டுமீறிய நிலை தவிர்க்கப்பட வேண்டும். தன்னிடமாக கவனத்தை ஈர்க்கின்ற உலகின் நாகரீக பாணிகளை கிறிஸ்தவ ஊழியர் பின்பற்றமாட்டார். கவனம் உடையினிடமாக திருப்பப்படும்விதமாக பகட்டாக அல்லது அதிக பளபளப்பாக உடுத்துவதை அவர் தவிர்ப்பார். மேலும் ஒழுங்கீனமான முறையில் உடுத்தியில்லாதபடி கவனம் செலுத்துவார். நன்றாக உடுத்தியிருப்பது என்பது ஒருவர் ஒரு புதிய சூட்டை அணிந்துகொள்வதைத் தேவைப்படுத்துவதில்லை. ஆனால் ஒருவர் எப்போதும் நேர்த்தியாயும் சுத்தமாயும் இருக்கலாம். முழுக்கால் சட்டைகள் ஸ்திரி செய்யப்பட்டு டை நேராக அணியப்பட்டிருக்க வேண்டும். இவை எவரும் செய்யமுடிகிற காரியங்களாகும்.
17 ஒன்று தீமோத்தேயு 2:9-ல் காணப்படுகிறபடி, அப்போஸ்தலன் பவுல் உடையைப் பற்றி பதிவுசெய்த புத்திமதி கிறிஸ்தவப் பெண்களுக்கு இன்று பொருத்தமாயிருக்கிறது. சகோதரர்களின் விஷயத்தில் உண்மையாயிருப்பது போலவே, தங்களிடமாக கவனத்தை ஈர்க்கும்விதமாக அவர்கள் உடுத்தக்கூடாது. அடக்கமின்மைக்கு அத்தாட்சியாயிருக்கும் உலகின் மட்டுமீறிய பாணிகளுக்குச் செல்வது அவர்களுக்குப் பொருத்தமாயிராது.
18 நிச்சயமாகவே எல்லா ஆட்களுமே ஒரேவிதமாக உடுத்துவது கிடையாது என்பது மனதில் வைக்கப்பட வேண்டும். அது எதிர்பார்க்கப்படக்கூடாது, மக்கள் வித்தியாசமான ரசனையுள்ளவர்களாக இருக்கின்றனர், இது முழுவதும் சரியே. தகுதியான உடை என்பதாக கருதப்படுவதும்கூட உலகின் வித்தியாசமான பகுதிகளில் வித்தியாசப்படுகிறது. ஆனால் கேட்போரிலிருப்பவர்களின் மனங்களுக்கு சாதகமற்ற தூண்டுதல் கருத்துக்களை எடுத்துச்செல்லக்கூடியதும், நம்முடைய கூட்டங்களுக்கு வருபவர்களை இடறலடையச் செய்யக்கூடியதுமான வகையில் உடுத்துவதைத் தவிர்ப்பது எப்பொழுதும் நல்லதாக இருக்கிறது.
19 சகோதரர்களைப் பற்றியதில் பள்ளியில் அல்லது ஊழியக் கூட்டத்தில் பேச்சுக்கள் கொடுக்கையில் தகுதியான உடை என்பது ஒரு பொதுப் பேச்சுக் கொடுக்கும் சகோதரர் உடுத்தும் அதே பொதுவான முறையில் அவர்கள் உடுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லப்படலாம். நீங்கள் வாழுமிடத்தில் பொதுப் பேச்சுக் கொடுப்பவர்கள் டையையும் சூட் கோட்டையும் அணிவது பழக்கமாக இருந்தால், அப்பொழுது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சுக்களைக் கொடுக்கும்போதும்கூட அதுவே தகுதியான உடையாக இருக்கும், ஏனென்றால் நீங்கள் பொதுப் பேச்சுக்காக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறீர்கள்.
