கடவுளுடைய அன்பிலிருந்து உங்களை எதுவானாலும் பிரிக்கக்கூடுமா?
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும் வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”—ரோமர் 8:38, 39.
கடவுள் அன்புள்ளவர். உயிர்வாழ்வைக் காக்கும் அவருடைய வழிகளில் இது அனுதினமும் வெளிக்காட்டப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு—இவை அனைத்துமே கடவுளுடைய அன்பின் வெளிக்காட்டுதல்கள். மேலும் அவை மதித்துணரப்பட்டாலும் மதித்துணரப்படாவிட்டாலும் நல்லவருக்கும் கெட்டவருக்குமாக இருசாராருக்கும் கிடைக்கிறது. இந்தக் காரியத்திற்குச் சாட்சி பகருகிறவராய் இயேசு தம்முடைய பரம பிதாவிடம் ஜெபிக்கும்போது பின்வருமாறு சொன்னார்: “அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:45) பூமியிலுள்ள ஒவ்வொரு சிருஷ்டிப்பும் அதன் உயிர்வாழ்வுக்கு கடவுளுக்கு நன்றிசெலுத்த கடமைப்பட்டிருக்கிறது.—சங்கீதம் 145:15, 16.
2 மனித சிருஷ்டிப்பைக் குறித்ததில், கடவுளுடைய அன்பானது, புல்லைப்போல் உலர்ந்து பூவைப்போல் உதிர்ந்துபோகும் இந்தத் தற்போதைய வாழ்க்கையை வெறுமென பராமரித்துக் காப்பதைப் பார்க்கிலும் அதிகத்தை உட்படுத்தியது. (1 பேதுரு 1:24) மனிதவர்க்கம் என்றென்றும் வாழ்வதற்கான ஏற்பாட்டைக் கடவுள் செய்தார்: “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் இவ்வுலகில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இந்த ஏற்பாடு பிதாவுக்கும் குமாரனுக்கும் பெரியதோர் கிரயத்தை உட்படுத்தியது. மரிப்பதற்கு முந்திய இரவு, கெத்செமனே என்ற இடத்தில் “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” என்றளவுக்கும் வேதனை மிகுந்தவராய் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினார். இந்த வேதனை மிகுந்த சமயத்தில், இயேசு, கடவுளுடைய நாமத்தின் பேரில் குவிக்கப்படும் பழிகளை மனதிற் கொண்டவராயிருந்தார். அந்தப் பாத்திரம் தன்னிடமிருந்து எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர், “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்றார். (லூக்கா 22:44; மாற்கு 14:36) இயேசு கடுமையான வேதனையிலிருந்தபோதிலும் யெகோவாவின் சித்தமே அவருக்கு முதன்மையானதாயிருந்தது. கடுமையாக அடிக்கப்படுவதும் கழுமரத்தில் அறையப்பட்டு கொஞ்சங்கொஞ்சமாக உயிரோடு கொல்லப்படுவதுமான காரியங்களுங்கூட கடவுளுடைய அன்பிலிருந்து அவரைப் பிரிக்கமுடியவில்லை.
3 இன்று இயேசுவின் அடிச்சுவடுகளில் நடந்துசெல்லும் யெகோவாவின் சாட்சிகளின் விஷயத்திலும் யெகோவாவின் சித்தமே முதலாவதாக வருகிறது. அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை இவர்களும் சொல்லக்கூடியவர்களாயிருக்கின்றனர்: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால், நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவை யெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” (ரோமர் 8:31, 35, 37) இந்த நூற்றாண்டினூடே யெகோவாவின் சாட்சிகள் தாக்கப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள். அவர்கள் மீது தார் ஊற்றப்பட்டது, உடலுறுப்புகளை இழந்தார்கள், கற்பழிக்கப்பட்டார்கள், பட்டினி போடப்பட்டார்கள், துப்பாக்கிக்கு இறையாக்கப்பட்டார்கள், நாஜி கான்சன்ட்ரேஷன் முகாம்களில் சிரச்சேதம் பண்ணப்பட்டார்கள்—கடவுளுடைய அன்பிலிருந்து தங்களைப் பிரித்துக்கொள்ள மறுத்ததனால் இந்தக் காரியங்களை அனுபவிக்க வேண்டியதாயிருந்தது.
