குற்றச்செயலுக்கு முடிவு இப்பொழுது சமீபம்!
குற்றவாளிகளின் அடையாளத்தையும் உள்நோக்கத்தையும் வெளிப்படுத்தும் துப்புகளை ஆராய்வதன் மூலம் துப்பறியும் நிபுணர்கள் குற்றச்செயல்களுக்குப் பரிகாரம் காண முயலுகின்றனர். துப்பறிவாளரின் முறைகளும் திறமைகளும் உலகமுழுவதும் பிரபலமாகியிருக்கும் நாவல் கதைகளின் பொருளாயிருக்கிறது. அவர் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் வெற்றிகண்டாலும், துப்பறிவாளரின் வேலை அந்தச் சம்பவத்திற்குப் பின்னரே, அந்தக் குற்றச்செயல் நிகழ்த்தப்பட்டப் பின்னரே துவங்குகிறது.
குற்றச்செயல்களின் அதிகரிப்பிலிருந்து தெரிகிறதுபோல், ஒரு குற்றவாளி பிடிபடுவானானால், வேறு பலர் குற்றச்செயலுக்குத் திரும்புகின்றனர். எனவே குற்றச்செயலை முற்றிலும் நீக்கிப்போடுவதற்கு, ஏற்கெனவே இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பரிகாரம் காண்பதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. குற்றவாளிகளாவதிலிருந்து மக்களை எது தடுத்து நிறுத்தும்?
குற்றச்செயல் ஒழுக்கநெறி சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. கொலையும் கற்பழிப்பும் மற்ற வன்முறைச் செயல்களும் குற்றச்செயல்கள் என்பதை ஒப்புக்கொள்வது நமக்குக் கடினமாயில்லை. ஆனால் வரிப்பணம் செலுத்துவதில் ஏமாற்றுவதைப் பற்றியது என்ன? அப்படிப்பட்ட ஒரு செயலும் குற்றச்செயல்தான், ஏனென்றால் அது நேர்மை என்ற ஒழுக்கத் தராதரத்திற்கு முரணாக இருக்கிறது. குற்றச்செயலை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவருவது, அடிப்படை ஒழுக்கநெறிக்கு முரணான அனைத்து வகை செயல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கிறது.
குற்றச்செயலுக்குக் காரணத்தை மட்டுமல்ல, ஆனால் அது நீக்கப்படும் விதத்தையும் எடுத்துக்காட்டும் மூன்று பைபிள் உதாரணங்களைக் கவனியுங்கள்.
தேவ பக்திக்கு எதிராகப் பொறாமை
சங்கீதக்காரனாகிய ஆசாப்பின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.” (சங்கீதம் 73:3) ஆம், குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களின் செல்வச் செழிப்பும் வாழ்க்கை முறையும் அநேகரைச் சட்டத்துக்கு முரணான வழிகளைப் பின்பற்றும்படிக் கவர்ந்திழுக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செய்திகளிலும் குற்றச்செயல் பிரபலப்படுத்தப்படுவதுதானே, தீயவற்றிற்கு ஒரு பகையுணர்ச்சியை வளர்ப்பதற்குப் பதிலாக அதை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாகச் செய்கிறது.
எனவேதான் நீதிமொழிகளை பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதியவன் பின்வருமாறு புத்தி சொல்லுகிறான்: “உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் (யெகோவாவை, தி.மொ.) பற்றும் பயத்தோடிரு.” ஒருவருடைய உள்நோக்கமும் ஆசையும்தானே பிரச்னையின் வேராயிருக்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழி, யெகோவா தேவனுக்குப் பிரியமற்ற காரியத்தைச் செய்யக்கூடாது என்ற ஒரு தேவ பயத்தை வளர்ப்பதாகும். “நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது.”—நீதிமொழிகள் 23:17;18.
விசுவாசத்துக்கு எதிராகப் பேராசை
பொ.ச. 33-ன் வசந்தகாலத்தில், இயேசு எரிகோ பட்டணத்தின் வழியே பயணமாய்ச் சென்றுகொண்டிருந்தார். அதுதான் சகேயுவின் ஊர். அவன் “ஆயக்காரருக்குத் தலைவன்” என்று சுவிசேஷ எழுத்தாளன் லூக்கா விவரிக்கிறான். அதே சமயத்தில் அவன் “ஐசுவரியவானுமாயிருந்தான்” என்றும் குறிப்பிடுகிறான். எரிகோவைச் சுற்றியிருந்த செழிப்பான மாநிலம் வரி வசூலிப்பதற்குரிய முக்கிய பகுதியாக இருந்தது. சகேயுவின் சொந்த வார்த்தைகள் காண்பிப்பதுபோல், அது அவன் ஏராளமான பணத்தை அநியாயமாய்ப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகளை அளித்தது. ஆனால் சகேயு தொடர்ந்து ஒரு குற்றவாளியாக இருக்கவில்லை.—லூக்கா 19:1–8.
