திருவெளிப்பாட்டின் மிருகங்கள்—அவை எதை அர்த்தப்படுத்துகின்றன?
சனிக்கிழமை, ஜூன் 15, 1985 அன்று, பிற்பகல் சூரிய ஒளியானது, நியு யார்க் நகரிலுள்ள ஐக்கிய நாட்டு சங்க கட்டிடத்தின் மீது நன்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது. வழக்கம்போல் கவனத்தைக் கவரும் பலமாடிக் கட்டிடத்தை காண்பதற்கு திரளான பார்வையாளர்கள் வந்துகொண்டிருந்தனர். தாங்கள் கண்ட அனைத்து காரியங்களையும் குறித்து அநேகரால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
என்றபோதிலும் இதுவரையிலுமாக, தேசங்களை ஐக்கியப்படுத்தும் காரியத்தில் ஐக்கிய நாட்டு சங்கம் தொலைதூரத்தில் இருக்கிறது. அன்று பிற்பகல் ஒரு அதிகாரப்பூர்வ வழிகாட்டி சொன்னதாவது: “இரண்டாம் உலக யுத்தம் முதற்கொண்டு 150 போர்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 2 கோடிக்கும் அதிகமான ஆட்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதுவரையிலுமாக ஒரு உலக அரசாங்கம் உருவாகவில்லை. ஒருவேளை இதுவே அதற்கு நெருங்கியதோர் காரியமாக இருக்க வேண்டும்.” அப்படியானால் ஒரு உலக அரசாங்கம் மாயமான கனவுதானா? நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ திருவெளிப்பாட்டின் மிருகங்களை ஆராய்வதன் மூலம் அதற்கான விடையை கண்டுபிடிக்கலாம்.
பைபிள் குறிப்புரையாளர்கள் சிலர் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் மிருகங்களில் எந்த தீர்க்கதரிசன அர்த்தமும் இருப்பதை காண்பது இல்லை. மாறாக, அப்போஸ்தலனாகிய யோவான் உயிருடனிருந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு அதை பொருத்துகின்றனர். உதாரணமாக, திருவெளிப்பாட்டின் மிருகங்கள் பேரில் கருத்துரை அளிக்கையில் தி கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா சொல்வதாவது: “தங்களுடைய தரிசனங்களை தீர்க்கதரிசன வடிவில் எடுத்துரைப்பதும் மற்றும் அவற்றிற்கு முற்காலத்திய ஒரு தேதியினுடைய வேலைப்பாடாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பதும் . . . திருவெளிப்பாட்டு எழுத்தாளர்களுடைய வழக்கமாக இருந்தது.”
ஆனால் அப்போஸ்தலனாகிய யோவான் அறிவித்ததாவது: “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்.” (வெளிப்படுத்துதல் 1:10) ஆம், வெளிப்படுத்துதல் புத்தகம் பண்டையகால சரித்திரத்தின் மீதல்ல, ஆனால் ஒரு எதிர்கால “நாளின்” பேரில் அதாவது இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருந்து தமது ஆட்சியைத் துவங்கும் காலத்தின்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் 6-ம் அதிகாரத்தின்படி, “அந்த கர்த்தருடைய நாளானது” உலக போரினாலும் பரவலான உணவு குறைபாடுகளினாலும் மற்றும் சாவுக்கேதுவான நோய்களினாலும் குறிக்கப்பட்டது. இந்த 20-ம் நூற்றாண்டின்போது பூமியில் காணப்பட்ட நிகழ்ச்சிகள் 1914 முதற்கொண்டு “அந்த கர்த்தருடைய நாளில்” நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம் என்பதற்கு நம்பகமான அத்தாட்சிகளாக இருந்திருக்கின்றன.—வெளிப்படுத்துதல் 6:1-8.a
அந்த சரித்திரப்பூர்வமான ஆண்டிலே இயேசுகிறிஸ்து தமது ராஜ்ய ஆட்சியைத் துவங்கினார். (வெளிப்படுத்துதல் 11:15, 18) ஆகவே திருவெளிப்பாட்டின் அந்த மிருகங்கள் அந்த நாளுக்கும் பின்பு முதல் முக்கிய பாகத்தை ஏற்க வேண்டும். மெய்யாகவே சமாதானத்திற்கான மனிதவர்க்கத்தினரின் வாஞ்சையை திருப்தி செய்யக்கூடிய ஒரே ஒரு ஏற்பாடான கடவுளுடைய ராஜ்யத்தை நோக்கிப் பார்ப்பதிலிருந்து மக்களை தடை செய்யக்கூடிய கடவுளுடைய சத்துருவை இந்த மிருகங்கள் படமாக சித்தரிக்கின்றன. இந்த சத்துருக்கள் ஒரு வலுசர்ப்பத்தையும் மற்றும் மூன்று மிருகங்களையும் அடங்கியதாயிருக்கிறது. அதனுடைய தோற்றத்தின் வரிசைப்படியே நாம் அவற்றை ஆராயலாம்.