20 தகுதியான தலை அலங்காரமும்கூட கவனத்தைப் பெற வேண்டும். சீவப்படாத தலைமுடி மோசமான ஓர் அபிப்பிராயத்தை விட்டுச்செல்லக்கூடும். இந்த விஷயத்தில் ஒருவர் நேர்த்தியான தோற்றத்தை அளிப்பதைக் குறித்து நியாயமான கவனம் செலுத்த வேண்டும். அதேவிதமாகவே சபையிலுள்ள ஆண்கள் கூட்டங்களில் நியமிப்புகளைக் கொண்டிருக்கும்போது, சரியாக சவரம் செய்திருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
21 தகுதியான உடை மற்றும் தலை அலங்காரம் என்ற இந்த விஷயத்தில் ஆலோசனையைப் பற்றியதில், பாராட்டுக்கு இடமிருக்கையில் இது எப்போதும் மேடையிலிருந்தே சரியாகவே கொடுக்கப்படலாம். உண்மையில், தங்கள் உடைக்கும் தலை அலங்காரத்துக்கும் சரியான கவனம் செலுத்துபவர்களுக்குப் பாராட்டு கொடுக்கப்படுகையில், இது அந்த நல்ல முன்மாதிரியை பின்பற்ற மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறது. இருப்பினும், உடை மற்றும் தலை அலங்காரத்தின் சம்பந்தமாக முன்னேற்றத்துக்குத் தேவை இருக்கும்போது, மேடையிலிருந்து மாணாக்கருக்கு ஆலோசனை கொடுப்பதற்கு பதிலாக, இந்த ஆலோசனைகளைத் தனிமையில் தயவான முறையில் அளிப்பது பள்ளி கண்காணிக்கு மேன்மையாக இருக்கும்.
22 தகுதியான தோற்றநிலை. தகுதியான தோற்றநிலையும்கூட தனிப்பட்ட தோற்றத்தில் உட்பட்டிருக்கிறது. மறுபடியுமாக எல்லாருமே ஒரேவிதமாக தங்களை நடத்திக்கொள்வது கிடையாது. குறிப்பிட்ட ஒரு கண்டிப்பான மாதிரிக்குள் இணங்கச்செய்யுமாறு சகோதரர்களைச் செய்ய எந்த முயற்சியும் செய்யப்படக்கூடாது. இருப்பினும் விரும்பத்தகாததாயும் தனிநபரிடமாக கவனத்தை ஈர்த்து செய்தியிலிருந்து விலகிச் செல்ல செய்வதாயும் இருக்கும் மட்டுமீறிய பாணிகள், அவை திருத்தப்படுவதற்காக அல்லது நீக்கப்படுவதற்காக ஓரளவு கவனத்தைப் பெற வேண்டும்.
23 உதாரணமாக, எல்லாருமே ஒரே விதமாக தங்கள் பாதங்களை வைப்பது கிடையாது, பொதுவாகச் சொன்னால், நீங்கள் நேராக நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும் வரையில், எவ்வாறு நிற்கிறீர்கள் என்பது அவ்வளவு வித்தியாசத்தை உண்டுபண்டுவதில்லை. ஆனால் ஒரு பேச்சாளர் தன் பாதங்களை அதிகமாக விரித்துக்கொண்டு நிற்பாரேயானால், அவர் குதிரைமீது இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார் என்ற அபிப்பிராயத்தைக் கேட்போருக்குத் தருகிறது. அது மிகவும் கவனத்தைச் சிதறடிப்பதாக இருக்கக்கூடும்.
24 மேலுமாக ஒரு பேச்சாளர் நேராக நிற்காமல் குனிந்துகொண்டிருந்தால், பேச்சாளர்மீது கேட்போருக்குப் பரிதாப உணர்வு ஏற்படுகிறது, ஏனென்றால் அவர் சுகமாயிருப்பதாக காட்சியளிப்பதில்லை, இது நிச்சயமாகவே அளிப்பிலிருந்து கவனத்தைச் சிதறடித்துவிடுகிறது. அவர்களுடைய எண்ணங்கள் சொல்வதன் மீதில்லாமல் அவர்மீதே இருக்கின்றன.
25 ஒருவருடைய ஜேப்பிகளுக்குள் கைகளைப் போட்டுக்கொண்டு நிற்பது போலவே ஒரே பாதத்தில் நின்றுகொண்டு மற்றொன்றை அதன் பின்னால் வளைத்துக்கொண்டு நிற்பது தெளிவாகவே நிதானக் குறைவுக்கு அத்தாட்சி அளிக்கிறது. இவை தவிர்க்கப்பட வேண்டிய காரியங்களாகும்.
