வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பைபிள் பதங்களான ‘மற்ற செம்மறியாடுகள்’ என்பதற்கும் ‘திரள் கூட்டம்’ என்பதற்கும் கண்டிப்பான அர்த்தத்தில் வித்தியாசம் ஏதாவது உண்டா?
உண்டு. ஆயினும் வார்த்தையின் பிரயோகத்தைக் குறித்து நாம் அளவுக்கு மேல் திருத்தத்தை வற்புறுத்துகிறவர்களாக இருக்கவோ ஒருவேளை யாரேனும் இவ்வார்த்தைகளை மாறி பயன்படுத்தினால் நிலைகுலைந்து போகவோ வேண்டிய தேவையும் இல்லை.
இவ்வார்த்தைகள் காணப்படும் பைபிள் பகுதிகளை அநேக கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் யோவான் 10:16. அங்கு இயேசு சொன்னதாவது: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் [“மற்ற செம்மறியாடுகளும்,” NW] எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” ‘திரள் கூட்டம்’ என்ற மற்றொரு பதமானது வெளிப்படுத்துதல் 7:9-ல் தோன்றுகிறது. நாம் வாசிக்கிறோம்: “இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.”
நாம் முதலாவது யோவான் 10:16-ஐ சிந்திப்போம். செம்மறியாடுகள் எனப்படுபவர்கள் யார்? இயேசுவை பற்றுமாறாமல் பின்பற்றுவோர் அனைவரும் செம்மறியாடுகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பதை மனதில் வைப்பது நல்லது. பரலோக நம்பிக்கையை உடைய அனைவரையும் அவர் லூக்கா 12:32-ல் “சிறுமந்தை” என்று அழைத்தார். எவை அடங்கிய மந்தை? செம்மறியாடுகள் மந்தை. “சிறுமந்தை”யில் உள்ள ‘செம்மறியாடுகள்’ பரலோக ராஜ்யத்தின் பாகமாக இருப்பர். மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசப்பட்ட நம்பிக்கை இருக்கிறது, ஆயினும் அவர்களையும் இயேசு செம்மாறியாடுகளாகக் கருதுகிறார்.
இதை நாம் யோவான் 10-ம் அதிகாரத்தில் காணலாம். பரலோக வாழ்க்கைக்கு தாம் அழைக்கப்போகும் தம்முடைய அப்போஸ்தலர் போன்ற செம்மறியாடுகளைப் பற்றி பேசியப் பின்னர், வசனம் 16-ல் இயேசு கூறினார்: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் [“மற்ற செம்மறியாடுகளும்,” NW] எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும்.” பூமிக்குரிய நம்பிக்கையைக் கொண்ட மக்களைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்தார் என்பதை யெகோவாவின் சாட்சிகள் வெகுகாலமாகவே அறிந்திருக்கின்றனர். கிறிஸ்தவ சகாப்தத்துக்கும் முன்னர் வாழ்ந்த ஆபிரகாம், சாராள், நோவா, மல்கியா போன்ற அநேக விசுவாசிகள் அத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். எனவே, யோவான் 10:16-ல் உள்ள ‘மற்ற செம்மறியாடுகளின்’ பாகமாக அவர்களை சரியாகவே நாம் சேர்க்கலாம். ஆயிர வருட ஆட்சியின் போது இத்தகைய கிறிஸ்தவ சகாப்தத்துக்கு முற்பட்ட விசுவாசமுள்ள சாட்சிகள் உயிர்த்தெழுப்பப்படுவர், கிறிஸ்து இயேசுவைக் குறித்து கற்றறிந்து அவரை ஏற்றுக்கொள்வர், நல்ல மேய்ப்பனின் ‘மற்ற செம்மறியாடுகள்’ ஆவார்கள்.
