கடவுளுடைய அன்பைவிட்டு யாரால் நம்மை பிரிக்க முடியும்?
“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” —1 யோவான் 4:19.
1, 2. (அ) நேசிக்கப்படுகிறோம் என அறிவது நமக்கு ஏன் முக்கியம்? (ஆ) யாருடைய அன்பு நமக்கு அதிமுக்கியம்?
நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என அறிவது உங்களுக்கு எவ்வளவு முக்கியம்? பச்சிளம் பருவம் முதல் முதுமையடையும் வரை மனிதர்கள் அன்பில்தான் செழித்தோங்குகின்றனர். தன் தாயின் அன்பான அரவணைப்பில் இருக்கும் குழந்தையை நீங்கள் கவனித்ததுண்டா? தன்னை சுற்றிலும் என்ன நடந்தாலும் சரி தன் தாயின் கனிவான கண்களை காணும் வரை அது சாந்தமாகவும், தன்னை நேசிக்கும் தாயின் கரங்களில் அமைதியாகவும் அமர்ந்திருக்கும். அல்லது சில சமயங்களில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் வளரிளமை பருவத்தில் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் என்பது நினைவிருக்கிறதா? (1 தெசலோனிக்கேயர் 2:7) அப்போது உங்களுடைய தேவைகளை மட்டுமல்ல உங்களையேகூட புரிந்துகொள்ள முடியாமல் தவித்திருக்கலாம். என்றாலும், அப்பாவும் அம்மாவும் உங்கள்மீது பாசத்தைப் பொழிகிறார்கள் என அறிவது எவ்வளவு முக்கியமாக இருந்தது! எந்த பிரச்சினையாக இருந்தாலும், என்ன கேள்வி எழுந்தாலும் அவர்களை அணுக முடியும் என அறிந்திருந்தது எவ்வளவு ஆறுதலாக இருந்தது! உண்மை என்னவென்றால், வாழ்நாள் முழுவதும், நமக்கு அன்பு காட்டப்படுகிறது என்பதை அறிவதே நம் மிகப் பெரிய தேவைகளில் ஒன்றாகும். நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை அப்படிப்பட்ட அன்பு உறுதி செய்கிறது.
2 நல்ல வளர்ச்சிக்கும் சமநிலையைக் காப்பதற்கும் பெற்றோரின் அன்பு எப்போதும் கிடைப்பது மிக முக்கியம். என்றாலும், நம் பரலோக தகப்பன் யெகோவா நம்மை நேசிக்கிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமது ஆவிக்குரிய, உணர்ச்சிப்பூர்வ ஆரோக்கியத்திற்கு அதிமுக்கியம். இந்த பத்திரிகையின் வாசகரில் சிலருடைய பெற்றோர் அவர்கள்மீது உண்மையான அக்கறை காண்பிக்காமல் இருந்திருக்கலாம். அந்த சிலரில் நீங்களும் ஒருவரென்றால் கவலைப்படாதீர்கள். பெற்றோரின் அன்பு கிடைக்காவிட்டாலும் சரி, குறைவுபட்டாலும் சரி கடவுளுடைய பற்றுமாறா அன்பு அந்தக் குறையை போக்கும்.
3. தம் மக்கள்மீது வைத்திருக்கும் அன்பை யெகோவா எவ்வாறு உறுதியளித்திருக்கிறார்?
3 பால் குடிக்கும் குழந்தையை ஒரு தாய் ‘மறந்தாலும்’ யெகோவா தம் மக்களை மறப்பதில்லை என தமது தீர்க்கதரிசியான ஏசாயா மூலம் அவர் கூறினார். (ஏசாயா 49:15) அதைப் போலவே, தாவீதும் நம்பிக்கையுடன் இவ்வாறு கூறினார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) அது எவ்வளவாய் உறுதியளிக்கிறது! நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, யெகோவா தேவனோடு ஒப்புக்கொடுத்த உறவை அனுபவிப்பவராக இருந்தால் அவர் உங்கள் மேல் வைக்கும் அன்பு வேறு எந்த மனிதனுடைய அன்பைக் காட்டிலும் மிக உன்னதமானது என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்!
கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
4. கடவுளுடைய அன்பு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு உறுதியளிக்கப்பட்டது?
