ஞானமான தீர்மானங்களைச் செய்வதில் உதவி
ஆலிஸ் செய்த ஞானமற்ற தீர்மானம் துயரமான நிலைக்கு வழிநடத்தியது. “யெகோவாவிடமிருந்தும் அவருடைய அமைப்பினிடமிருந்தும் தொடர்பினை அறுத்துக்கொண்டேன்” என்று அவள் ஒப்புக்கொள்கிறாள். கடைசியாக அவள் மீண்டும் வந்துவிட்ட போதிலும் அவ்விதமாகச் செய்வதற்கு அவளுக்கு 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது. அவைகளை “துயரமான ஆண்டுகள்” என்று அவள் அழைக்கிறாள்.
ஒரு கிறிஸ்தவன் கடவுளுக்குச் செய்யும் தன்னுடைய ஊழியத்தின் சம்பந்தமாக ஞானமற்றத் தீர்மானங்களைச் செய்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. பொருத்தமான உண்மைகளைச் சிந்தித்தப் பின்பு தவறான தீர்மானங்கள் வேண்டுமென்றே செய்யப்படும் ஒரு காரியமாக இது இல்லை. சில சமயங்களில் வெறுமென இயல்பான உணர்ச்சிகளின் செல்வாக்கின் அடிப்படையில் அவை செய்யப்படுகின்றன. பிரச்னையை மறைப்பதில் உணர்ச்சிகள் வெற்றியடைந்து அபூரணமான இருதயம் சிந்தனா திறமையின்மீது அனாவசியமான செல்வாக்கைச் செலுத்துமேயானால் எல்லா விதமான கேடும் துக்கமும் ஏற்படக்கூடும். ஆம், “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதாக” இருக்கிறது. (எரேமியா 17:9) ஆனால் நம்மைநாமே எவ்விதமாக பாதுகாத்துக்கொள்வது என்பதைப் பற்றி பைபிள் நமக்குச் சொல்கிறது. “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசிக்கும்போது புத்தி உன்னைப் பாதுகாக்கும்” என்று அது சொல்கிறது. (நீதிமொழிகள் 2:10, 11) ஆனால் நாம் ஞானத்தை நம்முடைய இருதயத்துக்குள் பிரவேசிக்கச் செய்வது எப்படி?
கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
இதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் எதிர்படுவது போன்ற அதே விதமான சோதனையான நிலைமைகளை எதிர்பட்ட கடவுளின் பூர்வ கால ஊழியர்களின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். உதாரணமாக, உள்ளூர் கிறிஸ்தவ சபையினுள்ளே காணப்படும் ஒரு நிலைமை உங்களைக் கவலைக்கொள்ளச் செய்வதாக வைத்துக்கொள்வோம். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இதையொத்த ஓர் நிலைமையைப் பற்றி சிந்தித்துப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
கொரிந்துவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன? நீங்கள் கொரிந்து சபையில் ஓர் அங்கத்தினராக இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக ஒரு கிறிஸ்தவனாக இருந்து வருகிறீர்கள். பவுல் அங்கே தங்கியிருந்த அந்த 18 மாத காலத்தின்போது, சத்தியத்தின் அறிவை பெற்றுக்கொண்டது எத்தனை மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது! ஆனால் இப்பொழுது காரியங்கள் மோசமாக இருக்கின்றன.
தனித்தனி பிரிவுகளையும், கட்சிகளையும் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு மனச்சாய்வு சபையில் பிரிவினைகளை உண்டுபண்ணி அதன் ஐக்கியத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. (1 கொரிந்தியர் 1:10, 11) ஒழுக்கங்கெட்ட நடத்தையை கண்டும் காணாமல் இருப்பது அதன் ஆவிக்கு ஆபத்தாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 5:1-5) சபை அங்கத்தினர்களிடையேயுள்ள வழக்குகளைத் தீர்க்க, உலகப் பிரகாரமான நீதிமன்றங்களுக்கு அவர்கள் செல்வது அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது.—1 கொரிந்தியர் 6:1-8.