அந்த பெரிய வலுசர்ப்பம்
யோவான் சொன்னதாவது: “ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் . . . கொண்ட சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருந்தது.” இந்த பெரிய வலுசர்ப்பம் எதை படமாக குறிப்பிட்டது? அது பிசாசாகிய சாத்தானேயல்லாமல் வேறு எவருமில்லை என்று யோவான் தானே விவரிக்கிறான். யோவானுடைய தரிசனத்தின்படி இந்த வலுசர்ப்பம் 1914-ல் கடவுளுடைய ராஜ்யத்தின் பிறப்பை கடூரமாய் எதிர்த்தது. இதன் விளைவு?: “உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:3, 7-9.
இது மனிதவர்க்கத்தின் மீது கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று யோவான் காட்டுகிறான்: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 12:12) பூமிக்கு அருகாமையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்துடன் மோதுவதிலேயே சாத்தான் இன்னமும் முனைந்துகொண்டிருக்கிறான். மூன்று மூர்க்க மிருகங்களை பயன்படுத்தி மனிதவர்க்கத்தை தவறாக வழிநடத்துவதன் மூலம் அதை அவன் செய்கிறான். அவற்றின் முதலாவதானவற்றைப் பற்றி யோவான் கொடுக்கும் விவரிப்பைக் கவனியுங்கள்.
அந்த சமுத்திர மிருகம்
“சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக்கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. . . . நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.”—வெளிப்படுத்துதல் 13:1, 2.
இந்த பயங்கரமான மிருகம் எதை சித்தரிக்கிறது? தேவ ஆவியின் ஏவுதலினால் யோவான் மிக முக்கியமான குறிப்பைக் கொடுக்கிறான்: “ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 13:7) பூமியில் வாழக்கூடிய ஒவ்வொரு ஆளின் மீதும் அதிகாரம் செலுத்துவது எது? ஒரே ஒரு காரியம்: உலக முழுவதிலுமுள்ள அரசியல் ஆட்சிமுறை. இந்த ஆட்சிமுறை உண்மையிலேயே “அந்த வலுசர்ப்பமாகிய” சாத்தானிடமிருந்து அதிகாரத்தைப் பெறுகிறதா? பைபிள் ஆம் என்று விடையளிக்கிறது. உதாரணமாக, அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னதாவது: “உலக முழுவதும் பொல்லாங்கனுடைய வல்லமையின் கீழ் கிடக்கிறது” வனாந்தரத்தில் பிசாசு இயேசுவை சோதிக்கும்போது “உலகத்தின் சகல ராஜ்யங்கள்” மீதும் அதிகாரத்தை அவருக்கு தருவதாகவும் இவைகள் [அதிகாரங்கள்] எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது என்று உரிமை பாராட்டினதில் எவ்வளவு ஆச்சரியமுமில்லை.—1 யோவான் 5:19; லூக்கா 4:5, 6.
அப்படியானால், அந்த பத்துக் கொம்புகளால் சித்தரித்துக் காட்டப்படுவது எது? யோவானுக்கு மற்றொரு பயங்கரமான மிருகம் காட்டப்பட்டது. அது நிஜமாகவே, இந்த மிருகத்தின் நிழலுருவமே. அதற்குங்கூட ஏழு தலைகளிருந்தன. அந்த உருவத்தின் தலைகள் “ஏழு ராஜாக்களை” அல்லது உலக வல்லரசுகளை பிரதிநிதித்துவம் செய்வதாக விளக்கப்பட்டிருந்தது. இவர்களில் “ஐந்து பேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை.” (வெளிப்படுத்துதல் 17:9, 10) யோவானின் நாளுக்கு முன்பாக ஐந்து உலக வல்லரசுகள் பைபிள் சரித்திரத்திலே எழும்பின: எகிப்து, அசீரியா, பாபிலோன், மீதோ பெர்சியா, கிரீஸ். யோவான் உயிரோடிருக்கும் காலத்தில் ஆறாவதான ரோம பேரரசு அப்பொழுது ஆட்சியில் இருந்தது.
