உடன் கிறிஸ்தவர்களுக்குப் பணம் கடனளித்தல்
பெட்ரோவும் கார்லோஸும் நல்ல நண்பர்களாயிருந்தனர்.a அவர்கள் உடன் கிறிஸ்தவர்கள், மேலும் அவர்களுடைய குடும்பங்கள் அடிக்கடி அனலான கூட்டுறவை அனுபவித்து மகிழ்ந்தன. எனவே, கார்லோஸுக்கு, அவருடைய வியாபாரத்திற்கு சிறிது பணம் தேவைப்பட்டபோது பெட்ரோ அதை அவருக்குக் கடனாக அளிக்கத் தயங்கவில்லை. “நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்ததால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை,” என்று பெட்ரோ விளக்குகிறார்.
என்றபோதிலும் இரண்டே மாதங்களுக்குப் பின்னர், கார்லோஸின் வியாபாரம் நொடித்துப்போனபோது, திருப்பிக்கொடுப்பதும் நின்றுபோனது. கார்லோஸ், அவர் கடனாகப் பெற்ற பணத்தின் பெரும்பகுதியை வியாபாரத்திற்கல்லாத கடன்களைத் தீர்க்கவும், ஆடம்பரமாக வாழ்வதற்கும் செலவழித்திருக்கிறார் என்பதை பெட்ரோ அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஒரு வருடகால நேரடியான சந்திப்புகள் மற்றும் கடிதங்களுக்குப் பின்னரும் காரியம் பெட்ரோவின் திருப்திக்கிணங்கத் தீர்க்கப்படவில்லை. ஏமாற்றத்தினால், பெட்ரோ அதிகாரத்தினிடம் சென்று—தன் நண்பனும் கிறிஸ்தவ சகோதரருமான—கார்லோஸை சிறையிடச் செய்தார்.b இது சரியான ஒரு நடவடிக்கையா? நாம் பார்ப்போம்.
உலக முழுவதிலும், பணக்கடன்களால் உண்டாகும் கருத்து வேற்றுமைகளும், தவறாக புரிந்துகொள்ளுதலுமே மக்களிடையே நட்புமுறிவதற்கு அடிக்கடி ஒரு காரணமாக இருக்கிறது. சில சமயங்களில் உடன் கிறிஸ்தவர்களிடையே பூசல்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகவும் கூட இருக்கிறது. பல நாடுகளில் வங்கிகளில் கடன் பெறுவது கடினம், எனவே பண உதவி தேவைப்படுவோர் நண்பர்களையோ உறவினர்களையோ அணுகுவது மக்களிடையே பொதுவாக உள்ளது. என்றபோதிலும் பெட்ரோ மற்றும் கார்லோஸின் சோக அனுபவமானது, கடன் பெறுபவர் மற்றும் கடன் கொடுப்பவர் ஆகிய இருதரப்பினரும் பைபிள் நியமங்களைக் கவனத்துடன் கடைபிடிக்காவிட்டால், வினைமையான பிரச்னைகள் தோன்றும் என்பதைக் காட்டுகிறது. எனவே, உடன் கிறிஸ்தவரின் கடனுக்கான ஒரு வேண்டுகோளைக் கையாளும் சரியான விதம் என்ன?
கடன் வாங்குவதின் விளைவைக் கணக்கிடுதல்
தேவையற்ற கடன்வாங்குதலை பைபிள் தடைசெய்கிறது. “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கூறுகின்றார். (ரோமர் 13:8) எனவே கடன் வாங்குமுன், அவ்வாறு செய்வதின் விளைவைக் கணக்கிடுங்கள். (லூக்கா 14:28-ஐ ஒப்பிடுங்கள்.) பணம் கடன்வாங்குவதற்கான ஒரு தேவை உண்மையிலேயே இருக்கிறதா? உங்கள் குடும்பத்தைக் கவனிப்பதற்காக, உங்கள் பிழைப்புக்கான ஒரு விஷயமாக அது இருக்கிறதா? (1 தீமோத்தேயு 5:8) அல்லது ஓரளவு பேராசை அதில் உட்பட்டுள்ளதா—ஒருவேளை அதிக ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஒரு விருப்பமாக இருக்குமா?—1 தீமோத்தேயு 6:9, 10.
மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், கடனை வாங்குவது உங்களை நீண்ட மணிநேரங்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தி, ஒருவேளை கூட்டங்களையும் வெளி ஊழியத்தையும் அலட்சியம் செய்ய வற்புறுத்துமா? மேலும், அடுத்தவருடைய பணத்தை உண்மையில் ஆபத்துக்குள்ளாக்குவது உங்களால் முடியுமா? அந்த வியாபாரம் அல்லது பொறுப்பேற்பு தோல்வியுற்றால் என்னவாகும்? “துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமல் போகிறான்,” என்பதை நினைவில் வையுங்கள்.—சங்கீதம் 37:21.
கடன்கொடுப்பவரிடம் ‘உண்மை பேசுதல்’
இத்தகைய காரியங்களைக் கருத்தூன்றிப் பார்த்த பின்னரும்கூட ஒரு வியாபாரக்கடன் தேவையென நீங்கள் உணரலாம். உலகப்பிரகாரமான வழிகளில் அதைப் பெறமுடியாவிடில், ஓர் உடன் கிறிஸ்தவரை அணுகுவது தவறாகாது, ஏனெனில் இயேசு லூக்கா 11:5-ல் குறிப்பிட்டபடி தேவை ஏற்படும் சமயத்தில் நண்பர்களை அணுகுவது இயற்கையானது. என்றபோதிலும், ஒருவர் “உண்மை பேசுவதற்கு” முயற்சி எடுக்க வேண்டும். (எபேசியர் 4:25) நேர்மையாக, உட்பட்டிருக்கும் எல்லாக் காரியங்களையும் விளக்குங்கள்—நிகழாது என்று தோன்றுபவைகள் உட்பட எல்லா ஆபத்துகளையும். கடன் கொடுக்கக்கூடியவர், விஷயங்கள் தனக்குத் திருத்தமாகத் தெரிகின்றதா என்பதற்காக ஏராளமான, குறிப்பான கேள்விகளைக் கேட்டால் குற்றமாக எடுக்காதீர்கள்.c
ஒரு காரணத்திற்காகக் கடன்வாங்கி வேறொன்றிற்காகப் பணத்தைச் செலவழித்தால் அது உண்மை பேசுவதாகுமா? இல்லை. ஒரு லத்தீன்–அமெரிக்க வங்கியாளர் விளக்குகிறார்: “ஒரு வங்கி உங்கள் வைப்புத் தொகையைச் சரிக்கட்டுவதுடன், உடனடியாகக் கடனைக் கொடுக்காவிடில், உங்கள் உடைமைகளைப் பறித்துச் செல்வதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளும்.” வியாபாரத்தின் லாபத்தை அதிகரிக்குமென்ற அடிப்படையின் கீழ் பணம்கொடுக்கப்பட்டிருந்தால், அதை வேறு காரியத்துக்கு உபயோகிப்பதானது, கடன் திருப்பித்தரப்படும் என்ற நிச்சயத்தைக் கடன் கொடுத்தவரிடமிருந்து எடுத்துப்போடுவதில் விளைவடைகிறது. உண்மையில் உடன்கிறிஸ்தவர்களிடம் கடன் வாங்கும்போது நீங்கள் சட்டப்பூர்வமான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயப்படமாட்டீர்கள். என்றாலும், “கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை,” மேலுமாக அவரிடமாக நேர்மையாக இருப்பதற்கான உத்தரவாதம் உங்களுக்கு உண்டு.—நீதிமொழிகள் 22:7.
வியாபாரத்தில் பொன்விதியைப் பொருத்துதல்
இயேசு சொன்னார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) நாம் உடன்கிறிஸ்தவருடன் வியாபாரம் செய்யும்போது இந்த விதி மேலோங்கியிருக்க வேண்டுமென்பது எவ்வளவு முக்கியம்! உதாரணமாக, உங்களுடைய கடனுக்கான வேண்டுகோளை ஒரு சகோதரர் மறுத்துவிட்டால் நீங்கள் எப்படி பிரதிபலிப்பீர்கள்? உங்கள் நட்பை அவர் ஏமாற்றிவிட்டாரென உணருவீர்களா? அல்லது அவருடைய பணம் அவருக்குத் தேவையாக இருக்கலாம் அல்லது நீங்கள் மதிப்பிடுவதைவிட ஆபத்துக்கள் அதிக வினைமையானவை என்று அவர் எண்ணலாமென்ற உண்மையை உணர்ந்து, தராமலிருப்பதற்கான அவருடைய உரிமையை மதிப்பீர்களா? பணத்தைப் பயன்தரத்தக்க விதத்தில் கையாளும் உங்கள் திறமையை அவர் நேர்மையாகவே சந்தேகிக்கலாம். அப்படியென்றால், அவருடைய மறுப்பானது, நடைமுறையானதாகவும், அன்பானதாகவும் இருக்கக்கூடும்.—நீதிமொழிகள் 27:6.