4 யெகோவாவின் அன்பை பற்றி நீங்கள் முதலாவது எப்போது கேள்விப்பட்டீர்கள்? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் அனுபவத்தையே நீங்களும் பெற்றிருக்கலாம். ஒரு சமயம் கடவுளிடமிருந்து விலகியிருந்த பாவிகள் யெகோவாவின் அன்பை எவ்வாறு ருசித்தார்கள் என ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தின் ஐந்தாவது அதிகாரத்தில் பவுல் மிகவும் அழகாக விவரிக்கிறார். ஐந்தாவது வசனம் கூறுவதாவது: “நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற”து. 8-ம் வசனத்தில் பவுல் மேலுமாக கூறுகிறார்: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”
5. கடவுளுடைய அன்பின் ஆழத்தை எவ்வாறு மதித்துணர ஆரம்பித்தீர்கள்?
5 அதைப் போலவே, கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை நீங்கள் கேள்விப்பட்டு விசுவாசிக்க ஆரம்பிக்கையில் யெகோவாவின் பரிசுத்த ஆவி உங்கள் இருதயத்தில் செயல்பட ஆரம்பித்தது. இவ்வாறு தம் நேச குமாரனை உங்களுக்காக மரிக்கும்படி அனுப்பியதால் யெகோவா காட்டிய அன்பின் ஆழத்தை மதித்துணர ஆரம்பித்தீர்கள். தாம் மனிதகுலத்தை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை உணர யெகோவா உங்களுக்கு உதவினார். பிறக்கும்போதே கடவுளிடமிருந்து விலகிய பாவியாக நீங்கள் இருந்தபோதிலும், மனிதர்கள் நித்திய ஜீவ நம்பிக்கையோடு நீதிமான்களாய் அறிவிக்கப்படுவதற்கான வழியை யெகோவாவே திறந்து வைத்திருப்பதை அறிந்தபோது உங்கள் இருதயத்தில் நன்றியுணர்வு எழவில்லையா? உங்களுக்கு அவர் மேல் அன்பு பிறக்கவில்லையா?—ரோமர் 5:10.
6. யெகோவாவிடமிருந்து தூர விலகியிருப்பதுபோல் நாம் ஏன் சில சமயங்களில் உணரலாம்?
6 பரலோக தந்தையின் அன்பு உங்களை கவர்ந்திழுத்ததால் அவருக்கு பிரியமாய் வாழ உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு, உங்களையே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தீர்கள். இப்போது கடவுளோடு சமாதான உறவை அனுபவிக்கிறீர்கள். இருந்தபோதிலும், யெகோவாவிடமிருந்து தூர விலகியிருப்பதுபோல் சில சமயங்களில் உணருகிறீர்களா? நம்மில் யாருக்கும் அந்த உணர்வு வரலாம். ஆனால் கடவுள் என்றும் மாறாதவர் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். சூரியன் தன் அனலான கிரணங்களை தொடர்ந்து பூமியில் ஒளிரச் செய்வதுபோல அவருடைய அன்பும் நிலையானது, உறுதியானது. (மல்கியா 3:6; யாக்கோபு 1:17) மறுபட்சத்தில், கணநேரத்திற்காவது நாம் மாறுபடலாம். பூமி சுழலுகையில் அதன் ஒரு பாதி கும்மிருட்டில் மூழ்கிவிடுகிறது. அதைப் போல நாமும் கடவுளிடமிருந்து கொஞ்சம் விலகினால்கூட அவரோடுள்ள நம் அன்பான உறவு குறைவுபடலாம். அந்த சூழ்நிலையை சரிசெய்ய நாம் என்ன செய்யலாம்?
7. கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க சுயபரிசோதனை நமக்கு எவ்வாறு உதவும்?
7 கடவுளுடைய அன்பிலிருந்து கொஞ்சம் விலகியிருப்பதாக உணர்ந்தால் நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘கடவுளுடைய அன்பை அற்பமானதாக நினைக்கிறேனா? உயிருள்ள, அன்புள்ள கடவுளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, பல்வேறு வழிகளில் விசுவாசக் குறைவை வெளிக்காட்டுகிறேனா? என் மனதை “ஆவிக்குரியவை”களில் செலுத்துவதற்கு பதிலாக “மாம்சத்துக்குரியவை”களில் ஒருமுகப்படுத்துகிறேனா?’ (ரோமர் 8:5-8; எபிரெயர் 3:12) நாம் யெகோவாவிடமிருந்து விலகியிருந்தால் அதை சரிசெய்து அவரோடு நெருக்கமான, அன்பான உறவை அனுபவிக்க நடவடிக்கை எடுக்கலாம். “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” என யாக்கோபு ஊக்குவிக்கிறார். (யாக்கோபு 4:8) “பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொ”ள்ளுங்கள் என கூறும் யூதாவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியுங்கள்.—யூதா 20, 21.