4 நாற்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம் யெகோவாவின் சாட்சி நாஜி கான்சன்ட்ரேஷன் முகாமிலிருந்து தன்னுடைய பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு:
“என்னை விசாரணை செய்யும் நாள் இது, மணி 9, ஆனால் நான் 11:30 வரை காத்திருக்க வேண்டும். மாநில இராணுவ சிறையில் ஓர் தனி அறையிலிருந்து இந்த ஒரு சில வரிகளை எழுதுகிறேன். நம்புவதற்கு அரிதாயிருக்கும் ஒருவித மனசமாதானம் எனக்கு இருக்கிறது; ஆனால் நான் எல்லாவற்றையும் ஆண்டவர் சித்தத்திற்கு அற்பணித்துவிட்டேன், எனவே இந்த மணி நேரத்திற்காகவும் நீடித்த விலங்குக்காகவும் நான் அமைதலோடு காத்திருக்க முடிகிறது. நான் விலங்கிடப்பட மாட்டேன் என்று அவர்கள் சொன்னார்கள். பொய்! இரவும் பகலும் விலங்கிடப்பட்டநிலை. உடை மாற்றிக்கொள்வதற்கும், சிறை அறை சுத்தம் செய்யப்படுவதற்கும் மாத்திரமே விலங்கு அவிழ்க்கப்படுகிறது . . .
“மணி 12:35. எல்லாம் முடிந்தது. [யெகோவா தேவனை வணங்குவதை விட்டுவிட வேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கைக்கு] நான் மறுப்புத் தெரிவித்திருக்கும் பட்சத்தில் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பை என் செவிகளால் கேட்டேன். அதற்குப் பின்பு ‘மரணபரியந்தம் உண்மையாயிரு’ என்றும் ஆண்டவருடைய மேலும் ஒருசில வார்த்தைகளையும் நான் சொல்லிய பின்பு, எல்லாம் முடிந்தது. ஆனால் அதைப்பற்றிய கவலை இப்பொழுது இல்லை. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத சமாதானத்தையும் அமைதியையும் நான் உடையவனாயிருக்கிறேன் . . . உலகம் புரிந்துகொள்ள முடியாத இந்தச் சமாதானம், விசாரணை அறையிலேயே எனக்குள் ஏற்பட்ட இந்த மகிழ்ச்சி, நான் சிறை அறைக்குள் பிரவேசிக்கும்போது என்னில் பொங்கி வழிந்தது. . . . அழாதீர்கள் . . . என் கைகளிலிருந்து விலங்குகள் அவிழ்க்கப்படும் இந்தக் கடைசி ஞாயிற்றுக் கிழமையாகிய இன்று உங்களுக்கும் என் அன்பார்ந்த சகோதரருக்கும் என்னால் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த காரியம் இதுவே.a
“அவர் உங்களை ஸ்திரப்படுத்தி பலப்படுத்துவார்”
5 இந்த இளம் மனிதன் உயிரிலிருந்து பிரிக்கப்பட்டான். ஆனால் கடவுளுடைய அன்பிலிருந்து அல்ல. கடந்த ஆண்டுகளினூடே யெகோவாவின் சாட்சிகளுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. கடவுளுடைய ஊழியர்கள் இப்படிப்பட்ட துன்புறுத்தல்களை, மரணம் ஏற்பட்டாலும் சகிக்க முடிகிறது என்பது அவர்களுடைய சொந்த சக்தியினாலல்ல, ஆனால் கடவுளுடைய சக்தியினால் மட்டுமே முடிகிறது. “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்” என்று பவுல் எழுதுகிறான், “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல் சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13) பவுல் கைது செய்யப்பட்டபோது சொன்ன வார்த்தைகளையே யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளும் சோதனையின்போது சொல்ல முடிந்திருக்கிறது: “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று . . . என்னைப் பலப்படுத்தினார்.”—2 தீமோத்தேயு 4:17.