26 அதேவிதமாகவே பேச்சாளர் நிலைமேடை ஒன்று இருக்குமானால் பேச்சாளர் எப்போதாவது அதன்மீது தன் கைகளை வைப்பது தவறாக இல்லாதபோது, அவர் நிச்சயமாகவே பேச்சாளர் நிலைமேடையின் மீது சாய்ந்துகொண்டிருக்கக்கூடாது. வெளி ஊழியத்தில் ஒரு பிரஸ்தாபி கதவு சட்டத்தின்மீது சாய்ந்து கொள்ளாதிருப்பது போலவே இது இருக்கிறது. அது நல்ல ஒரு தோற்றத்தை அளிப்பதில்லை.
27 இருப்பினும் தனிநபர்கள் வித்தியாசமாயிருக்கின்றனர் என்பது மறுபடியுமாக வலியுறுத்தப்பட வேண்டும். எல்லாரும் ஒரேவிதமாக நிற்பது கிடையாது. விரும்பத்தகாத மட்டுமீறிய நிலைதானே ஒருவருடைய அளிப்பிலிருந்து கவனத்தைச் சிதறடிக்கிறது. இதுவே தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கவனத்தைப் பெற வேண்டும்.
28 ஒருவருடைய தோற்றநிலையைத் திருத்துவது நிச்சயமாகவே தயாரிப்பின் ஒரு விஷயமாக இருக்கிறது. இந்தக் காரியத்தில் முன்னேறுவதற்கு உங்களுக்குத் தேவையிருக்குமானால் நீங்கள் மேடைமீது ஏறுகையில் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக தகுதியான தோற்றநிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து அறிந்திருக்க வேண்டும். இதுவும்கூட தினந்தோறும் தகுதியான தோற்றநிலையைப் பழக்கப்படுத்திக் கொள்வதால் திருத்தப்படக்கூடிய ஒன்றாகும்.
29 நேர்த்தியான உபகரணங்கள். ஒருவர் கதவண்டையில் பேசிக்கொண்டிருக்கையில் அல்லது மேடையிலிருந்து பேச்சுக் கொடுக்கையில், அவர் பயன்படுத்தும் பைபிளிலிருந்து சில தாள்கள் கீழே விழுந்தால், இது நிச்சயமாகவே கவனத்தைச் சிதறடிக்கிறது. அது மோசமான ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. பைபிளில் எதையுமே வைக்கக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் ஒருவருடைய பேச்சிலிருந்து கவனத்தைத் திருப்பும் பிரச்சினைகள் எழ ஆரம்பிக்கையில் தகுதியான தோற்றத்துக்கு அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது. உங்களுடைய பைபிளின் தோற்றத்தையும்கூட சோதனைசெய்வது நல்லது. அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக அது அழுக்காக அல்லது கிழிந்ததாகவும் ஒழுங்கற்றும் காணப்படலாம். ஆகவே மேடையில் அல்லது வெளி ஊழியத்தில் பயன்படுத்தப்படும் பைபிள் நாம் உதவிசெய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்துமா என்பதைத் தீர்மானிப்பது நல்லதாக இருக்கும்.
30 ஒருவருடைய பிரசுரங்களின் பையைப் பற்றியதிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. பிரசுரங்களை நேர்த்தியாக பைக்குள் வைக்க அநேக வழிகள் இருக்கின்றன. ஆனால் நாம் கதவண்டைக்குச் சென்று நம்முடைய பையில் பிரசுரங்களை எடுக்க எத்தனிக்கையில், ஏராளமான பேப்பர்கள் மத்தியில் அதை தடவி எடுக்க வேண்டுமானால், அல்லது ஒரு பத்திரிகையை நாம் வெளியே எடுக்கும்போது, மற்ற பொருட்களும் வாசல்படியில் விழுந்தால், நிச்சயமாகவே அதைப் பற்றி ஏதாவது செய்யப்பட வேண்டும்.
31 ஒரு பேச்சாளர் தன்னுடைய வெளிப்புற ஜேப்பிகளில் பேனாக்களையும் பென்சில்களையும் தெளிவாக வெளியே தெரியும்படி மற்ற உபகரணங்களையும் வைத்திருப்பாரேயானாலும் கேட்போரின் கவனத்தை அது வெகுவாக சிதறடிப்பதாக இருக்கக்கூடும். இந்தப் பொருட்களை ஒரு நபர் எங்கே வைக்க வேண்டும் என்பதைக் குறித்து எந்தச் சட்டமும் இயற்றப்படக்கூடாது, ஆனால் அவை பேச்சிலிருந்து கவனத்தை அவர்களிடமாக இழுக்க ஆரம்பிக்கும்போது, ஏதாவது சரிப்படுத்தல் செய்வது அவசியமாக இருக்கிறது.
