என் சகோதரனிடம் கடன் கேட்கலாமா?
சைமனின் கடைசி பிள்ளை படுத்த படுக்கையாக கிடக்கிறது. அதற்கு அவசரமாக மருந்து மாத்திரை வாங்கவேண்டும். சைமனோ மிகவும் ஏழை, அவரால் அதை வாங்கமுடியாது. இப்பொழுது அவர் பணத்துக்கு எங்கே போவார்? மைக்கேல் வசதிபடைத்த உடன் கிறிஸ்தவர். அவரிடம் கடன்கேட்டால் நிச்சயம் கிடைக்கும். ஆனால் கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கும் சக்தி தனக்கில்லை என்பது சைமனுக்கே தெரியும்.a
பணம்கேட்டு சைமன் மைக்கேலிடம் வருகிறார், அவருக்கோ தர்மசங்கடமாக இருக்கிறது. உண்மையிலேயே சைமனுக்கு பணம் தேவை என்பது தெரிந்திருந்தாலும், வயிற்றுப்பாட்டுக்கே திண்டாடும் சைமனால் பணத்தை எப்படிக் கொடுக்கமுடியும் என்ற கேள்வியும் அவருடைய மனதில் எழுகிறது. இப்போது மைக்கேல் என்ன செய்வார்?
அநேக தேசங்களிலுள்ள மக்கள் வயிற்றுப்பிழைப்புக்காக தாங்கள் செய்யும் வேலையை திடீரென இழந்துவிடலாம், அதனால் மருத்துவ செலவை சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம். வங்கியில் கடன் வாங்குவது ஒன்றும் அவ்வளவு சாமானியமாக இருக்காது அல்லது அதற்கு இமாலய வட்டி செலுத்த வேண்டி இருக்கும். ஒரு ஆத்திர அவசரத்திற்கு கடன் வாங்குவதை விட்டால் வேறு வழியே இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்வது? இதோ, கடன் கேட்பதற்கு முன்பு நீங்கள் சிந்திக்கவேண்டிய சில முக்கிய விஷயங்கள்.
செலவைக் கணக்குப்பாருங்கள்
கடன் கொடுப்பவர், கடன் வாங்குபவர் ஆகிய இருவருக்குமே பைபிள் நல்ல ஆலோசனைகளை அளிக்கிறது. இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம், அநேக தப்பெண்ணங்களையும் மனவருத்தங்களையும் நாம் தவிர்க்க முடியும்.
உதாரணமாக, பணம் கடன்வாங்கும் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது என பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. ரோமிலிருந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு உந்துவித்தார்: “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.” (ரோமர் 13:8) சரியாகச் சொன்னால், ஒரு கிறிஸ்தவன் மற்றவர்களிடம் அன்பில் மட்டுமே கடன்பட்டிருக்க வேண்டும். ஆகவே, முதலாவதாக, ‘இந்தக் கடன் உண்மையில் அவசியமா?’ என நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்.
கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் எதையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்ப்பது ஞானமானது. முக்கியமான தீர்மானங்களை மிக கவனமாக திட்டமிட்டு செய்வது அவசியம் என்பதை இயேசு கிறிஸ்து காண்பித்தார். அவருடைய சீஷர்களிடம் இவ்வாறு கேட்டார்: “உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா என பார்க்கமாட்டாரா?” (லூக்கா 14:28, பொ.மொ.) ஒரு சகோதரரிடம் கடன் கேட்கலாமா வேண்டாமா என்பதை யோசிக்கையில் இந்த நியமம் பொருந்துகிறது. கடனுக்கு ஆகும் செலவைக் கணிப்பது என்றால் நாம் பணத்தை எப்படி கொடுப்போம், எப்போது கொடுப்போம் என்று முன்யோசனை செய்வதை அர்த்தப்படுத்துகிறது.