அந்த ஏழாவது தலை எது? இந்த தரிசனம் “கர்த்தருடைய நாள்” சம்பந்தப்பட்டதாக இருக்கிறபடியால், 1914 முதற்கொண்டு இந்த கடைசி நாட்களில் ரோமினுடைய அதிகார ஸ்தானத்தில் நிற்கக்கூடிய ஒரு உலக வல்லரசை அது குறிக்க வேண்டும். இது பிரிட்டனும் அமெரிக்க ஐக்கிய மாகாணமும் கலந்த ஒரு இரட்டை உலக வல்லரசாக இருக்கிறதென்று சரித்திரம் காட்டுகிறது. 1914-ற்கு முன்பு உலகம் அதுவரையில் காணாத மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைப் பிரிட்டன் கட்டியமைத்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டின்போது அது ஐக்கிய மாகாணங்களுடன் பலமான அரசியல் சாமர்த்தியமுள்ள மற்றும் வாணிப பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டது. முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின்போது இந்த இரு நாடுகளும் ஒன்றோடொன்று இணைந்து போரிட்டன. மேலும் அவர்களுடைய விசேஷ உறவு இந்நாள் வரையிலுமாக தொடர்ந்திருக்கிறது. 1982-ல் அமெரிக்க ஐக்கிய நாட்டு பிரசிடென்ட் ரீகன் பிரிட்டிஷ் பாரளுமன்றத்திடம் “நமது இரண்டு நாடுகளின் குறிப்பிடத்தக்க நட்பை”ப்பற்றி பேசினார். அன்மையில், பிப்ரவரி 1985-ல், பிரிட்டிஷ் பிரதமர் ஐக்கிய நாடுகளுடைய காங்கிரசின் இரண்டு வீடுகளை நோக்கிப் பேசுகிறவராய் சொன்னதாவது: “நெருங்கிய உறவுகொண்ட நமது இரு தேசங்களும் . . . நோக்கத்தில் உறுதியுடன் ஒன்றுசேர்ந்து முன் செல்வதாக கிறிஸ்தவ சகாப்தத்தின் மூன்றாம் ஆயிரம் ஆண்டுகளை நாம் நெருங்கிவருகையில் விசுவாசத்தில் பங்கு கொள்வோமாக.”
உலக விவகாரங்களில் தனது மிகுதியான செல்வாக்கின் காரணமாக, ஆங்கிலோ அமெரிக்க இரட்டை உலக வல்லரசானது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் தனியாக சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. எப்படி? திருவெளிப்பாட்டின் இரண்டாம் மிருகத்தின் மூலம் காட்டப்பட்டிருக்கிறது.
நிலத்திலிருந்து எழுந்த மிருகம்
யோவான் எழுதுவதாவது: “பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது.” கிறிஸ்தவமாயிருப்பதாகவும் மற்றும் ஆக்ரமிக்கும் பண்பற்றதாகவும் இருப்பதாய் உரிமைப் பாராட்டுவதன் மூலம் தி ஆங்கிலோ அமெரிக்க உலக வல்லரசானது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான தோற்றத்தை அணிந்துகொள்கிறது. ஆனால் அது உண்மையிலேயே வலுசர்ப்பத்தைப் போன்றே செயலாற்றியிருக்கிறது எப்படி? அநேக தேசங்களில் குடியேறுவதன் மூலமும் அந்த பூமியின் இயற்கை வளங்களை பேராசையுடன் பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் அப்படிச் செயலாற்றியிருக்கிறது. அதோடுகூட “சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதன் குடிகளும் வணங்கும்படி செய்தது. . . . மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.” (வெளிப்படுத்துதல் 13:3, 11-15) இது எவ்வாறு நிறைவேறியது?
சாத்தானின் உலகளாவிய அரசியல் ஒழுங்குமுறை முதல் உலக யுத்தத்தின்போது, “சாவுக்கேதுவான காயம்” அடைந்தது அப்படிப்பட்ட ஒரு காரியம் திரும்ப நிகழ்வதை தடுப்பதற்காக பிரிட்டனும் அமெரிக்காவும் ஒரு அரசியல் ஒழுங்குமுறையின் “வணக்கத்தை” உற்பத்தி செய்தார்கள். “மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணுவதற்கு” தேசங்களை ஒன்றுகூட்டுவதன் மூலம் இதை அவர்கள் செய்தார்கள். இது எவ்வாறு நிகழ்ந்தது?