32 பொருத்தமற்ற முகபாவனைகள் கூடாது. ஒரு பேச்சைத் தயாரிக்கையில், பொருள் தேவைப்படுத்துகின்ற மனப்பாங்கைச் சிந்திப்பது உகந்ததாய் இருக்கிறது. உதாரணமாக, மரணம் மற்றும் அழிவைப் பற்றி பேசும்போது, ஒருவருடைய முகத்தில் பரந்த ஒரு புன்முறுவலைக் கொண்டிருப்பது பொருத்தமற்றதாக இருக்கும். அதேவிதமாகவே, புதிய காரிய ஒழுங்குமுறையின் மகிழ்ச்சியான நிலைமைகளைப் பற்றி பேசும்போது, கேட்போரைச் சிடுசிடுப்பாகப் பார்ப்பது பொருத்தமற்றதாக இருக்கும்.
33 முகபாவனை பொதுவாக ஒரு பிரச்சினையாக இல்லை, நிச்சயமாகவே, சில ஆட்கள் மற்றவர்களைக் காட்டிலும் முகபாவத்தில் அதிக ஆழ்ந்தமைந்த மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் பேச்சிலிருந்து கவனத்தைச் சிதறடித்துவிடக்கூடிய மட்டுமீறிய நிலைமைக்கு எதிராகவே விழிப்பாயிருப்பது அவசியமாகும். முகபாவனையானது, பேச்சாளரின் உண்மைத்தன்மையைக் குறித்து கேட்போரின் மனங்களில் கேள்வியை எழுப்புமானால், இது நிச்சயமாகவே விரும்பத்தகாததாக இருக்கும்.
34 ஆகவே ஒரு சொற்பொழிவைத் தயாரிக்கையில், அது எந்த மனப்பாங்கில் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆலோசிப்பது நல்லது. அது பொல்லாதவர்களின் அழிவைப் பற்றிய கருத்தாழமுள்ள ஒரு தலைப்புப் பொருளாக இருந்தால், அப்பொழுது ஆழ்ந்தமைந்த முறையில் கொடுக்கப்பட வேண்டும். பொருளைப் பற்றி நீங்கள் சிந்தித்துக்கொண்டிருந்து அதை மனதில் வைப்பீர்களேயானால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் முகபாவனை அதை இயல்பாகவே பிரதிபலிக்கும். அது மகிழ்ச்சியுள்ள ஒரு தலைப்புப் பொருளாக இருந்து, கேட்போரிடமிருந்து சந்தோஷத்தை வெளிக்கொண்டுவர வேண்டுமானால், மகிழ்ச்சியான ஒரு முறையில் கொடுக்கப்பட வேண்டும். மேடையில் நீங்கள் செளகரியமாக உணர்ந்தால், உங்கள் முகபாவனை பொதுவாக அந்தச் சந்தோஷத்தை பரவச்செய்யும்.
[கேள்விகள்]
1-9. நிதானத்தையும் தன்னம்பிக்கையையும் விளக்கி, இவற்றை எவ்விதமாக முயன்றுபெறலாம் என்பதைச் சொல்லவும்.
10, 11. உடல் தோற்றம் எவ்விதமாக தன்னம்பிக்கை குறைவுபடுவதை வெளிப்படுத்திடக்கூடும்?
12-14. ஒருவருடைய குரல் தன்னம்பிக்கை குறைவுபடுவதை காட்டிக்கொடுத்துவிடுமானால், நிதானத்தைப் பெற என்ன செய்யப்படலாம்?
15. நல்ல தனிப்பட்ட தோற்றம் ஏன் அவ்வளவு முக்கியமானது?
16-21. தகுதியான உடையையும் தலை அலங்காரத்தையும் பற்றி என்ன புத்திமதி கொடுக்கப்படுகிறது?
22-28. ஒருவருடைய தனிப்பட்ட தோற்றத்தைத் தோற்றநிலை எவ்விதமாக பாதிக்கக்கூடும் என்பதைக் கலந்தாலோசிக்கவும்.
29-31. நம்முடைய உபகரணங்கள் ஏன் நேர்த்தியாக இருக்க வேண்டும்?
32-34. நம்முடைய தோற்றத்தில் முகபாவனைகள் என்ன பங்கை வகிக்கின்றன?