கடன் கொடுப்பவருக்கு, பணம் எப்போது திரும்பி வரும் என்பதைத் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது. எல்லாவற்றையும் கவனமாக யோசித்து வைத்திருந்தால் நம்மால் அவருக்கு திட்டவட்டமாக பதில் சொல்லமுடியும். நியாயமான ஒரு கால பகுதிக்குள் பணத்தைத் திருப்பித் தருவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை நாம் கணித்திருக்கிறோமா? “முடிந்தவரை சீக்கிரமாக உங்களுக்கு திருப்பித் தந்துவிடுகிறேன். என்னப்பத்தி உங்களுக்குத் தெரியாதா, நீங்க என்ன முழுசா நம்பலாம்” என்று சொல்வது சுலபம்தான். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் இன்னும் அதிக பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்ள வேண்டும் அல்லவா? ஆரம்பத்திலிருந்தே வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டாயம் தரவேண்டும் என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்கவேண்டும், யெகோவா இதை நம்மிடம் எதிர்பார்க்கிறார். “துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்” என்பதாக சங்கீதம் 37:21 சொல்லுகிறது.
வாங்கிய கடனை எப்படி, எப்போது திரும்ப செலுத்துவோம் என்பதைக் கணிப்பது, நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பொறுப்பை நமக்கு நினைப்பூட்டுகிறது. அதோடு அநாவசியமாக கடன்காரர் ஆவதை இது தடுக்கிறது. கடன் வாங்குவதை நம்மால் தவிர்க்க முடிந்தால், நன்மைகள் எத்தனை எத்தனையோ. நீதிமொழிகள் 22:7 எச்சரிக்கிறது: “கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.” கடன் கொடுத்தவர், கடன் வாங்கினவர் ஆகிய இருவருமே ஆவிக்குரிய சகோதரர்களாக இருந்தாலும்கூட, கடன் ஓரளவுக்காவது அவர்களுடைய உறவை பாதிக்கலாம். கடன் விஷயங்களில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் சில சபைகளின் சமாதானத்தையும்கூட குலைத்துப்போட்டிருக்கின்றன.
பணம் ஏன் தேவை என்பதை விளக்குங்கள்
நாம் எதற்காக கடன் வாங்குகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள கடன் கொடுப்பவருக்கு உரிமை இருக்கிறது. இதைத் தவிர, நாம் மற்றவர்களிடமிருந்தும் பணம் கடன் வாங்குகிறோமா? அப்படி வாங்கினால் அதையும் நாம் மறைக்கக்கூடாது, ஏனென்றால் வாங்கிய கடனைத் திருப்பி கொடுப்பதற்கு நமக்கிருக்கும் சக்தியை இது பாதிக்கலாம்.
வியாபாரத்துக்காக கடன் வாங்குவதற்கும் ஏதோ ஒரு ஆத்திர அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கும் இடையே வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். துணிச்சலாக வியாபாரத்தில் இறங்கும் ஒருவருக்குக் கடன் கொடுக்க வேண்டிய வேதப்பூர்வமான நிர்ப்பந்தம் ஒரு சகோதரருக்குக் கிடையாது. ஆனால் வேறொரு சகோதரருக்கு, உணவு, உடை அல்லது அத்தியாவசியமான மருத்துவ செலவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு பணமில்லாமல் போகும் சூழ்நிலையில், நிலைமை அவருடைய கைமீறிப்போகும் பட்சத்தில், அவருக்கு கடன்கொடுக்க விருப்பமுள்ளவராக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதையும் மறைக்காமல், உண்மையோடு நடந்துகொண்டால் மனஸ்தாபங்களைத் தவிர்த்துவிடலாம்.—எபேசியர் 4:25.
எழுதி வையுங்கள்
ஒப்பந்தத்தை எழுத்தில் பதிவு செய்துவிட்டால் பின்னால் தப்பெண்ணங்கள் வரா. இதை செய்வது மிகவும் முக்கியம். ஒரு ஒப்பந்தம் எழுத்துவடிவில் இல்லாவிட்டால் அதிலுள்ள திட்டவட்டமான விவரங்களை எளிதில் மறந்துவிடலாம். கடனாக பெறப்பட்ட தொகையையும், அது எப்போது திருப்பித் தரப்படவேண்டும் என்பதையும் நாம் எழுதிவைப்பது அவசியமாகும். கடன் வாங்கியவரும் கடன் கொடுத்தவருமாகிய இருவருமே ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஆளுக்கொரு நகலை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். பணம் கைமாறும்போது அது எழுதி வைக்கப்பட வேண்டும் என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. எருசலேமை பாபிலோனியர்கள் அழிப்பதற்கு சற்று முன்பாக, யெகோவா எரேமியாவிடம் அவருடைய உறவினர் ஒருவரிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கும்படியாக சொன்னார். இது எப்படி செய்யப்பட்டது என்பதை மறுபடியும் சிந்திப்பது நமக்குப் பயனுள்ளதாயிருக்கும்.
