“இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம்பண்ணுங்கள்”
கொரிந்து சபையில் எல்லா காரியங்களும் திருப்திகரமாய் இருக்கவில்லை. அங்கே அதிர்ச்சியூட்டும் ஒழுக்கக்கேடு சம்பவமும், சகோதரர்கள் மத்தியில் உட்கட்சிகளும் இருந்தன. சிலர் வினைமையான தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்பட்டனர் அல்லது பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகளை கொண்டிருந்தனர். சில சகோதரர்கள் ஒருவரையொருவர் நீதிமன்றத்துக்கு கூட்டிச் சென்றனர்; மற்றவர்கள் உயிர்த்தெழுதலையும்கூட ஏற்க மறுத்துவிட்டனர்.
அலட்சியம் செய்யமுடியாத முக்கியமான கேள்விகளும்கூட எழும்பின. மதசம்பந்தமாக பிளவுற்றிருக்கும் குடும்பங்களில் வாழ்வோர் தங்கள் அவிசுவாசியான துணைவர்களோடுகூட வாழ வேண்டுமா அல்லது அவர்களை விட்டுப் பிரிந்துசெல்ல வேண்டுமா? சபையில் சகோதரிகளுடைய ஏற்றுக்கொள்ளத்தக்க பங்கு என்னவாயிருந்தது? விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சியைப் புசிப்பது பொருத்தமானதா? கூட்டங்கள் எவ்வாறு—கர்த்தருடைய இராப்போஜனம் உட்பட—நடத்தப்பட வேண்டும்?—1 கொரிந்தியர் 1:12; 5:1; 6:1; 7:1-3, 12, 13; 8:1; 11:18, 23-26; 14:26-35.
அப்படிப்பட்ட குழப்பமான ஆவிக்குரிய சூழலில் இருந்த சகோதரர்களின் நலனைக் குறித்து கவலையடைந்தவர்களாய், அகாயுக்கு, பொர்த்துனாத்து, ஸ்தேவான் ஆகியோர் எபேசுவிலிருந்த அப்போஸ்தலனாகிய பவுலை சந்திக்கப் புறப்பட்டனர். இப்படிப்பட்ட கவலைக்குரிய செய்திகளை எடுத்துச்சென்றதோடுகூட, இப்பிரச்சினைகளின் பேரிலிருந்த கேள்விகள் அடங்கிய ஒரு கடிதத்தை அவர்கள் சபையிலிருந்து பவுலுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். (1 கொரிந்தியர் 7:1; 16:17) கிடைக்கக்கூடிய அத்தாட்சியின் அடிப்படையில், இந்த மூன்று சகோதரர்கள் மட்டுமே அந்தச் சூழ்நிலையைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டில்லை. உண்மையில், சபை அங்கத்தினர்கள் மத்தியில் வாக்குவாதங்கள் இருந்தன என்ற செய்தியை ‘குலோவேயாளின் வீட்டாரிடமிருந்து’ பவுல் ஏற்கெனவே பெற்றுக்கொண்டிருந்தார். (1 கொரிந்தியர் 1:11) சந்தேகத்துக்கு இடமின்றி, சூழ்நிலையைக் குறித்து தெளிவாக புரிந்துகொள்ளவும், என்ன புத்திமதி அளிப்பது என்பதை தீர்மானிக்கவும், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதையும் இந்த மூன்று சகோதரர்களின் அறிக்கையைப் பெற்றுக்கொண்டது பவுலுக்கு உதவியது. கடவுளுடைய பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட ஒன்று கொரிந்தியர் என்று இப்போது நாம் அறிந்திருக்கும் கடிதம் பவுலின் பதிலாய் இருப்பதாகத் தோன்றுகிறது. அகாயுக்கு, பொர்த்துனாத்து, ஸ்தேவான் ஆகியோர் இந்தக் கடிதத்தை கொடுத்தவர்களாக இருக்கலாம்.