முதல் உலகப்போர் முடிவடையும் தருவாயில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிரசிடென்ட் வில்சன் புதிதாக திட்டமிடப்பட்டிருக்கும் “சர்வதேச சங்கத்தின் சார்பாக ஒரு தீவிர இயக்கத்தைத் துவங்கினார். இதனை கருத்தில்கொண்டு, 1919-ல் பாரீஸ் சமாதான மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அவர் சொன்னதாவது: “ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு சர்வதேச சங்கத்துக்கான மாபெரும் திட்டத்தை ஆதரிக்கின்றனர். எங்களுடைய நோக்கத்தை வெளிப்படுத்திய முழு நிகழ்ச்சிநிரலின் ஒரு உயிர் நாடியாக நாங்கள் அதை மதிக்கிறோம். . . . இந்தப் போரில் . . . சுருக்கமாக, நாங்கள் இங்கே காணவந்திருப்பது என்னவெனில் இந்தப் போரின் மூல அஸ்திபாரமே ஒழித்துபோடப்பட வேண்டும்.”
பிரசிடென்ட் வில்சன் தனது சொற்பொழிவை முடித்த பின்பு பிரிட்டிஷ் பிரதமரான ல்லாய்ட் ஜியார்ஸ் மட்டுமே பேசினார்: “இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவே நான் எழுந்து நிற்கிறேன். ஐக்கிய நாடுகளின் பிரசிடென்டுடைய சிறப்பு வாய்ந்த சொற்பொழிவுக்கு பிற்பாடு இந்த மாநாட்டிற்கு அருளப்பட்ட இந்தத் தீர்மானத்தை பாராட்டுவதற்காக வேண்டி எந்த அபிப்பிராயமும் அவசியமில்லை என்றே நான் உணருகிறேன். மேலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்து மக்கள் இந்தத் திட்டத்திற்கு பின்னால் எந்தளவுக்கு தீவிரமான ஆதரவளிக்கிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.”
அதே ஆண்டில் பிற்பாடு சர்வதேச சங்கத்தின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிரிட்டன் அரசனிடமிருந்து வந்த ஒரு கடிதம் வாசிக்கப்பட்டது: “நாம் போரை வென்றுவிட்டோம். இது மிகப்பெரியதோர் சாதனை. ஆனால் அது போதுமானதல்ல. நிரந்தரமான சமாதானத்தை அடைவதற்காக நாம் போரிட்டோம். அதை பாதுகாத்துவைத்துக் கொள்வதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வது நமது உன்னத கடமையாகும். ஏனெனில் பலமான மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சர்வதேச சங்கத்தைக் காட்டிலும் அதிக அத்தியாவசியமானது வேறு ஒன்றுமில்லை. சாம்ராஜ்யத்தின் எல்லா குடிமக்களுக்கும் இந்தக் காரணத்தை நான் புகழ்ந்துரைக்கிறேன். ஏனெனில் மற்ற எல்லா நற்பிரியமுள்ள மனிதர்களுடைய உதவியுடன் சமாதானத்திற்கு ஒரு முட்டு கொடுக்கப்பட்டு மற்றும் ஒரு நிச்சயமான அரண்காப்பு அளிக்கப்பட்டு கடவுளுக்கு மகிமையுண்டாக . . . நிறுவப்படலாம்.”
ஜனவரி 16, 1920 அன்று சர்வதேச சங்கமானது 42 உறுப்பினர் நாடுகளுடன் நிறுவப்பட்டது. 1934-ற்குள்ளாக அது 58 நாடுகளை அரவணைத்துக் கொண்டது. நிலத்திலிருந்து எழுந்த இந்த இரண்டு கொம்புள்ள மிருகம் “மூர்க்க மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணும்படி” உலகத்தை செயல்படச் செய்வதில் வெற்றியடைந்தது. இந்தச் சொரூபம், அல்லது சாத்தானின் உலகளாவிய அரசியல் ஒழுங்குமுறையின் பிரதிநிதித்துவம் திருவெளிப்பாட்டின் இறுதியான மிருகத்தால் தெளிவாக சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.
சிவப்பு நிறமுள்ள மிருகம்
இந்த இறுதியான மிருகத்தைப்பற்றிய யோவானின் விவரிப்பு இதோ இங்கே காணப்படுகிறது: “ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகம்.” இந்த மிருகத்தைக் குறித்து யோவானுக்கு சொல்லப்பட்டதாவது: “நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப் போகிறது. . . . அந்த மிருகமே எட்டாவதானவன்.” (வெளிப்படுத்துதல் 17:3, 8, 11) இந்த விவரிப்புக்குப் பொருத்தமாய் சர்வதேச சங்கமானது உலக அரங்கிலே ஒரு உலக வல்லரசைப் போன்று செயற்பட முயற்சித்தது. என்றபோதிலும் 1939-ல் துவங்கிய இரண்டாம் உலகப் போரை தடுத்து நிறுத்துவதில் அது தோல்வியுற்றது. பாதாளத்திற்குள் சென்றதை போன்று அந்த மிருகம் காணப்படாமற் போயிற்று.
