வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ மகா உபத்திரவத்தினூடே இன்னும் ஒருவன் தப்பிப் பிழைத்திருக்கவில்லை என்ற உண்மையினால், பூலோக நம்பிக்கைகளையுடைய ஒரு கிறிஸ்தவன் இப்பொழுதே “திரள் கூட்டத்தின்” பாகமாக இங்கிருக்கிறானென்று சொல்லப்படக்கூடுமா?—வெளிப்படுத்துதல் 7:9, 14.
ஆம், அவன் அல்லது அவளின் எதிர்பார்ப்புகளின் நோக்குநிலையில் அது பொருத்தமாயிருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் ஏழாம் அதிகாரம் இருவகுப்பினரைப்பற்றிக் கூறுகிறது. முதலில் “இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்ட” 1,44,000. (வெளிப்படுத்துதல் 7:4) வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5-ஐ ஒப்பிடும்போது, இந்த 1,44,000 பேர் “தேவனுக்கு முதற்பலனாக ஆவதற்கு,” “பூமியிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள்” என்பது தெளிவாயிருக்கிறது. ஆகையால், இவர்கள் கிறிஸ்துவோடுகூட பரலோகத்தில் ஆளுகை செய்பவர்கள். (கலாத்தியர் 6:16; 2 தீமோத்தேயு 4:18) இரண்டாவது வகுப்பினர், “மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்த,” “ஒருவராலும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்.”
வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17-ல் உள்ள காட்சி வரவிருக்கும் மகா உபத்திரவத்திலிருந்து பூமியில் தப்பிப் பிழைப்பவர்களைச் சித்தரிக்கிறது. ஆகையால் இதில் கடும் விவாதம் செய்ய விரும்பும் ஒருவர் “திரளான கூட்டம்” என்ற பதத்தை உபத்திரவத்தைத் தப்பிப் பிழைத்திருக்கிறவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தலாம். ஆனால் அந்த அளவிற்கு மட்டுப்படுத்துவதற்குத் தேவை இருக்கிறதா? நாங்கள் அந்த விதமாக கருதவில்லை. தெளிவாகவே, தப்பிப் பிழைப்பவர்கள் “மிகுந்த உபத்திரவத்திற்கு” முன்னாலேயே தப்பிப் பிழைப்பதற்கான தகுதியை அடைவதற்குக் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவ்விதமாக நாங்கள் “திரள் கூட்டம்” என்ற பதத்தை இக்காலத்தில் யெகோவா தேவனை சேவித்து, தப்பிப் பிழைத்து, இப்பூமியில் “ஜீவதண்ணீருள்ள ஊற்றண்டைக்கு” நடத்தப்படும் எதிர்பார்ப்பைக் கொண்ட உண்மை கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தி இருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 7:17) இந்தத் ‘திரள் கூட்டத்தின்’ ஒருவன் ‘மகா உபத்திரவத்திற்குச்’ சற்று முன்பாக இப்பொழுது மரிப்பானானால், அவன்/அவள் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவதை எதிர்நோக்கி இருப்பதற்கு எல்லா காரணமும் இருக்கிறது.
இதே விதமான குறிப்புகள் யோவான் 10:7-16-லுள்ள “வேறே செம்மறி ஆடுகளைப்” (NW) பற்றியதிலும் கூறப்படலாம். இயேசு முதலில் தன்னுடைய செம்மறி ஆடுகளைப் பற்றி பேசினார்; இவர்களை, பரலோக வாழ்க்கைக்கு நியமிக்கப்பட்ட சிறுமந்தையினராகப் புரிந்து கொள்கிறோம். அதன் பிறகு, இயேசு கூறினார்: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே செம்மறி ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கும்; அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” இந்த “வேறே செம்மறி ஆடுகள்” பூலோக வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்பைக் கொண்டவர்களை அடையாளப்படுத்துவதாக நாங்கள் அடிக்கடி வேதப் பூர்வமான ஆதாரத்தைக் கொடுத்து வந்திருக்கிறோம்.—லூக்கா 12:32.
இயேசு வருங்காலத்தில் கூட்டப்படும் “வேறே செம்மறி ஆடுகளைப்” பற்றிச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார். ஆகவே, அந்தப் பதம் இயேசு பேசினதற்குப் பிறகு, பூலோகத்தில் முடிவில்லா வாழ்க்கையின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்பவருக்கு மட்டுமே பொருந்துமென்று ஒருவர் நியாயக் காரணம் சொல்லக்கூடும். என்றாலும் இயேசு காரியங்களைக் காலக்கிரமமாக அல்லது தொடர்ச்சியாக விவரித்துக் கொண்டிருந்தாரென்பதுபோல் இந்தப் பதத்தை இவ்விதமாக மட்டுப்படுத்துவது அவசியமற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. அவர் ஒருங்கிணைக்கப்பட்ட செம்மறி ஆடுகளுக்குத் தான் மேய்ப்பனென்பதை வலியுறுத்திக் கொண்டிருந்தாரென்று நாங்கள் கருதுகிறோம். சில செம்மறி ஆடு போன்ற ஆட்கள் பரலோகத்திற்குச் செல்லும் தொழுவத்திற்குள் வருகிறார்கள். அவரை மேய்ப்பராக ஏற்றுக்கொள்ளும் வேறு செம்மறி ஆடுகளும் இருக்கின்றன, இவை முதலில் கூறியவற்றோடு ஐக்கியப்பட்டிருக்கின்றன. இந்த நோக்குநிலையைக் கொள்ளும்போது, “வேறே செம்மறி ஆடுகள்” என்ற பதம் இயேசு பரலோகத்திற்கு வழிதுவங்கி வைப்பதற்கு முன்னால் மரித்த நோவா, ஆபிரகாம், யோபு, தாவீது மற்றும் முழுக்காட்டுபவனாகிய யோவானைப் போன்ற விசுவாசமுள்ள மனிதரையும் உட்படுத்துகிறது. (மத்தேயு 11:11; அப்போஸ்தலர் 2:29; எபிரெயர் 10:19, 20) புதிய ஒழுங்குமுறையில் இவர்கள் உயிர்த்தெழுப்பப்படும்போது, இவர்கள் சிறந்த மேய்ப்பனை ஏற்றுக்கொண்டு, இயேசுவின் “வேறே செம்மறி ஆடுகளுடன்” முடிவில்லா பூலோக வாழ்க்கையின் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கக்கூடும். (w86 8/1)