என் மதத்தை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா?
விமானி, அப்போதுதானே 101 பயணிகளுடன் ஒக்கிநாவா நாஹா விமான நிலையத்திலிருந்து மேலே பறக்க ஆரம்பித்திருந்தான். திடீரென்று, வானிலையை முன்சென்று புலன் காணும் மூன்று விமானங்கள் மோதும் வகையில் தன்னை நோக்கி வருவதை அவன் கவனித்தான். உடனடியாகச் செயல்படுகிறவனாய், விமானி காலந்தாழ்த்தாமல் விமானத்தின் திசையை மாற்றி நடுவானில் நிகழவிருந்த விபத்தை தவிர்த்து தன்னுடைய உயிரையும் தன் பயணிகளின் உயிர்களையும் காப்பாற்றிக் கொண்டான். வடஜப்பானிலுள்ள ஒரு செய்தித்தாளில் அறிவிக்கப்பட்டிருந்தபடி, மயிரிழையில் தப்பியதைப் பற்றிய அந்தப் பதிவு உயிர்களைக் காப்பாற்றுவதற்கு சில சமயங்களில் செல்கின்ற திசையில் தீவிரமான ஒரு மாற்றம் அவசியம் என்பதை நன்றாக விளக்குகிறது.
என்றபோதிலும், ஒருவருடைய மதத்தை மாற்றுவது என்பது வித்தியாசமான ஒரு காரியம் என்பதாக அநேகர் நினைக்கின்றனர். தீவிரமான பயங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. பரிச்சயமில்லாத ஒரு பாதையில் நடக்க ஆரம்பிப்பதைப் பற்றிய பயம் வந்துவிடுகிறது. யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்த திருமதி டாச்சி தன் கருத்தை இவ்விதமாக வெளியிட்டாள்: “எனக்கு தெரிந்த அநேக ஆட்களுக்கு மதத்தைப் பற்றியும் அது பணத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியும் சந்தேகமிருக்கிறது. ஆனால் சிறு வயது முதற்கொண்டு, எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் மதசம்பந்தமான கொண்டாட்டங்களும் பழக்கவழக்கங்களுமே. ஹோஜியின் [மரித்த நபருக்காக அவ்வப்போது அனுசரிக்கப்படும் புத்த மத ஞாபகார்த்த ஆராதனை] ஆன்மீக உட்பொருளைக் குறித்து நாம் அதிகமாக சிந்தித்துப்பார்ப்பதில்லை. உறவினர்களோடும் அயலகத்தாரோடும் கூடி மகிழ்வதற்கான ஒரு காலமாகவே அதிகமாக ஹோஜியைப் பற்றி நாம் யோசிக்கிறோம். இவை அனைத்தையும் விட்டுவிடுவதைப் பற்றி அல்லது இன்னும் மோசமாக குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்படுவதைப் பற்றிய எண்ணமே எனக்குப் பயத்தை உண்டுபண்ணுவதாக இருந்தது.” மதத்தைப் பற்றிய இந்தக் கருத்து ஒருவேளை நீங்கள் வாழுமிடத்திலும் இருக்கக்கூடும்.
மற்ற பயங்களும்கூட இருக்கின்றன. அநேக இடங்களில் மக்கள் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டால் தெய்வம் ஏதாவது ஒரு வகையில் பழிவாங்கிவிடும் என்ற நம்பிக்கையில் பயப்படுகிறார்கள். ஜப்பானில் பைபிளைப் படிக்க ஆரம்பித்த ஒரு பெண்ணிடம் அவளுடைய உறவினர்கள், அவள் “தன்னுடைய மூதாதையரை அசட்டைச் செய்து” ஓர் “அந்நிய மதத்தை” ஆராய்வதன் மூலம் அவர்களுடைய கோபத்துக்கு ஆளாகிவிட்டதன் காரணமாக உடல் நலம் சம்பந்தமாகவும் குடும்பத்திலும் பிரச்னைகளை அனுபவித்ததாகச் சொன்னார்கள்.