அகாயுக்கு, பொர்த்துனாத்து, ஸ்தேவான் என்பவர்கள் யார்? அவர்களைக் குறித்து வேதாகமம் சொல்வதை படிப்பதன் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஸ்தேவானின் வீட்டார்
சுமார் பொ.ச. 50-ஆம் ஆண்டில், அகாயா, ரோம மாகாணம், தென் கிரீஸில், ஸ்தேவானின் வீட்டார் பவுலுடைய ஊழியத்தின் “முதற்பலனாக” இருந்தார்கள், அவர்களுக்கு பவுலே முழுக்காட்டுதல் கொடுத்திருந்தார். பவுல் அக்குடும்பத்தாரை நல்ல முன்மாதிரிகளாகவும், கொரிந்தியர்களுக்கு முதிர்ச்சிவாய்ந்த நிலைப்படுத்தும் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் கருதினார். அவர்கள் சபையின் சார்பாக எடுத்த நடவடிக்கைகளைக் குறித்து அவர்களை அவர் அன்பாக புகழ்ந்து பேசினார்: “சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்கிறேன்.” (1 கொரிந்தியர் 1:16; 16:15, 16) ஸ்தேவானின் ‘வீட்டாரில்’ யார் அடங்கியிருந்தனர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டில்லை. இந்தச் சொற்றொடர் வெறுமனே குடும்ப அங்கத்தினர்களை அர்த்தப்படுத்தக்கூடும், அதில் அடிமைகள் அல்லது வேலையாட்களும்கூட அடங்கியிருக்கலாம். அகாயுக்கு என்ற பெயர் அடிமைக்குக் கொடுக்கப்பட்ட ஒரு லத்தீன் பெயராகவும், பொர்த்துனாத்து என்ற பெயர் விடுதலை பெற்றவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பெயராகவும் இருந்தபடியால், அந்த இரண்டு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களாக ஒருவேளை இருந்திருக்கக்கூடும் என்று சில கருத்துரையாளர்கள் ஊகிக்கின்றனர்.
எப்படியிருப்பினும், பவுல் ஸ்தேவானின் குடும்பத்தை முன்மாதிரியான குடும்பமாக கருதினார். அக்குடும்ப அங்கத்தினர்கள், ‘பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருந்தார்கள்.’ சபையின் நன்மைக்கென்று செய்வதற்கு வேலை உள்ளது என்பதை அவர்கள் கண்டுணர்ந்து, இந்தச் சேவையைத் தனிப்பட்ட பொறுப்பாக மனமுவந்து ஏற்றுக்கொண்டிருந்தனர். பரிசுத்தவான்களுக்கு அப்படிப்பட்ட சேவையை அளிக்க முன்வரும் அவர்களுடைய விருப்பம், தார்மீக ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற தகுதியுள்ளதாயிருக்கிறது.
“அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்”
கொரிந்துவில் இருந்த நிலைமையைக் குறித்து பவுல் கவலைப்பட்டபோதிலும், இந்த மூன்று செய்தியாளர்கள் வந்து சேர்ந்தது அவருக்கு ஊக்கமூட்டுவதாய் இருந்தது. பவுல் சொல்கிறார்: “ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்.” (1 கொரிந்தியர் 16:17, 18) கொரிந்துவில் இருந்த நிலைமையை சிந்திக்கையில், கொரிந்தியர்களிடமிருந்து சரீரப்பிரகாரமாக பிரிந்திருந்தது பவுலுக்கு ஒருவேளை கவலை தருவதாய் இருந்திருக்கலாம், ஆனால் இப்போது அவர்களுடைய பிரதிநிதிகள் வந்திருந்தது முழு சபையும் இல்லாமல் இருந்ததை சரியீடு செய்தது. அவர்களுடைய அறிக்கை பவுலுக்கு அந்தச் சூழ்நிலையைக் குறித்து முழு தகவலையும் அளித்து, அவருடைய பயங்கள் சிலவற்றையாவது போக்கியது. அவர் நினைத்தபடி விஷயங்கள் அவ்வளவு மோசமாயில்லை.
பவுலின்படி, மூன்று செய்தியாளர்களின் குறிக்கோளும் அவருடைய ஆவியை புதுப்பித்ததோடல்லாமல் கொரிந்து சபையின் ஆவியையும்கூட மேம்படுத்தியது. சூழ்நிலையின் ஒவ்வொரு அம்சத்தையும் தெளிவாக பவுலிடம் விளக்கி, அவருடைய புத்திமதியோடு அவர்களுடைய பிரதிநிதிகள் திரும்பி வருவார்கள் என்பதை அறிந்திருந்தது கொரிந்து சபைக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது.
