விதி உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டுமா?
பட்டியலில் விதிவாதக் கொள்கையில் நம்பிக்கை வைக்காத ஒரே நபர் இயேசு கிறிஸ்துவாகும். அவருடைய கருத்து என்னவாக இருந்தது?
இயேசுவைப் பற்றிய முதல் நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவானின் பைபிள் புத்தகங்கள்) தனிநபர்கள் தங்கள் எதிர்காலத்தின் மீது அதாவது அவர்களுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதன் பேரில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று அவர் நம்பியதை சுட்டிக்காட்டுகின்றன.
உதாரணமாக, கடவுள் “தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பார்” என்பதாகவும், “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என்பதாகவும் இயேசு சொன்னார். அதேவிதமாகவே, எருசலேமின் குடிகள், தங்களுடைய ஜீவன்களை பாதுகாத்திருக்கக்கூடிய எச்சரிக்கைகளை அசட்டை செய்தபோது, அவர்களுடைய பிரதிபலிப்புக்கு இயேசு விதியை குற்றஞ்சாட்டவில்லை. மாறாக, அவர் சொன்னார்: “உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று.”—மத்தேயு 7:7–11; 23:37, 38; 24:13.
எருசலேமில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான விபத்தைக் குறித்து அவர் குறிப்பிட்ட காரியத்தின் மூலமாகவும்கூட நாம் இயேசுவின் மனநிலையைக் கண்டுகொள்ளலாம். அவர் கூறினார்: “சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 13:4, 5) அந்த 18 மனிதர்களின் சாவுக்கு விதியை இயேசு காரணங்காட்டவோ அல்லது மற்றவர்களைவிட இவர்கள் அதிக பொல்லாதவர்களாக இருந்தார்கள் என்று சொல்லவோ இல்லை என்பதை கவனியுங்கள். மாறாக, விதிவாதக் கொள்கையை மனிதனுடைய சுயாதீனத்தோடு ஒத்திசைவுபடுத்த முற்பட்ட அவருடைய நாளிலிருந்த பரிசேயர்களைப் போல் இல்லாமல், மனிதன் அவனுடைய தனிப்பட்ட எதிர்காலத்தின் மீது செல்வாக்கு செலுத்த முடியும் என்பதாக இயேசு கற்பித்தார்.
அதேவிதமாகவே இரட்சிப்பு என்பது அனைவராலும் முயன்று அடைய முடிகிற தெரிவு என்பதாக இயேசுவின் அப்போஸ்தலர்கள் கற்பித்தனர். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “இரட்சிப்புக்காக உன்னை ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயது முதல் அறிந்தவன்.” அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னார்: “நீங்கள் இரட்சிப்புக்கு (NW) வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்.” (2 தீமோத்தேயு 3:15; 1 பேதுரு 2:2; அப்போஸ்தலர் 10:34, 35; 17:26, 27 பார்க்கவும்.) ஜஸ்டின், ஆரிஜன் மற்றும் இரோனியஸ் போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் ‘நிபந்தனையற்ற முன்னறுதி குறித்து எதையும் அறியாதவர்களாயிருந்தனர்; அவர்கள் சுயாதீனத்தைக் கற்பித்தனர்’ என்று ஹேஸ்டிங்ஸின் மத மற்றும் நன்னெறியின் என்சைக்ளோபீடியா (Encyclopoedia of Religion and Ethics) குறிப்பிட்டு காட்டுகிறது.
ஆனால், அவர்களைச் சுற்றியிருந்த அநேக யூதர்கள் உட்பட அநேகர் ஏதோ ஒருவகையான விதிவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தபோது ஏன் இயேசுவும் ஆரம்பகால கிறிஸ்தவர்களும் மனிதனின் விதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்பதாக நம்பவில்லை? ஒரு கரணம் இந்தக் கருத்து பிரச்னைகள் நிறைந்ததாக இருக்கிறது. இரண்டை குறிப்பிட: விதிவாதம் யெகோவா தேவனின் குணாதிசயங்களுக்கு எதிராகச் செல்கிறது; அது ஸ்தாபிக்கப்பட்ட உண்மைகளால் தவறென காட்டப்படுகிறது. மேலுமாக, அது உங்கள் தற்கால மற்றும் எதிர்கால வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கக்கூடும். இது எவ்விதமாக இருக்கிறது என்பதை நெருங்கிய ஒரு கண்ணோட்டம் காண்பிக்கும்.