“ஆகையால் என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன். நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு, நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி, முத்திரைப்போடப்பட்ட கிரயபத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து, என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்[தேன்]” என எரேமியா சொன்னார். (எரேமியா 32:9-12) இந்த உதாரணம் ஒரு கடனைப் பற்றி இல்லை. பணம் செலுத்தி நிலத்தை வாங்குவதைப் பற்றியே. ஆனாலும் பணம் கைமாறும்போது, அதை தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையிலும் கையாளுவது முக்கியம் என்பதை இது காட்டுகிறது.—மே 1, 1973 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 287-8-ஐக் காண்க.
பிரச்சினைகள் எழும்போது, கிறிஸ்தவர்கள் மத்தேயு 18:15-17-ல் உள்ள இயேசுவின் ஆலோசனைக்கு இசைவாக அவற்றைத் தீர்த்துக்கொள்ள முயல வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களில் உதவிசெய்திருக்கும் ஒரு மூப்பர் இப்படிச் சொல்லுகிறார்: “நான் பார்த்தவரை யாரும் ஒப்பந்தத்தை எழுத்தில் வைத்திருக்கவில்லை. இதனால், கடனை எப்படித் திருப்பிக் கொடுப்பது என்பதைப் பற்றியதில் இரு தரப்பினருமே ஒருவரையொருவர் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இந்த விஷயங்களை எழுதிவைப்பது அவநம்பிக்கைக்கு அடையாளம் இல்லை, அன்புக்கே அடையாளம் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.”
ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டால், நாம் கொடுத்த வாக்கை மீறக்கூடாது. இயேசு இவ்வாறு அறிவுரைக் கூறினார்: “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.” (மத்தேயு 5:37) எதிர்பாராமல் தலைதூக்கிய ஒரு பிரச்சினையினால் சொன்ன நேரத்தில் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போகையில் கடன் கொடுத்தவரிடம் சென்று நாம் உடனடியாக நம்முடைய சூழ்நிலையை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போது ஒருவேளை தவணை முறையில் கடனைத் திருப்பித்தர அவர் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவகாசம் நமக்குத் தரலாம்.
இருந்தாலும், எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டுவிட்டதால் நமக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று அர்த்தமாகாது. யெகோவாவுக்கு பயப்படுகிற ஒருவர் தான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற தன்னால் ஆனதை எல்லாம் செய்கிறார். (சங்கீதம் 15:4) நாம் எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்காவிட்டாலும், வாங்கிய கடனைத் திருப்பித்தருவதற்காக தியாகங்களைச் செய்ய நாம் தயாராக இருக்கவேண்டும், இது நம் கிறிஸ்தவ பொறுப்பு.
கடன்கொடுக்கும் முன்—ஜாக்கிரதை
எல்லாவற்றையும் கவனமாக சீர்தூக்கிப்பார்க்க வேண்டியவர் கடன்வாங்குபவர் மாத்திரமல்ல. கடன் கொடுக்கும் சகோதரரும் செலவைக் கணிக்க வேண்டும். கடன் கொடுப்பதற்கு முன்பாக, கவனமாகவும் உணர்ச்சிவசப்படாமலும் சிந்திப்பதற்கு நாம் நேரமெடுத்துக்கொண்டால் ஞானமாய் நடந்துகொள்வோம். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைக்கப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.”—நீதிமொழிகள் 22:26.
கடன்கொடுக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பு இதை சற்று யோசித்துப் பாருங்கள்: வாங்கிய கடனை அந்தச் சகோதரரால் திருப்பித்தர முடியாவிட்டால் என்ன நடக்கும்? அப்பொழுது உங்களுக்கே நெருக்கடியான பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமா? அந்தச் சகோதரருக்கு திருப்பித் தரவேண்டுமென்ற நல்லெண்ணம் இருந்தபோதிலும் சூழ்நிலைமைகள் மாறலாம் அல்லது அவர் தப்புக்கணக்குப் போட்டிருக்கலாம். யாக்கோபு 4:14 நம் அனைவருக்கும் இவ்வாறு நினைப்பூட்டுகிறது: “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.”—பிரசங்கி 9:11-ஐ ஒப்பிடுக.