இன்னும் நீங்கள் பூர்வ கொரிந்துவில்தானே இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். சபையிலுள்ள சிலர் உண்மையில் குறைந்த முக்கியதத்துவமுள்ள காரியங்களின் பேரிலேயே எப்பொழுதும் வாதாடிக் கொண்டிருப்பது உங்களுக்குக் கவலையாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 8:1-13 ஒப்பிடவும்.) நீங்கள் காணும் வாக்குவாதங்கள், பொறாமைகள் கோபங்கள் மற்றும் கலகங்கள் உங்களை வருத்தமடையச் செய்கின்றன. (2 கொரிந்தியர் 12:20) ஆம், கிறிஸ்தவ வாழ்க்கையை அனாவசியமாக மிகவும் கடினமானதாகச் செய்யும் இறுமாப்புள்ள சிலரால் நீங்கள் மனம் குழம்புகிறீர்கள். (1 கொரிந்தியர் 4:6-8) சிலர் அப்போஸ்தலனாகிய பவுலின் ஸ்தானத்தையும் அதிகாரத்தையும் குறித்து சந்தேகமெழுப்பி அநியாயமாக அவன் பேரில் குற்றஞ்சுமத்தி, ஒரு பேச்சாளனாக அவனுக்கு பேச்சுத் திறமை இல்லை என்பதாக ஏளனம் செய்வதைக் கேட்பது உங்களுக்கு வேதனையாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 10:10; 12:16) தனிப்பட்ட கருத்துக்களைப் பகிரங்கமாக பரப்புகிறவர்கள் அடிப்படை கோட்பாட்டில் சபையின் விசுவாசத்தை அழித்துவிடுவார்களோ என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.—1 கொரிந்தியர் 15:12.
ஒரு தீர்மானத்தை எதிர்படுகையில்
‘இது நிச்சயமாகவே இப்படி இருக்கக்கூடாது’ என்று நீங்கள் பெருமூச்சுவிடுகிறீர்கள். ‘மூப்பர்கள் ஏன் காரியங்களைச் சரி செய்யக்கூடாது? ஏதோ ஒன்று மிக பயங்கரமான தவறாக இருக்கிறது
கொரிந்துவிலுள்ள சபையை விட்டு வெளியேறி கடவுளை வேறிடத்தில் சேவிப்பதே உங்களுக்கு மேலானதாக இருக்கும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடுவீர்களா? அல்லது மொத்தமாக உடன் கிறிஸ்தவர்களோடு கூட்டுறவு கொள்வதையே நிறுத்திக்கொள்வது சிறந்ததாக இருக்கும் என்பதாகவும்கூட நீங்கள் ஒருவேளை தீர்மானித்துவிடுவீர்களா? இந்தப் பிரச்னைகள் உங்கள் சந்தோஷத்தையும், யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவுமே காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள் என்ற உங்கள் நம்பிக்கையையும் குறைத்துவிட அனுமதிப்பீர்களா? குறை கண்டுபிடிக்கிற முணுமுணுக்கும் ஆவியை நீங்கள் வளர்த்துக்கொண்டு, உடன் கிறிஸ்தவர்களின் உள்ளெண்ணங்களைக் குறித்து சந்தேகங்களை எழுப்பப் போகிறீர்களா? அக்கறை காண்பிக்கும் ஆட்களை இப்படிப்பட்ட ஒரு சபையினிடமாக வழிநடத்துவதில் அர்த்தமில்லை என்பதாக முடிவு செய்து பிரசங்க வேலையில் நீங்கள் சோர்வடைந்துவிடுவீர்களா?
இன்றைய சாதகமான நிலையிலிருந்து, நிலைமையை நடுநிலை உணர்வுடன் நோக்குகையில், அதன் அபூரணங்களின் மத்தியிலும் கடவுளுடைய சபையில் உண்மையோடு நெருங்கி நிலைத்திருக்கவே நீங்கள் தீர்மானித்திருப்பீர்கள் என்று சொல்வது எளிதாக இருப்பதை நீங்கள் காணக்கூடும். ஆனால் அதே விதமான நிலைமையை இன்று எதிர்படுகையில், நீங்கள் தெளிந்த மனதையும் அமைதியான இருதயத்தையும் காத்துக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பீர்களா? அப்போது நீங்கள் வாழ்ந்திருந்தால், நீங்கள் என்ன தீர்மானித்திருப்பீர்கள் என்பதாக நினைக்கிறீர்களோ அதையே இன்று நீங்கள் தீர்மானிப்பீர்களா?
ஞானமான புத்திமதியிலிருந்து பயனடைதல்
ஞானமான தீர்மானம் செய்த கொரிந்திய கிறிஸ்தவர்கள் சபையோடு நெருங்கி நிலைத்திருந்தவர்களாக இருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பாக பேதுரு உணர்ந்த விதமாகவே அவர்கள் உணர்ந்தார்கள். சீஷர்களில் சிலர் இயேசுவை விட்டுபோய்விட்டபோது, பேதுரு சொன்னான்: “ஆண்டவரே யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.” (யோவான் 6:68, 69) நிச்சயமாகவே கடவுளுடைய அமைப்போடுகூட நெருங்கி இருப்பதன் மூலமாக மட்டுமே அதனுடைய புத்திமதிகளிலிருந்து நன்மையடையலாம்.