சூழ்நிலைகள் மாறலாம், கடவுளுடைய அன்பு மாறாது
8. நம் வாழ்க்கையில் என்ன திடீர் மாற்றங்கள் ஏற்படலாம்?
8 இந்த ஒழுங்குமுறையில் இருக்கும்வரை நம் வாழ்க்கையில் அநேக மாற்றங்கள் நிகழத்தான் செய்யும். நம் அனைவருக்கும் “சமயமும் எதிர்பாராத சம்பவமும் நேரிடும்” என்பதை அரசனாகிய சாலொமோன் கவனித்தார். (பிரசங்கி 9:11, NW) திடீரென நம் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடலாம். ஒரு நாள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்போம், மறுநாளே மோசமான வியாதி வரலாம். இன்று நாம் செய்யும் வேலை நிரந்தரமானதாக தோன்றலாம், நாளையே அந்த வேலை பறிபோகலாம். நமக்கு அன்பானவர் திடீரென இறந்துவிடலாம். ஒரு நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் சில காலம் சமாதானத்தை அனுபவிக்கலாம், திடீரென மோசமான துன்புறுத்துதல் தலைதூக்கலாம். நம் மீது தவறாக குற்றம் சாட்டப்படுவதால் அநீதியை சந்திக்க நேரிடலாம். ஆம், இந்த வாழ்க்கை நிலையானதோ, முழுமையான பாதுகாப்பளிப்பதோ அல்ல.—யாக்கோபு 4:13-15.
9. ரோமர் 8-ம் அதிகாரத்தின் ஒரு பகுதியை கவனமாக ஆராய்வது ஏன் நல்லது?
9 நமக்கு வருத்தம் தரும் காரியங்கள் நிகழுகையில் நாம் கைவிடப்பட்டவர்களாக உணரலாம், கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பு குறைந்துவிட்டதாகக்கூட நினைக்கலாம். நாம் எல்லாருமே அப்படிப்பட்ட நிலையை எதிர்ப்பட வாய்ப்பிருப்பதால் ரோமர் 8-ம் அதிகாரத்திலுள்ள அப்போஸ்தலன் பவுலின் ஆறுதலளிக்கும் வார்த்தைகளை கவனமாக ஆராய்வது நல்லது. அந்த வார்த்தைகள் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம் கூறப்பட்டன. என்றாலும், அந்த நியமம் வேறே ஆடுகளுக்கும் பொருந்தும். கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்தில் வாழ்ந்த ஆபிரகாமைப் போல அவர்கள் கடவுளுடைய நண்பர்களாக நீதிமான்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.—ரோமர் 4:20-22; யாக்கோபு 2:21-23.
10, 11. (அ) கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதமாக எதிரிகள் சிலசமயம் என்ன குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்? (ஆ) அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் கிறிஸ்தவர்களுக்கு ஏன் முக்கியமானவை அல்ல?
10 ரோமர் 8:31-34-ஐ வாசிக்கவும். “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” என பவுல் கேட்கிறார். சாத்தானும் அவனுடைய பொல்லாத உலகமும் நமக்கு எதிராக இருப்பது உண்மையே. ஒரு நாட்டின் நீதிமன்றங்களில்கூட எதிரிகள் நம்மீது பொய் குற்றங்களைச் சுமத்தலாம். கடவுளுடைய சட்டத்தை மீறுகிற மருத்துவ சிகிச்சை முறைகளை தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்க மறுப்பதால் அல்லது புறமத கொண்டாட்டங்களில் பங்குகொள்ள அவர்களை அனுமதிக்காததால் பெற்ற பிள்ளைகளையே வெறுப்பதாக சில கிறிஸ்தவ பெற்றோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். (அப்போஸ்தலர் 15:28, 29; 2 கொரிந்தியர் 6:14-16) உண்மையுள்ள மற்ற கிறிஸ்தவர்கள், யுத்தத்தில் மற்றவர்களை கொல்ல அல்லது அரசியலில் பங்கெடுக்க மறுப்பதால் தேசத்துரோகிகள் என்பதாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். (யோவான் 17:16) எதிரிகளில் சிலர், யெகோவாவின் சாட்சிகள் ஆபத்தான மதப் பிரிவினர் என்ற குற்றச்சாட்டு உட்பட பல அவதூறான பொய்களை மீடியாக்கள் மூலம் பரப்பிவிட்டிருக்கின்றனர்.