விதிவாதம் குறிப்பாக தெரிவிப்பதும் கடவுளுடைய குணாதிசயங்களும்
பொ.ச.மு. மூன்றாவது நூற்றாண்டில் கிரேக்க தத்துவஞானியான சீனோ, “விதியின் தீர்ப்பை ஏதோ ஒரு மறைவான வகையில் சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளும்படியாக” தன் மாணாக்கருக்கு ஏதென்ஸில் கற்பித்தார். என்றபோதிலும், ஒருநாள் அவருடைய அடிமை திருடிவிட்டான் என்பதை அறிய வந்த பிறகு, சீனோ தன்னுடைய சொந்த தத்துவம் குறிப்பாக தெரிவிப்பவற்றை முகமுகமாக எதிர்ப்பட்டார். எவ்விதமாக? அவர் திருடனை அடித்தபோது அடிமை, “நான் திருட வேண்டும் என்று விதி இருக்கிறதே” என்பதாக எதிர்த்து பதிலளித்தான்.
சீனோவின் அடிமை பயனுள்ள ஒரு குறிப்பைக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நபரின் வாழ்க்கை மாதிரியும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது என்பதாக நீங்கள் நம்பினால், ஒரு திருடனானதற்காக ஒருவனை குற்றப்படுத்துவது ஓர் ஆரஞ்சு விதை ஆரஞ்சு மரமானதற்காக அதை குற்றப்படுத்துவது போல இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட விவாதத்தின் முடிவான குறிப்பு என்னவாக இருக்கிறது?
சரி, குற்றவாளிகள் வெறுமென தங்கள் விதிப்படி செய்வார்களேயானால், அவர்களுடைய வாழ்க்கையின் பங்கை நிர்ணயித்தவரே அவர்களுடைய செயல்களுக்கு பொறுப்பாக இருக்க வேண்டும். அது யாராக இருக்கக்கூடும்? விதியில் நம்பிக்கையுள்ளவர்களின்படி கடவுள் தாமே பொறுப்பாயிருக்கிறார். இந்த விவாதத்தை ஒரு படிமேலே கொண்டுசென்றால், மனிதன் எப்போதும் செய்து வந்திருக்கும் அக்கிரமத்துக்கும், வன்முறைக்கும், ஒடுக்குதலுக்கும் கடவுளே முதல் காரணமாக இருக்க வேண்டும். அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
நெடர்லாண்ட்ஸ் தியாலஜிஸ்க் டிஜ்டுக்ஷிரிஃப்ட் (Nederlands Theologisch Tijdschrift) என்ற ஆலந்து நாட்டு இறையியல் பத்திரிகையில் ஒரு கட்டுரை, இப்படிப்பட்ட விதிவாத கருத்து “கடவுளைப் பற்றிய ஒரு கருத்தை முன்ஊகிப்பதாக இருக்கிறது, இது கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்” என்பதாக குறிப்பிடுகிறது. ஏன்? ஏனென்றால் ஆவியால் ஏவப்பட்டு எழுதிய பைபிள் எழுத்தாளர்கள் கடவுளைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்கு இது முரணாக இருக்கிறது. உதாரணமாக ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட சங்கீதங்களிலிருந்து இந்த மேற்கோள்களை கவனியுங்கள்: “நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல.” “துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.” “அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் [கடவுளால் நியமிக்கப்பட்ட மேசியானிய அரசர்] தப்புவிப்பார்.” (சங்கீதம் 5:4; 11:5; 72:14) தெளிவாகவே விதிவாதக் கொள்கையின் கருத்துக்களும் கடவுளுடைய குணாதிசயங்களும் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதுகின்றன.
விதிவாதக் கொள்கையும் உண்மைகளும்
ஆனால் இயற்கையின் பேரழிவுகளைப் பற்றியதென்ன? அவை சம்பவிக்க வேண்டும் என்பது விதியல்லவா? ஆகவே அவை தடுத்திட முடியாதவை அல்லவா?
