அந்த வேசியும் “பூமியின் ராஜாக்களும்”
கிறிஸ்தவமண்டலத்தின் சரித்திரம் முழுவதுமே அவள் ஆதிக்கம் செய்த பகுதியில் வியாபாரமும் ஈடுபாடும் கொண்ட அவளுடைய செல்வாக்கு சம்பந்தமான உதாரணங்கள் நிரம்பியதாக இருக்கிறது. அவற்றில் ஒரு சிலவற்றை நாம் கவனிப்போம். சார்ல்மக்னே (பொ.ச. 742–814) மதத்தோடு கூட்டு சேர்ந்திருப்பதன் நன்மையையும் கத்தோலிக்க சர்ச் குருவர்க்கத்தினரின் ஆசீர்வாதத்தைக் கொண்டிருப்பதன் நன்மையையும் கண்ட ஓர் அரசனாக இருந்தான்.
ஆட்சி செய்துவந்த முன்னாள் குடும்பம் ‘ஒரு பக்கமாக ஒதுக்கப்பட்ட’ பின்பு ஒரு புதிய அரச பரம்பரையை ஏற்படுத்தும் வகையில் போப் சார்ல்மக்னேவையும், அவனுடைய தகப்பனையும், அவனுடைய சகோதரனையும் அபிஷேகம்பண்ணினார் என்று தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா விவரிக்கிறது. மேலும் அது கூறுகிறது: “லாம்பார்டுகளை எதிர்த்து ஃப்ராங்க்குகளுக்கும் [சார்ல்மக்னேவின் மக்கள்] போப்புக்கும் இடையே ஒரு கூட்டு ஒப்பந்தம் அதே வைபவத்தில் உறுதிசெய்யப்பட்டது. சார்ல்ஸ் (சார்ல்மக்னே என்று வழங்கப்படலானார்) உலக அதிகாரத்துக்கும் சர்ச்சுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பை ஆரம்பித்திலேயே ஒப்புக்கொண்டார்.”
பொ.ச. 800-ல் போப் லியோ III, மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் “சக்கரவர்த்தியாக சார்ல்ஸை ஏற்படுத்த தீர்மானமாயிருந்து,” ரோமில் புனித பேதுருவின் பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் பூசையின்போது முடிசூட்டினார்.
பேராசைக்கொண்ட வேசி
ஆனால் ஒரு வேசிக்குக் கூலி கொடுக்கப்படவேண்டும். சார்ல்மக்னே பாபிலோனின் பிரதிநிதிக்கு, ரோமுக்கு என்ன கூலி கொடுக்கக்கூடும்? “செய்ன்ட் பீட்டர்ஸ் பாஸிலிக்காவில் சார்ல்ஸ், இத்தாலியின் பெரும்பகுதியை போப்பின் ஆட்சிக்கு மாற்றுதல் குறித்த தன்னுடைய தகப்பனின் வாக்குறுதியை . . . மீண்டும் உறுதிப்படுத்தினான்.” அதே செய்தி மூலம் குறிப்பிடுவதாவது: “அரசியல் ரீதியாக அமைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய மத முறைமையில், சாம்ராஜ்யமும் சர்ச்சும் ஒரு நிறுவனமாகவும் ஆன்மீக இயக்கமாகவும் வளர்ந்தது.”
கடந்த கால ஆட்சியில் மதத்தின் பலமான செல்வாக்குக்கு மற்றொரு உதாரணம், இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டினல் ஓல்சி (1475–1530). அவர் “இங்கிலாந்தின் ஹென்றி VIII அரசில் பலமான செல்வாக்குடைய கார்டினலாகவும் அரசியல்வாதியாகவும்” இருந்தார் என்று பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. “டிசம்பர் 1515-ல் ஓல்சி இங்கிலாந்தின் மேல்மன்றத் தலைவராக ஆனார். ஒல்சி அரசனுக்கு அடுத்ததாக சொத்துக்களை சுதந்தரித்திட தனக்கிருந்த ஏராளமான அரசியல் மற்றும் மத அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.” வெளிப்படுத்துதலின் அடையாள அர்த்தமுள்ள மொழியைப் பயன்படுத்தினால், உயர்ந்த இடத்து விபச்சாரம் உயர்ந்த கூலியைக் கேட்பதாயிருக்கிறது.
அரசியல் விவகாரங்களில் மதத்தின் செல்வாக்குக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க உதாரணம், ரிச்செலியுவின் கார்டினலும் கோமகனுமாவார் (1585–1642). இவர் ஃப்ரான்ஸில் மிகுந்த வல்லமையுடையவராய் இருந்ததுமட்டுமின்றி, “அந்தச் சகாப்தத்தின் தராதரத்தின்படி பார்க்கும்போதுகூட அளவுகடந்த செல்வத்தைச் சேர்த்துக்கொள்பவராய் இருந்தார்,” என்று பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.