6 கெர்ச்சிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாமோ என்று பதுங்கி செயல்படுகிற பிசாசானவனைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று சொன்னபின்பு, அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வரும் உறுதியை அளிக்கிறான்: “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.” (1 பேதுரு 5:8-10) இந்தத் தெய்வீக ஆதரவுகள் அனைத்தையும் கவனிக்கும்போது, ஒரு காரியம் தொளிவாயிருக்கிறது: கடவுளுடைய அன்பு மாறாதது; அதிலிருந்து எந்த ஒரு பிரிவும் நம்முடைய தவறாகவே இருக்கும். அவருடையதாக இருக்காது.
7 எல்லா சமயத்திலுமே சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல தாக்குவதில்லை. அநேக சமயங்களில் அவன் ‘தந்திரமுள்ள சர்ப்பத்தைப்’ போலவும் விசுவாச துரோக “ஒளியின் தூதனைப்” போலவுங்கூட வருகிறான். அவன் நமக்குத் தீயதைத் திட்டமிடுகிறான், எனவே அவனால் மேற்கொள்ளப்பட்டு விடாதபடிக்கு நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” நாம் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்ள வேண்டும். (ஆதியாகமம் 3:1; 2 கொரிந்தியர் 2:11; 11:13-15; எபேசியர் 6:11) இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் சாத்தான் இயேசுவிடம் வசனமேற்கோள்களுடன் வந்தான். அவரைத் தவறு செய்ய வைக்கிறதற்கு வசனங்களைத் தவறாகப் பொருத்துவதன் மூலம் சோதித்துப் பார்த்தான். இயேசுவை மூன்று முறை சோதித்தான், மூன்று முறையும் தோல்வியடைந்தான். சாத்தான் வசனத்தைத் திரித்து பொருத்தியபோது இயேசு சரியான பொருத்தத்தையுடைய வசனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவனைத் திருப்பிவிட்டார். பின்பு இயேசு சாத்தானைப் போய்விடும்படியாகக் கூறினார். ஆனால் சாத்தானோ, ‘சில காலம் மட்டுமே அவரை விட்டு விலகிப் போனான்.’—லூக்கா 4:13; மத்தேயு 4:3-11.
8 சாத்தான் விடாது தொடருகிறான். மாறு வேடங்களில் திரும்பி வருகிறான். அந்தச் சமயத்திலிருந்த மத குருவர்க்கத்தினர் மூலமாக அவன் இயேசுவிடம் திரும்ப வந்தான். இதை இயேசு புரிந்துகொண்டு, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்,” என்று அவர்களிடம் சொன்னார். சிலர் அறியாமலேயே சாத்தானின் நோக்கத்தைச் சேவிப்பவர்களாக இருப்பார்கள். பேதுரு அப்போஸ்தலன் இப்படிச் செய்தான். நல்ல எண்ணங் கொண்டவனாக இருந்தபோதிலும் அவன் இயேசுவை இப்படியாகக் கடிந்துகொண்டான்: “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை.” அதற்கு இயேசு, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்,” என்று பேதுருவைக் கண்டிக்க வேண்டியதாயிருந்தது. (யோவான் 8:44; மத்தேயு 16:22, 23) அதுபோல சாத்தானின் நோக்கங்கள் ஒரு முதலாளி மூலமாகவோ, உடன் வேலைசெய்பவர் மூலமாகவோ, பள்ளி தோழர் மூலமாகவோ, நண்பர் மூலமாகவோ, உறவினர், பெற்றோர் அல்லது விவாகத் துணைவர் மூலமாகவோ நிறைவேற்றப்படலாம். நாம் எல்லா சமயத்திலும் எச்சரிப்பாயிருக்க வேண்டும், மற்றும் யெகோவாவோடு நாம் கொண்டிருக்கும் உறவை எந்தக் காரியமும் பலவீனப்படுத்திட அனுமதிக்கக்கூடாது.