சகேயு இயேசுவைச் சூழ இருந்த அந்தக் கூட்டத்திற்கு முன்னாக ஓடி, அவன் உருவத்தில் சிறியவனாயிருந்தபடியால், அவரை நன்றாகப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறியமர்ந்தான். இயேசு அவனைப் பார்த்து, சகேயுவை இறங்கிவரச் சொன்னார். தாம் எரிகோவில் இருக்கும்போது, அவனோடு தங்குவதாகக் கூறினார். பின்னர், சகேயுவின் வார்த்தைகள் அவனுடைய மனப்பான்மையின் மாற்றத்தைத் தெரிவிக்கிறது: “என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்.” தான் அநியாயமாய் வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுப்பது அவனுக்கு பெருத்த செலவை ஏற்படுத்தும். இதைச் செய்ய வாக்களிப்பதன் மூலம், சகேயு இயேசுவில் தனக்கிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தினான். ஆம், அவனுடைய மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றம் நல்ல பலன்களைக் கொண்டுவந்தது, அதாவது சட்டத்துக்கு விரோதமாக வாங்கப்பட்ட பணத்தை உரிய இடத்தில் சேர்த்து, மற்றும் அந்த மதிப்புக்குக் கூடுதலாக மூன்று மடங்கு கொடுத்து நான்கு மடங்காகச் சரிகட்டினான். இப்படியாக சகேயு தான் செய்த தவற்றைச் சரிசெய்ததோடுகூட தன்னுடைய மனமாற்றம் கொண்ட வாழ்க்கையில் உண்மையுள்ளவனாய் நிரூபித்தான்.—2 கொரிந்தியர் 7:11.
உடைமைகளைவிட மக்களே அதிக முக்கியம்
ரோமின் அதிபதி பிலாத்து குற்றஞ்சாட்டப்பட்ட இயேசு கிறிஸ்துவைக் குறித்து, “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை,” என்று கூறினான். (லூக்கா 23:4) இயேசு உடைமைகளைச் சம்பாதித்துக்கொள்வதற்கு குற்றச்செயல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மாறாக அவர் தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை முழுவதிலும் மக்களில் ஓர் அன்பான அக்கறையை வெளிப்படுத்தினார். “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.” (மத்தேயு 9:36–38) இயேசு மக்களையே உடைமைகளுக்கு முன்பாக, தம்முடைய சொந்த வசதிகளுக்கும் அக்கறைகளுக்கும் முன்பாக வைத்தார் என்பது தெளிவாக இருக்கிறது. இது தம்மிடமாகப் போதனையும் உதவியும் கேட்டு வந்த சீஷர்களுக்கும் கூட்டத்தினருக்கும் கவனம் செலுத்தத் தம்மைத்தாமே அளித்திட மனமுள்ளவராயிருந்ததிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது. (மத்தேயு 8:20; 14:13–16) இந்த விஷயத்தில் நாம் பின்பற்றுவதற்கு இயேசு நமக்கு ஒரு முன்மாதிரியை வைத்துப்போனார்.—1 பேதுரு 2:21.
உடன் மானிடரை பொருளுடைமைகளைவிட அதிகமாக மதித்திடும் அந்த மாதிரியை மக்கள் இன்று பின்பற்றுவது கூடிய காரியமா? ஆம் என்று நாம் பதிலளிக்கலாம். இன்று முப்பத்தைந்து இலட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் கிறிஸ்துவின் மனதைத் தரித்திருக்கவும் அதை நடைமுறையில் வெளிப்படுத்தவும் நாடுகின்றனர். அநேகரைக் குற்றச்செயலுக்கு வழிநடத்தும் பொல்லாத ஆசைகளைத் தங்களுடைய இருதயத்திலிருந்து களைந்திட அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். சாட்சிகளாக ஆவதற்கு முன்பு, அவர்கள் பைபிளைப் படித்து கடவுளுக்குத் தங்களுடைய அன்பை விருத்தி செய்திடுகையில் இது குற்றச்செயல்களை நடப்பிப்பவர்களாயிருந்த சிலரைத் தொட்டது; அவர்களில் சிலரை தாங்கள் முன்பு செய்த குற்றச்செயல்களுக்குத்தகுந்த பரிகாரத்தைச் செய்திடத் தூண்டியது. இல்லை, அப்படிப்பட்டவர்கள் இதைப் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகச் செய்யவில்லை, ஆனால் யெகோவா தேவனுடன் சமாதான உறவைக் கொண்டிருப்பதற்காகவும், இப்படியாக இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும் அவருடைய தகுதியற்ற தயவிலிருந்து நன்மை பெறுவதற்குமே அப்படிச் செய்தனர்.—1 கொரிந்தியர் 2:16; 6:11; 2 கொரிந்தியர் 5:18–20.