உண்மைகள் நிரூபிப்பது என்ன? இயற்கையின் பேரழிவுகளுக்கான காரணத்தைப் பற்றிய ஆய்வின் கண்டுபிடிப்புகளைப்பற்றி ஆலந்து நாட்டு செய்தித்தாள் NRC ஹான்டல்ஸ்பிளாடு (NRC Handellsbad) அறிவிப்பு செய்ததை கவனியுங்கள்: “இதுவரையாக, பூமியதிர்ச்சிகள், வெள்ளங்கள், நிலச்சரிவுகள் மற்றும் புயல் காற்றுகள் . . . எப்போதும் இயற்கையின் விளைவுகளாக கருதப்பட்டு வந்திருக்கின்றன. என்றபோதிலும், இயற்கைக்கு எதிராக தீவிரமான மனித குறுக்கீடு ஆபத்துகளுக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் சுற்றுப்புறச்சூழலின் திறமையை கவலைக்குரிய வகையில் பாதித்திருப்பதை மிக உன்னிப்பான ஆய்வு காண்பிக்கிறது. இதன் விளைவாக இயற்கையின் பேரழிவுகள் எக்காலத்திலுமிருந்ததைக் காட்டிலும் அதிகமான உயிர்களை பலிவாங்கியிருக்கின்றன.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
முந்தையக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பங்ளாதேஷின் வெள்ளப்பெருக்கு ஓர் உதாரணமாகும். “நேப்பால், வட இந்தியா மற்றும் பங்ளாதேஷிலுள்ள மாபெரும் காட்டுப்பகுதிகளின் அழிவு சமீப ஆண்டுகளில் பங்ளாதேஷை வாதித்திருக்கும் வெள்ளப்பெருக்குகளுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது” என்பதாக விஞ்ஞானிகள் இப்பொழுது சொல்லுகிறார்கள். (குரல் [Voice] பத்திரிகை) காடுகளை அழித்தல், பங்ளாதேஷில் ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கு ஒரு வெள்ளம் என்ற வீதத்தை 4 ஆண்டுகளுக்கு ஒரு வெள்ளம் என்பதாக உயர்த்திவிட்டிருக்கிறது என்பதாக மற்றொரு அறிக்கை சொல்லுகிறது. உலகின் மற்ற பாகங்களில் அதேப் போன்ற மனித குறுக்கீட்டு செயல்கள் சம அளவு அழிவுக்குரிய விளைவுகளுக்கு வழிநடத்தியிருக்கின்றன—வறட்சி, காட்டுத் தீ மற்றும் நிலச்சரிவுகள். ஆம், மனித செயல்கள்—புரியாத விதி அல்ல—இயற்கையின் பேரழிவுகளை உண்டுபண்ணவோ அல்லது தீவிரப்படுத்தவோ செய்கிறது.
அது அவ்விதமாக இருப்பதன் காரணமாக, மனித செயல்கள் எதிர்மாறானதையும்கூட செய்ய வேண்டும். ஆபத்துக்களை குறைக்க வேண்டும். அது அவ்விதமாக இருக்கிறதா? ஆம், இந்த உண்மைகளைச் சிந்தித்துப் பாருங்கள்: ஐக்கிய நாடுகளமைப்பின் உலக நாடுகள் குழந்தை நல அவசர ஏற்பாட்டு நிதி, பல ஆண்டுகளாக பங்ளாதேஷின் உட்புறப் பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பார்வையிழந்து வந்திருக்கின்றனர் என்று அறிவிப்பு செய்கிறது. மாற்ற முடியா விதியினால் இது ஏற்பட்டதா? இல்லவே இல்லை. ஐக்கிய நாடுகள் குழந்தை நிதி பணியாட்கள், அங்குள்ள தாய்மார்களை தங்கள் குடும்பத்துக்கு வெறும் அரிசி மட்டுமல்லாமல், பழங்களையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளும்படியாக செய்த பின்பு கண்நோய் மறைய ஆரம்பித்தது. இதற்குள், உணவில் இந்த மாற்றம் பங்ளாதேஷில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பார்வை இழப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர்.
அதேவிதமாக, புகைபிடிக்காதவர்கள் சராசரியாக புகைபிடிப்பவர்களைவிட மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்கிறார்கள். இருக்கை பட்டிகை அணிந்து கொள்ளும் மோட்டார் வாகன பயணிகள், அவ்விதமாகச் செய்யாதவர்களைவிட குறைந்த சாவுக்கேதுவான விபத்துக்களையே அனுபவிக்கிறார்கள். தெளிவாகவே உங்கள் சொந்த செயல்களே—விதி அல்ல—உங்கள் வாழ்க்கையின் மீது செல்வாக்கு செலுத்துகிறது.