9 எனவே, “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்; ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல . . . வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டமுண்டு.”—எபேசியர் 6:11, 12.
விழுந்துவிட்ட மாம்சத்தின்மீது பாவத்தின் பிடி
10 நாம் எங்கே பலவீனமாயிருக்கிறோமோ அங்கேதான் சாத்தானும் தாக்குகிறான். அவன் வைத்த குறி சம்பந்தமாக நாம் பாவம் செய்யும்படி நம்முடைய மாம்சத்தின் போக்கை வழிநடத்துகிறான். (சங்கீதம் 51:5) பாவம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை ஹமார்ஷியா. இதன் வினையெச்சம் ஹமார்டனோ என்பதன் அடிப்படை அர்த்தம், “குறியைத் தவறவிடுதல்.” (ரோமர் 3:9) நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறியைத் தவறவிடுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நாம் கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்ள தவறுகிறோம். கடவுளுடைய அன்பிலிருந்து அதிகமாக விலகிச் செல்லுகிறோம், ஏனென்றால், “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்.” (1 யோவான் 5:3) விபச்சாரம், வேசித்தனம், முறைகெட்ட பாலுறவுகள், குடிவெளி, களியாட்டு, கட்டுப்பாடுகளற்ற மாம்ச இச்சைகள், பொறாமைகள், மூர்க்கம், பிறர்பொருளை இச்சித்தல்—இந்தக் காரியங்கள் அனைத்துமே நம்மைக் கடவுளுடைய அன்பிலிருந்து பிரித்துவிடுகிறது, மற்றும் “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—கலாத்தியர் 5:19-21.
11 பொருளாசையும், ‘நான்முதல்’ என்ற தத்துவமும், பாலுறவுத் தூண்டுதலும் கொண்ட வர்த்தக முறையினால் சுவையூட்டப்படும் திரைப்படங்கள், புத்தகங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கட்டுப்பாடற்ற தடைகளற்ற சிற்றின்பத்தைத் தொடரும்படி ஊக்குவிக்கின்றன. முதல் பாவம் இரண்டாவது பாவத்தை எளிதாக்கிவிடுகிறது, மூன்றாவதும் நான்காவதும் தொடருகிறது. பின்பு உலகப்பிரகாரமான காரியங்களில் வேகமாக மூழ்கிவிடச் செய்கின்றன. கடைசியாக, “தேவப்பிரியராயிராமல் சுகபோகபிரியராயிருக்கும்” ஆட்கள் “துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணு”கிற காரியத்தில் நேரம் செலவழிக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:4; ரோமர் 13:14) முதியோரும் இளைஞரும் பாவப் பிரளயத்தில் அடித்துச் செல்லப்படுவதோடு அவர்களுடைய மனச்சாட்சி சுரணையற்றதாகிவிடுகிறது. “உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.”—எபேசியர் 4:19; 1 தீமோத்தேயு 4:2.
12 கடவுளுடைய அன்பிலிருந்து பிரிக்கப்படக்கூடாது என்று தீர்மானமாயிருப்பவர்கள், விழுந்துவிட்ட மாம்சத்தின் பாவப் பிடியிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். பைபிள் அடிக்கடி அறிவுறுத்துவதுபோல், அது ஒரு பெரிய விரோதி: “பாவஞ்செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்,” “யாவரும் பாவத்துக்கு உட்பட்டவர்கள்,” “எல்லாரும் பாவஞ்செய்தவர்கள்,” “சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக,” “எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்கள்,” “பாவத்தின் சம்பளம் மரணம்,” மற்றும் எல்லாரும் “பாவத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.” (யோவான் 8:34; ரோமர் 3:9, 23; 6:12, 16, 23; கலாத்தியர் 3:22) பவுல் “பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு” “பாவப் பிரமாணத்துக்கு . . . சிறையாக்கப்பட்டவனாய்” பின்வருமாறு புலம்பினான்: “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” (ரோமர் 7:14, 19, 23) எனவே அவன், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று கதறுகிறான். அப்பொழுது பின்வரும் மகிழ்ச்சிகரமான பதில் வருகிறது: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.”—ரோமர் 7:24, 25.