தங்களுடைய அயலகத்தார் பேரிலுள்ள அன்பின் காரணத்தால் அப்படிப்பட்டக் கிறிஸ்தவர்கள் மற்றவர்களை சந்திக்கவும் அந்தக் குடும்பங்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பரதீஸான சூழ்நிலையில் எப்படி ஜீவனடையும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கலாம் என்று விளக்கிக் காட்டவும் நேரமெடுத்துக்கொள்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ராஜ்ய மன்றங்களில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கூட்டங்களைக் கொண்டிருக்கின்றனர். தான் ஒரு திருடன் என்று ஒப்புக்கொண்ட ஒருவன் இந்தக் கூட்டங்கள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டான். அவன் இப்படியாக விளக்குகிறான்: “நான் மிகக் குறைவாகக் கூறவேண்டுமானால், எனக்கு அது ஆச்சரியமாயிருந்தது. அது நான் எதிர்பார்த்ததுபோன்று சற்றும் சோர்வுண்டாக்குவதாய் அல்லது போரடிப்பதாய் இருக்கவில்லை. அங்கிருந்த அனலும் அன்பும் தெளிவாகவே உண்மையானதாய் இருந்தது. ஆவிக்குரிய காரியங்களுக்குச் சாட்சிகள் எல்லாரும் கொண்டிருந்த போற்றுதல் குறிப்பிடத்தக்கதாயிருந்தது.” அவன் அந்தளவுக்குக் கவர்ந்திழுக்கப்பட்டதால், தொடர்ந்து கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தான். இது அவன் திருந்துவதற்கு உதவியது. நீங்கள் ஒரு குற்றச்செயலில் உட்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் கடவுளுடைய ஊழியர்களுடன் கூட்டுறவு கொள்ளும்போது, பொருளுடைமைகளுக்குப் பதிலாக மக்கள்பேரில் அதேவிதமான உண்மையான அக்கறை இருப்பதை நீங்களும் காண்பீர்கள்.—மத்தேயு 22:39.
குற்றச்செயல்—ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டதா?
மக்கள் இனிமேலும் குற்றச்செயலிழைப்பவர்களாகச் செயல்படவில்லை என்றால், அவர்கள் பரிபூரணர் என்று இது பொருள்படுமா? இல்லவே இல்லை! மற்ற எல்லாரைப் போலவே யெகோவாவின் சாட்சிகளும் நம்முடைய முதல் மானிட பெற்றோராகிய ஆதாமிலிருந்து சுதந்தரிக்கப்பட்ட பாவத்தினால் துன்பப்படுகின்றனர். (ரோமர் 5:12; 1 யோவான் 1:8) ஆனால் அவர்கள் கடவுளைச் சேவிப்பதில் இப்பொழுது ஐக்கியமாயிருக்கின்றனர். இது அவர்கள் உலகமுழுவதும் செய்துவரும் பிரசங்கிக்கும் மற்றும் கற்பிக்கும் வேலையில் தெளிவாகத் தெரிகிறது. இது ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திற்குப் பலமான சான்றளிக்கிறது: “கடைசிநாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, . . . எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.” (ஏசாயா 2:2, NW) ஆம், இலட்சக்கணக்கானோர் அவருடைய வழிகளில் போதிக்கப்படுவதற்காக யெகோவாவின் உயர்த்தப்பட்ட வணக்கத்திற்குத் திரளாய் வருகிறார்கள். குற்றச்செயலைத் தவிர்க்கும் மக்களுடன் கூட்டுறவு கொள்வதன் மூலம் நன்மையடைவதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
குற்றச்செயல் நீக்கப்படுதல்—எதிர்பார்ப்புகள்
நம்முடைய நாளைய குற்றச்செயல் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதுதானே, குற்றச்செயலில் ஈடுபடுகிறவர்கள் எல்லாரும் உட்பட அனைத்து துன்மார்க்கமும் நீங்கப்படுவதற்குத் தெய்வீக தலையிடுதல் அண்மையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; . . . இன்னும் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்றுவிசாரித்தாயானால் அவன் இல்லை.” (சங்கீதம் 37:9, 10) குற்றச்செயலுக்கு முடிவு உண்மையிலேயே சமீபமாயிருக்கிறது, ஏனென்றால் ஆரம்பக் குற்றவாளியாகிய பிசாசாகிய சாத்தான் கட்டப்பட்டு அபிஸில் போடப்படுவதற்கான காலத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 20:1–3) குற்றச்செயலுக்குப் பயப்படுதலும் அதற்குப் பலியானவர்கள் அடைந்த வேதனையும் விரைவில் கடந்த கால காரியமாகிவிடும் என்பதை அறியவருவது எவ்வளவு கிளர்ச்சியுள்ளதாக இருக்க வேண்டும்!