கொரிந்துவிலிருந்தது போன்ற புதிய சபைகளில், மனித அபூரணத்தின் காரணமாக கடுமையான புத்திமதியைக் கொடுப்பதைத் தேவைப்படுத்தும் ஒரு பிரச்னை உண்டாவது அசாதாரணமானதில்லை. ஆனால் கொரிந்திய கிறிஸ்தவர்களுக்குப் புத்திமதியைக் கொடுக்கையில், மொத்தத்தில் அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் “பிரியமானவர்”களாகவே இருந்தார்கள் என்பதை பவுல் நினைவுகூர்ந்தான். (1 கொரிந்தியர் 10:14; 2 கொரிந்தியர் 7:1; 12:19) யெகோவா தம்முடைய அறிவுரைகளுக்குச் செவி கொடுக்கிறவர்களுக்குத் தகுதியற்ற தயவையும் மன்னிப்பையும் அருளுகிறார் என்பதை அவன் மறந்துவிடவில்லை.—சங்கீதம் 130:3, 4.
கிறிஸ்தவ சபைக்குள் எல்லா விதமான ஆட்களும் கவர்ந்திழுக்கப்படுவதன் காரணமாக, இந்த அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க சிலர் மற்றவர்களைக் காட்டிலும் நீண்ட காலம் எடுக்கின்றனர். இது பல்வேறுபட்ட காரணங்களுக்காக உண்மையாக இருக்கிறது. சில மாற்றங்கள், மற்றவைகளைவிட செய்வதற்கு அதிக கடினமானவையாக இருக்கின்றன. மேலுமாக ஒவ்வொரு நபரும் சரீர அமைப்பிலும் மனதின் அமைப்பிலும், சூழ்நிலைமையிலும் பின்னணியிலும் வித்தியாசப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அளவுக்கு அதிகமாக குறை கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதும் “அன்பு திரளான பாவங்களை மூடும்” என்பதை நினைவு கூறுவதும் எவ்வளவு ஞானமுள்ளதாக இருக்கிறது! (1 பேதுரு 4:8) எப்படியும், யெகோவாவும் அவருடைய குமாரனும் தங்களுடைய சபையில் மனித அபூரணத்தையும் முதிர்ச்சியின்மையையும் பொறுத்துக்கொள்ள மனமுள்ளவர்களாக இருப்பார்களேயானால், அதே ஆவியை நாமும்கூட காண்பிக்க வேண்டாமா?—1 கொரிந்தியர் 13:4-8; எபேசியர் 4:1, 2.
பவுலின் அன்பான ஆனால் உறுதியான புத்திமதியைக் கேட்டுக்கொண்டு பூர்வ கொரிந்துவிலிருந்த சபையில் நீங்கள் இருந்திருந்தால், கிறிஸ்தவ சபையின் தலைவராக கிறிஸ்து அதன் நலனில் மிகவும் அக்கறையுள்ளவராய் இருப்பதைக் குறித்து நீங்கள் நினைப்பூட்டப்பட்டிருப்பீர்கள். (மத்தேயு 28:20) தம்மைப் பின்பற்றுகிறவர்கள் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலமாக அளிக்கப்படும் உதவியை ஏற்று வருகையில் அவர்களை ஐக்கியமாக காத்துக்கொள்வதாக இயேசு அளித்திருந்த வாக்கில் உங்களுடைய நம்பிக்கையை அது கட்டியெழுப்பியிருக்கும். (மத்தேயு 24:45-47; எபேசியர் 4:11-16) ஆம் சோதனையான சூழ்நிலைமைகளின் கீழும்கூட, பவுலின் வார்த்தைகள் சந்தோஷத்தையும் திட மனதையும் காத்துக்கொள்ள உங்களுக்கு உதவி செய்திருக்கும். கடவுள் தற்காலிகமாக அனுமதிக்கக்கூடிய எந்தக் கஷ்டத்தையும் சமாளிப்பதற்கு அவர் உங்களுக்குப் பெலத்தைக் கொடுப்பார் என்பதில் நீங்கள் நம்பிக்கையாயிருந்திருப்பீர்கள்.