13 கிறிஸ்து இயேசு வரும் வரையாக “பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.” (ரோமர் 5:14, 17, 21) ஆனால் இயேசுவின் மரணத்தாலும் உயிர்த்தெழுதலாலும் பாவம் என்ற அரசன் கவிழ்க்கப்பட்டான். கடவுளுடைய குமாரனாகிய அந்த அன்புள்ள ஈவுக்கு நன்கு பிரதிபலித்தவர்களைக் குறித்ததில் இப்படியாக இருந்தது. அவர் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்து அவற்றிலிருந்து நம்மைக் கழுவி நீங்கலாக்கி, அவற்றை நம்மிடமிருந்து முழுவதுமாக எடுத்துப்போட்டார். (மத்தேயு 1:21; அப்போஸ்தலர் 3:19; 22:16; 2 பேதுரு 1:9; 1 யோவான் 1:7; வெளிப்படுத்துதல் 1:5) பாவத்துக்கும் மரணத்துக்கும் மாம்சப்பிரகாரமாய் அடிமைப்பட்டிருப்பதிலிருந்து விடுதலையின் வழியைத் திறந்து வைத்ததற்காகப் பவுல் மட்டுமல்ல, ஆனால் கிறிஸ்து இயேசு சிந்தின இரத்தத்தில் விசுவாசம் வைக்கும் எல்லாருமே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
14 எனவே கடவுளுடைய அன்பிலிருந்து விலகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பதும் அவசியம். கடவுளோடு நெருங்கியிருப்பதற்கு என்ன நியதியோ அதுவே இயேசுவோடு நெருங்கியிருப்பதற்கும் நியதியாக அமைகிறது. இயேசு பின்வரும் வார்த்தைகளில் இதைக் குறிப்பிட்டுக் காண்பித்தார்: “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.”—யோவான் 15:9, 10.
படிப்படியாக விலகிச் செல்லுதலின் ஆபத்து
15 பாவம் மற்றும் மரண கட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற இந்த விடுதலையைப் படிப்படியாக விலகிச் செல்வதன் மூலமாக அல்லது பின்செல்வதன் மூலமாக இழந்துவிடாதீர்கள். அது கொஞ்சங்கொஞ்சமாகப் படிப்படியாக ஏற்படக்கூடுமாதலால் நாம் உணராதிருக்கும்போது அதில் பிடிபட்டுவிடுவோம். கலாத்தியர் 6:1 சொல்லுவதுபோல்: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப் பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.” ஒருவர் மற்றொருவருக்கு ஆலோசனை கொடுக்கையில் ‘தன்னைக் குறித்தும் கவனமாயிருக்க’ வேண்டும். நாம் எல்லாருமே தாக்குதலுக்குரிய நிலையிலிருக்கிறோம்! “நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்.”—எபிரெயர் 2:1.