11 அப்போஸ்தலர்களின் நாட்களில் இவ்வாறு சொல்லப்பட்டதை மறந்துவிடாதீர்கள்: “எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்”கிறோம். (அப்போஸ்தலர் 28:22) பொய் குற்றச்சாட்டுகள் அந்தளவுக்கு முக்கியமானவையா என்ன? கிறிஸ்துவின் பலியில் வைக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் உண்மை கிறிஸ்தவர்களை நீதிமான்களாக அறிவிப்பது கடவுளே. தம் வணக்கத்தாருக்காக ஈடிணையற்ற பரிசாகிய தமது சொந்த, அருமையான குமாரனையே கொடுத்திருக்க, யெகோவா அவர்களிடம் அன்பு காட்டுவதை நிறுத்திவிடுவாரா என்ன? (1 யோவான் 4:10) இப்போது கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு கடவுளுடைய வலது கரத்தில் இருப்பதால் கிறிஸ்தவர்களை அவர் சுறுசுறுப்புடன் ஆதரிக்கிறார். கிறிஸ்து தம்மை பின்பற்றுவோரை ஆதரிப்பதை யார்தான் நியாயமாக மறுத்து பேச முடியும்? அல்லது கடவுள் தமது உண்மையுள்ள ஊழியரை சாதகமாக மதிப்பிட்டிருப்பதை யார்தான் வெற்றிகரமாக எதிர்க்க முடியும்? யாராலும் முடியாது!—ஏசாயா 50:8, 9; எபிரெயர் 4:15, 16.
12, 13. (அ) எப்படிப்பட்ட நிலைமைகளால் அல்லது சூழ்நிலைகளால் கடவுளுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது? (ஆ) நமக்கு கஷ்டங்களை ஏற்படுத்துவதில் பிசாசின் நோக்கம் என்ன? (இ) கிறிஸ்தவர்கள் எவ்வாறு முற்றிலும் வெற்றி சிறக்க முடியும்?
12 ரோமர் 8:35-37-ஐ வாசிக்கவும். நாமாகவே விலகினால் தவிர வேறு யாரும் அல்லது எதுவும், யெகோவா, அவருடைய குமாரன் கிறிஸ்து இயேசு ஆகிய இருவரின் அன்பிலிருந்தும் நம்மை பிரிக்க முடியுமா? சாத்தான், பூமியிலுள்ள தனது ஏஜென்டுகளை உபயோகித்து கிறிஸ்தவர்களுக்கு அநேக துன்பங்களை கொண்டு வரலாம். கடந்த நூற்றாண்டில், பல நாடுகளிலுள்ள நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளில் அநேகர் கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். இன்றும் சில இடங்களில் நம் சகோதரர்கள் தினமும் பொருளாதார கஷ்டங்களை எதிர்ப்படுகிறார்கள். சிலர் பசியின் கொடுமையை சகிக்கிறார்கள் அல்லது உடுத்த போதுமான உடையின்றி தவிக்கிறார்கள். பிசாசு, என்ன நோக்கத்திற்காக இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலைகளை கொண்டு வருகிறான்? குறைந்தபட்சம், யெகோவாவை உண்மையோடு வணங்குவதை தடைசெய்வதே அவனுடைய நோக்கங்களில் ஒன்று. நம்மிடம் கடவுள் காட்டும் அன்பு தணிந்துவிட்டதாக நாம் நினைக்க வேண்டும் என்றே சாத்தான் விரும்புகிறான். ஆனால் அது உண்மையா?
