ஆவியுலகத் தொடர்பு இதைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்?
“ஒரே காரியங்களை விரும்புவதும் வெறுப்பதுமே உறுதியான நட்பை உண்டாக்குகிறது” என்பதாக ரோம சரித்திராசிரியர் சாலஸ்ட் சொல்லியிருக்கிறார். ஆம், நண்பர் என்பவர் பெரும்பாலும் ஒரே விஷயங்களின் பேரில் அக்கறையுடைய ஒரு நபராக, நம்பத்தக்க ஒரு நபராக இருக்கிறார். அதே விதமாகவே, கடவுள் விரும்புகிறதை விரும்பி அவர் வெறுக்கிறதை நாம் வெறுப்போமேயானால் அவர் நம்மை நண்பர்களாக கருதி அவரிடமாக நெருங்கிவர நம்மை அனுமதிக்கிறார். அப்படியென்றால் அன்பு, சமாதானம், தயவு, நற்குணம் போன்ற கடவுளின் குணாதிசயங்களினால் நாம் கவரப்பட்டு, இந்தப் பண்புகளை நம்முடைய வாழ்க்கையில் பின்பற்ற ஊக்கமாக முயற்சிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது.—கலாத்தியர் 5:22, 23.
ஆவியுலகத்தோடு தொடர்புகொள்வதை கடவுள் அங்கீகரிக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க, முதலாவதாக அதனுடைய கனிகளை நாம் ஆராயலாம். (மத்தேயு 7:17, 18) விரும்பத்தக்க தெய்வீக குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ள இது நமக்கு உதவி செய்கிறதா? இதைக் கண்டுபிடிக்க, இரண்டு உண்மையான வாழ்க்கை அனுபவங்களை நாம் பார்க்கலாம்.
குறி சொல்லுதலும், அலைக்கழிக்கப்படுதலும், மரணமும்
சூரினாமில் நடுத்தர வயதிலுள்ள அஸமாஜா அமீலா ஆவியுலகத்தோடு தொடர்புகொள்ளும் ஒரு வகையான குறி சொல்லுதலில் முதல் முறையாக ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தபோது அவளுக்கு வயது 17. அவள் முன்னுரைத்தவை உண்மையாக நடந்ததாலும், அவளிடம் விசாரிக்க வந்தவர்கள் அவளுடைய ஆலோசனையிலிருந்து நன்மையடைந்ததாலும், அவளுடைய சமுதாயத்தில் அவள் உயர்வாக மதிக்கப்பட்டு வந்தாள். (அப்போஸ்தலர் 16:16 ஒப்பிடவும்.) ஆனால் ஒரு காரியம் அவளை தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
“என் மூலமாக பேசிய ஆவிகள் அவைகளின் உதவியை நாடியவர்களிடமாக தயவாக நடந்துகொண்டன” என்று அவள் சொல்கிறாள். “ஆனால் அதே சமயத்தில் அவை என்னுடைய வாழ்க்கையை வேதனை நிறைந்ததாக ஆக்கின. ஒவ்வொரு முறையும் ஆவியோடு பேசிய பின்பு, நான் அடிக்கப்பட்டதுபோல உணர்ந்தேன். என்னால் அசையவே முடியவில்லை. இரவு பொழுது வரும்போது கொஞ்சம் ஓய்வெடுக்கலாமா என்று எனக்கிருக்கும். ஆனால் ஆவிகள் என்னை தனியே இருக்க விடுவதில்லை. அவை எப்பொழுதும் பேசிக்கொண்டும் என்னைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்து கொண்டுமிருந்தன. அவை பேசிய காரியங்கள்!” அவள் பெருமூச்சு விட்டு கீழே பார்த்து அருவருப்போடு தலையை அசைக்கிறாள். “பாலுறவு பற்றி பேசுவது அவைகளுக்கு மிகவும் விருப்பமான விஷயம். அவற்றோடு உடலுறவுக்கொள்ள அவை என்னை வற்புறுத்தின. எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. நான் ஏற்கெனவே விவாகமானவள். நான் துரோகம் செய்ய விரும்பவில்லை என்று அவைகளிடம் சொன்னேன். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு சமயம் காணக்கூடாத ஒரு சக்தி என்னை மேற்கொண்டு, என்னைத் தொட்டு என் உடலை அப்படியே கசக்கி என்னை கடித்தும்கூட விட்டது. நான் மிகவும் நிலைகுலைந்து போனேன்.”