துணைவரையோ அல்லது பெற்றோரையோ வருத்தப்படச் செய்துவிடும் பயம் மதம் மாறுவதிலிருந்து மக்களை பின்வாங்கச் செய்யும் மற்றொரு பயமாக இருக்கிறது. பெற்றோரிடமும் குடும்பத்திடமும் பற்றுமாறாதிருப்பது விசேஷமாக முக்கியமானதாகக் கருதப்படும் பெரும்பாலான கிழக்கத்திய தேசங்களில், புதிய மனைவி அவள் புகுந்த வீட்டின் மத நம்பிக்கைகளை ஆதரிக்கும்படியாக பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறாள். தம்பதிகள் குறிப்பாக மதப்பற்றுள்ளவர்களாக இல்லாவிட்டாலும்கூட குடும்பத்தோடு ஒரு நல்ல உறவைக் காத்துக்கொள்வதும் மத சம்பந்தமான அந்தஸ்தை பேணி காத்துவருவதும் அதிமுக்கியமாக கருதப்படுகின்றது. ஓர் இளம் தம்பதி “குடும்ப மாநாடு” ஒன்றில் தீவிரமான அழுத்தத்திற்குட்படுத்தப்பட்ட பின்பு தங்கள் பைபிள் படிப்பை நிறுத்திக் கொண்டார்கள். பின்னால் மறுபடியுமாக படிக்க ஆரம்பித்தபோது, “அடிப்படையில் மனிதருக்குப் பயப்படும் பயம் எங்களுக்கிருந்தது” என்பதாக கணவன் சொன்னான். “நாங்கள் எங்கள் பெற்றோரின் விருப்பங்களின்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் மதத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் அவர்களை புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை.”
இது, அநேகர் தங்கள் மதத்தை மாற்றிக் கொள்வதற்கு ஏன் பயப்படுகிறார்கள் என்பதற்கான மற்றொரு காரணத்தை நம் மனதுக்குக் கொண்டுவருகிறது: வித்தியாசமானவர்கள் என்று கருதப்படுவதற்கு எங்குமுள்ள விருப்பமின்மை. மேலே குறிப்பிடப்பட்ட குடும்பத்தில் பைபிள் படிப்பதை நிறுத்திவிடுவதற்கு தம்பதிகளுக்கு பெற்றோர் கொடுத்தக் காரணங்களில் ஒன்று, அவர்கள் தங்களுடைய பிள்ளைகள் விநோதமானவர்களாக கருதப்படுவதை அல்லது சமுதாய நடவடிக்கைகளிலிருந்து தள்ளி வைக்கப்படுவதை விரும்பவில்லை என்பதே.
ஆகவே என்னுடைய மதத்தை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியில் தீவிரமான பயங்கள் உட்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அநேகர் சித்தாந்தமான ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்: ஒருவர் எந்த மதத்தில் இருக்கிறார் என்பது உண்மையில் முக்கியத்துவமுடையதாக இல்லை அல்லவா? அனைத்து மதங்களும் ஒரே மலைஉச்சிக்குக் கொண்டு செல்கின்ற வித்தியாசமான பாதைகளே அல்லவா? மதம் என்ற விஷயம் வரும்போது, முதுமொழியில் வரும் மூன்று குரங்குகளைப் போல அவர்கள் தீயதைப் பார்ப்பதில்லை, தீயதைக் கேட்பதில்லை, தீயதைப் பேசுவதில்லை.
ஆனால் சிலர் தங்களுடைய மதத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? இவர்களில் அநேகருக்கு உடனடி சுகநலத்தை அல்லது பொருளாதார ஆதாயத்தை உறுதியளித்த மற்றொரு மதத்தை சேர்ந்து கொள்ளும் விஷயமாக இது இருந்திருக்கிறது. அதே சமயத்தில் இவர்கள் தங்கள் சம்பிரதாயமான மத நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையுமே விடாமல் தொடர்ந்துப் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் மற்றவர்களுடைய விஷயத்தில் உண்மையானதும் முழுமையானதுமான ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ‘என்னுடைய மதத்தை மாற்றிக் கொள்ள உண்மையில் போதுமான காரணங்கள் எனக்கு இருக்கின்றனவா? சிலர் ஏன் மாற மனமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்? ஒரு மாற்றம் என்னுடைய வாழ்க்கையில் மெய்யான பாதிப்பைக் கொண்டுவரக்கூடுமா?’ என்பதாக நீங்கள் யோசிக்கக்கூடும். விடைகளுக்காக பின்வரும் கட்டுரையை ஆராயும்படியாக நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். (w88 6⁄1)
[பக்கம் 3-ன் படம்]
தங்கள் பாரம்பரிய மத சம்பந்தமான பழக்கவழக்கங்களை விடாமல் பற்றிக் கொண்டிருக்க மக்களைத் தூண்டுவது என்ன?