ரிச்செலியுவுக்குப் பின்னால் வந்த கார்டினல், ஜூல்ஸ் மாஸரின் (1602–61), லூயிஸ் X1V அரசனின் ஆளுகையின்போது ஃப்ரான்ஸ் தேசத்தின் முதல் மந்திரியாக ஆனார். இவர் நியமிக்கப்பட்ட குருவாக இல்லாவிட்டாலும், அவர் போப் அர்பன் VIII என்பவரால் 1641-ல் கார்டினலாக நியமிக்கப்பட்டார். கார்டினல் மாஸரினும் தன் செல்வத்தைப் பெருக்கிக்கொள்வதற்கான ஆசையை வளர்த்தான். என்ஸைக்ளோபீடியா குறிப்பிடுவதாவது: “மாஸரினின் விரோதிகள் அவனுடைய பேராசைக்காக அவனைக் குற்றப்படுத்தினர். அவன் பதவியும் அந்தஸ்தும் சேர்த்துகொண்டு தன்னுடைய வருமானத்துக்கும் அரசுக்குரிய வருமானத்துக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் குழம்பிய சமயங்களும் இருந்தன.”
இக்காலத்திலுங்கூட பொய் மதம் ஏராளமான செல்வத்தைச் சேகரிக்கவும் செல்வாக்கைக் கொண்டிருக்கவும், கூடுமானால் அரசியல் கூறுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் பிரயாசப்படுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், ஓப்பஸ் டெய் (லத்தீன், கடவுளுடைய வேலை) என்ற கத்தோலிக்க மையம். இது தற்போது போப்பின் தயவைப் பெற்றுவருகிறது. லாரன்ஸ் லேடர் என்ற எழுத்தாசிரியரின்படி, இது “கம்யூனிஸத்திற்கு எதிராகவும் வலது சாரி அரசியல் விவகாரங்களுக்குத் தன்னை முற்றிலும் அற்பணித்ததாயுமிருக்கிறது.” தன்னுடைய உயர்நிலைப் பள்ளிகள் மூலமாகவும் பல்கலைக்கழகத்தின் மூலமாகவும் கத்தோலிக்க இளைஞரில் அறிவுக்கூர்மை படைத்தவர்களை தெரிந்துகொண்டு, அவர்களை செல்வாக்கு மிகுந்த பதவிகளில் அமர்த்தி, அரசு, நிதி மற்றும் செய்தித் துறைகளை அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கச் செய்திருக்கிறது. ஸ்பேய்னில் கத்தோலிக்க பாஸிச சர்வாதிகாரியின் ஆட்சி காலம் அவர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஒரு சமயம் அவருடைய மந்திரிசபையின் 19 அங்கத்தினரில் 10 பேர் அந்த செல்வாக்கு மிகுந்த ஓப்பஸ் டெய்யின் உறுப்பினராக இருந்தனர்.a
ஐக்கிய மாகாணங்களில், தொலைக்காட்சி சுவிசேஷகர்கள் தங்களுடைய செல்வப் பெருக்குக்கும் சுகபோக வாழ்க்கை முறைக்கும் பேர்பெற்றவர்கள். சில புராட்டஸ்டாண்ட் குருமார் அரசியல் வட்டத்துக்குள் பெருமையோடு பிரவேசித்திருப்பது மட்டுமல்லாமல் ஜனாதிபதி பதவிக்குங்கூட ஆசைப்பட்டிருக்கின்றனர். அதைக் குறித்து எவ்வித சந்தேகமுமில்லை. விழுந்த நிலையில் இருந்த போதிலும், அந்தப் பழைய வேசி, ஏதாவது ஒரு வகையில் அதிகாரத்துடன் வரும் உடைமைகளையும் சொகுசான வாழ்க்கையையும் இன்னும் அனுபவித்துவருவதுடன் அதிகாரம்பண்ணவும் முயலுகிறாள்.—வெளிப்படுத்துதல் 17:4.
ஆனால் மகா பாபிலோன் என்ற அந்த வேசியின் பெயரைப் பற்றியது என்ன? வெளிப்படுத்துதலில் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடப்படும் அந்த ஸ்திரீ யாரை அடையாளப்படுத்துகிறது என்பதை உறுதிசெய்ய அது எவ்வாறு உதவுகிறது? (w89 4⁄1)
[அடிக்குறிப்புகள்]
a ஓப்பஸ் டெய் குறித்தும் அரசியலில் சர்ச்சின் ஈடுபாடுகள் குறித்தும் கூடுதலான தகவல்களுக்கு R.T. நேலர் எழுதிய கைமேல் பணமும் கடன்பட்ட அரசியலும் (Hot Money and the Politics of Debt), மற்றும் L. லேடர் எழுதிய அரசியலும் அதிகாரமும் சர்ச்சும் (Politics, Power, and the Church) என்ற புத்தகங்களைப் பார்க்கவும்.
[பக்கம் 6-ன் படம்]
கார்டினல்களாக பணியாற்றிய ஓல்சி, மாஸரின், ரிச்செலியு ஆகியவர்கள் நாட்டைச் சேவிக்கும் பணியில் இருந்தபோது ஏராளமான செல்வம் சேர்த்தனர்
[படத்திற்கான நன்றி]
Photos: Culver Pictures