“ஆவிகள் ஒழுக்கங்கெட்ட நடத்தையை ஊக்குவிக்கின்றனவா? இருக்க முடியாது!” என்று நீங்கள் ஆச்சரியமாகச் சொல்லக்கூடும். அந்த ஆவிகள் உண்மையில் அத்தனை கீழ்த்தரமானவையா?
“அதைவிட மிக மோசமானவை!” என்று முன்னால் குறிப்பிடப்பட்ட இசாக் சொல்கிறார். “ஒரு நாளிரவு ஒரு ஆவியால் தொந்தரவு செய்யப்பட்டு வந்த நோயாளியான ஒரு பெண்மணிக்கு உதவிசெய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம். பலமுள்ள ஒரு ஆவியின் மத்தியஸ்தராக இருந்த இந்தத் தொகுதியின் தலைவர் ஆவியை துரத்திவிட முயற்சி செய்தார். ஒரு நாள் முழுவதுமாக அவருடைய ஆவியின் உதவிக்காக நாங்கள் மன்றாடினோம். கூத்தாடி நாங்கள் முரசு அடித்தோம். படிப்படியாக அவளில் முன்னேற்றம் காணப்பட்டது. அவர் அந்த ஆவியை வெளியேறும்படி கட்டளையிட்டார். அது வெளியேறியது. ‘நாம் வெற்றி பெற்றுவிட்டோம்’ என்பதாக தலைவர் மகிழ்ச்சியுடன் கூறினார். பின்னர் நாங்கள் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தோம்.”
சைகைக் காட்டிக் கொண்டிருந்த இசாக்கின் கைகள் அசையாதிருந்தன. அவர் சற்றே அமைதியாக இருந்துவிட்டு பின்னர் தொடர்ந்து சொன்னதாவது: “கொஞ்ச நேரம் எல்லாம் அமைதியாக இருந்தது. ஆனால் திடீரென்று வந்த ஒரு அலறல் சத்தம் அமைதியைக் கலைத்தது. அந்த அலறல் சத்தம் வந்த வீட்டை நோக்கி ஓடினோம். அங்கே தலைவரின் மனைவி உணர்ச்சி வயப்பட்டு அழுது கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். வீட்டின் உள்ளே அவளுடைய சிறிய மகளின் தலை பின்புறமாக திருப்பப்பட்டிருந்ததை நாங்கள் பார்த்தோம்! ஏதோ ஒரு சக்தி அவளுடைய கழுத்தை நெரித்து கோழிக்குஞ்சை சாகடிப்பதுபோல சாகடித்திருந்தது—வெளியேற்றப்பட்ட ஆவி இப்படி பழிவாங்கியிருக்க வேண்டும் போல் தெரிகிறது. அருவருப்பாக இருக்கிறது! அந்த ஆவிகள் வெறிகொண்ட கொலைபாதகர்கள்.”
ஆவியுலகத் தொடர்பும் “மாம்சத்தின் கிரியைகளும்”
ஆவியுலகத் தொடர்பின் சம்பந்தமான இந்த இரண்டு அனுபவங்களில் காணப்பட்ட அசுத்தம், ஒழுக்கக்கேடு மற்றும் கொலை ஆகியவை கடவுளுடைய ஆளுமைக்கு நேர் விரோதமான குணங்களாக இருக்கின்றன. அந்த ஆவிகள் உண்மையில் என்னவாக இருக்கின்றன என்பதை அடையாளங் கண்டுகொள்ள இது உதவுகிறது. கடவுளின் தூதுவர்கள்போல் அவை பாசாங்கு செய்யக்கூடும். ஆனால் அவைகளின் ஒழுக்கங்கெட்ட கொலைபாதகச் செயல்கள், கடவுளின் சத்துருவும் சரித்திரத்தின் முதல் கொலைகாரனுமாகிய பிசாசாகிய சாத்தானை பின்பற்றும் ஆவிகளென அவைகளை காட்டிக் கொடுக்கின்றன. (யோவான் 8:44) அவனே அவைகளின் தலைவனாக இருக்கிறான். அவை அவனுடைய உதவியாளர்களாகிய பொல்லாத தூதர்கள் அல்லது பேய்களாக இருக்கின்றன.—லூக்கா 11:15-20.