13 சங்கீதம் 44:22-ஐ மேற்கோள் காண்பித்த பவுலைப் போலவே, எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையை நாம் ஆராய்ந்திருக்கிறோம். கடவுளுடைய பெயரின் நிமித்தமாகவே அவருடைய ‘ஆடுகளாகிய’ நமக்கு இவையெல்லாம் நடக்கின்றன என்பதை புரிந்துகொள்கிறோம். கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதும் அவருடைய சர்வலோக பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதும் இதில் உட்பட்டுள்ளன. கடவுளுக்கு நம்மீது அன்பு குறைந்துவிட்டதால் அல்ல, மாறாக இப்படிப்பட்ட முக்கிய விவாதங்கள் காரணமாகத்தான் அவர் துன்பங்களை அனுமதிக்கிறார். எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் சரி, நம் ஒவ்வொருவர்மீதும், தமது மக்கள் அனைவர்மீதும் கடவுள் வைத்திருக்கும் அன்பு மாறவில்லை என்ற நிச்சயம் நமக்குள்ளது. நாம் அனுபவிப்பது தோல்வியாக தோன்றினாலும் உத்தமத்தை காத்துக்கொண்டால் நமக்கு வெற்றி நிச்சயம். கடவுளுடைய பற்றுமாறாத அன்பு நமக்குள்ளது என்ற உறுதி நம்மை பலப்படுத்தி, தாங்குகிறது.
14. கிறிஸ்தவர்கள் துன்பங்களை சந்தித்தாலும் கடவுளுடைய அன்பைப் பற்றி பவுல் ஏன் அவ்வளவு நிச்சயமாய் இருந்தார்?
14 ரோமர் 8:38, 39-ஐ வாசிக்கவும். கடவுளுடைய அன்பிலிருந்து கிறிஸ்தவர்களை எதுவுமே பிரிக்க முடியாது என பவுலால் எவ்வாறு அவ்வளவு உறுதியாக சொல்ல முடிந்தது? கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பை துன்பங்களால் நீக்கிவிட முடியாது என்ற நம்பிக்கை பவுலுக்கு இருந்தது; ஊழியத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அந்த நம்பிக்கையை பலப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (2 கொரிந்தியர் 11:23-27; பிலிப்பியர் 4:13) யெகோவாவின் நித்திய நோக்கத்தையும் தமது ஜனங்களுக்காக முற்காலத்தில் அவர் செய்திருந்தவற்றையும் பவுல் அறிந்திருந்தார். தம்மை உண்மையோடு சேவித்திருப்பவர்களிடம் கடவுள் வைத்திருக்கும் அன்பை மரணத்தால் பறித்துக்கொள்ள முடியுமா? முடியவே முடியாது! மரணத்தைத் தழுவும் அப்படிப்பட்ட உண்மையுள்ளோர் கடவுளுடைய பரிபூரண நினைவில் உயிர் வாழ்கின்றனர், ஏற்ற காலத்தில் கடவுள் அவர்களை உயிர்த்தெழுப்புவார்.—லூக்கா 20:37, 38; 1 கொரிந்தியர் 15:22-26.
15, 16. கடவுள் தமது உண்மையுள்ள ஊழியர்களிடம் அன்பு காட்டுவதை தடுத்து நிறுத்த முடியாத சில காரியங்கள் யாவை?
15 இன்றைய வாழ்க்கையில் நமக்கு என்ன துன்பம் வந்தாலும் சரி, பலவீனப்படுத்தும் விபத்தோ, மரணத்தில் தள்ளும் வியாதியோ, அல்லது பொருளாதார கஷ்டமோ வந்தாலும் சரி, கடவுள் தம் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பை எதுவுமே தகர்க்க முடியாது. சாத்தானாக மாறிய கீழ்ப்படியாத தூதனைப் போன்ற வல்லமையுள்ள ஆவி சிருஷ்டிகளால்கூட பக்தியாக இருக்கும் தமது மக்களிடம் யெகோவா காட்டும் அன்பை தடுக்க எதையும் செய்ய முடியாது. (யோபு 2:3) அரசாங்கங்கள் கடவுளுடைய ஊழியர்களை தடை செய்யலாம், சிறையில் தள்ளலாம், கேவலமாக நடத்தலாம், “விரும்பப்படாதவர்” (“persona non grata”) என முத்திரை குத்தலாம். (1 கொரிந்தியர் 4:13) தேசங்கள் காண்பிக்கும் இப்படிப்பட்ட நியாயமற்ற வெறுப்பின் காரணமாக மனிதர்கள் நம்மை விரோதிக்கும்படி தூண்டுவிக்கப்படலாம், ஆனால் சர்வலோக பேரரசர் நம்மைவிட்டு விலகும்படி செய்ய முடியாது.