முக்கியமாக வியாபாரத்துக்காக கடன் கொடுக்கும்போது, கடன் வாங்குபவர் எப்படிப்பட்டவர் என்பதை யோசித்துப்பார்ப்பது ஞானமானது. அவர் நம்பகமானவரா, பொறுப்பானவரா? அல்லது பண விஷயத்தில் கொடுக்கல் வாங்கலுக்கே லாயக்கற்றவரா? சபையில் பலரிடமும் சென்று பணம் கேட்கும் பழக்கமுள்ளவரா? பின்வரும் இந்த வார்த்தைகளை மனதில் கொள்வது புத்திசாலித்தனம்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
சில சமயங்களில் கடன் வாங்குவது கடன் வாங்குபவருக்கே நல்லதல்ல. அவருக்கு எளிதில் அது ஒரு சுமையாகி, அவருடைய சந்தோஷத்தைப் பறித்துவிடலாம். இப்படி ஒரு சகோதரர் நமக்கு ‘அடிமையாவது’ நமக்கு விருப்பமா? வாங்கிய பணத்தை அவரால் திருப்பித்தர முடியாவிட்டால், அது நம்முடைய உறவை கெடுத்து, மன உளைச்சலையும் சங்கடத்தையும் வளர்த்துவிடுமா?
உண்மையில் நெருக்கடிநிலை ஏற்படுகையில், கடனாக கொடுப்பதற்கு பதிலாக ஒருவேளை குறைவான தொகையானாலும்கூட அதை இனாமாக கொடுப்பதைப்பற்றி நாம் யோசிக்க முடியுமா? நம்முடைய சகோதரருக்குத் தேவைப்படும்போது இரக்க குணமுள்ளவர்களாக இருக்கும்படி பைபிள் நம்மை ஊக்கப்படுத்துகிறது. “நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்” என்பதாக சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 37:21) அன்பினால் தூண்டப்பட்டு, தேவையிலிருக்கும் சகோதரர்களுக்கு நம்மால் முடிந்த நடைமுறையான உதவியை நாம் செய்ய வேண்டும்.—யாக்கோபு 2:15, 16.
உங்கள் நடவடிக்கைகளை கவனமாக எண்ணிப்பாருங்கள்
கடன் அன்பை முறிக்கும் என்பதால் எடுத்த எடுப்பிலேயே கடன் வாங்கிவிடாமல், வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டுமே கடன் வாங்குவோமாக. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கடன் வாங்குபவர் கடன் கொடுப்பவரிடம் எதையும் மறைக்காமல் கடனாக வாங்கிய பணம் எப்படித் திருப்பித்தரப்படும், எப்போது திருப்பித்தரப்படும் என்பதை எழுத்தில் வைத்திருக்கவேண்டும். உண்மையில் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கும்போது, இனாமாக ஒரு தொகையைக் கொடுப்பதே பிரச்சினைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கலாம்.
சைமன் கேட்ட பணத்தை மைக்கேல் கடனாக தரவில்லை. அதற்கு பதிலாக, அதைவிட குறைவான தொகையை இனாமாக கொடுத்தார். தன்னுடைய பிள்ளையின் மருத்துவ செலவுக்கு உதவியாக பெற்ற பணத்துக்காக சைமன் நன்றிக்கடன்பட்டார். மைக்கேலும்கூட சகோதர அன்பைச் செயலில்காட்ட முடிந்ததற்காக அகமகிழ்ந்தார். (நீதிமொழிகள் 14:21; அப்போஸ்தலர் 20:35) மைக்கல், சைமன் ஆகிய இருவருமே ராஜ்ய ஆட்சியில், கிறிஸ்து ‘கூப்பிடுகிற எளியவனை விடுவிக்கப்போகும்’ அந்த சமயத்துக்காக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அப்போது ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லமாட்டார்கள்.’ (சங்கீதம் 72:12; ஏசாயா 33:24) அந்தச் சமயம் வரையாக ஒரு சகோதரரிடம் கடன் கேட்கவேண்டிய நிர்ப்பந்தத்தை எப்போதாவது உணர்ந்தால் நம்முடைய நடவடிக்கைகளை கவனமாக நாம் சிந்தித்துப்பார்ப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a மாற்றுப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
[பக்கம் 25-ன் படம்]
கடன் ஒப்பந்தங்களை எழுதிவைப்பது அவநம்பிக்கைக்கு அல்ல, அன்புக்கே அடையாளம்