மோசமான நிலைமை சபையில் ஏற்படுமேயானால் கிறிஸ்தவன் அதைக் குறித்து ஒன்றும் செய்யக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்தாது. கொரிந்துவில், ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயு இன்னும் குலோவேயாளின் வீட்டார் போன்ற முதிர்ச்சியுள்ள மனிதர்கள் செயல்பட்டார்கள். அவர்கள் இந்நிலைமையைக் குறித்து பவுலுக்குத் தெரியப்படுத்தினார்கள். (1 கொரிந்தியர் 1:11; 5:1; 16:17) ஆனால் அவ்விதமாக செய்த பிறகு அவர்கள் நம்பிக்கையோடு காரியங்களை அவனுடைய கைகளில் விட்டுவிட்டார்கள். நீதிக்காக வைராக்கியமுள்ளவர்களாய் இருந்தபடியால் அவர்கள் கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்தில் நம்பிக்கையிழந்துவிடவோ அல்லது “யெகோவாவுக்கு விரோதமாய்த் தாங்கலடையவோ” இல்லை.—நீதிமொழிகள் 19:3.
நீதிக்கான வைராக்கியமானது, இன்று நற்செய்தியை பிரசங்கிக்கும்படியாக கடவுள் கொடுத்திருக்கும் வேலையில் சோர்வடைந்துவிடுவதைத் தெரிந்துகொள்ள எண்ணிப் பார்க்கவும்கூட அனுமதிக்காது. அவ்விதமாகச் செய்வது, மற்றவர்களின் நலனில் அக்கறையின்மையை காண்பிப்பதாகவும், கிறிஸ்து நாம் செய்யும்படியாக விரும்புவதைச் செய்ய தவறுவதாகவும் இருக்கும். “எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் காத்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” என்று பவுல் புத்திமதி கூறினான்.—1 கொரிந்தியர் 15:58.
சாத்தானுடைய தந்திரங்களை அறியாதவர்களாயிராதீர்கள்
கொரிந்துவிலிருந்தது போன்ற, சபையின் பிரச்னைகள் சில சமயங்களில் நேரடியான துன்புறுத்தலைவிட கையாளுவதற்கு அதிக கடினமானவையாக இருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலைமைகளில் சாத்தான், யெகோவாவிடமிருந்து நம்மை விலகிச்செல்லச் செய்யும் தவறான தீர்மானங்களைச் செய்யும்படியாகச் செய்து இவைகளை அவனுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள அவன் பயன்படுத்திக்கொள்கிறான். ஆனால், ‘அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே’.—2 கொரிந்தியர் 2:11.
கடவுளின் பூர்வ கால ஊழியர்களின் பதிவை ஆராய்வதன் மூலம் கொரிந்திய கிறிஸ்தவர்கள் பயனடையலாம் என்பதாக பவுல் அவர்களுக்குச் சொன்னான்: “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது” என்பதாக இஸ்ரவேலரைக் குறித்து அவன் சொன்னான். “உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.“ (1 கொரிந்தியர் 10:11) அதே விதமாகவே நாம் இன்று பூர்வ கிறிஸ்தவ பதிவுகளைக் கவனமாக ஆராய்வதிலிருந்து இன்று பயனடையலாம். உதாரணமாக கொரிந்துவில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்கலாம். அப்பொழுது நாம் எவ்விதமாக சரியான தீர்மானங்களைச் செய்திருப்போம் என்பதாக தியானிப்பது, இப்பொழுது தீர்மானங்களைச் செய்வதை தவிர்ப்பதற்கு நமக்கு உதவி செய்யும்.
“துயரமான பதிமூன்று ஆண்டுகள்” ராஜ்ய மன்றத்துக்கு வராமல் இருந்துவிட்டு, பின்னால் ஆலிஸ் ராஜ்ய மன்றத்தில் ஆஜரான முதல் கூட்டத்தைப் பற்றி பின்வருமாறு சொல்கிறாள்: “நான் வாயை திறந்தால் அழுதுவிடுவேனோ என்ற பயத்தில் பேசாமலே இருந்தேன். என் வீட்டில்—உண்மையில் என் சொந்த வீட்டிலிருப்பதுபோல உணர்ந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.” ஆகவே எழக்கூடிய பிரச்னைகளின் மத்தியிலும் ஒருபோதும் யெகோவாவின் அமைப்பை விட்டு விலகிவிடக்கூடாது என்ற உங்கள் ஞானமான தீர்மானத்தில் உறுதியாயிருங்கள்! கடவுளுடைய ஜனங்களின் கூட்டுறவில் உங்கள் ஆசீர்வாதங்கள் அநேகமாயிருக்கும். அவைகளுக்கு முடிவிராது.—நீதிமொழிகள் 2:10-15, 20, 21. (w87 5/15)