ஒரு நண்பர் கடன்தர சம்மதித்தால், எவ்வளவு பணம் கடன் வாங்கப்பட்டது, அந்தப் பணம் எதற்கு செலவிடப்படும், கடனுக்கான காப்பீட்டுச் சொத்துகள் என்ன, எப்படி, எப்பொழுது திருப்பித் தரப்படும் என்பவைகள் உட்பட விவரங்கள் எழுத்தில் எழுதப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், அந்த ஒப்பந்தமானது ஒரு வழக்கறிஞரால் எழுதப்படுவதோடு அல்லது மேற்பார்வையிடப்படுவதோடுகூட சட்டப்பூர்வமாக அரசாங்கத்தில் பதிவுசெய்வது ஞானமானதாக இருக்கும். எப்படியென்றாலும், ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானதென்றால், “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்.” (மத்தேயு 5:37) உங்கள் நண்பனிடமான உங்கள் கடமைபொறுப்பை, வங்கியினிடமாக இருந்தால் எவ்வளவு வினைமையாக எடுத்துக்கொள்வீர்களோ அவ்விதம் எண்ணாமல், அவருடைய நல்லெண்ணத்தின் மீது தகாத சலுகை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
எச்சரிக்கையாகப் பணம்கொடுப்போர்
நீங்கள் கடனுக்காக அணுகப்பட்டால் என்ன? உட்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களை அதிகம் சார்ந்திருக்கும். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவ சகோதரர் தன்னுடைய தவறினால் அல்லாமல், ஒரு பொருளாதார நொடிப்பில் விழ நேரிடலாம். உங்களிடம் செய்வதற்கு வேண்டிய பொருள் இருந்தால், கிறிஸ்தவ அன்பு, ‘அவருடைய சரீரத்திற்குத் தேவையானவைகளை அவருக்குத் தர’ உங்களைத் தூண்டும்.—யாக்கோபு 2:15, 16.
ஒரு சகோதரருடைய துன்பத்தை அனுகூலமாக்கிக்கொண்டு அந்தக் காரியத்தில் வட்டிக் கேட்பது எவ்வளவு அன்பற்றதாயிருக்கும்! இயேசு இவ்விதமாக துரிதப்படுத்தினார்: “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள்; [வட்டியின்றி, NW] கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்.”—லூக்கா 6:35; லேவியராகமம் 25:35–38-ஐ ஒப்பிடுங்கள்.
என்றபோதிலும், வெறுமென ஒரு வியாபாரத்திற்கு முதலீடு செய்யவோ அல்லது கடன் பெறவோ நீங்கள் கேட்கப்பட்டால் என்ன? பொதுவாக, இந்த விஷயங்கள் பண முதலீடுகளாக அணுகப்படுவதே மிகவும் நல்லது. பைபிள் தெளிவாகவே, எச்சரிப்பூட்டி அறிவுரை கூறுகிறது: “கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைக்கப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.”—நீதிமொழிகள் 22:26.
காரியம் இப்படியாக இருக்க, நீங்கள் உண்மையிலேயே அந்த முதலீட்டைத் தாங்கிக் கொள்ள முடியுமாவென்று, முதலாவது நீங்கள் தீர்மானிக்க வேண்டும். வியாபாரம் தோல்வியுற்றாலோ அல்லது கடன்பெற்றவர் காலத்தில் அதைத் திருப்பித் தராவிட்டாலோ அது உங்களுக்குப் பொருளாதார அழிவைக் கொண்டுவருமா? அந்தக் கடனைத் தாங்கிக் கொள்ள முடிந்து, லாபங்கள் செய்யப்பட்டால் அவைகளில் பங்கு பெறுவதற்கும், உங்கள் கடன்மேல் நியாயமான வட்டி பெறவும் உங்களுக்கு உரிமையுண்டு. (லூக்கா 19:22, 23-ஐ ஒப்பிடுங்கள்.) நீதிமொழிகள் 14:15 எச்சரிக்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின் மேல் கவனமாயிருக்கிறான்.” பொதுவாக சாமர்த்தியமாக இருக்கும் வியாபாரிகள் உடன் கிறிஸ்தவர்களுடன் வியாபாரம் செய்யும்போது, எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியிருக்கின்றனர். அதிக வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற கவர்ச்சி, சிலரை துணிச்சலான முதலீடுகளை செய்ய வைத்து, அவைகளில் தங்கள் பணத்தையும் உடன் கிறிஸ்தவர்களுடன் கொண்ட நட்பையும் இழக்கவைத்திருக்கிறது.