பரலோக வகுப்பாருக்கான பொதுவான அழைப்பு முடிவடைந்த பின், இலட்சக்கணக்கானோர் மெய்க் கிறிஸ்தவர்களாக ஆகியிருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். இவர்களும் சரியாகவே ‘மற்ற செம்மறியாடுகள்’ என்று அழைக்கப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் “சிறுமந்தை”யின் பாகமாய் இல்லை. அதற்குமாறாக வேறே ஆடுகள் அனைவரும் இதே பூமியில் பரதீஸில் வாழ்க்கையை வாழ எதிர்நோக்கியுள்ளனர்.
இப்போது, வெளிப்படுத்துதல் 7:9-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘திரள் கூட்டம்’ யார் என்பதைக் குறித்து நாம் என்ன சொல்லலாம்? 13-ஆம் வசனத்தையும் கேள்வியையும் கவனியுங்கள், “இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்?” இதற்கு பதிலை நாம் வெளிப்படுத்துதல் 7:14-ல் காண்கிறோம்: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்.” எனவே, ‘திரள் கூட்டம்’ என்பது உபத்திரவத்தைக் கடந்து, அதிலிருந்து வெளிவரும் அல்லது தப்பிப்பிழைக்கும் ஆட்கள் அடங்கியது. வசனம் 17 சொல்கிறபடி, இவர்கள் பூமியிலுள்ள ‘ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்தப்படுவார்கள்.’
ஆனால், இவர்கள் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால், அதற்கு முன்பே, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளை வெளுத்திருக்க வேண்டும், மெய் வணக்கத்தாராக ஆகியிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது. எனவே, வெளிப்படுத்துதல் 7:9 இந்தக் கூட்டத்தை உபத்திரவத்திற்கு பின்பு உள்ள நிலையில் விவரித்தபோதிலும், நாம் ‘திரள் கூட்டம்’ என்ற இந்தப் பதத்தை, தேசங்கள் பொய்மதங்களைத் தாக்கும்போது வெடித்தெழும் மிகுந்த உபத்திரவத்திற்கு முன்பே, இப்போது கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்துவரும் பூமிக்குரிய நம்பிக்கையுடைய அனைவருக்கும் பொருத்தலாம்.
சுருக்கமாக சொன்னால், ‘மற்ற செம்மறியாடுகள்’ என்பதை, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ள, கடவுளுடைய எல்லா ஊழியர்களையும் உள்ளடக்கும் விரிவான பதமாக நாம் எடுத்துக்கொள்ளலாம். இன்று ‘திரள் கூட்டமாக’ சேர்க்கப்பட்டு மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப் பிழைக்கும் நம்பிக்கையுள்ள மிகவும் சொற்பமான செம்மறியாட்டைப் போன்ற ஆட்கள் கொண்ட தொகுதி அதில் அடங்கியுள்ளது. எனவே உண்மைக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் ‘மற்ற செம்மறியாடுகள்,’ அதேசமயத்தில் ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்தவர்களாயும் இருக்கிறார்கள்.
ஆயினும், இத்திட்டவட்டமான விஷயங்களின் பேரில் தெளிவாய் இருப்பது மிகச் சிறந்தது என்றாலும், கிறிஸ்தவர்கள் அளவுக்கு மீறிய வகையில் வார்த்தை-உணர்வுள்ளவர்களாய் இருக்கத் தேவையில்லை என்பதை மறுபடியும் சொல்வது தகுதியானது. ‘இறுமாப்பு’ உள்ளவர்கள் மற்றும் ‘தர்க்கங்களிலும் வாதங்களிலும்’ ஈடுபடுவோர் ஆகியோரைக்குறித்து பவுல் எச்சரித்தார். (1 தீமோத்தேயு 6:4) தனிப்பட்டவிதமாக நாம் சில பதங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்களைக் கண்டுணர்ந்திருக்கிறோம் என்றால் அது மிகவும் நல்லது. இருப்பினும், பைபிளின் பதங்களை அந்த அளவுக்குத் திருத்தமான அர்த்தத்தில் பயன்படுத்தாத மற்றொருவரைக் குறித்து வெளிப்படையாகவோ அல்லது நம் மனதிலே குற்றம் கண்டுபிடிப்பவர்களாகவோ இருக்கவேண்டிய தேவை இல்லை.