16 பாதையிலிருந்து படிப்படியாக விலகிச் செல்லுதல் நம்முடைய பாகத்தில் முயற்சியை உட்படுத்துவதில்லை. எனவேதான் அது அவ்வளவு சுலபமாக இருக்கிறது—மற்றும் ஆவிக்குரிய விதத்தில் அதிக ஆபத்தானது. நீங்கள் கடவுளுடைய அன்பிலிருந்து விலகிச் செல்கிறீர்கள் என்பதை உணருவதற்கு முன்பு நீங்கள் விலகிவிட்டிருப்பதைக் காணக்கூடும். இது ஒரு ஆடு காணாமற்போய்விடுவதைப் போன்றது. அது எப்படிக் காணாமற்போகிறது? மேய்ப்பன் ஒருவன் பின்வருமாறு விளக்குகிறான்: ‘அங்குமிங்குமாக மேய்ந்துகொண்டு தானே காணாமற்போய்விடுகிறது. தானிருக்குமிடத்திலிருந்து ஒருசில அடிகளுக்கு அப்பால் கொஞ்சம் புல் இருப்பதைப் பார்க்கிறது, அதை மேய்வதற்காகச் செல்கிறது. பத்து அடி தள்ளி இன்னுங்கொஞ்சம் புல் விளைந்திருக்கும் பகுதியைப் பார்க்கிறது, சென்று மேய்கிறது. மூன்றாவது இடத்திலிருப்பதும் அதற்குக் கவர்ச்சியாயிருக்கிறது, எனவே அந்த ஆடு அங்கும் செல்லுகிறது. இப்படியாகச் சற்று நேரத்திற்குள் அது தன் மந்தையை விட்டு தூரமாய்ப் போய்விடுகிறது. அங்குமிங்கும் மேய்ந்துகொண்டு தானே காணாமற் போய்விடுகிறது.’
17 ஆவிக்குரிய பிரகாரமாய் வழி விலகிச் செல்கிறவர்கள் விஷயத்திலும் இப்படியே இருக்கிறது. ஒரு சில பொருள் சம்பந்தமான காரியங்கள், அல்லது உலக கூட்டுறவு, அல்லது ஏதாவது ஒரு வசனத்திற்குச் சொந்த அர்த்தத்தைக் கொடுக்க முற்படுதல் போன்ற காரியங்களுடன் மிக சாதாரணமாக ஆரம்பிக்கக்கூடும். ஆனால் அப்படிப்பட்டவர்கள் கடவுளுடைய மந்தையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று சபையிலிருந்தும் கடவுளுடைய அன்பிலிருந்தும் பிரிந்து சென்றுவிட்டிருக்கிறார்கள். பவுலின் பின்வரும் வார்த்தைகளுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை: “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்.”—2 கொரிந்தியர் 13:5.
18 “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்,” என்று நமக்குச் சொல்லப்படுகிறது. “தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தைத்” திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதன் மூலம், சாத்தானின் தந்திரமான தாக்குதல்களை முறியடித்துவிடலாம். வனாந்தரத்திலே இயேசு பிசாசை இந்த விதத்தில்தான் போகச் செய்தார். “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” (யாக்கோபு 4:7, 8; எபேசியர் 6:17) சங்கீதங்களின் எழுத்தாளர்களைப் போல கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக்கொள்வதன் மூலம் நாம் அவருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்: “யெகோவாவின் சாட்சியம் [நினைப்பூட்டுதல்கள், NW] நம்பிக்கைக்குரியது, அது பேதையை ஞானியாக்குகிறது.” “நானோ உமது சாட்சியங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், உமது வார்த்தை என் கால்களுக்குத் தீபம்; பாதைக்கு வெளிச்சம் . . . நானோ உமது சாட்சியங்களைவிட்டு விலகினதில்லை.”—சங்கீதம் 19:7; 119:95, 105, 157, தி.மொ.
19 ஜெபத்தின் மூலமும், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும், நம்முடைய சகோதரர்களை நேசிப்பதன் மூலமும் அவர்களோடு ஒழுங்காகக் கூடிவருவதன் மூலமும், கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து மற்றவர்களிடம் சொல்லுவதன் மூலமும் நாம் கடவுளிடமும் நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட அவருடைய அன்பினிடமும் நெருங்குகிறோம்.—1 தெசலோனிக்கேயர் 5:17; ரோமர் 12:2; எபிரெயர் 10:24, 25; லூக்கா 9:2.
20 இன்று பூமியெங்குமுள்ள யெகோவாவின் எல்லா உண்மையுள்ள சாட்சிகளின் திடத்தீர்மானத்தையும் பவுல் பலமான ஓர் அறிக்கையில் தெரிவித்தான். அவன் சொன்னதாவது: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள [வெளிப்படுத்தப்பட்ட, JB] தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”—ரோமர் 8:38, 39. (w86 6/1)
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1945, பக்கங்கள் 237, 238.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஜீவனுக்காகத் தம்முடைய ஏற்பாடுகளில் யெகோவாவின் அன்பு எப்படிக் காண்பிக்கப்படுகிறது?