வங்கியாளர்கள், ஒரு கடன் எவ்வளவு ஆபத்தானது என்பதை அளவிட மூன்று காரியங்களை அடிக்கடி சிந்திப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது: (1) கடன் கேட்கும் நபரின் குணம், (2) திருப்பித் தருவதற்கான அவருடைய திறமை, (3) அவருடைய வியாபாரத்தின் வழியில் இருக்கின்ற நிலைமைகள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தை ஒருவருக்குக் கடனாகக் கொடுக்குமுன்பு, விஷயங்களை இதேவிதமாக அளந்துபார்ப்பது “மெய்ஞானத்தைக்” காட்டுவதாகாதா?—நீதிமொழிகள் 3:21.
உதாரணமாக, பணம் கேட்கும் சகோதரரின் நற்பெயர் என்ன? அவர் நம்பத்தகுந்தவராகவும் மாறாதவராகவும் அறியப்பட்டிருக்கிறாரா அல்லது துணிச்சலானவராகவும், நிலையற்றவராகவுமா? (1 தீமோத்தேயு 3:7-ஐ ஒப்பிடுங்கள்.) அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்பினால் இதுவரையில் வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறாரா? (லூக்கா 16:10) இல்லையென்றால், தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய பணத்தைக் கடனாகத் தருவதைவிட, அவருடைய பணத்தைக் கையாளுவதற்கு நடைமுறையான உதவியைத் தருவது காலப்போக்கில் அதிக உதவியாக இருக்கும்.
மற்றொரு காரியம், அந்தச் சகோதரரின் திருப்பித்தரும் திறமை. அவருடைய வருமானம் என்ன? அவர் என்ன கடன்களைக் கொண்டுள்ளார்? அவர் உங்களுடன் வெளிப்படையாகப் பேச வேண்டுமென்பது நியாயமானதே. என்றாலும், கிறிஸ்தவ அன்பு இன்னும் மேலோங்கியிருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒருவேளை கடனுக்கு எதிராக அந்தச் சகோதரரின் விற்கக்கூடிய சொத்துக்களைக் கொள்ள விரும்பலாம். கடனுக்கு ஈடாக ஒரு மனிதருடைய பிழைப்புக்கான வழிமுறையையோ அல்லது அவருடைய அடிப்படை சொத்துக்களையோ கவர்ந்து கொள்வதை மோசேயின் நியாயப்பிரமாணம் கண்டனம் செய்தது. (உபாகமம் 24:6, 10–12) ஆகவே ஒரு சகோதரருடைய விற்கக்கூடிய சொத்துக்களில் பாதித் தொகையளவே தான் கடன் தருவதாக வியாபாரியான ஒரு தென் அமெரிக்க சகோதரர் சொல்கிறார். “அவருடைய தொழிலுக்கான கருவியையோ அல்லது அவருடைய வீட்டையோ நான் விற்கக்கூடிய சொத்தாக கருதுவதில்லை. என்னுடைய பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக அவருடைய வீட்டை கவர்ந்துகொண்டு, அவரைத் தெருவில் நிற்க வைப்பதை நான் நிச்சயமாகவே விரும்புவதில்லை.”
கடைசியாக நீங்கள் வாழும் இடத்தில் உள்ள பொதுவான வியாபார நிலைமைகளை நீங்கள் உண்மையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நாம், மனிதர்கள் “பணப்பிரியராயும், . . . துரோகிகளாயும்” இருக்கும் “கடைசி நாட்களில்” வாழ்ந்துவருகிறோம். (2 தீமோத்தேயு 3:1–4) உங்களுடைய நண்பரும், சகோதரரும் நேர்மையாக இருந்தாலும், அவருடைய கூட்டாளிகள், பணியாட்கள், மற்றும் வாடிக்கைக்காரர்கள் அவ்வாறு இல்லாமலிருக்கலாம். ஒரு கிறிஸ்தவராக, அவருடைய போட்டியாளர்கள் உபயோகிக்கக்கூடிய தந்திர வழிகளான இலஞ்சம் மற்றும் பொய்கூறுவது ஆகியவற்றை அவர் உபயோகிக்க முடியாது. அதனுடன் கூட “சமயம் மற்றும் எதிர்பாராத சம்பவங்களினால்” விளையும் அழிவுகளையும் கருதவேண்டும். (பிரசங்கி 9:11) விற்பனைப் பொருட்களின் மதிப்பு சரிந்துவிடலாம். உயர்ந்துசெல்லும் பணவீக்கமானது, ஒரு வியாபாரத்தைக் கெடுக்கலாம் அல்லது உங்களுடைய கடனின் மதிப்பை அடியோடு துடைத்துவிடலாம். திருட்டுகள், விபத்துகள், நாசவேலை மற்றும் காயங்கள் இவையுங்கூட வியாபாரத்தின் விரும்பத்தகாத நிஜங்களாகும். உங்களுடைய தீர்மானத்தை எடுக்கும்போது நீங்கள் இந்த எல்லாக் காரியங்களையும் சிந்திக்கவேண்டும்.