ஆகையால் ஸ்தேவானும் அவருடைய இரண்டு தோழர்களும் கொரிந்தியர்கள் சார்பாக செய்த சேவைக்காக அன்பாக பாராட்டப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்தபிறகு, பிளவுபட்டிருக்கும் கொரிந்து சபையில் தலைமையேற்று நடத்த வேண்டும் என்ற அளவுக்கு பவுலுக்கு இந்த மனிதர்கள்மீது போற்றுதல் இருந்தது. அப்போஸ்தலன் சகோதரர்களை இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். . . . இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம்பண்ணுங்கள்.” (1 கொரிந்தியர் 16:16, 18) சபைக்குள் இறுக்கமான நிலைமைகள் இருந்தபோதிலும், இப்படிப்பட்ட பலமான சிபாரிசுகள் இந்த மனிதர்களுடைய முழுமையான உண்மைப்பற்றுறுதியை தெளிவாகக் காண்பிக்கின்றன. அப்படிப்பட்ட மனிதரை மதிப்புமிக்கவராய் எண்ண வேண்டும்.—பிலிப்பியர் 2:29.
உண்மையான ஒத்துழைப்பு மிகச் சிறந்த விளைவுகளை உண்டுபண்ணுகிறது
யெகோவாவின் அமைப்போடும் அதன் பிரதிநிதிகளோடும் நெருங்கி ஒத்துழைப்பது மிகச் சிறந்த விளைவுகளை உண்டுபண்ணுகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முதல் கடிதத்தை எழுதி முடித்தவுடனேயே, இரண்டு கொரிந்தியர் என்று இப்போது அறியப்படும் கடிதத்தை பவுல் எழுதியபோது, சபையில் காரியங்கள் ஏற்கெனவே மேம்பட்டுக்கொண்டிருந்தன. ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு போன்ற சகோதரர்கள் பொறுமையோடு தொடர்ந்து செய்த வேலையோடுகூட தீத்துவின் விஜயமும் நல்ல பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.—2 கொரிந்தியர் 7:8-15; ஒப்பிடுக: அப்போஸ்தலர் 16:4, 5.
வேதாகமத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உண்மையுள்ள மனிதரைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் யெகோவாவின் ஜனங்களுடைய நவீன-நாளைய சபைகளின் அங்கத்தினர்கள் பயனடையலாம். உதாரணமாக, உள்ளூர் சபைக்குள் தொடர்ந்து நிலவும் சூழ்நிலை ஏதாவது காரணத்துக்காக உடனடியாக தீர்க்கப்படாததாகவும் சகோதரர்களுக்கு கவலை உண்டாக்குவதாகவும் வைத்துக்கொள்வோம். என்ன செய்யப்பட வேண்டும்? அந்நிலையைக் குறித்து ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் பவுலிடம் தாங்கள் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து பின்வாங்காமல், பின்பு விஷயங்களை யெகோவாவின் கைகளில் நம்பிக்கையோடு விட்டுவிட்டனர். அதைப் பார்த்து பின்பற்றுங்கள். நீதியின் பேரில் அவர்களுக்கிருந்த வைராக்கியம், தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும்படியோ அல்லது ‘யெகோவாவுக்கு விரோதமாய் தாங்கலடையும்படியோ’ அவர்களை எவ்விதத்திலும் செய்விக்கவில்லை.—நீதிமொழிகள் 19:3, NW.
சபைகள் இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவை, கொரிந்துவில் நடந்தது போல, அவர்களுடைய ஆவிக்குரிய நலனுக்கும் சமாதானத்துக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய எந்தப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அவருக்குப் பொருத்தமான சமயத்திலே அவர் செயல்படுவார். (எபேசியர் 1:22; வெளிப்படுத்துதல் 1:12, 13, 20; 2:1-4) அதற்கிடையில், ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் வைத்த முன்மாதிரியை நாம் பின்பற்றி, நம் சகோதரர்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து உழைத்தோமென்றால், நாமும்கூட சபையின் ஏற்பாட்டை உண்மைத்தன்மையோடு ஆதரிப்போம், நம் சகோதரர்களை கட்டியெழுப்பி, ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவுவோம்.’—எபிரெயர் 10:24, 25.