என்றபோதிலும், உயிர்த்தெழுதலில் பூமிக்குத் திரும்பிவரப்போகும் இலட்சக்கணக்கான ஆட்களைப் பற்றியதென்ன? (அப்போஸ்தலர் 24:15) அவர்கள் மரிப்பதற்கு முன்பு கொண்டிருந்த அதே ஆள்தன்மையையும் வழிகளையும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறவர்களாக இருந்தால், புதியதோர் குற்றச்செயல் அலையை அவர்கள் எழுப்புகிறவர்களாக இருக்கமாட்டார்களா? அதைக்குறித்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. உயிர்த்தெழுதலைக் குறித்து இயேசு ஒரு திருடனுக்கு வாக்களித்தார். அவர் சொன்னார்: “இன்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னோடுகூட பரதீஸிலிருப்பாய்.” (லூக்கா 23:43) உயிர்த்தெழுதல் பெறுகிறவர்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இது நிச்சயமாகவே தெளிவுபடுத்துகிறது; அப்படி இல்லாவிட்டால் புதிய உலகம் ஒரு பரதீஸாக இருக்க மாட்டாது.
கடினமான குற்றவாளிகள் பிரச்னைகள் உண்டுபண்ணாமல் சமுதாய வாழ்க்கையில் தங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்பு மறுவாழ்வுத் திட்டத்திற்குள் அமையவேண்டியிருப்பதுபோல, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழும் ஒரு விரிவான கல்வித் திட்டம் அதன் குடிமக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருக்க உதவி செய்யும். (வெளிப்படுத்துதல் 20:12, 13) பரதீஸில் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் குடிமக்கள் சூழ்ந்திருப்பதன் பயன் ஒருபக்கம் இருக்க, உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் சரியான செயலாக்கம் கொண்ட பொருளாதார சூழலை அனுபவிப்பர். (ஏசாயா 65:21–23) நீதியான அரசர்கள் இருப்பார்கள், தொடர்ந்து தவறிழைப்பவர்களின் உயிர் நீக்கப்படும். (ஏசாயா 32:1; 65:20) எனவே கடைசியில் குற்றச்செயல் முடிவுக்கு வரும் என்பதில் நம்பிக்கை வைப்பதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு.
குற்றச்செயலைத் தன் பண்பாய்க் கொண்டிருக்கும் ஓர் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தாலும், நீங்கள் யெகோவாவில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தலாம், ஏனென்றால் அவர் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்குப் பரதீஸில் பரிபூரண ஜீவனை வெகுமதியாக வாக்களிக்கிறார். யெகோவாவின் சாட்சிகள் அளித்திடும் இலவச வீட்டு பைபிள் படிப்பு ஏற்பாட்டிலிருந்து பயன்பெறுவதன் மூலம் இப்பொழுதே அதைச் செய்யுங்கள். (யோவான் 17:3) அடுத்தமுறை அவர்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், அவர்களிடம் ஏன் கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடாது? அல்லது இந்தப் பத்திரிகையின் இரண்டாவது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு அண்மையிலிருக்கும் விலாசத்திற்கு எழுதலாம். முயற்சி செய்வது நிச்சயமாகவே பயனுள்ளது, ஏனென்றால் குற்றச்செயலுக்கு முடிவு இப்பொழுது சமீபமாயிருக்கிறது! (w89 8/15)
[பக்கம் 6-ன் படம்]
சகேயுவின் விசுவாசம் தான் அநியாயமாய் வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடத் தூண்டியது
[பக்கம் 7-ன் படம்]
ஒரு கல்வித் திட்டம் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கக் கற்பிக்கும்