16 ‘நிகழ்காரியங்கள்’ என பவுல் அழைக்கும் இந்த காரிய ஒழுங்குமுறையின் சம்பவங்கள், நிலைமைகள், சூழ்நிலைகள் எதுவுமே, அல்லது எதிர்காலத்தில் ‘வருங்காரியங்கள்’ எதுவுமே தமது மக்கள்மீது கடவுள் வைத்திருக்கும் அன்பை பிரித்துவிடும் என நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பூமியிலும் பரலோகத்திலும் உள்ள அதிகாரங்கள் நமக்கு விரோதமாக யுத்தம் செய்தபோதிலும் கடவுளுடைய பற்றுமாறா அன்பு நம்மை தாங்கும். பவுல் வலியுறுத்தியபடி, “உயர்வானாலும் தாழ்வானாலும்” எதுவுமே கடவுளுடைய அன்பை தடுக்க முடியாது. நம்மை சோர்வடைய செய்யும் அல்லது நம்மீது ஆதிக்கம் செலுத்த முயலும் எதுவுமே கடவுளுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்கவும் முடியாது. சிருஷ்டிகர் தமது உண்மையுள்ள ஊழியர்களோடு வைத்திருக்கும் உறவை வேறு எந்த சிருஷ்டியாலும் முறிக்கவும் முடியாது. கடவுளுடைய அன்பு ஒருக்காலும் ஒழியாது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்.—1 கொரிந்தியர் 13:8.
கடவுளுடைய அன்புள்ள தயவை என்றென்றும் மனமார போற்றுங்கள்
17. (அ) கடவுளுடைய அன்பை பெறுவது ஏன் ‘ஜீவனை பார்க்கிலும் நல்லது’? (ஆ) கடவுளுடைய அன்புள்ள தயவை மனமார போற்றுவதை எவ்வாறு காண்பிக்கலாம்?
17 கடவுள் காட்டும் அன்பு உங்களுக்கு எந்தளவுக்கு முக்கியம்? “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை [“அன்புள்ள தயவு,” NW] நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்” என எழுதிய தாவீதைப் போலவே நீங்களும் உணருகிறீர்களா? (சங்கீதம் 63:3, 4) உண்மையில், கடவுளுடைய அன்பையும் பற்றுமாறா நட்பையும்விட மேலான ஒன்றை இந்த உலகில் பெற முடியுமா? உதாரணமாக, கடவுளோடு உள்ள நெருக்கமான உறவு தரும் மனசமாதானத்தையும் சந்தோஷத்தையும்விட நல்ல வருமானத்தை வழங்கும் வேலை சிறந்ததா? (லூக்கா 12:15) கிறிஸ்தவர்களில் சிலர், யெகோவாவை மறுதலிப்பது அல்லது மரிப்பது என்ற இக்கட்டான நிலையை எதிர்ப்பட்டுள்ளனர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாசி சித்திரவதை முகாம்களில் இருந்த யெகோவாவின் சாட்சிகளில் அநேகருக்கு அதுவே சம்பவித்தது. சிலரைத் தவிர, நமது கிறிஸ்தவ சகோதரர்கள் மரணமே வந்தாலும் கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கவே தீர்மானித்தனர். உத்தமத்தோடு கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பவர்கள் நித்திய எதிர்கால வாழ்க்கையை அவர் தருவார் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்; அது இந்த உலகம் தர முடியாத ஒன்று. (மாற்கு 8:34-36) ஆனால், நித்திய ஜீவன் மட்டுமல்ல இன்னும் அதிகமுள்ளது.
18. நித்திய ஜீவன் ஏன் அந்தளவுக்கு விரும்பத்தக்கது?
18 யெகோவா இல்லாமல் நித்திய காலம் வாழ்வது சாத்தியமில்லை என்றாலும் சிருஷ்டிகர் இல்லாத நீண்டநாள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது வீணானதாக, உண்மையான நோக்கமற்றதாக இருக்கும். இந்த கடைசி நாட்களில்கூட யெகோவா தம் மக்களுக்கு திருப்தி அளிக்கும் வேலையை கொடுத்திருக்கிறார். ஆகவே, தம் நோக்கத்தை நிறைவேற்றுகிறவராகிய யெகோவா நித்திய ஜீவனை கொடுக்கையில் நாம் கற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் ஏராளமான வியப்பூட்டும், பிரயோஜனமான காரியங்கள் இருக்கும் என்பது அதிக நிச்சயமல்லவா? (பிரசங்கி 3:11, NW) பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் எவ்வளவு அதிகத்தை கற்றுக்கொண்டாலும் சரி, “தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழ”த்தை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ளவே முடியாது.—ரோமர் 11:33.