◻ யெகோவாவின் சாட்சிகளைக் கடவுளுடைய அன்பிலிருந்து பிரித்துவிடுவதற்குச் சாத்தான் என்னென்ன முறைகளில் முயன்றிருக்கிறான்?
◻ நம்மீது பாவத்தின் பிடியைக் காண்பிக்கும் வசனங்கள் யாவை? இந்தப் பிடி எப்படி முறிக்கப்படலாம்?
◻ படிப்படியாக வழிவிலகிச் செல்வது ஏன் ஆபத்தானது? அதை மேற்கொள்ளுவது எப்படி?
[கேள்விகள்]
1. கடவுளுடைய அன்பு அனுதினமும் என்ன வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது?
2. மனிதவர்க்கத்திற்கான யெகோவாவின் மகா அன்பு எப்படிக் காண்பிக்கப்பட்டது? யெகோவா விரும்பினதற்கு இயேசு எப்படிப் போற்றுதலைக் காண்பித்தார்?
3. பவுலின் எந்த வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகள் தங்களுடையதாக எடுத்துக்கொள்கின்றனர்? தங்களுக்கு என்ன விளைவுகளோடு?
4. கடவுளுடைய அன்பிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ள மறுத்த ஒரு இளம் மனிதனால் நீங்கள் எவ்வாறு கவர்ச்சிக்கப்படுகிறீர்கள்?
5, 6. கடவுளுடைய அன்பில் பலமாக நிலைத்திருப்பதால் கொடுமைகளை எதிர்ப்படுவோருக்குப் பவுல் மற்றும் பேதுருவின் என்ன உறுதியான வார்த்தைகள் ஆறுதலளிப்பதாயிருக்கின்றன?
7. சாத்தான் இயேசுவிடம் என்ன தந்திரமான முறையைப் பயன்படுத்தினான்? அவனை இயேசு எப்படி முறியடித்தார்?
8, 9. இயேசுவைத் தாக்குவதற்குத் திரும்பிய சாத்தான் பயன்படுத்திய தந்திரமான வழிகள் என்ன? நம்முடைய பாதுகாப்புக்காக நாம் என்ன செய்யும்படி பவுல் கூறினான்?
10. “பாவம்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? கடவுளுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரித்துவிடும் செயல் பழக்கங்கள் யாவை?
11. நம்மைப் பாவம் எப்படி கொஞ்சங்கொஞ்சமாக மேற்கொண்டுவிடும்? இதன் முடிவான விளைவு என்ன?
12. பாவம் நம்மீது கொண்டிருக்கும் வல்லமையைக் காண்பிக்கும் வசனங்கள் யாவை? இதைக் குறித்துப் பவுல் எப்படிப் புலம்பினான்?
13, 14. (எ) நாம் எந்த வழியில் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறோம்? (பி) நாம் எப்படிக் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கலாம்?
15. நாம் எதில் பிடிபட்டுவிடக்கூடும்? இந்த ஆபத்தைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
16, 17. ஆவிக்குரிய விதத்தில் படிப்படியாய் வழிவிலகிச் செல்லக்கூடிய அபாயத்தை விளக்கும் உதாரணம் என்ன? அதைத் தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
18, 19. எப்படிப் பிசாசை நம்மை விட்டு விலகியோடச் செய்கிறோம்? எப்படிக் கடவுளிடம் நெருங்கிவருகிறோம்?
20. பவுல் அறிக்கை செய்த எந்த உறுதியான தீர்மானத்தை யெகோவாவின் சாட்சிகள் இன்று தங்களுடையதாக ஆக்கியிருக்கின்றனர்?
[பக்கம் 25-ன் படம்]
ஓர் ஆடு காணாமற்போகும் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக வழிதப்பிச் செல்கிறது