ஆனால் நீங்கள் இவ்விதமாக கேட்கக்கூடும்: ‘இந்த சாத்தானிய குணங்கள் ஆவி உலகத்தோடு தொடர்பு கொள்ளும்போது எப்போதாவது மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றனவா? ஆவியுலகத் தொடர்பு பொதுவாக நல்ல ஆவிகளோடு தொடர்பு கொள்ளவும் இதன் மூலமாக கடவுளிடமாக நெருங்கி வரவும் உதவக்கூடுமா?’ இல்லை. கிறிஸ்தவ குணங்களுக்கு நேர் எதிர்மாறாக இருக்கும் “மாம்சத்தின் கிரியைகளின் பட்டியலில்தானே “பில்லி சூனியம்” [ஆவியுலகத் தொடர்பு, NW] இடம் பெறுகிறது.—கலாத்தியர் 5:19-21.
வெளிப்படுத்தின விசேஷம் 21:8-ல் “சூனியக்காரர்” (பேய்களோடு பேசுபவர்கள், The Living Bible) “அவிசுவாசிகள், அருவருப்பானவர்கள், கொலைப்பாதகர், விபசாரக்காரர், விக்கிரகாராதனைக்காரர், பொய்யர்” ஆகியோரின் அதே தொகுதியில் சேர்க்கப்படுகிறார்கள். மனமார பொய் சொல்பவர்களை, விபச்சாரக்காரரை கொலைப் பாதகரை மற்றும் ஆவுயுலகத்தோடு தொடர்பு கொள்பவர்களை யெகோவா எவ்விதமாக கருதுகிறார்? அவர்களுடைய செயல்களை அவர் வெறுக்கிறார்!—நீதிமொழிகள் 6:16-19.
ஆவியுலகத்தை ஆராய்வது, யெகோவா தேவன் வெறுக்கின்றவற்றை நேசிப்பதற்கு சமமாக இருக்கிறது. அது யெகோவாவை வேண்டாமென தள்ளிவிட்டு சாத்தானுடைய கூடாரத்துக்குள் இருந்துகொண்டு கடவுளின் பிரதான எதிரியையும் அவனுடைய உதவியாளர்களையும் ஆதரிப்பதுபோல இருக்கிறது. இப்பொழுது இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்: உங்கள் விரோதிகளின் பக்கமாக இருக்கும் ஒரு நபரோடு நெருங்கிப் பழக நீங்கள் விரும்புவீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள். மாறாக, அந்த நபரிடம் எதையும் வைத்துக்கொள்ள நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அப்படியென்றால், யெகோவா தேவனிடமிருந்தும் அதே பிரதிபலிப்பையே நாம் எதிர்பார்க்கலாம். நீதிமொழிகள் 15:29 சொல்வதாவது: “துன்மார்க்கருக்கு யெகோவா தூரமாயிருக்கிறார்.”—சங்கீதம் 5:4-ஐயும் பார்க்கவும்.
ஆவியுலகத் தொடர்பு மரணத்துக்கு வழிநடத்துகிறது
ஆவியுலகத்தோடு தொடர்பு கொண்டு விளையாடுவது உயிருக்கு ஆபத்தாகவும்கூட இருக்கிறது. பூர்வ இஸ்ரவேலில் கடவுளுடைய ஜனங்களின் மத்தியில் இது மரணத் தண்டனைக்கு பாத்திரமானதாக கருதப்பட்டது. (லேவியராகமம் 20:27; உபாகமம் 18:9-12) ஆகவே ஆவியுலகத்தோடு தொடர்பு கொள்கிறவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. (கலாத்தியர் 5:20, 21) மாறாக அவர்கள் “இரண்டாம் மரணம்” அல்லது நித்திய அழிவைக் குறிக்கும் “அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.” (வெளிப்படுத்தின விசேஷம் 21:8) உண்மைதான், இன்று கிறிஸ்தவ மண்டலத்தின் சில சர்ச்சுகள் ஆவியுலகத்தோடு தொடர்பு கொள்வதை சகித்துக்கொள்ளலாம். ஆனால் பைபிளின் நோக்குநிலை இன்னும் மாறிவிடவில்லை.