பிதா உங்களை சிநேகிக்கிறார்
19. பிரிந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு என்ன உறுதியை அளித்தார்?
19 பொ.ச. 33, நிசான் 14 அன்று தமது உண்மையுள்ள 11 சீஷர்களுடன் செலவழித்த கடைசி இரவில், வரவிருப்பவற்றை சமாளிக்க அவர்களை பலப்படுத்தும் விதத்தில் இயேசு அநேக காரியங்களை கூறினார். இயேசு எதிர்ப்பட்ட சோதனைகளில் அவர்கள் அனைவரும் அவரோடு நிலைத்திருந்தார்கள், அவர்களிடம் அவர் வைத்திருந்த அன்பை நேரில் கண்டுணர்ந்தார்கள். (லூக்கா 22:28, 30; யோவான் 1:16; 13:1) அதற்கு பிறகு இயேசு அவர்களுக்கு பின்வரும் உறுதியை அளித்தார்: “பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.” (யோவான் 16:27) தங்கள் பரலோக தகப்பன் தங்களிடம் வைத்திருக்கும் கனிவான உணர்ச்சிகளை புரிந்துகொள்ள அந்த வார்த்தைகள் சீஷர்களுக்கு எவ்வளவாக உதவியிருக்கும்!
20. என்ன செய்ய நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்கள், எதில் நீங்கள் நம்பிக்கையாக இருக்கலாம்?
20 இன்று உயிரோடுள்ள அநேகர், பல பத்தாண்டுகளாக யெகோவாவை உண்மையுடன் சேவித்து வந்துள்ளனர். இந்த பொல்லாத ஒழுங்குமுறை அழிவதற்கு முன்பு நாம் இன்னும் அநேக சோதனைகளை எதிர்ப்படுவோம் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட சோதனைகள் அல்லது துயரங்கள், கடவுள் உங்கள் மேல் வைத்திருக்கும் பற்றுமாறா அன்பை சந்தேகிக்கும்படி வழிநடத்த ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். யெகோவா உங்களை நேசிக்கிறார் என்ற இந்த உண்மையை எந்தளவுக்கு வலியுறுத்திக் கூறினாலும் அது பொருத்தமானதே. (யாக்கோபு 5:11) கடவுளுடைய கட்டளைகளுக்கு உண்மையோடு கீழ்ப்படிந்து நாம் ஒவ்வொருவரும் நம் பங்கை தொடர்ந்து செய்வோமாக. (யோவான் 15:8-10) அவருடைய பெயரை மகிமைப்படுத்த கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்வோமாக. ஜெபத்தின் மூலம் யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கி வந்து, அவருடைய வார்த்தையை எப்போதும் வாசிப்பதற்கான நமது தீர்மானத்தை பலப்படுத்த வேண்டும். நாளை என்ன நடந்தாலும் சரி, யெகோவாவை பிரியப்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்தால் நாம் சமாதானத்தோடும் அவருடைய மாறா அன்பைப் பற்றி முழு நம்பிக்கையோடும் இருக்கலாம்.—2 பேதுரு 3:14.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• நமது ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வ சமநிலையை காத்துக்கொள்ள நமக்கு யாருடைய அன்பு அதிமுக்கியம்?
• என்ன காரியங்களால், யெகோவா தம் ஊழியர்களிடம் அன்பு காட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது?
• யெகோவாவின் அன்பை அனுபவிப்பது ஏன் ‘ஜீவனை பார்க்கிலும் நல்லது’?
[பக்கம் 13-ன் படங்கள்]
கடவுளுடைய அன்பிலிருந்து விலகியிருப்பதாக உணர்ந்தால் நாம் காரியங்களை சரிசெய்யலாம்
[பக்கம் 15-ன் படம்]
தான் துன்பப்படுவதற்கான காரணத்தை பவுல் அறிந்திருந்தார்