விதிவாதக் கொள்கையும் சாவுக்கேதுவான விளைவுகளும்
குறிப்பிடப்பட்டபடியே, விதிவாதம் உங்கள் வாழ்க்கையை குறுக்கிவிடவும்கூடும். எவ்விதமாக “அதிக பயங்கரமான வகையான விதிவாதத்தின் உதாரணங்களை” கலந்தாலோசிக்கையில், மத கலைக்களஞ்சியம் (Encyclopedia of Religion) இவ்விதமாகச் சொல்லுகிறது: “தனி மனித வாழ்வின் மதிப்புக்கு வெகுவாக அப்பாற்பட்டதாக கருதப்படுகிற விதியைப் பற்றிய கருத்துக்கு (Schicksal) பிரதிபலிக்கும் வகையில், ஜப்பானிய தற்கொலை படையின் நீர்மூழ்கி குண்டு தாக்குதல்களைப் பற்றியும் ஹிட்லரின் ஆட்சியின் போது ஜெர்மானிய விசேஷ காவல் படையினரின் இருப்பிடங்களில் தற்கொலைகளைப் பற்றியும் இரண்டாம் உலகப் போரிலிருந்து நாம் அறிந்திருக்கிறோம்.” அதிக சமீப காலங்களில், இஸ்லாமுக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் குறியிலக்குகளின் மீது, சமய உணர்ச்சியினால் தூண்டப்பட்டு நடத்தும் தற்கொலை தாக்குதல்கள் . . . அண்மை கிழக்கத்திய தேசங்களில் செய்தித்தாள் அறிக்கைகளில் பெரும்பாலும் வழக்கமாக இடம் பெறும் அம்சங்களாகிவிட்டன” என்பதாக அதே மூல ஆதார ஏடு குறிப்பிடுகிறது. “ஒருவர் மரிக்கவேண்டும் என்று எழுதப்பட்டிராவிட்டால், அவர் எந்தத் தீங்கையும் அனுபவிக்கமாட்டார்” என்ற உறுதியான நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கான இளவயது போர்வீரர்கள் யுத்தக்களத்திற்குள் பிரவேசித்தார்கள் என்று இப்படிப்பட்ட அறிக்கைகள் சொல்கின்றன.
என்றபோதிலும் மதிப்புக்குரிய முகமதிய போதகர்களும்கூட இப்படிப்பட்ட துணிச்சலான நடத்தைக்கு ஆட்சேபணை தெரிவிக்கின்றனர். உதாரணமாக அதிகாரி ஒருவர் சொன்னார்: “தீயில் இருக்கும் ஒரு நபர் கடவுளுடைய சித்தத்துக்குத் தன்னை ஒப்படைத்துவிட வேண்டும், ஆனால் இன்னும் தீயில் இராதவர் தன்னை அதற்குள் எறிந்துவிட அவசியமில்லை.” விசனகரமாக, அதிகாரியின் ஆலோசனைக்கு இசைவாக பெரும் எண்ணிக்கையான போர்வீரர்கள் நடந்துகொள்ளவில்லை. சுமார் எட்டு ஆண்டு கால போரின் போது, ஈரானில் சுமார் 4,00,000 மரணங்கள் ஏற்பட்டன—இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய மாகாணங்களில் ஏற்பட்டதைவிட அதிகமான போர் மரணங்கள்! தெளிவாகவே, விதிவாதக் கொள்கை உங்கள் வாழ்நாளை குறுக்கிடக்கூடும். அது உங்கள் எதிர்கால வாழ்க்கையையும்கூட ஆபத்துக்குள்ளாக்கக்கூடும். எவ்விதமாக?
விதியில் நம்பிக்கையுடையோர் எதிர்காலம், கடந்தக் காலத்தைப் போன்றே தவிர்க்கமுடியாததாகவும் அறுதி செய்யப்பட்டதாகவும் இருப்பதாக நம்புவதன் காரணமாக அவர் எளிதில் ஆபத்தான பண்பியல்பை உருவாக்கிக் கொள்ளக்கூடும். என்ன பண்பியல்பு? இறையியல் என்சைக்ளோபீடியா (Encyclopedia of Theology) பதிலளிக்கிறது: “தனிநபர் . . . தவிர்க்கமுடியாததாகத் தோன்றுகிற ஒரு சமுதாய செயல்முறையில் உதவியற்றவராக, அற்பமானவராக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறவராக உணருகிறார். இது ஒரு செயலின்மையைத் தூண்டுகிறது. அனைத்துமே ஒரு புதிரான ஆனால் உன்னதமான விதியையே சார்ந்திருக்கிறது என்ற குருட்டு நம்பிக்கையான விளக்கத்தை நன்றியோடு பற்றிக்கொள்கின்றது.”