ஆவியுலகத் தொடர்புக்கு வழிநடத்திச் செல்லும் பாதையில் நீங்கள் ஏற்கெனவே முதல் படியை எடுத்து வைத்திருந்தால் என்ன செய்வது? அப்படியென்றால், உடனடியாக நின்று திரும்பி வருவது உங்களுக்கு நலமானதாக இருக்கும். கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா தேவ ஆவியால் ஏவப்பட்டு பூர்வ இஸ்ரவேலருக்குக் கொடுத்த புத்திமதியைப் பின்பற்றுங்கள். இன்று அசுத்தமான பழக்கவழக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டு அதே சமயம் கடவுளை வணங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆட்களின் நிலைமையே அவர்களுடைய நிலைமையாகவும் இருந்தது. ஆகவே, அவர்களுடைய அனுபவத்தில் முக்கியமான பாடங்கள் இருக்கின்றன? என்ன பாடங்கள்?
ஏசாயாவின் எச்சரிப்புக்கு செவி கொடுங்கள்
ஏசாயா முதல் அதிகாரம், இஸ்ரவேலர் “யெகோவாவை” விட்டு “பின்வாங்கிப் போனார்கள்” என்று காண்பிக்கிறது. (வசனம் 4) அவர்கள் வழிதவறிப் போனபோதிலும் தொடர்ந்து பலி செலுத்திக் கொண்டும் மதசம்பந்தமான பழக்கவழக்கங்களை கடைபிடித்துக் கொண்டும் ஜெபங்களை ஏறெடுத்துக் கொண்டுமிருந்தார்கள். ஆனால் பிரயோஜனமில்லை. தங்கள் சிருஷ்டிகரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற உள்ளான ஆசை அவர்களுக்கு இல்லாததன் காரணமாக யெகோவா சொன்னதாவது: “என் கண்களை உங்களை விட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்.” அந்த இஸ்ரவேலர் ‘தங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கும் அளவுக்கும்’கூட அசுத்தமான பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிராக கலகம் பண்ணினார்கள்.—வசனங்கள் 11-15.
என்ன சூழ்நிலைமைகளின் கீழ் யெகோவா மறுபடியுமாக அவர்களை ஏற்றுக்கொள்வார்? ஏசாயா 1:16-ல் வெளிப்படுத்தப்பட்ட தேவையை கவனித்துப் பாருங்கள். அவர் சொல்கிறார்: “உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்.” ஆகவே அந்த புத்திமதியை நாம் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக் கொள்வோமேயானால், “மாம்சத்தின் கிரியை”களில் ஒன்றாகிய ஆவியுலகத் தொடர்பு உட்பட அசுத்தமான பழக்கவழக்கங்களை விட்டு விடுவோம் அல்லது அவைகளிலிருந்து நாம் விலகியிருப்போம். ஆவியுலகத் தொடர்புக்கு பின்னாலிருக்கும் அந்த பொல்லாத மனது, பிசாசாகிய சாத்தான் என்பதை நாம் அறிந்திருக்கிறபடியால் நாம் அதை வெறுத்துவிடுவோம்.