இரண்டாம் உலக போரின்போது ஆங்கிலோ அமெரிக்கன் உலக வல்லரசானது அந்த சர்வதேச அமைப்பை உயிர்ப்பிப்பதற்காக கடினமாக உழைத்தது. 1941-ல் மகா பிரிட்டனின் பிரதம மந்திரியான வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய நாடுகளின் பிரசிடென்ட் ஃபிராங்க்லின் ரூஸ் வெல்ட் என்பவருடன் அட்லாண்டிக் சமுத்திரத்தில், ஒரு கப்பலில், இரகசியப் பேச்சுகள் நடத்தினார். அவர்கள் “உலகத்திற்கு மேம்பட்ட ஒரு எதிர்காலத்தைப் பற்றிய தங்கள் நம்பிக்கைகளை” குறித்தும் மற்றும் “பொது பாதுகாப்புக்கான பரந்த மற்றும் நிரந்தர ஒழுங்குமுறை நிறுவப்படுவது“ குறித்தும் அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையைச் செய்தார்கள். அதற்கு அடுத்த ஆண்டின்போது வாஷிங்டன் டி.சி.-யில் “ஐக்கிய நாடுகளின் அறிக்கை” என்றழைக்கப்பட்ட ஆங்கிலோ அமெரிக்காவின் புதிய திட்டத்திற்கு 26 தேசங்கள் ஒப்புதல் அளித்தன. இது அக்டோபர் 24, 1945-ல் ஐக்கிய நாட்டு சங்கம் உருவாக்கப்படுவதற்கு வழிநடத்தியது. இந்தச் சிவப்பு நிற மிருகம் ஒரு புதிய பெயருடன் பாதாளத்திலிருந்து எழும்பி வந்தது. தற்போது 159 தேசங்கள் இந்த அமைப்பைச் சேர்ந்துகொண்டன. இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் மனித அரசியலாட்சிமுறை இது நீடித்திருக்கும்படி செய்யும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
என்றபோதிலும் இவையனைத்தும் 1914-ல் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. பூமி முழுவதிலுமுள்ள ஒவ்வொரு மானிடரும் கடவுளுடைய ஆட்சியா அல்லது மனிதனுடைய ஆட்சியா என்பதற்கிடையில் தெரிவு செய்ய வேண்டும். விரைவில், அந்தச் சிவப்பு நிற மிருகம் எல்லா மனித அரசாங்கங்களுடன் சேர்ந்து கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கும் அரசரான இயேசு கிறிஸ்துவுடன் போரில் ஈடுபடுவார்கள். அதன் விளைவு? “ஆட்டுக்குட்டியானவர் [இயேசு கிறிஸ்து] கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால், அவர்களை ஜெயிப்பார்.” ஆம், அந்தச் சிவப்பு நிறமுள்ள மிருகம் மனித அரசாங்கங்களின் முழு ஒழுங்குமுறையோடு சேர்ந்து ‘நாசமடையும்.’—வெளிப்படுத்துதல் 17:11, 14; இத்துடன் தானியேல் 2:44-ஐயும் பாருங்கள்.
அப்பொழுது அந்த வலுசர்ப்பத்தினாலும் மற்றும் அவனுடைய மூன்று மிருகங்களினாலும் மோசம் போக்கப்படாதவர்களாக இருப்பதானது என்னே ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்! கடவுளுடைய ராஜ்யத்துக்கு தங்களை உண்மை மாறாதவர்களாக நிரூபித்தவர்கள் “புதிய பூமியின்” பாகமாக ஆவதற்கு தப்பிப் பிழைப்பார்கள். கடவுள் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) எனவே, ஒரே ஒரு செயல் திறமைவாய்ந்த உலக அரசாங்கமான கடவுளுடைய ராஜ்யத்துக்கு உங்களை கீழ்ப்படுத்துங்கள். அப்பொழுது நீங்களுங்கூட இந்த நித்திய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழும் ஆட்களில் ஒருவராக இருப்பீர்க்ள். (w86 2/1)
[அடிக்குறிப்புகள்]
a இந்த குறிப்பு ஜனவரி 1, பிப்ரவரி 1, 1987 தமிழ் காவற்கோபுர பிரதிகளில் சிந்திக்கப்பட்டது.