செயலின்மையை எது அதிக ஆபத்தானதாக்குகிறது? அது தோல்வியைப் பற்றிய ஓர் அறிவற்ற மனநிலைக்கு அநேகமாக வழிநடத்துகிறது. இது விதியில் நம்பிக்கையுடையோரை எந்த ஒரு முன்முயற்சியும் செய்வதிலிருந்து அல்லது கடவுளுடைய மகத்தான அழைப்புக்கு பிரதிபலிப்பதிலிருந்தும்கூட தடை செய்கிறது: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள் . . . உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள். கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்.” (ஏசாயா 55:1–3) விதியில் நம்பிக்கையின் காரணமாக முன்னால் “வரு”வதற்கும் “செவி சாய்ப்பதற்கும்” தவறும் போது பூமியின் மீது நிலைநாட்டப்படும் வர இருக்கும் பரதீஸில் என்றுமாக “பிழைத்”திருக்கும் வாய்ப்பை இழந்து போவதில் இது விளைவடையக்கூடும். செலுத்துவதற்கு என்னே ஒரு பெருமதிப்புள்ள விலை!
ஆகவே நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? மனிதரின் சிந்தனையில் விதிவாத எண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தில் நீங்கள் வாழ்ந்து வந்தால், அந்த நம்பிக்கையை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும். என்றபோதிலும், உங்களுடைய தற்கால மற்றும் எதிர்கால வாழ்க்கை பெருமளவில் உங்கள் சொந்த செயல்களினால் உருவாக்கப்படுகிறது என்பதைக் காண, இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்பட்ட ஆட்சேபணைகள் உதவி செய்திருக்கக்கூடும்.
நீங்கள் பார்த்த வண்ணமாகவே, பகுத்தறிவு, உண்மைகள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, பரிசுத்த வேதாகமம் விதிவாதத் தோல்வியான மனநிலைக்கு நீங்கள் அடிபணிந்துவிடக் கூடாது என்பதைக் காண்பிக்கின்றன. மாறாக, இயேசு துரிதப்படுத்திய வண்ணமே: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க கடுமையாக முயற்சி செய்யுங்கள்.” (லூக்கா 13:24 The Emphatic Diaglott, இன்டர்லீனியர் வாசிப்பு) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? பைபிள் விளக்கவுரையாளார் ஒருவர் இவ்விதமாக விளக்குகிறார்: [கடுமையான முயற்சி செய்] என்ற வார்த்தை கிரேக்க விளையாட்டுகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய ஓட்டப்பந்தயங்களில். . .அவர்கள் வெற்றி பெற பாடுபட்டார்கள் அல்லது கடுமையாக முயற்சி செய்தார்கள் அல்லது தங்களுடைய எல்லா சக்திகளையும் செயலில் ஈடுபடுத்தினார்கள்.” வாழ்க்கையில் தோல்விக்கு நீங்கள் தலைவணங்குவதற்குப் பதிலாக, வெற்றியடையவே நீங்கள் பாடுபட வேண்டும் என்று இயேசு துரிதப்படுத்திக்கொண்டிருந்தார்!
ஆகவே விதியினால்-ஏவப்பட்ட எந்தச் செயலின்மையையும் உதறித் தள்ளிவிடுங்கள். கடவுளுடைய வார்த்தை துரிதப்படுத்தும் வண்ணமாக ஜீவனுக்கான ஓட்டத்தில் பிரவேசியுங்கள். விதியில் நம்பிக்கை உங்கள் வேதத்தை குறைத்துவிட அனுமதியாதேயுங்கள். (1 கொரிந்தியர் 9:24-27 பார்க்கவும்) ஏவப்பட்டு எழுதப்பட்ட அழைப்புக்கு வேகமாக பிரதிபலிப்பதன் மூலம் வேகத்தைக் கூட்டுங்கள்: “நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்து கொள்.” அந்தத் தெரிவை நீங்கள் எவ்வாறு செய்யலாம்? “உன் தேவனாகிய கர்த்தரின் (.யெகோவாவில் NW) அன்பு கூர்ந்து, அவர் சத்தியத்திற்குச் செவி கொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக.” அவ்விதமாகச் செய்வது வெற்றிக்கு வழிநடத்தும், ஏனென்றால், யெகோவாவே உங்களுக்கு “ஜீவனும் தீர்க்காயுசுமானவராக” நிரூபிப்பார்.-உபாகமம் 30:19,20. (W90 8/15)
[பக்கம் 7-ன் படம்]
மோசே விதியைப் பிரசங்கிக்கவில்லை, ஆனால் இவ்வாறு துரிதப்படுத்தினார்: “பிழைக்கும்படிக்கும் நீ ஜீவனைத் தெரிந்துகொள்.”