தோல்வி
சில சமயங்களில் இந்த எல்லா எச்சரிக்கைகளுக்குப் பின்னும், ஒரு கிறிஸ்தவன் கடனைத் திருப்பித் தர முடியாமல் போய்விடுகிறது. தனக்கு கடன் தந்தவரிடம் ஒழுங்காகத் தொடர்பு கொள்ள பொன்விதியானது அவரைத் தூண்ட வேண்டும். ஒருவேளை, சிறிது காலத்துக்கு சிறிய தொகையே திருப்பித் தருவது கூடியதாக இருக்கலாம். இருந்தாலும், அடையாளமான கடனடைத்தல், தன் கடமைப்பொறுப்பை நிறைவேற்ற உண்மையான தியாகங்களைச் செய்வதிலிருந்து தன்னை விடுவிப்பதாக ஒரு கிறிஸ்தவன் உணரக்கூடாது. (சங்கீதம் 15:4) கிறிஸ்தவராகிய கடன் கொடுத்தவரும் அன்பைக் காட்ட கடமைப்பட்டிருக்கிறார். தான் தந்திரமாக ஏமாற்றப்பட்டிருப்பதாக அவர் உணர்ந்தால் அவர் மத்தேயு 18:15–17-ல் இருக்கும் புத்திமதியைப் பொருத்தலாம்.
ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பெட்ரோவின் காரியத்தைப் போன்று, உலக அரசாங்க அதிகாரத்தை உட்படுத்துவது, பொருத்தமாக இருக்காது. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்: “உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? . . . சகோதரனுக்கும், சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா? சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான். அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான். நீங்கள் ஒருவரோடு ஒருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்கிறதில்லை?”—1 கொரிந்தியர் 6:1–7.
உலகப் பிரகாரமான நீதிமன்றத்திலோ அல்லது அரசாங்க அமைப்பினாலோ சரிசெய்யப்படுவதைத் தேவைப்படுத்துவது போன்ற—விசுவாசமில்லாத கூட்டாளிகள், உலகப்பிரகாரமான பொருள் வழங்குபவர் அல்லது காப்புறுதிப் பற்றிய காரியங்கள் ஆகியவற்றைப் போன்ற—சில சூழ்நிலைமைகள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில், திருப்பித் தரமுடியாத கடனுக்காக ஒரு சகோதரர் மீது வழக்குத் தொடருவது கொண்டுவரும் அவமானத்திற்கு சபையை ஆளாக்குவதைவிட, ஒரு கிறிஸ்தவன் சிறிது பண நஷ்டத்தை அனுபவிப்பதைத் தெரிந்தெடுப்பான்.
பெரும்பாலான சமயங்களில், இவ்வளவு மோசமான விளைவுகள் தவிர்க்கப்படக்கூடும். எப்படி? ஒரு சகோதரரிடமிருந்து கடன் பெறுவதற்கோ அல்லது கடன் கொடுப்பதற்கோ முன்பே, வரக்கூடிய தீங்குகளைக் குறித்து உணர்வுடனிருங்கள். எச்சரிக்கையையும் ஞானத்தையும் கடைப்பிடியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, வியாபார காரியங்கள் உட்பட, “உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.”—1 கொரிந்தியர் 16:14.
(w91 10/15)
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b சில தேசங்களில், கடன் தீர்க்க வகையில்லாமல் போவதும் தவணை செலுத்த தவறுவதும் சிறையிடப்படுவதில் விளைவடைகிறது.
c சிலர், பலரிடமிருந்து சிறிய தொகைகளைக் கடனாக பெற்றுக்கொண்டிருக்கின்றனர். கடன் கொடுத்த ஒவ்வொருவரும், முழு மொத்தமான நிலைமையைப் பற்றிய முழு உண்மைகளையும் அறியாதவராய், கடன்வாங்கியவர் எளிதில் திருப்பித் தந்துவிடுவார் என்பதாக நினைக்கக்கூடும்.