பின்பு ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் நாம் அகற்றிட வேண்டும். இசாக் இவ்விதமாகச் செய்தார். அவர் சொல்வதாவது: “ஒரு நாள் ஆவியுலகத் தொடர்பு சம்பந்தமான எல்லா பொருட்களையும் கொண்டுவந்து என் வீட்டுக்கு முன்னால் குவித்து ஒரு கோடரியினால் துண்டுதுண்டாக அவைகளை வெட்டிப் போட்டேன். என் பக்கத்து வீட்டுக்காரி இதற்காக நான் பின்னால் மனம் வருந்துவேன் என்பதாக கூச்சல் போட்டாள். அவள் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும்போதே கல்லெண்ணையை அதன் மீது ஊற்றி எல்லாவற்றையும் எரித்துவிட்டேன். எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
இது நடந்து 28 வருடங்கள் ஆகின்றன. இசாக் அவருடைய இந்த செயலுக்காக மனம் வருந்தினாரா? இல்லை. இன்று அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் ஒன்றில் ஒரு கிறிஸ்தவ ஊழியராக யெகோவாவை மகிழ்ச்சியோடே சேவித்து வருகிறார்.
ஏசாயா 1:17 மேலுமாக பின்வரும் புத்திமதியைக் கொடுக்கிறது: “நன்மை செய்யப் படியுங்கள்.” இது “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம்” இன்னதென்று கண்டு பிடிப்பதற்கு யெகோவாவின் வார்த்தையாகிய பைபிளை படிப்பதை தேவைப்படுத்துகிறது. (ரோமர் 12:2) புதிதாக தெரியவரும் அந்த அறிவு புத்துயிரளிக்கும் ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தும். இதைத்தான் அஸமாஜா கண்டுபிடித்தாள்.
உறவினர்களும் அயலகத்தாரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அஸமாஜா தைரியமாக யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்தாள். அதற்குப் பின் விரைவிலேயே ஆவியுலகத் தொடர்பிலிருந்து விடுபட்டாள். பின்பு அவள் யெகோவாவுக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து ஒரு மாநாட்டின்போது முழுக்காட்டப்பட்டாள். இப்பொழுது சுமார் 12 வருடங்களுக்குப் பின்பு அவள் நன்றியுணர்வோடு சொல்வதாவது: “முழுக்காட்டப்பட்ட சமயம் முதற்கொண்டு என்னை ஆவிகள் தொந்தரவு செய்வது கிடையாது.” புன்சிரிப்போடு அவள் அந்த சமயத்தை நினைவுபடுத்தி, “முழுக்காட்டுதல் பெற்ற பின்பு அன்றிரவு நான் அத்தனை ஆழ்ந்தும் அமைதியாகவும் தூங்கிவிட்டதால் அடுத்தநாள் காலை மாநாடு நிகழ்ச்சி நிரலுக்கு நான் பிந்திவிட்டேன்.”
நிலையான நன்மைகள்
இன்று இசாக்கும் அஸமாஜாவும் சங்கீதக்காரனாகிய ஆசாபோடு சேர்ந்து இருதயப்பூர்வமாக பின்வருமாறு சொல்லக்கூடும்: “எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்.” (சங்கீதம் 73:28) ஆம், யெகோவாவை அண்டிக் கொண்டிருப்பது சரீர சம்பந்தமாகவும், உணர்ச்சிகளின் சம்பந்தமாகவும் அவர்களுக்கு நன்மைகளை கொண்டு வந்திருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அது அவர்களுக்கு உள்ளார்ந்த சமாதானத்தையும் யெகோவாவோடு ஒரு நெருக்கமான உறவையும் கொடுத்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள், ஆவியுலகத் தொடர்பின் அடிமைத்தனத்தை உதறித்தள்ளுவதற்கு தேவைப்படும் வேதனையையும் போராட்டத்தையும்விட மதிப்பில் உயர்ந்தவையாய் இருக்கின்றன. ஆனால் இதிலிருந்து விடுபடுவது சோதனையாக இருக்கக்கூடும். சூரினாமில் லின்டீனாவான் கீனன் என்ற பெயருள்ள பெண்மணிக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. அடுத்ததாக, பல வருடங்களாக போராடி கடைசியாக அவள் எவ்விதமாக வெற்றிப் பெற்றாள் என்பதை பார்க்கலாம். (w87 9⁄1)
[பக்கம் 5-ன் படம்]
அஸமாஜா அமீலா சொல்கிறாள்: “ஆவிகள் . . . என் வாழ்க்கையை வேதனை நிறைந்ததாக ஆக்கின . . . அவை பேசிய காரியங்கள்!”